துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.9.12

’’யாண்டு பலவாக நரையில ...’’

நன்றி;
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-7

பழக்கம் அதிகமின்றிப் பார்த்ததுமே  ஒட்டிக்கொள்ளும் நட்புக்கள் சிலவற்றை உலகியலில் அவ்வப்போது காண முடியும். நம் ரசனையோடும் நம் அலைவரிசையோடும் அவர்கள் ஒத்துப் போகிறார்கள் என்பதை மனம் தானாகவே இனம் கண்டு கொள்வதால் நேர்வதே அது.
மனங்கள் ஒட்டிக் கொள்வதற்கு நெடுநாள் பழக்கம் தேவையில்லை..ஒத்த உணர்வுகள் போதும் என்பதையே‘’புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்’’என்கிறது குறள்.ஒருவரை ஒருவர் பார்க்காத நிலையிலும் கொள்ளும் அபூர்வ நட்புக்கள் உண்டு.அவற்றில் ஒன்று சங்கப்புலவர் பிசிராந்தையாருக்கும் கோப்பெஞ்சோழனுக்கும் இடையிலானது. அவன் வடக்கிருந்து[உண்ணா நோன்பிருந்து] உயிர்விடத் துணிந்திருக்கும் நிலையிலும் அவரைக் காண ஏங்குகிறது அவன் மனம்;
அவன் மேற்கொண்டிருக்கும் நோன்பு பற்றி ஏதும் அறியாமலே அவனைக்காண வேண்டுமென்ற தாகத்துடன் அவனைத் தேடி வருகிறார் புலவர்.அவர் வருவதற்குள் அவன் இறந்து விடுவதால் அவர்களது சந்திப்பு நிகழாமலே போனாலும் தமிழ் இலக்கிய உலகில் அந்த இருவரின் பெயர்களும் இரட்டையர்களைப்போல எப்போதும் சேர்ந்தே சொல்லப்படுகின்றன,போற்றப்படுகின்றன.
பிசிராந்தையாரின் பல பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளபோதும் என்றைக்கும் அவரது பெயர் சொல்லும் பாட்டாக மட்டுமன்றி மனித வாழ்க்கை எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பாடம் கற்பிக்கும் பாடலாக, அதற்கான இலக்கணத்தை-வரையறையை வகுத்துத் தரும் பாடலாக அமைந்திருக்கிறது கீழ்க்காணும் புறப்பாடல்.
‘’யாண்டு பலவாக நரையில ஆகுதல்
   யாங்காகியர் என வினவுதிராயின்
   மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
   யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’

பிசிராந்தையார் வயதில்  மூத்தவராக இருந்தபோதும் -கொஞ்சம் கூட நரை திரை[சுருக்கம்] இல்லாதவராய்-  வயதுக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லாதவரைப் போல இருப்பதைக் கண்டு சிலர் வியப்புற்றுக் கேட்கும் கேள்விக்கு அவர் கூறும் விடையாக இப்புறப்பாடல் அமைந்திருக்கிறது.
   
                                                                          
ஒரு மனிதன் மனநிறைவோடு,கவலைகள் இன்றி வாழ்வதற்கேற்ற சூழல் மட்டும் அவனுக்கு அமைந்தால் அப்போது முதுமையும் சுமையில்லை;
அங்கே இளமையின் துடிப்பும் உற்சாகமுமே பீறிட்டுக் கொப்பளிக்கும்.
பிசிராந்தையாருக்கு வாய்த்ததும் அவ்வாறான ஒரு சூழல்தான் என்பதை அவர் பாடல் படிப்படியாகத் தெளிவாக்கிக் கொண்டே வருகிறது.

