துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.6.13

புல்லாங்குழலின் மூங்கில்.....


சில இளமைக்கால நினைவுகள் என்றும் அழியாதவை...
டி எம் எஸ்ஸின் பாடல்களும் அந்த வரிசைக்குள் வருபவைதான்.

இலங்கை வானொலி தவிரப் பிற ஊடகங்களின் ஆக்கிரமிப்புக்கள் அற்ற அறுபதுகளின் காலகட்டத்தில் டி எம் எஸ்ஸின் குரலைக்கேட்டபடியேதான் என் பாலியம் கழிந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிப் பருவத்தில் காரைக்குடியில் வசித்தபோது டி எம் எஸ்ஸின் நேரடிக்கச்சேரிகளைக் கேட்கவும், ரசிக்கவும் கூட எனக்கு வாய்த்திருக்கிறது.இன்று புதிது புதிதாய்ப் பல அலைகள் வந்து அடித்தாலும்- அவற்றையும் கூட  ரசிக்கப்பழகினாலும் -  நெஞ்சுக்கு மிகப் பரிச்சயமானதும் பழகிப்போனதுமான இளமையின் முதல் அறிமுகம் கிளர்த்தும் பரவசம் என்றுமே அலாதியானதுதான்.

இன்றைய தலைமுறைக்குப் பழக்கமில்லாத - உச்ச ஸ்தாயியில் [பல பாடல்களில்] ஓங்கி ஒலிக்கும் குரல் டி எம் எஸ்ஸுடையது; சென்ற தலைமுறையிலும் கூட ஒரு சிலரால் ‘சவுண்ட் ராஜன்’ என்ற எள்ளலுக்கு ஆட்பட்டாலும் அந்தக் குரலுக்கென்று சிறப்பான ஒரு தனித்துவம் உண்டு. கம்பீரம் , குழைவு, பாசம் , ரௌத்திரம், வீரம் எனப்பல வகையான உணர்ச்சி பாவங்கள் பொங்கித் ததும்பும் அந்தக் குரலின் வழியே டி எம் எஸ்ஸுமே கூட நடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்த்திரையுலகில் ஒரே காலகட்டத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த சிவாஜி, எம் ஜி ஆர் ஆகிய இரு நடிகர்களுக்கும் இருவேறுபட்ட தன்மைகளுடன் குரலை மாற்றிப்பாடும் வல்லமை பெற்றிருந்தவர் டி எம் எஸ் . சாந்தி படத்தில் வரும் ‘’யார் அந்த நிலவு’’ க்கும்....புதிய பறவையின் ‘’எங்கே நிம்மதி’’க்கும் , எம் ஜி ஆருக்காக ஒலித்த ‘’பாரப்பா பழனியப்பா’’வுக்கும் கண்ணதாசனுக்காகப்பாடிய ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு‘’ பாடலுக்கும் இடையிலேதான் எத்தனை நுணுக்கமான வேறுபாடுகள்...? எம் ஜி ஆருக்காகப் பாடுகையில் ஒரு மூக்கொலியைத் தான் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வதாக ஒரு பேட்டியில் முன்பு குறிப்பிட்டிருந்தார் டி எம் எஸ்.  சிவாஜியின் குரலை அச்சுப் பிறழாமல் நகலெடுத்தது போல இயல்பாகவே வாய்த்திருப்பது டி எம் எஸ்ஸின் குரல்; அதன் வழி வரும் பாடல்களைக் கேட்கும்போது  அதைப்பாடுவது சிவாஜியேதானோ என்ற பிரமைக்குப் பல முறை ஆட்பட நேர்வதுண்டு.  டி எம் சௌந்தரராஜன் என்னும் குரல் நடிகர் - குரல் கலைஞர் பெற்ற அபாரமான வெற்றி அது. சிவாஜியின் நடிப்புக்கு இணையாக- அது பெற்ற வெற்றிக்கெல்லாம் பக்கத் துணையாக நின்றது டி எம் எஸ்ஸின் குரல்தான்.

