துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.9.12

என் ஆசிரியர்கள்..


மூன்றுதலைமுறைகளாக ஆசிரியப்பணியில் ஊறியது எங்கள் குடும்பம்.
என் தாய் வழித் தாத்தா சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வேதியல்துறைப்பேராசிரியராக 1915 காலகட்டத்தில் பணியாற்றியவர்.என் தாய் காரைக்குடி எம்.எஸ்.எம்.எம்.மீனாட்சி பெண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேல் தலைமை ஆசிரியையாக இருந்தவர்.நான் மதுரை பாத்திமாவில் தமிழ்த்துறைப்பேராசிரியராக இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.என் மகள் மட்டும் அரசு அதிகாரியாகிக் குடும்பப்பாரம்பரியத்தைச் சற்று திசை மாற்றி விட்டாள்.ஆனால் அவளும் கூட ஒரு குறுகிய கால இடைவெளியில் கல்லூரி ஆசிரியராகப்பணி புரிந்ததுண்டு.


என் ஆசிரியர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது வீட்டில் மட்டுமல்லாமல், உயர்நிலைப்பள்ளியிலும் எனக்கு ஆசிரியராக அமைந்து விட்ட என் தாயே முதலில் என் முன் நிற்கிறார். ஆனால் கணக்கு ஆசிரியையாக இருந்த அவர்களைத் திருப்திப்படுத்தும் மாணவியாக ஒருபோதும் நான் இருந்ததில்லை;கணக்கோடு கடைசி வரை எனக்குப் பிணக்குத்தான்...ஆனால் அவர்கள் அதற்காகக் குறைப்பட்டுக் கொள்ளாத வகையில்,மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று அதை நான் ஈடு கட்டி விடுவேன்...கணக்கை மட்டும்தான் அம்மாவிடமிருந்து கற்கவில்லையே தவிர...அவர்களின் ஆளுமையிலிருந்தும்..முன்மாதிரியான பல செயல்களிலிருந்தும் நான் கற்றதும்,பெற்றதும் ஏராளம்.

நகராட்சியாக இருந்த எங்கள் சிற்றூரில் தொடக்கநிலை முதல் உயர்நிலைக்கல்வி முடிக்கும் வரை தமிழ்மட்டும்தான் எனக்குப் பாட மொழியாக இருந்தது ; அது பற்றி இன்றளவும் எனக்குக் குறைகள் ஏதுமில்லை... எங்கள் ’முனிசிபாலிடி’தொடக்கப்பள்ளி மிகவும்  சிறியது. நாய்களோடு பன்றிகளும் சர்வ சுதந்திரமாகத் திரியும் வேலிகளற்ற வளாகம் அது. அங்கே நான் படித்த காலகட்டத்தில் [’60களுக்கு முன்]  பெண் ஆசிரியையாக ஒருவர் கூட அங்கே இருந்ததில்லை என்பதை வியப்போடு நினைத்துப் பார்க்கிறேன்.[இப்போது நேர் மாறாகத் தொடக்கப்பள்ளிகளில் பெண்களே மிகுதி]. ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் முதன்முதலாக எனக்கு அரிதாரம் பூசி வசனம் பயிற்றுவித்து வீரபாண்டிய கட்டபொம்மனாக மேடையேற்றிய ஆசிரியர்[எங்கள் நாடகத்துக்குப் பிறகுதான் சிவாஜி நடித்த ’வீரபாண்டிய கட்டபொம்மன்’திரைப்படம் வெளியாயிற்று],
தினமும் வீட்டுக்கு வந்து ஆரம்பப்பள்ளிக் கணக்குச் சொல்லித் தந்த மோஸஸ் வாத்தியார் என்று ஒரு சிலர் மட்டுமே இப்போது நினைவில் தங்கியிருக்கிறார்கள்.

