துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.6.13

அசடனுக்கு அங்கீகாரம்




கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2012ம் ஆண்டுக்கான பரிசு 15.6.13 அன்று கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்ற இயல்விருது விழாவில் - மொழிபெயர்ப்புப் பிரிவில் -மதுரை பாரதி புத்தகநிலையம் வெளியிட்டிருக்கும் என் மொழிபெயர்ப்பான ’அசடன்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து படைப்பிலக்கியத் துறையிலும் மொழியாக்கத் துறையிலும் தீவிரமாய் இயங்க இந்த அங்கீகாரம் உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பாளர்களுக்கும் -என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அசடன் நாவலின் மொழிபெயர்ப்பை மனமாரப்பாராட்டி வாழ்த்துக்கூறி இவ்விருது குறித்த செய்தியை எனக்குத் தெரிவித்த தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பின் செயலரும் சிறந்த படைப்பாளியுமான திரு அ.முத்துலிங்கம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.


இப்பணியில் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து என்னோடு துணை நின்ற பலருக்கும் , இதை மிகச்சிறந்த முறையில் பதிப்பித்திருக்கும் மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் என் நன்றி.
Inline image 1



விருதுப்பட்டியல்;

புனைவு : கண்மணி குணசேகரன் - அஞ்சலை நாவலுக்கு

அபுனைவு-1 : பிரபஞ்சன் - தாழப் பறக்காத பரத்தையர் கொடி நூலுக்காக

அபுனைவு-2 : அப்பு - வன்னி யுத்தம் நூலுக்கு

மொழிபெயர்ப்பு-1 : எம்.ஏ.சுசீலா - தஸ்தயெவ்ஸ்கியின் அசடன் நூலுக்கு

மொழிபெயர்ப்பு-2 : வைதேகி ஹெர்பர்ட் - 12 சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக

கவிதை-1 : நிலாந்தன் -"யுக புராணம்"கவிதைத் தொகுப்புக்கு

கவிதை-2 : தேவ அபிரா- "இருள் தின்ற ஈழம்" என்ற கவிதைத் தொகுப்புக்கு

கணினி விருது : முகுந்தராஜ் - எ கலப்பை மென்பொருளுக்காக

வாழ்நாள் சாதனையாளர் விருதான இயல்விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடன் அவர்களுக்கும் 

விருதுகளை வென்றிருக்கும் பிறருக்கும் என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்...

9.6.13

புல்லாங்குழலின் மூங்கில்.....


சில இளமைக்கால நினைவுகள் என்றும் அழியாதவை...
டி எம் எஸ்ஸின் பாடல்களும் அந்த வரிசைக்குள் வருபவைதான்.

இலங்கை வானொலி தவிரப் பிற ஊடகங்களின் ஆக்கிரமிப்புக்கள் அற்ற அறுபதுகளின் காலகட்டத்தில் டி எம் எஸ்ஸின் குரலைக்கேட்டபடியேதான் என் பாலியம் கழிந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிப் பருவத்தில் காரைக்குடியில் வசித்தபோது டி எம் எஸ்ஸின் நேரடிக்கச்சேரிகளைக் கேட்கவும், ரசிக்கவும் கூட எனக்கு வாய்த்திருக்கிறது.இன்று புதிது புதிதாய்ப் பல அலைகள் வந்து அடித்தாலும்- அவற்றையும் கூட  ரசிக்கப்பழகினாலும் -  நெஞ்சுக்கு மிகப் பரிச்சயமானதும் பழகிப்போனதுமான இளமையின் முதல் அறிமுகம் கிளர்த்தும் பரவசம் என்றுமே அலாதியானதுதான்.

