துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.9.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2

’’மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய 
குறிக்கோள்


பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை , பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள்.
அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.


பெண்ணின் புறத் தோற்றம்,புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத் தரம் - கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பலதுறைகளிலும் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது.பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனாலும் ஆணுக்கு நிகரான கல்வி,பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றைப் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு ,மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும் கூடக் கடுமையாக நிலவி வருகிறது.

‘’ஒரு பெண் வெறும் தாயாகவும், மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது ; வேறு வகையிலும் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எளிது.
ஆனால் தொன்றுதொட்டு வரும் சமூக மரபுகளும், உடற்கூறுகளும் மாற்றம் காணாத நிலையில் அவள் தன்னை எந்த வகையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரயறுத்தலும் , அதை நிறைவேற்றலும் அரிது’’
என்கிறார் கார்ல் பியர்சன் என்னும் சமூக இயலார்

பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத் தடைகள், இறுக்கங்கள் , மரபுவழிக் கடமைகள் ,அவளைத் தளைப்படுத்தும் சமூகக் கட்டுக்கள்  - இவற்றையெல்லாம் குறித்துப் பொறுப்புணர்வோடு சிந்தித்துப் பெண்ணின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.

தொடக்க நிலையில் ‘பெண்ணுரிமை ‘ என்றும் , ‘பெண் விடுதலை’ என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ‘பெண்ணியம்’ அல்லது ‘பெண் நிலை வாதம்’ என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச் சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல ’இதுதான் அது’ என ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது.
’அனைத்துப் பெண்களுக்கும் எக் காலங்களிலும் பொருந்தக் கூடிய வரையறை இதற்குக் கிடையாது’
என்கிறார் மொலீனா தேன்மொழி.
‘’இதன் விளக்கம் ..ஒரு சமுதாயத்தின் வரலாறு , பண்பாடு , இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் ‘
என்று தன் கருத்தைக் குறிப்பிடுகிறார் சமூகவியல் துறை சார்ந்த முத்துச் சிதம்பரம்
இவ்விருவரும் முன் வைத்துள்ள சிந்தனைகள் பெண்ணியம் குறித்த வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும் , அந்தந்தச் சூழல்களுக்கேற்பச் சில மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

தனிப்பட்ட ஓர் ஆணை எதிர்ப்பதோ , ஆணினத்தின் மீதே வெறுப்புக் கொண்டு கசப்பை உமிழ்வதோ பெண்ணியத்தின் நோக்கம் இல்லை.
சமூக உருவாக்கத்தில் பெண் என்பவள் படிப் படியே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண் முதன்மை பெறத் தொடங்கியதையும் , பிறகு அவனே அதிகார மையமாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாகக் காண்பதும் - அதன் உடனிகழ்வாகவே பெண் மீதான (உடல்,மனம் சார்ந்த ஒடுக்குமுறைகளும்,வன்முறைகளும்) இன்று வரையிலும் கூடத் தொடர்ந்து கொண்டிருப்பதை ஆராய்வதுமே பெண்ணியத்தின் இன்றியமையாத இலக்குகள்.

‘  இப்பவும் கூட 
   உந்தன் துணை இல்லாமல்
   எமது விடுதலைப் புயலைக் கடப்பதாய்
   உத்தேசமில்லை !..........

  அதற்கு முன்
  என் கரங்களின் மீது 
  உன் கால்கள் இருந்தால்-
  கொஞ்சம் நகர்த்திக் கொள்ளேன்’’
என ஆணைத் தன் சக தோழனாக்கி இவ் விடுதலைப் போரில் பங்கு பெற அழைக்கிறார் கவிஞர் சுபத்ரா.

.(பின் குறிப்பு;
இன்றைய நவீன, பின் நவீனப் பெண்ணிய எழுத்துக்கள் வரை பதிவுகள் தொடர்ந்து வெவ்வேறு போக்குகளை முன்வைக்கும்.எனவே அவசரம் கொள்ள வேண்டாம்)                                                    (அடுத்த பதிவில் மேலும்...)

1 கருத்து :

பவள சங்கரி சொன்னது…

அருமை........ என் வளைத்தளம் தங்களுக்கு பிடிக்கக் கூடும். நேரம் கிடைத்தால் ஒரு முறை வந்து பாருங்களேன்........நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....