உயர்நிலைப்பள்ளியில் எல்லோருமே பெண் ஆசிரியர்கள்...
அன்பு,அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தவிர அவர்களிடம் நான் எதையுமே காண நேர்ந்ததில்லை. தினமும் பத்து நிமிடம் கட்டாயமாக அளித்த மனக்கணக்குப் பயிற்சியால் கணக்கே பிடிக்காத என்னைக்கூடக் கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தலையாவது தப்பின்றி [இன்றுவரை] மனதுக்குள்ளேயே போட்டு விடும் திறனை வளர்த்துத் தந்த கல்யாணி டீச்சர், ஆங்கில,தமிழ் இலக்கியங்களின் மீதான காதலை இளம்பருவத்தில் விதைத்த மொழிப்பாட ஆசிரியைகள், இந்தி சொல்லித் தந்ததோடு நிற்காமல், பேசிப்பேசியே பொதுஅறிவுத் தாகத்தை வளர்த்த ஜானகி டீச்சர்,வரலாறு புவியியல் பாடங்களை வறட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டிருக்காமல் அவை மீதான பிரமிப்பைத் தோற்றுவித்த லட்சுமி டீச்சர், பள்ளி மைதானத்தைத் தாண்டிக்கொண்டிருந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட...கொட்டும் மழையிலும் அசையாது நின்றபடி அதற்கு மரியாதை செலுத்தி அதன் வழி பாடம் புகட்டிய சரஸ்வதி டீச்சர் என்று என் நினைவுப்பேரேடு பல மகத்தான ஆசிரியைகளால் நிறைந்திருக்கிறது.

நான் ஏழாம் வகுப்புப்படிக்கையில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியருக்கு மாற்றாக ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே வந்த [எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்குப் பாடம் எடுக்கும்] மூத்த தமிழாசிரியையான ஜெயலக்ஷ்மி டீச்சர்-மணிமேகலைக்காப்பியம் முழுவதையும் மிக அழகான கதை வடிவில் விரிவாக எங்களுக்குச் சொன்னது இன்னும் கூட நினைவில் பசுமையுடன்...! பின்னாளில் காப்பிய  மூலத்தையே படித்துப் பொருள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நேர்ந்து விட்டாலும் கூட..அன்று அவர்கள் சொன்ன அந்த மணிமேகலைக்கதையே அதே பாணியில்..அதே வரிசையில்..அதே வார்த்தைகளில் - என் மாணவியர் தொடங்கி இன்று என் பேரக்குழந்தைகள் வரை நான் சொல்லும் மணிமேகலைக்கதையாக வழிந்து கொண்டிருக்கிறது.

என் இளங்கலைக் கல்லூரி நாட்கள் உற்சாகமும் வேடிக்கையும் ததும்பியவை..பட்ட வகுப்புக்கு முன்பு, புகுமுகவகுப்பு-P.U.C.-என்ற ஒன்று அப்போதெல்லாம் இருந்தது. அதில் தொடங்கிப் பட்ட வகுப்பு வரை அறிவியல் பாடங்கள்தான் எடுத்திருந்தேன் என்றாலும் என் ஈடுபாடு இலக்கியத்தின் மீதுதான்...அறிவியலில் தாவர,விலங்கியல் பாடங்கள் மட்டுமே என் விருப்பத்துக்குரியவை. வேதியலும் இயற்பியலும் எனக்கு வேப்பங்காய் என்றாலும் வேறு வழியில்லாமல் வேதியல் பட்ட வகுப்பிலேயே நான் சேர வேண்டியதாயிற்று.புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக்கல்லூரியில் விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமில்லை..ஆனாலும்  நான் அலட்டிக் கொள்ளாமல் ஆங்கிலம்,தமிழ்,விலங்கியல்,தாவர இயல் ஆகியவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்தியபடி வேதியல் ஆசிரியர்களுக்குக் கடுப்பேற்றி விடுவேன்...ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் -கம்பனையும்,இளங்கோவையும் சுவைக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் போல வேதியலுக்கு நல்லாசிரியர்கள் எனக்கு வாய்க்கவில்லை என்பதும் அதற்கு முக்கியமான ஒரு காரணம்..! அந்தக்கட்டத்திலேதான் வேறு வகையான -எதிர்மறையான- சில ஆசிரியர்களையும் நான் எதிர்ப்பட நேர்ந்தது.

