23.9.09
’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’
‘’அசைவறு மதி கேட்டேன்’’என்பது சிவசக்தியிடம் பாரதி விடுக்கும் வேண்டுகோள்.
ஒருபோதும் சோம்பிக் கிடக்காத...எதைக் கண்டும் தளர்ந்து போய்விடாத...எந்த முயற்சியிலும் சலித்துப் போய்விடாத மனமே ‘அசைவறு மனம்’;
அதற்கு அடிப்படையாவது அசைவறு மதி.
‘’தனம் தரும் கல்வி தரும்....ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்’’
என்று அபிராமி அந்தாதியும்,
‘கலையாத கல்வியும்.......’சலியாத மனமும்...’’என்று அபிராமி அம்மை பதிகமும் குறிப்பிடுவதும் கூட இதைத்தான்.
‘’அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’’ என்றும்,
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை’’
என்றும் வள்ளுவமும் அசைவின்மை பற்றிய செய்திகளை முன் வைக்கிறது.
மக்கள் வழக்கில் ’‘அசந்து போயிட்டான்யா’’ என்று அடிக்கடி புழங்கும் தொடரும் இதோடு தொடர்பு கொண்டிருப்பதுதான்.
அசதி,அசைவு ஆகியவை வெறும் உடற்சோர்வு காரணமாக மட்டும் நேர்ந்து விடுவதில்லை;
சோம்பல்...முயற்சியின்மை என மனிதனின் ஆக்க சக்திக்குத் தடைபோடும்சில குணங்களே இதற்குக் காரணமாகி, இடையறாத அவனது செயலூக்கத்தை ,ஆர்வத்துடன் செயல்படும் எழுச்சியை ,அவனது உற்சாகமான இயக்கங்களை முடக்கிப் போடுகின்றன.மேலும் அடுத்தடுத்து எதிர்ப்பட நேரும் தோல்விகள்,சரிவுகள் முதலியனவும் கூட அவனது சலிப்புக்கும்,அவனுக்கு விளையும் மனத் தளர்ச்சிக்கும் காரணங்களாகி விடுகின்றன.இவற்றால் மனச் சோர்வுக்கு ஆளாகும் அவன் ‘அசைவு’க்கு ஆட்பட்டு எதுவுமே செய்யாமல் ‘சும்மா’இருக்கக்கற்றுக் கொண்டு, ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையைப்போல ஒரு மூலையில் முடங்கிக் கொண்டு விடுகிறான்.
வட மொழியில் ‘தாமச’குணமாகச் சொல்லப்படுவதும் இதுவே.
‘தாமச’குணத்தின் உருவகமாகச் சொல்லப்படுவது எருமை.
எருமைமுகம் உடையவனாகப் புராணத் தொன்மங்களில் சித்திரிக்கப்படும் ‘மகிஷாசுரன்’ ,உண்மையில் வெளியிலிருப்பவன் அல்ல;
நமக்குள் இருந்து கொண்டே நம்மை இம்சிக்கும் அந்தத் ‘தாமச’குணத்தின் மொத்த அடையாளமே மகிஷாசுரன்.
அந்தத் தாமச குணத்தை...மந்தமான அந்த நிலைப்பாட்டை...சோம்பலை..மனச்சலிப்பை..தளர்ச்சியை
அசைக்க முடியாத பாறை போன்ற மன உறுதியால் நமக்குள் நாமே வெற்றி கொள்வதே மகிஷ வதம்.
மகிடனின் தலை மீது ஏறி நடக்கும் எழிற்கொடியாகிய துர்க்கை,நம் மன உரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள உருவகம்.
துர்க்கை என்றால் ‘அசைக்க இயலாதது’ என்று பொருள்.
மன வலிமையாகிய துர்க்கையின் துணையால் சோம்பலாகிய எருமையை...அந்த இராக்கதப் பண்பை அழித்துத் தொலைப்பதே..அவ்வாறு தொலைப்பதற்கான முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாளே... வெற்றியின் விளைச்சலுக்கு வழிவகுக்கும் விஜய தசமி.