இன்றைய தலைமுறைக்குப் பழக்கமில்லாத - உச்ச ஸ்தாயியில் [பல பாடல்களில்] ஓங்கி ஒலிக்கும் குரல் டி எம் எஸ்ஸுடையது; சென்ற தலைமுறையிலும் கூட ஒரு சிலரால் ‘சவுண்ட் ராஜன்’ என்ற எள்ளலுக்கு ஆட்பட்டாலும் அந்தக் குரலுக்கென்று சிறப்பான ஒரு தனித்துவம் உண்டு. கம்பீரம் , குழைவு, பாசம் , ரௌத்திரம், வீரம் எனப்பல வகையான உணர்ச்சி பாவங்கள் பொங்கித் ததும்பும் அந்தக் குரலின் வழியே டி எம் எஸ்ஸுமே கூட நடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்த்திரையுலகில் ஒரே காலகட்டத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த சிவாஜி, எம் ஜி ஆர் ஆகிய இரு நடிகர்களுக்கும் இருவேறுபட்ட தன்மைகளுடன் குரலை மாற்றிப்பாடும் வல்லமை பெற்றிருந்தவர் டி எம் எஸ் . சாந்தி படத்தில் வரும் ‘’யார் அந்த நிலவு’’ க்கும்....புதிய பறவையின் ‘’எங்கே நிம்மதி’’க்கும் , எம் ஜி ஆருக்காக ஒலித்த ‘’பாரப்பா பழனியப்பா’’வுக்கும் கண்ணதாசனுக்காகப்பாடிய ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு‘’ பாடலுக்கும் இடையிலேதான் எத்தனை நுணுக்கமான வேறுபாடுகள்...? எம் ஜி ஆருக்காகப் பாடுகையில் ஒரு மூக்கொலியைத் தான் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வதாக ஒரு பேட்டியில் முன்பு குறிப்பிட்டிருந்தார் டி எம் எஸ்.  சிவாஜியின் குரலை அச்சுப் பிறழாமல் நகலெடுத்தது போல இயல்பாகவே வாய்த்திருப்பது டி எம் எஸ்ஸின் குரல்; அதன் வழி வரும் பாடல்களைக் கேட்கும்போது  அதைப்பாடுவது சிவாஜியேதானோ என்ற பிரமைக்குப் பல முறை ஆட்பட நேர்வதுண்டு.  டி எம் சௌந்தரராஜன் என்னும் குரல் நடிகர் - குரல் கலைஞர் பெற்ற அபாரமான வெற்றி அது. சிவாஜியின் நடிப்புக்கு இணையாக- அது பெற்ற வெற்றிக்கெல்லாம் பக்கத் துணையாக நின்றது டி எம் எஸ்ஸின் குரல்தான்.

முதன்மையான பாடல் தொடங்குவதற்கு முன்பு ‘தொகையறா’ எனப்படும் வசனவரிகள் பல பழைய திரைப்படப் பாடல்களில் இடம் பெற்றிருப்பதைக் கேட்டிருக்கலாம். பின்னணி வாத்தியக்கருவிகளின் துணை  இல்லாமல் குரலின் துணையோடு மட்டுமே அந்தக்கவிதை வரிகளைப் பாடுவதற்கான அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் பெற்றிருந்த மிகச்சில பாடகர்களில் டி எம் எஸ்ஸும் ஒருவர் .

கண்ணதாசன்,  விசுவநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் உருவான
டி எம் எஸ்ஸின் பாடல்கள் பலவும் - இன்றும் கூடப் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஒலித்தபடி எளிய மக்களின் ரசனைக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன. ’உள்ளம் உருகுதைய்யா’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ ஆகிய அவரது பாடல்கள் ஒலிக்காத கோயில்களும் , ’அச்சம் என்பது மடமையடா’  ஒலிக்காத அரசியல் கூட்டங்களும்,  ’போனால் போகட்டும் போடா’ ‘சட்டி சுட்டதடா’ முதலிய பாடல்கள் ஒலிக்காத சாவு வீடுகளும் தமிழ்நாட்டுக்கிராமங்களில் இன்றும் கூட இல்லை. போனால் போகட்டும் என்று டி எம் எஸ்ஸின் மரணத்தை நம்மால் எடுத்துக் கொள்ள முடியாமலிருப்பதும் அதனால்தானோ..!

தமிழைத் தமிழாகப்பாடி அம்மொழியின் வளத்தை - வார்த்தை விழுங்கல்கள் இல்லாமல்-  என்ன பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் எந்தச்  சிக்கலும் இல்லாமல்- திருத்தமான உச்சரிப்புடன் திரை இசை வழியே கொண்டு சேர்த்த இருவர் டி எம் எஸ்ஸும் பி.சுசீலாவும் ! அவர்கள் இருவரும் இணைந்து பாடிய பல பாடல்களும் காலத்தை வென்றவையாய்த் தமிழ்த் திரையுலகில் சகாப்தம் படைத்திருப்பவை. அவற்றில் ஒன்றான பாச மலரின் ‘’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ..’’ பாடல், இங்கே டி எம் எஸ்ஸின் நினைவுக்கு அஞ்சலியாக.....