முதலில் அவர் எடுத்துக் காட்டுவது தனது வீடு...
அங்கே அவர் மனைவி மாட்சிமையுடைய குணங்கள் பொருந்தியவளாக -[’மாண்ட என் மனைவி’ -இங்கே ’மாண்ட’ என்னும் சொல் சங்கத் தமிழ் வழக்கின்படி  மாட்சிமை  என்னும் பொருளில் வழங்குகிறது.’மனைமாட்சி’என்ற தொடரை வள்ளுவத்திலும் காணலாம்] நல்லவளாக - அவருக்கு இணக்கமானவளாக இருக்கிறாள். அது ஒன்றே அவருக்குப் பெரும் பேறாகி நிம்மதியை அளித்துக் கவலைகளைத் துரத்தி விடுகிறது.
[இந்தப்பாடலைச் சொல்வது ஒருக்கால் பெண்ணாக இருந்தால் அவள் கணவன் அப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்]

அடுத்து அவர் கூறுவது தனது மக்கட்செல்வங்களைப்பற்றி...
குழந்தைகள் இல்லாத வீடு பிற எத்தனை செல்வங்களால் நிரம்பி வழிந்தாலும் முழுமையடைவதில்லை.’’மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே’’என்கிறது பாண்டியன் அறிவுடை நம்பியின் பாடல். மக்கட்செல்வத்தால் வீடு நிரம்பியிருப்பதைப்பற்றிச் சுட்டும்  ’மக்களும் நிரம்பினர்’ என்னும் தொடரில் அதனுடன் கூடவே மற்றுமொரு செய்தியும் பொதிந்திருக்கிறது. நிரம்புதல் என்பது எண்ணிக்கையால் நிரம்பியிருப்பது மட்டுமல்ல. அந்த மக்கள் அறிவாலும் ஆளுமையாலும் நிரம்பியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட மக்கட்பேறு தனக்கு வாய்த்திருப்பதையே இங்கு பெருமையாகச் சொல்கிறார் பிசிராந்தையார்.

மனைவி மக்களால் வீட்டில் கிடைத்து விட்ட அமைதியைத் தக்க வைத்துக் கொள்ளப் புற உலகும் புறச்சூழலும் துணை வர வேண்டியது அடுத்த படிநிலை.
எனவே ’யான் கண்டனையர் என் இளையரும் ’என அடுத்த வட்டத்திலிருக்கும் தன் ஏவலர்களாகிய இளையோரைப்பற்றிக் குறிப்பிடுகிறார் புலவர்.
இளையர் என்ற சொல்லைத் தம்பியர்,சுற்றத்தினர் என்னும் பொருளில் வைத்துக் கொண்டாலும் பாடலின் மொத்த நயத்துக்கும் பொருளுக்கும் ஊறு நேர்ந்து விடாது என்றபோதும் பெரும்பாலான உரைகாரர்கள் ஏவலர் என்ற பொருளையே குறிப்பிடுவதால் இங்கும் அதையே கொள்ளலாம்.

பணி செய்யும் இடத்தில் நம் குறிப்பறிந்து துணை புரியும் உதவியாளர்களின் பங்கு மகத்தானது; நாம் ஒன்றை நினைக்க அவர்கள் வேறொன்றைச் செய்யும்போது அல்லது நாம் கூறியதைப்புரிந்து கொள்ளத் தவறி,நம் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் திணறும்போது நம் வேலையே முற்றும் கோணலாகி விடுகிறது.இன்றைய வேகமான அலுவலக வாழ்க்கைச் சூழல்களில் மிகுதியாகவே அதை நாம் உணர்ந்து வருவதால் அன்றைய பரபரப்பற்ற வாழ்வுத் தளத்திலும் கூட அதற்கு முதன்மை தந்து சங்கப்புலவர் பாடியிருக்கும் திறம் உண்மையிலேயே வியப்பளிக்கிறது. 

பாடலின் இறுதிக்கட்டத்தில் நாட்டு மன்னனையும் நாட்டில் வாழும் சான்றோரையும் எடுத்துக் கொள்கிறார் புலவர்.
’’நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’
என்கிறது மற்றுமொரு புறப்பாடல்.முடியரசாட்சி நிலவிய அன்றைய சமூக அமைப்பிலும் , குடியாட்சியைக் கைக்கொண்டிருக்கும் இன்றைய சமூகத் தளத்திலும் அரசுஇயந்திரம் பழுதின்றிச் செயல்படும்போதே சாமானிய மக்கள் அமைதியான நல்வாழ்வு வாழ்வது சாத்தியமாகும்.அதிலும் குறிப்பாகத் தீயது விளைக்காத அரசமைப்பு உறுதியாக வேண்டும்.
இதையே, ’’வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்’’
என்ற தொடரில் குறிப்பிடுகிறார் பிசிராந்த்கையார்.அல்லவை செய்யாமல் இருப்பது ஒன்று,நல்லதைச் செய்து குடிகளைக் காப்பது மற்றுமொன்று.இந்த இரண்டும் பொருந்திய அரசன் தன் ஊரில் இருப்பதில் பெருமிதமடைந்து 
அதனாலேயே நான் கவலையில்லாத மனிதனாகக் களிப்புடன் வாழ்வது சாத்தியமாகி இருக்கிறது என்கிறார் அவர். 