துப்பாக்கியிலிருந்து வெளிவரத் தயாராக...ஆயத்தமாக இருக்கும் தோட்டாவைப்போல நம் மனத்தைத் தயார் செய்துகொண்டு, எதையும் எதிர்கொள்ளவும்...தோல்விகளைப் புறந்தள்ளி நமக்கு நாமே ஊக்கத்தை வருவித்துக் கொள்ளவும் நமக்குள் நாமே ஒத்திகை பார்த்துக் கொள்ளும் நன்னாளே இந்நாள்.
மேற்குறித்த உள்ளார்ந்த தத்துவங்களை ஒதுக்கிவிட்டு ..... உருவக உள்ளர்த்தங்களைத் தொலைத்துவிட்டு.....ஆழ்ந்த அகமுகத் தேடல்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு வெறுமே காளி உருவத்தை...துர்க்கை வடிவத்தை மட்டும் மேலோட்டமாகக் கொண்டாடிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருககிறோம் நாம்.
’’நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.....
உண்மைகள் தெய்வங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்..’’
என்று,
புராணங்களிலுள்ள புறக் கதைகளை விடவும் அவற்றுள் ஆழ்ந்திருக்கும் உண்மையின் தரிசனங்களே வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முக்கியமானவை
என்பான் பாரதி.
‘’எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக்கெங்கணும் வெற்றி......
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி’’
என்ற பாரதியின் இந்த வரிகளைச் சோர்வு தலையெடுக்கும் தருணங்களிலெல்லாம் (auto suggestion போல)நம்முள் ஓடவிட்டால்.....
‘’எண்ணத்திருக்கும் எரியே சக்தி....
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி..’’
என்பதை நம் வாழ்நாளின் வேதமாக்கிக் கொண்டால்....அதுவே நம்மைப் புதிய உயிராக்கும்;நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர்த்தீயை உள்ளத்தில் மூண்டெழச் செய்யும்.
புதிய புதிய வெற்றிப்பாதைகளின் வழிகள் அப்போது தானாகவே திறந்து கொள்ளும்.
அனைவருக்கும் வெற்றித் திரு நாளின் வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
6 கருத்துகள் :
பாரதியின் வரிகளும் காளியின் மஹிஷாசுரவர்த்தினியின் வதையும் மிக அற்புதம். அம்மா உருவக வழிபாடு உருவ வழிபாடாய் மாறி ஒரு சடங்காகி விட்டதை நன்றாக சாடியுள்ளீர்கள். வகுப்பறையில் அமர்ந்து உங்கள் கணீர்க்குரலில் கேட்பது போன்றதொரு உணர்வு அம்மா. எடுத்த காரியம் யாவினும் வெற்றி.அதற்கு உளம் வேண்டிய படி செல்லும் உடல் அருளுவாள் மஹா சக்தி
அசைவறு மனம் என்பது மனமற்ற நிலை, மனமிறந்த நிலை என்பதாக, மனம் உண்மையின் வெளிச்சத்தைத் தடைசெய்யாத ஸ்படிகம் மாதிரியான நிலை எனத் தத்துவ மரபு விரிவாக விளக்கம் கொடுக்கிறது. உள்ளது உள்ளபடி அறியும் தெளிந்த பார்வை, அதைத் தொடர்ந்து வரும் ஞானம் என்பது இந்த நிலையில் கூடி வருவதாகப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இங்கே மனம் என்று பேசப்பட்டிருப்பது, நீரின் மூழ்கியிருக்கும் பனிப்பாறைகளில் வெளியில் தெரியும் ஒரு சிறு பகுதியைத் தான் அம்மா!
சும்மா இருப்பது என்பதும் அப்படித்தான், இங்கே நாம் அறியாமை இருளில் சோம்பிக் கிடக்கிற நிலை அல்ல. உள்ளதை உள்ளபடி அறிந்து, என்செயலாவதொன்றுமில்லை என்ற அறிவு கூடின நிலை. சும்மா இரு சொல் அற என்பது அருணகிரிநாதருக்கு அந்த ஆறுமுகன் காட்டிக் கொடுத்த பேருபதேசம்.
எடுத்துக் கொண்ட விஷயம் பெரிது அம்மா! நான்கு அல்லது ஐந்து பத்திகளுக்குள் சுருக்க முயன்றால், பலநேரங்களில் தவறான அல்லது முற்றுப்பெறாத சித்திரமாக ஆகிவிடக்கூடும்!