8.6.13

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்…5 [உஜ்ஜயினி]

ஷிப்ரி ஆற்றங்கரையில் உஜ்ஜயினிப்பட்டணம்.....

27/5 திங்களன்று சிவபுரியிலிருந்து உஜ்ஜயினி நோக்கிக் காலை ஏழுமணிக்குத் தொடங்கிய எங்கள் பயணம் மாலை ஐந்து மணி வரை நீண்டு கொண்டு சென்றது. வழியில் பெருநகரங்கள் ஒன்று கூட எதிர்ப்படாதது வியப்புத்தான்; வழியெங்கும் வறட்சியான கரிய நிலங்கள். அவற்றில் சில உழுது போடப்பட்டவை.

மிகவும் பின்தங்கிப்போன- வெயிலின் கொடுமையால் வாடி வதங்கி வளம் குன்றிக்கிடக்கும் அந்த மத்தியப்பிரதேச கிராமங்கள் வழியே செல்லும்போது இந்தியாவின் ஆன்மாவை அறிய ஒரே வழி கிராமங்களை அறிவதுதான் என்ற மகாத்மாவின் வாசகமே மனதில் எழுந்தது.
வழியில் சீரான உணவு விடுதிகள் எங்குமில்லை; ’ப்ரெட்’ என்ற பெயரைக் கூடக் கேள்விப்பட்டிராத மிகச் சிறிய கடைகளைக்கொண்டிருந்த அந்த கிராமங்களில் எந்தவகையான உணவும் கிடைக்க வழியில்லாததால் ஒரு சிறு கிராமத்தின் குடிசைக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் நீரெடுத்து நாங்கள் கொண்டு சென்றிருந்த அடுப்பை வைத்து வைத்து எளிமையான உணவு சமைத்து உண்டோம்.தில்லி போன்ற பெருநகரத்தில் வளர்ந்து பழகிப்போன எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அது வியப்பென்றால் எங்கள் வசமிருக்கும் தொலைநோக்கியும், புகைப்படக்கருவியும் எங்கள் சமையல் சாதனங்களும் அந்த அப்பாவி மக்களுக்கு ஓர் ஆச்சரியம்… தங்கள் விளைச்சலில் உருவான காய்கறிகளை ஆசை ஆசையாய்க் கொண்டு வந்து தந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவிய அந்த மொழி தெரியாத கிராமத்தாருக்கு எங்களுக்குத் தெரிந்த மொழியில் எங்கள் நன்றியைப்புலப்படுத்தியபடி அங்கிருந்து விடைபெற்றோம்.
மாடு கன்றுகளோடு மத்தியப்பிரதேச கிராமத்தார்


மாலை ஐந்து மணியளவில் உஜ்ஜயினி வந்தடைந்தபோது மிகப் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஒரு நகரத்தில் கால்பதித்த உணர்வில் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது. குவாலியர் வரை தொடர்ந்த வெயில் கொடுமை உஜ்ஜயினி வந்ததும் சற்றே குறையக் கொஞ்சம் பசுமையும் கூட ஆங்காங்கே தலை காட்டத் தொடங்கியிருந்தது.

வெகுதூரப்பயணம் என்பதால் மாலை எங்கும் செல்லாமல் விடுதியிலேயே ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள்  28/5/ செவ்வாயன்று உஜ்ஜயினிக்குள் வலம் வரக்கிளம்பினோம்.

அவந்தி, விஷாலி எனப்பல பெயர்களால் அறியப்படும் உஜ்ஜயினி இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று என்னும் சிறப்புக்குரியது. கி மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு, கௌதம புத்தரின் காலத்திலிருந்தே அவந்தி அரசின் தலைநகரமாக அவந்திகா என்னும்பெயருடன் வழங்கி வந்த உஜ்ஜயினி மௌரியர்கள், சாதவாகனர்கள் ஆகியோரால் ஆளப்பட்டு குப்த வம்சத்து அரசன் விக்கிரமாதித்தன் [இரண்டாம் சந்திர குப்தன்] காலத்தில் அவனது தலைநகராகப் பெரும்புகழ் பெற்றது. உஜ்ஜயினி என்றதுமே நம் நினைவில் எழுவது விக்கிரமாதித்தனும் அவன் குறித்த கதைகளும்தான்.