முதன்மையான பாடல் தொடங்குவதற்கு முன்பு ‘தொகையறா’ எனப்படும் வசனவரிகள் பல பழைய திரைப்படப் பாடல்களில் இடம் பெற்றிருப்பதைக் கேட்டிருக்கலாம். பின்னணி வாத்தியக்கருவிகளின் துணை  இல்லாமல் குரலின் துணையோடு மட்டுமே அந்தக்கவிதை வரிகளைப் பாடுவதற்கான அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் பெற்றிருந்த மிகச்சில பாடகர்களில் டி எம் எஸ்ஸும் ஒருவர் .

கண்ணதாசன்,  விசுவநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் உருவான
டி எம் எஸ்ஸின் பாடல்கள் பலவும் - இன்றும் கூடப் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஒலித்தபடி எளிய மக்களின் ரசனைக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன. ’உள்ளம் உருகுதைய்யா’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ ஆகிய அவரது பாடல்கள் ஒலிக்காத கோயில்களும் , ’அச்சம் என்பது மடமையடா’  ஒலிக்காத அரசியல் கூட்டங்களும்,  ’போனால் போகட்டும் போடா’ ‘சட்டி சுட்டதடா’ முதலிய பாடல்கள் ஒலிக்காத சாவு வீடுகளும் தமிழ்நாட்டுக்கிராமங்களில் இன்றும் கூட இல்லை. போனால் போகட்டும் என்று டி எம் எஸ்ஸின் மரணத்தை நம்மால் எடுத்துக் கொள்ள முடியாமலிருப்பதும் அதனால்தானோ..!

தமிழைத் தமிழாகப்பாடி அம்மொழியின் வளத்தை - வார்த்தை விழுங்கல்கள் இல்லாமல்-  என்ன பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் எந்தச்  சிக்கலும் இல்லாமல்- திருத்தமான உச்சரிப்புடன் திரை இசை வழியே கொண்டு சேர்த்த இருவர் டி எம் எஸ்ஸும் பி.சுசீலாவும் ! அவர்கள் இருவரும் இணைந்து பாடிய பல பாடல்களும் காலத்தை வென்றவையாய்த் தமிழ்த் திரையுலகில் சகாப்தம் படைத்திருப்பவை. அவற்றில் ஒன்றான பாச மலரின் ‘’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ..’’ பாடல், இங்கே டி எம் எஸ்ஸின் நினைவுக்கு அஞ்சலியாக.....


3 கருத்துகள் :

Unknown சொன்னது…

மூன்று தலைமுறை சேர்ந்தவர்களை தன் வசீகரக் குரலால் கட்டி ஆண்ட TMS அவர்களுக்கு உங்களின் அஞ்சலி அருமை !என் மனதில் உள்ளதை நீங்கள் படித்து எழுதி உள்ளதாகவே படுகிறது !
பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !
'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான
பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !
http://jokkaali.blogspot.in/2013/05/tms_30.html

குலசேகரன் சொன்னது…

// தமிழைத் தமிழாகப்பாடி அம்மொழியின் வளத்தை - வார்த்தை விழுங்கல்கள் இல்லாமல்- என்ன பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லாமல்- திருத்தமான உச்சரிப்புடன் திரை இசை வழியே கொண்டு சேர்த்த இருவர் டி எம் எஸ்ஸும் பி.சுசீலாவும் !/

அந்த இருவருக்குமே தமிழ் தாய்மொழி கிடையாதென்பது சுவராசியமான செய்தியல்லவா?

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தமிழை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த ஆசானாகவே டி.எம்.எஸ்'ஐ பார்க்கிறேன். இன்றும் ஒலிபெருக்கிகளில் அவரது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தசாவதாரம் படத்தில் வரும் இந்த வரிகள் பொருத்தமாகயிருக்கும்.

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்.

மதுரையைச் சேர்ந்த அந்த மகத்தான கலைஞனின் குரல் காற்றின் அலைகளில் எப்போதும் நிரம்பியிருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....