முதன்மைப்பாடமாக நான் எடுத்துக் கொண்டிருந்த வேதியல் பாடத்தைக் கற்பித்த பெரும்பாலான ஆசிரியர்கள் ஆழமான பாடத் தெளிவோடும்,அன்போடும்,நடுநிலையோடும் இருக்கவில்லை என்பதை நான் இப்போதும் வேதனையோடு நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

வகுப்பில் வேறு எந்த ஜீவனுமே இல்லாதது போலக் குறிப்பிட்ட ஒரு மாணவியை மட்டுமே பார்த்தபடி வகுப்பெடுக்கும் ஆசிரியை
[எங்கள் தோழியான அந்தமாணவியிடம்’நீ நல்லாத் தயார் பண்ணிட்டு வந்திடுப்பா..அப்பத்தான் எங்க பக்கமே திரும்ப மாட்டாங்க..’என்று சொல்லி விட்டு அந்த நேரங்களில் நாங்கள் சாப்பாட்டு டப்பாவைத் திறந்து  சாப்பிட்டது கூட உண்டு;],

ஏதோ ஒரு சிறிய தவறுக்காக 30க்கு மேற்பட்ட மாணவிகளை வெளியே தள்ளி விட்டு வேதியல் கூடத்தின் கதவை அடைத்துக் கொண்ட ஆசிரியை [அப்போது வெளிவந்திருந்த ‘புதிய பறவை’படத்தின் சுவாரசியமான அலசலுக்கு அந்த நேரம் பயன்பட்டது என்பது வேறு]

ஒரு மணி நேர வகுப்பில் முதல் பத்து நிமிடங்களையும் இறுதிப்பத்து நிமிடங்களையும் தன்னுடைய பிரார்த்தனைக்கு ஒதுக்கி விட்டு ஏனோ தானோ என்று புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து போர்டில் எழுதிய ஆசிரியை..

தமிழ்ப்பேராசிரியர் மீது நான் கொண்டிருந்த பற்றினால் பொறாமை கொண்டு சோதனைக்கூடத்தின் நடுவே என்னை நிறுத்தி வைத்து அவமானப்படுத்திய ஆசிரியை
என்று வேறுபட்ட ஒரு ஆசிரிய வர்க்கத்தை அப்போதுதான் நான் சந்தித்தேன்...

ஆனாலும் கூட....அவர்களும் ஒரு வகையில் எனக்குப் பாடம் புகட்டியவர்கள்தான்...நான் ஆசிரியரான பின் , எப்படியெல்லாம் இருக்கக்கூடாது,எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை என்னில் அழுத்தமாகப் பதித்த ஆசான்கள் அவர்கள்.

பட்ட வகுப்பில் எனக்கு வாய்த்த தமிழ்ப்பேராசிரியர்களே நான் தமிழ் முதுகலையை நாடிச் செல்ல வலுவாக உரமிட்டவர்கள். தமிழல்லாத வேறு பிரிவைச் சார்ந்தவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் மட்டுமே தமிழ்,ஆங்கிலம் படிக்கும் வாய்ப்புக் கிட்டும்;தமிழுக்கான பாடப்பகுதியில் ‘இலக்கிய வரலாறு’என்று  ஒரு பகுதி உண்டு.சங்க இலக்கியம் தொடங்கி,இன்றைய இலக்கியம் வரை படிப்படியாக ஒரு சில எடுத்துக்காட்டுக்களோடு விளக்கிக் கொண்டு போகும் அந்தப்பகுதியை எடுக்க எனக்கு வாய்த்தவர்,  லலிதா டேவிட் என்னும்  அற்புதமான ஆசிரியை. தமிழை முதன்மைப்பாடமாகப்படிப்பவர்களுக்குக் கூடத் தெரியாத அரிய பல செய்திகளை...பாடல்களை சுவைபடச் சொல்லிக் கொண்டே போகும் அந்த வகுப்புக்களே என் தமிழ் ஆர்வத்துக்கு உரமும் வளமும் சேர்த்தவை....நான் ஆசிரியப்பணிக்கு வந்த பிறகும் கூடப் பல ஆண்டுகள் பேராசிரியர் லலிதா டேவிடின் வகுப்பில் நான் எடுத்த பாடல் குறிப்புகள் எனக்கு உதவியிருக்கின்றன.