உஜ்ஜயினி தெருக்களில் காட்சி தரும் விக்கிரமாதித்தன்...

இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் உஜ்ஜயினி வட, தென் மாநிலங்களுக்கு இடையே,விந்திய மலைக்கு ஊடானஒரு வணிக இணைப்புப் பாதையாகவும் விளங்கியிருக்கிறது.

கி பி 10,11ஆம் நூற்றாண்டுகளில் உஜ்ஜயினி கணிதம் மற்றும் வானியல் ஆராய்ச்சியின் மையமாக விளங்கியது. பூஜ்யத்தின் சிறப்பை உலகறியச்செய்த கணித மேதைகள், மற்றும் வராகமிகிரர், பாஸ்கரர் [இவரது பெயராலேயே பாஸ்கரா என்னும் விண்கோள்] போன்ற புகழ்பெற்ற வானியல் நிபுணர்கள் ஆகியோர் வாழ்ந்த இந்த மண்ணில் இன்றும் கூட ஒரு சிறிய வானியல் ஆராய்ச்சி மையம் இருக்கிறது.  


ஜெய்ப்பூர் மற்றும் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போல, சூரியனின் நிழலை வைத்துக் காலத்தைக் கணக்கிட்ட முறைகளைக்காட்டும் பல பழங்காலக் கருவிகள் அங்கே நிறுவப்பட்டிருக்கின்றன.


தொன்மைக்காலங்களில் உலகம் முழுமைக்குமான வானியல் கணக்கீடுகள் - காலக் கணக்கீடுகள் - உஜ்ஜயினியை உலகத்தின் நடுவாக வைத்தபடி- உஜ்ஜயினியை மையமிட்டே- நிகழ்ந்திருக்கின்றன. அதன் ஒரு வெளிப்பாட்டையே இறைவழிபாட்டு முறையிலும் காண முடிகிறது.12 ஜோதிர்லிங்கங்களில் மூன்றாவதாகக் கருதப்படும் லிங்கம், இங்கிருக்கும் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயிலில் சுயம்புவாகக்காட்சி தருகிறது. இலேசான ஊதாவும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் பளிங்காலான அந்த லிங்கம் தரும் காட்சி தெய்வீகமும் அற்புதமும் இணைந்தது.வானியல் கணக்கீட்டு முறையில் ‘ஷங்கு யந்திரா’வுக்கு [shankuyantra,] எனப்படும் கருவிக்கு முதலிடம் உண்டு. ‘ஷங்கு யந்திரா’வின் இருப்பிடத்திலேதான் அந்த ஜோதிர்லிங்கம் நிறுவப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக்கோயிலின் முதன்மை மூர்த்தியானசிவபெருமானுக்குவழங்கும் ’மகாகால்’ என்னும் பெயர் பிறப்பு இறப்பு ஆகிய காலங்களை நிர்ணயிக்கும் காலத்தின் தலைவனாக சிவபெருமானைக் குறிப்பிடும் வகையிலேயே அமைந்திருக்கிறது.


மகாகாலேஸ்வரர் கோயில்
உஜ்ஜயினி ஒரு கோயில் நகரம். முக்தி தரும் தலங்கள் ஏழு என்று கருட புராணம் குறிப்பிடும் இந்துக்களின் புனித நகரங்களில், உஜ்ஜயினியும்ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. [பிற ஆறு தலங்கள் - அயோத்தி, மதுரா [ஆக்ரா அருகிலுள்ள வட மதுரை], மாயா எனப்படும் ஹரித்துவார், காஞ்சி, துவாரகை ஆகியவை] .ஷிப்ரா நதிதீரத்தில் அமைந்திருக்கும்இங்கு நிகழும் கும்பமேளாவும்ஹரித்துவார்,அலாகாபாத் நகரங்களைப்போலவே சிறப்பு வாய்ந்தது.

