துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.5.12

இமயத்தின் மடியில்-6

பத்ரிநாத் ஆலய வாயிலில் உடன் வந்த குழுவினருடன் நான்...


பயணம் தொடர்கிறது...[இறுதிப்பகுதி]


அலக்நந்தாவில் ஓர் ஆனந்தக் குளியல்..
பயணக் களைப்பில் சற்றே உறங்கிவிட்ட நாங்கள் வண்டிகள் நிறுத்தப்பட்டுக்  கண்விழித்தபோது..உச்சகட்ட பரவசக் காட்சி ஒன்றை .சூரிய உதயத்தின் பின்னணியோடு கண்டோம்...
கண்ணனின் கறுநிறச்சாயலில் கட்டற்ற ஆர்ப்பரிப்போடு பெருகி வரும் அலக்நந்தா ஒரு புறம்

கறுப்பு வண்ணத்தில்....


பச்சைநிறத் திருமாலின் வண்ணம் காட்டிப் பாய்ந்து வரும் பாகீரதி மறுபுறம்..

பச்சை வண்ணத்தில்....
என இவை இரண்டும் ஒன்றிணைந்து ஒருங்கே கூடிக் கங்கையாய்ச் சங்கமித்து மலையிலிருந்து கீழிறங்கும் அற்புதக் காட்சி…! இந்தச் சங்கமம் நிகழும் இடமே தேவப்பிரயாகை...

கருமையும் பசுமையும் ஒன்றுகலக்கின்றன...
பிரபஞ்சப் பேரழகின் அந்த தரிசனம்….அரியாய்…சிவனாய்…அகிலமாய்..அனைத்துமாய், அனைத்திலும் உறைந்து கிடக்கும் ‘மூலமும் நடுவும் ஈறும்’அற்ற பேராற்றலின் பருவடிவங்களாகவே தென்பட...’’வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்’’என்ற பாரதியின் வரிகள் மனதுக்குள் ஓட...‘’எங்கும் உன் ஆடலடி தாயே..’’என இசைக்கும் பித்துக்குளி முருகதாஸின் இசை காதுக்குள் கேட்க....உலகம் யாவையும் தாம் உளவாக்கி அவற்றில் நீக்கமற நிறைந்து….தன் அலகிலா விளையாட்டான இப் பிரபஞ்சத்தையே தன் அருட்கொடையாக நல்கியிருக்கும் இறைப்பேராற்றல் நம்மையெல்லாம் தூசாக உணர வைக்கும் கணமாக அதை உணர்ந்து மெய் சிலிர்த்தேன்...…
சங்கமத்தில் நீராடுவது பாவங்களைப் போக்குமென்னும் மரபு சார் நம்பிக்கை ஒரு புறமிருக்க….நதிகளின் சங்கமம் போல சாதி மத இன மொழி பேதம் கடந்த மானுட சங்கமம் எப்போது நிகழும் என்னும் ஆவலும் அப்போது கிளர்ந்த்து.
தங்கள் குல முன்னோர்களை எண்ணி அவர்களின் ஆன்மசாந்திக்கான சடங்குகளைப் ‘பண்டா’க்களின் துணையோடு அத்தகைய சங்கமங்களில் செய்வது மரபு. பயணிகளில் பலரும் அதைச் செய்யத் தவறவில்லை.

வையத்து மாந்தரெல்லாம் வளமுற்று வாழ வேண்டியபடி நானும் பாகீரதியுடன் பிணைந்து கிடந்த அலக்நந்தாவில் ஆனந்தக் குளியலை முடித்தேன். சங்கமப்படித்துறை அருகிலேயே இரு சிறிய குகை மறைப்புக்கள் இருந்ததால் உடை மாற்றிக் கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.


எங்கள் வண்டிகள் நின்றிருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட முந்நூறு படிகள் இறங்கிச் சங்கம இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். அந்த அலுப்பும் களைப்பும் ஆற்றுநீர்க்குளியலில் அடியோடு மாறிப்போய் உடலின் செல்கள் புத்துணர்வு பெற்றது போல் புதுத்தெம்பு பெற்றிருந்தன…..உடல் முழுவதும் புது ரத்தம் பீறிட்டுப் பாய்வதான உணர்வு..! இப்போது மறுபடியும் 200படிகளுக்கு மேல் ஏறிச் சென்று தேவப்பிரயாகை ஆலயத்தை அடைந்தோம். துல்லியமான சுத்தத்துடன் மிளிர்ந்த அந்தச் சிறு கோயில் வடநாட்டுக் கோயில்களின் பாணியில் இருந்தது.
தேவப்பிரயாகை ஆலயம்..
 ’கண்டி என்னும் கடிநகர்’ எனப் பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்படும்
வைணவத் திருக்கோயிலான இதன் முதன்மையான மூர்த்தி ‘ரகுநாத்ஜி’ என வடக்கே சொல்லப்படும் இராம பிரான். புண்டரீகவல்லித் தாயாரும் கருடாழ்வாரும் உடன் காணப்படுகின்றனர்.

