துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.2.12

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-3

காவலும்,களவும்

‘’காவலும் களவும் மிக நெருக்கமான இணை கோடுகள்;எந்த நேரத்திலும் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும்’’என்று கூறும் ’காவல் கோட்டம்நாவல், காவல்-களவு என்னும் இருமைகளுக்கிடையே விரியும் வரலாற்றுப் புனைவாகவே உருப்பெற்றிருக்கிறது. காவலரே கள்வராகவும் கள்வரே காவலராகவும் உருமாறும் மாயத்தையும் இப் படைப்பு நிகழ்த்துகிறது.

மதுரையின் காவல் பொறுப்பை ஏற்றிருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் மாலிக் காபூர் படையெடுப்பிற்குப் பிறகு அந்த உரிமையை இழந்து கள்வர்களாக மாறித் தாதனூர் என்னும் சிற்றூரில் குடியேறும் கள்ளர்களாகிறார்கள். கால ஓட்டத்தில் மதுரை விஜயநகரப் பேரரசுக்கு உரியதாகிப் பிறகு அங்கே நாயக்கர் ஆட்சியும் நிலைபெற்றுச் சில காலம் கழிந்த பிறகு அந்த உரிமை அவர்களுக்குக் கிடைப்பதைக் கீழ்க்காணும் சம்பவத்தின் வழி விவரிக்கிறது நாவல்.

தாதனூரைச் சேர்ந்த கழுவன், கட்டுக்காவல் மிகுந்த திருமலை நாயக்கர் அரண்மனையில் கன்னம் வைத்து நுழைந்து மன்னரின் அரசமுத்திரையைத் திருடிக் கொண்டுசென்று விடுகிறான். அரசன் அப்போது அடைந்த பேரதிர்ச்சியை..
’’திகைப்பின் உச்சிக்கும்,ஆச்சரியத்தின் விளிம்புக்கும் இடையில் கட்டப்பட்டிருந்த பெரும் கயிற்றின் மேல் கால்கள் நடுங்க மன்னன் நடந்து கொண்டிருந்தான்’’ என்று விவரிக்கிறார் ஆசிரியர்.
 .
திருமலை நாயக்கர்...
அரச முத்திரையைத் திரும்பக் கொண்டு வருபவனுக்குச் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட, தாதனூர்க்காரர்களே துப்புப் பேசிக் கழுவனைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். காவல் கட்டுப்பாடு மிகுந்த அரண்மனைக்குள் தான் புகுந்து திருடிய சூட்சுமத்தை அவையில் கதையாக விரிக்கிறான் கள்வன்.

‘’கள்வன் பிடிபட்டதும் சபை மையத்தில் தனது இடுப்பில் வைத்திருந்த களவின் மந்திரப்பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவ ஆரம்பித்தான்….உன்னிப்பாகக் கேட்ட அவர்கள் இருள் மடிப்புக்களின் உள்ளே இழுக்கப்பட்டனர்.அந்த ராஜசபையைக் கம்பளி போலச் சுருட்டிக் கன்னம் போட்ட ஓட்டை வழியே உருவி எடுத்துக் கொண்டான்’’

செய்தது களவுதான் என்றபோதும் அவனது அசாத்திய சாமர்த்தியம் கண்டு வியந்து போகும் திருமலை மன்னர், திருடிய குற்றத்துக்காகக் கழுவனுக்கு மூன்று சவுக்கடி விதித்து விட்டுக் கோட்டைக் காவலன் பொறுப்பை அவனுக்கே அளித்து விடுகிறார்.[தான் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கன்ன வாசலைத் தன் நினைவாக மூடாமல் வைத்திருக்குமாறு அவன் கோரிக்கை விடுக்க நாயக்க மன்னரும் மென்னகையோடு அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்]

சுல்தானின் படையெடுப்பில் இழந்த காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீண்டும் பெறும் இந்தக் கட்டமே நாவலின் மையத்தை நோக்கிக் கதையை நகர்த்தும் தொடக்கப் புள்ளி. எனினும் இந்த மக்களின் வரலாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசர்களாய் நாட்டை ஆண்ட காவலர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தபடியே தொடர்ந்து கொண்டிருப்பதால் ராஜ வம்சங்களின் தொடர்ச்சியை..அவர்கள் நிகழ்த்திய போர்களை அழிவுகளை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்பக் கள்ளர் இனத்தவரின் தொழில் முறைகளில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகக் காட்ட வேண்டிய தேவையும் நாவலுக்கு நேர்கிறது.

.காவல்காப்பவனின் கையிலிருப்பது காவல் தடியா,களவுக்கான கன்னக் கோலா என்பதை ஆட்சியாளர்களே முடிவு செய்கிறார்கள்.
‘’களவுக்குப் போய்த் திரிந்தவன் காவல்காரனாக மாறினால் மொண்டிக் கம்பாகவும் நிலையாள் கம்பாகவும் இருந்த கம்பு காவல் கம்பாக மாறி விடும். அவனே காவல் முழுவதும் பார்த்து வயோதிகத்துக்கு உயிரோடு இருந்தால் அவன் கையிலிருக்கும் கம்பு ஊண்டு கம்பாகிறது.’’