அடுத்து நாங்கள் சென்றது,விக்கிரமாதித்தன் வழிபட்டதும் அவனது குலதெய்வக் கோயிலாக எண்ணப்படுவதுமான  ஹர்சித்தி மந்திர் என்னும் கோயிலுக்கு. .
ஹர்சித்தி கோயில்
பீடத்துக்கு அடியில் காளி, நடுவே மகாலட்சுமி, மேலே கலைமகள் என ஒரே சன்னதியில், அடுத்தடுத்த அடுக்காக முப்பெரும் தேவியரும் ஒரே நீட்சியுடன் காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பு. 52 சக்திபீடங்களில் ஒன்று இந்த ஆலயம்.

சன்னதிக்கு முன்புள்ள வளாகத்தில் இருக்கும் இரு பெரும் கல் விளக்குத் தூண்களும் வித்தியாசமான வடிவமைப்புக் கொண்டவை. இவை போன்ற தூண் அமைப்புக்களை மத்தியப்பிரதேச,மகாராஷ்டிரத்திலுள்ள வேறு சில கோயில்களிலும் காண முடிந்தது.


உஜ்ஜயினிலிருந்து சற்றுத் தொலைவில் காட்டுப்பகுதிக்குள்  ’கட் காளி’ என்னும் பத்ரகாளி கோயில் நம் ஊர்ப்பகுதிகளின் எல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்களை நினைவூட்டுவது.

அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்த காலபைரவர் கோயிலில் நாட்டுச்சாராயத்தைக் கடவுளுக்குப் படையலாக்கும் வழக்கத்தை -அதுவும் கூட சுருட்டு,சாராயம் வைத்துப்படைக்கும் நம் கிராமப்பகுதிகளைப்போலத்தான் - காண முடிந்தது.


பழமையான உஜ்ஜயினி , கோயில்களும் கும்பமேளா விழாக்களும் நிறைந்தது என்றால் மற்றொரு புறம், பல வகை அங்காடிகள் நிறைந்த இன்றைய நவீனமான உஜ்ஜயினியையும் காண முடிந்தது..பத்தீக் சாயம் தோய்க்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகள் கடைகள் எங்கும் நிரம்பிக்கிடந்தன. 

குவாலியரில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டது போலவே பலப்பல ஆட்சிக்காலங்களுக்குப் பின் இங்கும் சிந்தியா அரச குடும்பத்தின் செல்வாக்கே மேலோங்கி இருந்திருக்கிறது. வயல் வெளிகள் வழியே இன்றைய உஜ்ஜயினிக்குத் திரும்பி வரும்போது அந்நிலங்களில் பலவும் நிலமற்றோர்க்கு சிந்தியா குடும்பத்தினரால் வழங்கப்பட்டவை என்றும் இன்று அவற்றின் விலை மதிப்பு மிக அதிகம் என்றும் எங்களுக்குத் துணையாக வந்திருந்த அலுவலர் ஒருவர் சொல்லிக்கொண்டே வந்தார்.

அன்று மாலை உஜ்ஜயினில் சற்று ஓய்வெடுத்தபின் விந்திய மலைக்கு ஊடாக நர்மதா நதியைப் பார்த்தபடி ஔரங்காபாத் செல்லும் எங்கள் அடுத்த பயணம் மறுநாள் 29/5/13 காலை 6 மணியளவில் தொடங்கியது.

[பயணம் தொடரும்..]


7.6.13

தினமலரில் ‘அசடன்’

அசடன் நாவல் மொழிபெயர்ப்புக் குறித்து
 2.6.2013 தேதியிட்ட ‘தினமலர்-வாரமலர்’ இதழில் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகியிருக்கும் சிறு குறிப்பு

http://books.dinamalar.com/details.asp?id=22356
அசடன்
விலைரூ.650
ஆசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
வெளியீடுபாரதி புக் ஹவுஸ்
பகுதிகதைகள்
ISBN எண்:
Rating
    
    
பிடித்தவை
பக்கம்: 672
இந்த நாவல், பியோதர்  தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல்  எழுதப்பட்ட, "த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி.எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது, முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என, தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார்.
இன்று வரை, லட்சியவாத கதாபாத்திரங்களின் பிரதிநிதியாக மிஷ்கினையே சுட்டுவர் இலக்கியவாதிகள். கரமாசாவ் சகோதரர்களில் வரும் அல்யேஷாவை விட, இவன்நல்லவன்  அதனால் தான், நல்லவனுக்கு இந்த உலகம் வைத்திருக்கும் பெயரையே நாவலுக்கு தலைப்பாக்கினார் தஸ்தயேவ்ஸ்கி.