பாண்டவர்கள் பாரதப் போர் முடிந்த பின் வேள்வி நடத்திய இடம் இது எனக் கருதப்படுகிறது. அது போலவே இலங்கையில் இராவணவதம் முடித்துத் திரும்பிய இராம இலக்குவர்களும் இங்கே ஒரு யாகம் செய்தார்கள் என்ற குறிப்பு (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) கோயிலின் புற மதிலில் காணப்படுகிறது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பிரகாரச் சுற்றில் இராமரின் பாதச் சுவடுகள் தாங்கிய கற்பலகைகள் [இராமேசுவரத்தில் உள்ள இராமர் பாதம் போல] தனியே ஒரு மண்டபத்தில் காணப்படுகின்றன.

இராமர் பாதம் பதிந்த கற்பலகை......
ஆலயச் சுற்றில் சிறுசிறு லிங்கங்கள் நிறைந்த சிவன் சன்னதி,அன்னபூரணியின் சன்னதி,அனுமன் சன்னதி,ஆதிசங்கரரின் திரு உருவம் ஆகியனவும் உள்ளன.
எங்கள் குழுவைச் சார்ந்தவர்கள் மட்டுமே அந்த நேரம் ஆலயத்தில் இருந்ததால் பலரும் வரிசையில் அமர்ந்து அத் திருத்தலம் பற்றிய பெரியாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் சந்த லயத்தோடு உரக்கச் சொல்லியது நெஞ்சை நெக்குருகச் செய்தது.
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த வெம் தாசரதி போய்
எங்கும் தன் புகழோடிருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே

’’மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்துஆக்கி மூன்றெழுத்தை
ஏன்று கொண்டு இருப்போர்க்கு இரக்கம்நன்குடைய எம்புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்ந்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுருவானோன்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடிநகரே’’
என இத் திருத்தலம் குறித்துப் பெரியாழ்வார் பாடிய இரு பாசுரங்களும் கருவறைக்குக் கீழே மதுரையிலுள்ள அன்பர் ஒருவரின் நன்கொடையாகப் பளிங்கில் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன.


’’சிற்றஞ்சிறுகாலை வந்துன்னைச் சேவித்து..’’என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாடலைச் சொல்லி 
‘’எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாமாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..’’
என்ற அதன் இறுதி வரிகளை அனைவரும் கூட்டாக ஒரே குரலில் உரத்து முழங்கியபோது...அந்த ஒரு கணம், உலுக்கிப் போட்டது போல உடல் சிலிர்த்து…மெய்யெல்லாம் விதிர்விதிர்த்தது...…உண்மைதான்..! பிற உலகியல் ஆசைகளை (காமம் என்ற சொல்லை எல்லா வகையான ஆசைகளையும் குறிப்பதாகவே ஆண்டாள் இங்கே பயன்படுத்தியிருக்கிறாள்) மாற்றி….ஈசனடியை….அவன் வடிவைக் கணந்தோறும் காட்டியபடி இருக்கும் இயற்கையின் அழகு லயத்திலே மட்டுமே தோய்ந்திட முடிந்தால்..அது வாழ்வின் பெரும் பேறல்லவா?


பிற உலகியல் கடமைகள்,தேடல்கள்,அலைச்சல்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு......மலைகளோடும்....அவற்றிலிருந்து ஊற்றெடுத்துப் பெருகும் வற்றாத ஜீவநதிகளுடனும் மட்டுமே...ஊடாடி ஒன்றுகலந்த அனுபவத் துளிகளை அசை போட்டபடி மதியம் 2 மணியளவில் ஹரித்துவாரம் வந்து சேர்ந்தோம்.பிற பயணிகள் ரிஷிகேசம் குருட்சேத்திரம் என அடுத்து வந்த நாட்களில் சுற்றுலாவைத் தொடர...அந்த இடங்களை முன்பே கண்டிருந்ததால் அத்துடன் என் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று மாலையே சதாப்தி எக்ஸ்பிரஸில் தில்லி நோக்கிச் செல்லத் தொடங்கினேன்..
வண்டிப் பயணத்திலும்....வீடு திரும்பிய பின்....தொடர்ந்து வந்த பல நாட்களிலும் இன்னமும் கூட....கண் இமைகளை மூடினால்...மலையும் நதியுமே மனக் காட்சிக்குள் சுழன்று சுழன்று அலையடித்துக் கொண்டிருக்கின்றன....

2 கருத்துகள் :

Kumar K.P சொன்னது…

இமயமலை போகும் ஆர்வத்தை அதிகரித்தது உங்கள் பயணக்குறிப்பு.உங்கள் வலைப்பதிவைப்பற்றிய தகவல் தந்த விகடனுக்கும் நன்றி

Kumar K.P சொன்னது…

இமயமலைக்கு செல்லும் ஆர்வத்தை அதிகரித்தது.சுற்றுலாவை நடத்தியவர்களின் விபரம் தந்தால் எனக்கு உத்வியாக இருக்கும்.இந்த பதிவிற்க்கு நன்றி.உங்கள் வலைப்பதிவைப்பற்றிய தகவல் தந்த விகடனுக்கும் நன்றி.

ப்ரஷாந்த் குமார்,அபுதாபி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....