அரசன் அல்லது அரசு தன் பணியிலிருந்து வழுவிச் செல்லும்போது தவறிழைக்கும்போது அங்குள்ள அறிவில் மேம்பட்ட சான்றோர் அதைத் தட்டிக் கேட்டு மன்னனை இடித்துரைப்பவர்களாக- நல்வழியில் செலுத்துபவர்களாக இருக்க  வேண்டுமே தவிர அவன் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பக்க மேளம் கொட்டுபவர்களாக அவர்கள் இருத்தலாகாது.
‘’நாம் யார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்’’
என்று அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிவு  கொண்டோர் நன்கு கற்றவர்கள்  மட்டுமல்ல. புலன்களின் ஆசைக்கும் அடிமையாகி விடாதவர்கள் அவர்கள். அத்தகையோரே கொள்கைப்பிடிப்பு உடையவர்களாக எந்தத் தவறும் நடந்து விடாமல் காக்கும் தடுப்பரண் போன்றவர்கள்.அத்தகைய உரம் படைத்த பெரியோர்களையே
‘’ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் ’’
எனக் குறிப்பிடுகிறது பாடல்.

தான் வாழும் ஊரில் இத்தனை நலன்களும் ஒருசேர அமைந்திருக்கையில் நரை திரை ஏற்படுமளவுக்கு’எனக்கென்ன மனக்கவலை..?’’என மகிழ்ச்சியோடு கேட்கிறார் பிசிராந்தையார்.
அவர் கூறும் புற வாழ்க்கைச் சூழல் யதார்த்தத்திலிருந்து விலகிய கற்பனை உலகாக இன்று நமக்குப் படலாம்....ஆனாலும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவேனும் அந்தப் புத்துலகத்தைச் சமைத்துத் தந்தாக வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்னும் செய்தியினை அழுத்தமாகப் பதிய வைக்கும் இப்புறப்பாடல் காலம் கடந்து நிற்கும் கல்வெட்டுக்கள் சங்கக் கருவூலங்கள் என்பதை உறுதி செய்கிறது..


2 கருத்துகள் :

passerby சொன்னது…

// ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’
//

இவ்வரிகளைப்படித்ததும் சிரித்துவிட்டேன்.

இன்று இப்படி ஒரு ஊர் தமிழகத்தில் உண்டா? இன்றைய புலவன் – அவனிப்படியொரு ஆன்றவிந்து அடங்கிய கொளைக்சான்றோனாக இருக்கிறானென நினைப்போம் – வழிச்செல்கையில் இன்னொருவான் ”ஆரோ நீர்?” எனவினவினால், அவன் பதில்:

”ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் ஒருவருமே இல்லாவூர் என் ஊரே” என்றுதான் வரும் :-)

சங்கப்பாடல்கள் காட்டும் வாழ்க்கை அன்றுதான் சாத்தியம். இன்றன்று.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

பிசிராந்தையார் கொடுத்து வைத்தவர் என்றுதான் தோன்றுகிறது.
இன்று வீடுகளில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அகச்சிக்கல்கள் அதிகம். நாட்டிலோ கோடிக்கணக்கான சிக்கல்கள். இனி அடுத்துவரும் தலைமுறைக்கு நாலு வயதிலேயே நரைத்துவிடும். ஹோம்வொர்க் & டியூசன் & பாட்டுக்கிளாஸ் என அவர்களுக்கு இளமையிலேயே சிக்கல்களை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள். மரம், மலை, ஆறு இவைகளை அடுத்த தலைமுறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பாக்கியவான்கள்தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....