துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.9.09

’நல்லாசிரியனுமாய்.....’


கற்பிக்கும்போது - தன்னுடைய கற்றலையும்,கல்வி சார்ந்த தேடல்களையும் ஒரு போதும் நிறுத்தி விடாமல் கூடவே தொடரும் நல்லாசிரியர்கள்....

கல்வியையும்...கற்றலையும் சுமையாக்கி விடாமல் அவற்றைக் கொண்டாட்டமாக்கிக் காட்டி வகுப்பறை அனுபவத்தை உற்சாகமும்,ஊக்கமும் இணைந்த ஓர் ஆனந்த அனுபவமாக்கும் நல்லாசிரியர்கள்...

கல்விப்பணிக்கு ஊதியம் பெற்றாலும்- காசை முன்னிறுத்தாமல் மாணவர் மீதான கரிசனத்தை முன்னிறுத்தும் நல்லாசிரியர்கள்.....

ஏட்டிலுள்ளவற்றையே எதிரொலித்துக்கொண்டிருக்காமல் - அவற்றின் அடித்தளத்தோடு அவற்றைக் கடந்து புதிய திசைகளை நோக்கியும் போக முடியும் என்ற தன்னம்பிக்கை விதைகளைத் தூவும் நல்லாசிரியர்கள்....

எந்தப்பொறி எந்த இளம் உள்ளத்தில் சூல் கொண்டிருக்கிறது என்பதை மிகச் சரியாக இனம் கண்டு அந்த அக்கினிக் குஞ்சைக் காட்டுத் தீயாக விசிறிவிடும் நல்லாசிரியர்கள்.....

எண்ணற்ற கேள்விகளை இதயத்தில் விதைத்து , அவற்றுக்கு விடைதேடிப் போகும் தீராத தாகத்தையும் அதற்கான மன உரத்தையும் ஊட்டும் நல்லாசிரியர்கள்.....

தலை சிறந்த முன் மாதிரியாக- அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்த பிம்பமாகப் பிஞ்சு மனங்களில் தன்னைக் கல்வெட்டாய்ப் பதிக்கும் நல்லாசிரியர்கள்.....

உள்ளொளியை ஏற்றிவைத்து அகக் கண்ணுக்குப் பார்வை நல்கும் அற்புதமான நல்லாசிரியர்கள்.....

என் அன்னை தொடங்கி எனக்கு அமைந்த அந்த நல்லாசிரியர்கள், வகுப்பறைகளில் வாய்த்தவர்கள் மட்டும் இல்லை....

என்னிலும் இளையவர்கள்.....,
என்னருமை மாணவர்கள்....,
கல்வி மற்றும் சமூகத் தகுதிகளில் என்னிலிருந்து வேறுபட்டிருப்பவர்கள் .....,
நான் மதித்துப் போற்றும் படைப்பாளிகள்.....,
பணியாட்கள் ...
வழிப்போக்கர்கள் ....,
இன்னும் என் அன்றாட வாழ்வில் நான் கடந்து போகும் ஒவ்வொருவருமே-என் பேரக்குழந்தைகள் உட்பட - தினந்தோறும் எனக்கு ஏதாவது ஒரு பாடத்தைப் புகட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

நம்மை நாமாக்கி உயிர்ப்புடன் உலவ வைக்கும் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தன்று அன்பான கை கூப்பு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....