தஸ்தயேவ்ஸ்கியை போன்றவர்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமம் அதிகம். திருமதி. சுசீலாவின் மொழிபெயர்ப்பு மிக லகுவாக, கதையோடு நாம் பயணிக்கும் விதமாய் உள்ளது.  இலக்கிய ஆர்வம் உள்ள எவரும், தவறவிடக்கூடாத நூல் இந்த "அசடன்.

3.6.13

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்-4-சிவபுரி தேசியவனக்காப்பகம்





குவாலியர் நகர விஜயத்தை அரண்மனையோடு முடித்துக்கொண்டு அங்கிருந்து சிறிது தொலைவிலிருந்த சிவபுரி தேசிய வனவிலங்குப் பூங்காவை நோக்கிய எங்கள் பயணத்தை அன்று மதியமே [26/5] தொடங்கினோம்.






மதியம் இரண்டேகாலுக்குக் கிளம்பிய நாங்கள் சிவபுரியை அடையும்போது மாலை மணி 5.  ஒரு காலத்தில் சிந்தியா அரச குடும்பத்துக்குச் சொந்தமானவையாக - அவர்கள் வேட்டையாடச்செல்லும் இடமாக இருந்த சிவபுரிக்காடுகள் தற்போது அரசின் வனத்துறை வசம் ’’மாதவ் தேசியப் பூங்கா’’ என்ற பெயருடன் தேசிய வனக் காப்பகமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சிவபுரி சென்று சேர்ந்ததும் விருந்தினர் விடுதியில் பொருட்களை வைத்து விட்டு அங்குள்ள வனக்காவலர் உதவியுடன் காரிலேயே காட்டுக்குள் ஒரு கான் உலாவுக்குச் சென்றோம். மருமகன் வனத்துறை சார்ந்தவர் என்பதால் கண்ணில் பட்ட பறவைகளையெல்லாம் குழந்தைகளுக்கு இனம் காட்டிக் கொண்டே வந்தார்; பறவைகளைச் சுட்டுவதில் [bird watching]பழகிப்போய் ஆர்வம் கொண்டிருக்கும் என் பேத்தியும் சளைக்காமல் அவருக்குச் சரிசமமாகப் பல வகையான  பறவைகளைமிக நுணுக்கமாக இனம் காட்டிக் கொண்டே வந்தாள்.

ராஜஸ்தானத்தை ஒட்டியிருந்த மத்தியப்பிரதேசப்பகுதி என்பதால் குவாலியரில் காணப்பட்ட மயில்களை இங்கும் காண முடிந்தது.கோடைக் காலத்தில் வடநாட்டுப் பகுதிகளில் சூரிய அஸ்தமனம் தாமதமாவதால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேல் - மாலை ஆறே முக்கால் மணி வரை எங்களால் காட்டுக்குள் சுற்றிவர முடிந்தது. வரையாடுகள், துள்ளி ஓடும் புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள்,கீரிப்பிள்ளைகள், வவ்வால்கள், லங்கூர் இனக்குரங்குகள் எனப்பல வகையான விலங்குகளும் பறவை இனங்களும் மரங்களில் தொங்கும் வவ்வால்களின் கூட்டத்தோடு எங்கள் கண்ணில் பட்டன.


புதருக்குள் ஒளிந்து மாயம் காட்டும் புள்ளிமான்....