அன்புள்ள திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,
ஆழமான ஆன்ம தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் உங்கள் மாற்றுச் சிந்தனைகளை மனமார வரவேற்கிறேன்.
ஆனால் நான் எடுத்துக் கொண்டதும்.வலியுறுத்த விரும்பியதும் லௌகீக-வாழ்வியல் யதார்த்ததை ஒட்டிய மற்றொரு தளத்தை மட்டுமே.
ஆசிரியப் பணிசெய்து இளைஞர்களுடனேயே வெகுகாலம் பழகிப் போனதாலோ என்னவோ ,
அவர்களின் சோம்பல்,தளர்ச்சி, சலிப்பு இவற்றை சரிசெய்ய வேண்டுமென்பதே எனக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது.
அடிப்படையை அமைத்துவிட்டுத்தானே அடுத்த நிலைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.,
அவர்கள் கால் பதித்து நிற்கும் மண்ணில்-இந்த இக உலகில்
அவர்கள் வெற்றி பெறத் தடைக் கல்லாக இருக்கும் ‘தாமச குணங்களை’க் களைந்து விட்டுத் தன்னையும்,சமூகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் துடிப்புக் கொண்ட- ஓரளவு முழுமையான மனிதர்களாக உருப் பெறும்போதுதான் ஆன்மீக மேன்மையும்,அதிலுள்ள் சலனமற்ற மனநிலையும் அவர்களுக்குப் புரியக்கூடும்
.’சும்மா’வெட்டிப் பொழுது கழிப்பவர்களை அதிலிருந்து தூக்கி மேலெழுப்பினால்தானே உண்மையான ‘சும்மா’இருப்பதன் சுகம் அவர்களுக்குச் சித்தியாகும்.
நான் வைத்ததும் வைக்க எண்ணியதும் அந்த முதல் கல்லை மட்டுமே.
ஆழ்ந்த ஆன்மீக சாதகம் செய்து பழகியிருக்கும்பாரதி அன்றாட வாழ்வுத் தளத்தையும் கூடவே முன்வைக்கிறானல்லவா.அந்தப் பாதையை ஒட்டிய பயணமே என்னதும்.
எனினும் தங்கள் மேலான கருத்துக்களை உளமார மதித்துப் போற்றுகிறேன்.இன்னொரு பதிவுக்குரிய கருப் பொருளை நல்கியமைக்கு நன்றி.
//"ஆசிரியப் பணிசெய்து இளைஞர்களுடனேயே வெகுகாலம் பழகிப் போனதாலோ என்னவோ ,
அவர்களின் சோம்பல்,தளர்ச்சி, சலிப்பு இவற்றை சரிசெய்ய வேண்டுமென்பதே எனக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது"//
எங்களைப் பற்றி உள்ளது உள்ளபடி கூறியுள்ளீர்கள் அம்மா
நிஜமாகவே நீங்கள் வழி காட்டுவதாலும் கை பிடித்து அழைத்துச் செல்வதாலுமே நாங்கள் ஓரளவு இந்த நிலைக்கு எடுத்து வரப்பட்டோம் அம்மா
இந்த நவராத்திரித் திருநாளில் என் மனங்கவர்ந்த கொற்றவையை, வெற்றி தேவதையை கருப்பொருளாய்க் கொண்டு தாங்கள் வெளியிட்ட இந்த இடுகை என் மனங் கவர்ந்த ஒன்று அம்மா திரும்பத் திரும்பப் படிக்கிறேன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொருளை உணர்கிறேன் அம்மா
நன்றி தேனம்மை.ஆசிரியராக இருந்தபோது ஓரளவு நிறைவேற்றிய அதே செயலை...இப்போது பதிவின் வழியாகவும் பதியன் வைக்க முடிந்திருப்பதில் மகிழ்ச்சி.
//மேற்குறித்த உள்ளார்ந்த தத்துவங்களை ஒதுக்கிவிட்டு ..... உருவக உள்ளர்த்தங்களைத் தொலைத்துவிட்டு.....ஆழ்ந்த அகமுகத் தேடல்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு//
யார்,யார் சிவம்!
நீ,நான் சிவம்!
நட்டகல்லும் பேசிடுமோ நாதன் உள்ளிருக்க.
கருத்துரையிடுக