முதுகலையில் எனக்கு வாய்த்த அருமை ஆசிரியர் அருந்தமிழ்ச்செம்மல் வ.சுப மாணிக்கனார் அவர்கள். வேதியலிலிருந்து தமிழ் முதுகலைக்குத் தாவி வந்த என்னைப் பாசத்தோடு அரவணைத்துக் கொண்டவர் அவர்... தான் வேர் கொண்டிருந்தது மரபிலக்கியத்தில் என்றபோதும், தமிழ் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டு என்னை இக்கால இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்தியவர் அவரே.

கல்லூரிப்பணியில் இருந்து கொண்டே நான் முனைவர் பட்டம் பெற வழிகாட்டிய பேராசிரியர் அப்போது மதுரைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவராக விளங்கிய திரு முத்துச் சண்முகனார். மொழியியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்த அவரிடம் நான் ஒரு மொழியியல் மாணவியாகத்தான் போய்ச் சேர்ந்தேன்...ஆனால் அவரும் இக்கால இலக்கியம் நோக்கியதாகவே என் பாதையை வகுத்தளித்தார். என்னைப்போல அறிவியல் துறையிலிருந்து தமிழுக்கு வந்த பேராசிரியரான அவர், அறிவியல் பார்வையோடு தமிழ் ஆய்வேடுகள்  அமைய வழிப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். எந்த தயவு தாட்சணியமும் இன்றிக் கறாராகத் தன் கருத்தை முன் வைப்பவர். அவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றது எனக்கு வாய்த்த பேறுகளில் ஒன்று..

21 வயதிலேயே கல்லூரிப் பணிக்கு வந்து விட்ட எனக்கு -என் முன்னோடிகளாக இருந்த பேராசிரியர்கள் பலரும் நான் என் பணியைக் கற்றுக்கொள்ள, அதைச் செம்மையாய்ச் செய்ய வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்...

தொடர்ந்து....வாழ்க்கையில் நான் எதிர்ப்படும் - எதிர்ப்பட்ட பலரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இருந்து கொண்டேதான் இருக்கிறது. நானும் அந்தக் கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்..

என் ஆசிரியப்பெருமக்களில் பலர்..இன்று இல்லை...அப்படி இருந்தாலும் அவர்கள் இருக்குமிடம் தெரிய வாய்ப்பும் இல்லை..என்னை நானாக்கிய அந்தப்பெரு மக்களுக்கு அவர்களின் திக்கு நோக்கிய வந்தனங்கள்....

5 கருத்துகள் :

சதீஷ் செல்லதுரை சொன்னது…

சிறப்பான பதிவு அம்மா,என் பள்ளி பருவத்தில் அடி உதைக்கு பயந்தே பள்ளிக்கு போவதில்லை.வீட்டில் கட்டாயபடுத்தி விடுமுறை விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பி விடுவேன்.தொடக்க பள்ளி நினைவுகள் வசந்தமானவை.

வித விதமான ஆசிரியர்கள்...அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.இப்போதும் அவர்கள் பெயர் நியாபகம் வைத்துள்ளிர்கள்...

இன்று ஆசிரியர் தினம் குறித்து நிறைய பதிவுகள் வரும் என்று எதிபார்த்தேன்.உங்கள் பதிவு மட்டுமே ஆறுதல்.ஆசிரியர்களை மறந்து போகிறதா சமுதாயம்?
நானும் இன்று ஆசிரியர் பதிவு இட்டுள்ளேன்...படித்து பாருங்கள் நன்றி.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுசீலா

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை நினைவில் நிறுத்தி ஒரு பதிவு எழுதியமை நன்று . மூன்று தலைமுறைகள் ஆசிரியப்பணியி இருந்ததும் நன்று. நல்லதொரு பதிவு - மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கல்விக்கோயில் சொன்னது…

மலரும் நினைவுகளாய் வழங்கிய ஆசிரியர் தின சிறப்புப் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவ்வளவையும் நினைவு கூர்ந்து எழுதி உள்ளீர்கள்... அறிந்து கொண்டேன்... பாராட்டுக்கள்...

என் ஆசிரியர்களும் ஞாபகம் வந்தது... நன்றி அம்மா...

Unknown சொன்னது…

ஆசிரியர்கள் பற்றிய தங்களது பதிவு அருமையான வாசிப்பு அனுபவத்தையும், ஆசிரியர் பணியின் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....