மரங்களில் தொங்கும் வவ்வால்கள் 
கானுலாவின்போது காட்டின் நடுமையத்திலிருந்த கம்பீரமான வடிவமைப்போடு கூடிய ஒரு கட்டிடம் எங்கள் கருத்தை ஈர்த்தது; ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் விஜயத்தை ஒட்டிக் கட்டப்பட்டது அந்த மாளிகை ;  புலி வேட்டைக்காக அங்கே வந்து கொண்டிருந்த அவர், அங்கு வந்து சேர்வதற்கு முன்பே  அவரது வேட்டை ஆர்வத்துக்கு இரையாக ஒரு புலி சிக்கி விட்டதால் அங்கு வராமலேயே -அந்த மாளிகையில் தங்காமலேயே சென்று விட்டார் என்பதை அறிந்தபோது சுவாரசியம் இன்னும் கூடச் சற்றுக் கூடிப்போனது. அந்த நினைவின் எச்சமாக - அரிய கட்டிடக்கலையின் ஒரு சாட்சியாக  ஜார்ஜ் கேஸில் எனப்படும் அந்த மாளிகை வன அலுவல்களுக்குப் பயன்படும் ஒரு கட்டிடமாகக் காட்டுக்கு நடுவே நின்று கொண்டிருக்கிறது.

’’ஜார்ஜ் கேஸில்’’



சிந்தியா வம்சத்து அரசர்கள் விலங்குகளை வேட்டையாட வசதியாக உயர்ந்த மதில்களின் மீது கதவுகளோடு கூடிய பதுங்கறைகளை அமைத்துப் பாதுகாப்போடு வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்; அந்த உயரமான ஜன்னல்களிலிருந்துதான் அவர்களது துப்பாக்கி வேட்டை தொடர்ந்திருக்கிறது.


வேட்டைக்குக் குறி வைக்கும் பதுங்கறைகள்
சிவபுரிக் காடுகள் மட்டுமன்றி சிவபுரி என்னும் சிற்றூருமே வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதால் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்று -சாக்யா சாகர்,மாதவ் சாகர்-  நீர்ப்பிடிப்புப் பகுதியாகவே அந்தக்காடுகளுக்கு நடுவே உருவாக்கப்பட்டிருக்கிறது;  கானுயிர்களுக்கு மட்டுமல்லாமல் சிவபுரி மக்களுக்கான குடிநீரும் அங்கிருந்தே கிடைக்கிறது.




இரு நீக்ரோ வாலிபர்கள் கையில் ஒரு  உருண்டையை ஏந்தியபடி காட்சியளிக்கும் சிற்பங்களோடு கூடிய ஏரியின் முன் மண்டபம் மிக விசாலமானது; ஏரியின் அழகை ரசிக்க வசதியான ஆசனங்களோடு கூடியது. அதற்கு மிக அண்மையிலேயே அதை ஒட்டியதாகவே எங்கள் தங்கும் விடுதியும் அமைந்திருந்ததால் இரவு படரும் வரை - மறுநாள் காலை விடியலிலும் கூட- ஏரியின் வனப்பை...காட்டின் அழகைக்கண்குளிரக்காணும் வாய்ப்பு எங்களுக்குக்கிட்டியது.

ஒரு காலத்தில் வேட்டையாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்தப் பகுதி இன்று கானுயிர்களின் பாதுகாப்புக்கு உரியதாக - காட்டுயிர்களின் அழிவைத் தடுப்பதற்காகான வனப்பூங்காவாக மாறிப்போயிருக்கும் விந்தையை அசை போட்டுக் கொண்டே மறுநாள் காலை சிவபுரியிலிருந்து உஜ்ஜயினி நோக்கிய எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.



ஏரி ஓரமுள்ள பாறையில் இளைப்பாறும் முதலை

செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை....
[பயணம் தொடரும்..]

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்…3-[குவாலியர்]



விஜய ராஜே சிந்தியா , மாதவராவ் சிந்தியா, வசுந்தரா சிந்தியா, ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா எனத் தொடர்ந்து செல்லும் சிந்தியாக்களின் செல்வாக்கால் சிந்தியா நகரம் என்றே அழைக்கப்படும் குவாலியர் நகரத்து அரண்மனையில் மேலும் சில காட்சிகள்….



வேட்டையாடிப் பாடம் செய்யப்பெற்ற புலி 

உலகப்புகழ் பெற்ற தரை விரிப்பு 


சாரட் வண்டியுடன் என் பேரன் 



வண்ணமயமான ஷாண்டிலியர் விளக்குகள்


[பயணம் தொடரும்...]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....