துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.6.13

அசடனுக்கு அங்கீகாரம்




கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2012ம் ஆண்டுக்கான பரிசு 15.6.13 அன்று கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற இயல்விருது விழாவில் - மொழிபெயர்ப்புப் பிரிவில் -மதுரை பாரதி புத்தகநிலையம் வெளியிட்டிருக்கும் என் மொழிபெயர்ப்பான ’அசடன்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து படைப்பிலக்கியத் துறையிலும் மொழியாக்கத் துறையிலும் தீவிரமாய் இயங்க இந்த அங்கீகாரம் உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பாளர்களுக்கும் -என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அசடன் நாவலின் மொழிபெயர்ப்பை மனமாரப்பாராட்டி வாழ்த்துக்கூறி இவ்விருது குறித்த செய்தியை எனக்குத் தெரிவித்த தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பின் செயலரும் சிறந்த படைப்பாளியுமான திரு அ.முத்துலிங்கம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.


இப்பணியில் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து என்னோடு துணை நின்ற பலருக்கும் , இதை மிகச்சிறந்த முறையில் பதிப்பித்திருக்கும் மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் என் நன்றி.
Inline image 1



விருதுப்பட்டியல்;

புனைவு : கண்மணி குணசேகரன் - அஞ்சலை நாவலுக்கு

அபுனைவு-1 : பிரபஞ்சன் - தாழப் பறக்காத பரத்தையர் கொடி நூலுக்காக

அபுனைவு-2 : அப்பு - வன்னி யுத்தம் நூலுக்கு

மொழிபெயர்ப்பு-1 : எம்.ஏ.சுசீலா - தஸ்தயெவ்ஸ்கியின் அசடன் நூலுக்கு

மொழிபெயர்ப்பு-2 : வைதேகி ஹெர்பர்ட் - 12 சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக

கவிதை-1 : நிலாந்தன் -"யுக புராணம்"கவிதைத் தொகுப்புக்கு

கவிதை-2 : தேவ அபிரா- "இருள் தின்ற ஈழம்" என்ற கவிதைத் தொகுப்புக்கு

கணினி விருது : முகுந்தராஜ் - எ கலப்பை மென்பொருளுக்காக

வாழ்நாள் சாதனையாளர் விருதான இயல்விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடன் அவர்களுக்கும் 

விருதுகளை வென்றிருக்கும் பிறருக்கும் என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்...

5 கருத்துகள் :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

அசடனுக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு வாழ்த்துகள். பெரிய நாவலை சிரத்தையெடுத்து மொழிபெயர்ப்பு செய்தமைக்கு மிக்க நன்றி.

தமிழ் தவிர மற்ற மொழிகளில் வரும் நாவல்களை மொழிபெயர்ப்பின் வாயிலாகவே வாசிக்கக்கூடிய என்னைப் போன்றவர்களுக்கு இது பெரும் உதவி. வாய்ப்புகிட்டும் போது தங்கள் அசடன் நாவலை வாசிக்கிறேன்.

விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

எஸ் சம்பத் சொன்னது…

அசடன் மொழிபெயர்ப்பிற்கு விருது கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. பொறுமையாக மேற்கொண்ட பெரிய அளவிலான மொழிபெயர்ப்பிற்கு கடல் கடந்த தேசத்திலிருந்து விருது கிடைத்திருப்பது மதுரை தமிழுக்கு கிடைத்த மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி

எஸ் சம்பத் சொன்னது…

அம்மா வணக்கம், தங்கள் அசடன் மொழிபெயர்ப்பிற்கு அயல்நாட்டு விருது கிடைத்தது அறிந்து எனது மகிழ்ச்சியை 2 தினங்கள் முன்பு தங்கள் இடுகையிலும், chat லும் பகிர்ந்திருந்தேன். தங்களுக்கு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
மதுரை தமிழ் கடல் கடந்து விருது பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க நன்றி சித்திர வீதிக்காரன்,சம்பத்....
பிற வாழ்த்துக்களையும் அங்கீகாரங்களையும் விட மதுரை மண்ணிலிருந்து நீங்கள் இருவரும் அனுப்பியிருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்வளிக்கின்றன.

அன்பின் சம்பத்...
உங்கள் அஞ்சல் கிடைத்தது.
இடுகைக்கு நீங்கள் அனுப்பிய கருத்துரைகளும் கிடைத்தன.
சில நாள் முன்புதான் தில்லியிலிருந்து கோவைக்கு மாற்றலாகி வந்தோம்; இன்னும் சரியாக இங்கு நிலைப்படாததால் இணையம் பார்ப்பதிலும் தங்கள் கருத்தை வெளியிடுவதிலும் சற்றே தாமதம் நேர்ந்து விட்டது.
உங்கள் அன்பான ஆத்மார்த்தமான பாராட்டு மேன்மேலும் செலாற்ற எனக்கு ஊக்கம் நல்கும் ; மிக்க நன்றி,
சுசீலா

வேல்முருகன் சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....