தங்களின் தனி உரிமை எனத் தாதனூர்க்காரர்கள் கருதும் ஊர்க்காவல் மற்றும் குடிக் காவல் பொறுப்பு எப்போதெல்லாம் தங்களிடமிருந்து கை நழுவிப் போகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கள்வர்களாக உரு மாறிக் கொண்டே இருப்பதைப் பல நிகழ்வுகள் மற்றும் கிளைக் கதைகளின் வழி உறுதிப்படுத்தியபடியே நகர்ந்து செல்கிறது நாவல்.
‘’காவலும் களவும் தாதனூரின் ரெட்டைப் பிள்ளைகள்;கஞ்சியை உறுதிப்படுத்தக் காவலும்,காவலை உறுதிப்படுத்தக் களவும் என்று விதி செய்து கொண்டார்கள்’’

நாவலில் இடம் பெறும் மதுரைக் கோட்டையின் நிர்மாணமும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அதன் தகர்ப்பும் கூடக் குறியீட்டுப் பொருள் கொண்டதாகக் கள்ளர் இனத்தவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைச் சுட்டுவதாகவே தொனிக்கிறது.

விசுவநாதநாயக்கர் காலத்தில் கோட்டை விரிவாக்கிக் கட்டப்படுகிறது; அது போலவே நாயக்கர் காலத்தில் கள்ளர் இனத்தவரும் முன்பு தாங்கள் இழந்த காவல் உரிமையைப் பெறுகிறார்கள். மதுரை, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு, பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியும் அங்கே பறக்கத் தொடங்கியதும் மதுரை நகரின் விரிவாக்கம் கருதிக் கோட்டையை இடிக்க உத்தரவிடுகிறார் கலெக்டர் பிளாக்பெர்ன். அதன் பிறகு தொடர்ந்து நடக்கும் பல நவீன நிர்வாகச் சீரமைப்புக்களில் காவல் துறை.,காவல் நிலையங்கள் போன்ற அமைப்புக்கள் முகிழ்க்கத் தொடங்குகையில் கள்ளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பறி கொடுக்க நேருகிறது. 

கோட்டை இடிபடும்போது,  “கண்ணீர் கசிந்து இறங்குவது போலக் கருங்கல் சுவரில் இருந்து சாமிகள் இறங்கின. ...இருள் பரப்பி நிற்கும் மதுரையின் வீதிகளில் ஆங்கா ஓசையும் உடுக்கைச் சத்தமும் தறலும் கேட்க ஆரம்பித்ததுஎட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக் கருப்பன் இறங்கியபோது கோட்டையே பிய்த்துக் கொண்டு வருவதுபோல் ருந்ததுஅவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.” என்று நரபலி கொடுத்துக் கோட்டையில் அமரச் செய்யப்பட்ட  காவல் தெய்வங்களான தெற்கு வாசல் ஜடாமுனிகிழக்கு வாசல் வண்டியூர் மாரியம்மாள் மேற்கு வாசல் கொத்தளத்து முனி  என ஒவ்வொரு தெய்வமும் அலறிக் கதறியபடி வெளியேறுவதான உச்சமான காட்சி அதுவரை மதுரையின் காவல் பொறுப்பாளர்களாக இருந்த ஓர் இனத்தின் வீழ்ச்சியையே குறியீடாக முன் வைத்திருக்கிறது என்று கூறலாம்.
‘’இந்தக் காட்சியை நுட்பமா குறியீட்டுத் தன்மையுடன் எழுதியிருக்கிறார் சு.வெங்கடேசன்.’’என்று எழுத்தாளர் ஜெயமோகனும் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். காவல் தெய்வங்களாகிய குலசாமிகளின் கதையைக் குலப் பாடகர்கள் பாடக் கேட்கும் கலெக்டர் பிளாக்பெர்னுமே கூட நீண்டு செல்லும் அவர்களின் பாரம்பரியத் தொடர்ச்சி கண்டு சற்றே பிரமித்துப் போய் விடுகிறார்.


தாதனூர்க்காரர்களின் காவல் உரிமை பிரிட்டிஷாரால் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்படுகையில்,அதை எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் அல்லது சிறை பிடிக்கப்படுகிறார்கள்.குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவாகின்றன; அவர்கள் மீது நிகழும்[பெருங்காமநல்லூர்]துப்பாக்கிச் சூட்டோடு நிறைவு பெறுகிறது நாவல்.
(மேலும்-அடுத்த தொடர்ப்பதிவில்.)

6 கருத்துகள் :

NARAYAN சொன்னது…

தில்லி தமிழ் சங்க வெங்கடேசன் அவர்களுடைய பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் வரை காவல் கோட்டம் பற்றிய எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தான் இருந்தேன். விழாவும் எந்த வித ஆடம்பரமும், புகழுரைகளும் இல்லாமல் இயல்பான விழாவாக அமைந்தது. ஆனால் விழா பலவித தாக்கத்தை ஏற்ப்படுத்தியது என்பது உண்மை.
வெங்கடேசன் அவர்களின் பிரமிப்பூட்டும் அயராத பத்து வருட உழைப்பு, மதுரையில் கோட்டை இருந்தது, காவலும் களவும் எவ்வாறு இணை கோடுகளாக இருந்தது, அன்றைய பெண்களின் காது வளர்ப்பு, மதுரை மக்களின் வீரம், மதுரை மாநகரின் பழமை போன்ற பல விஷயங்கள் வியப்பும் ஆச்சர்யத்தையும் அளித்தது.
தங்களுடைய உரையில் சடச்சி, மங்கம்மா, தாசி குஞ்சரம்மா, ராஜம்மா போன்ற பெண்களின் ஆளுமையைப் பற்றியும், நாவலின் முக்கியமான கோட்டை இடிப்பைப் பற்றியும் விளக்கி கூறியது அருமை.
நான் கொங்கு மண்டலத்தைச்
சேர்ந்தவன். மீனாச்சி அம்மன் ஆலயம்,துங்கா நகரம், மதுரை மக்கள் உணர்வு பூர்வமானவர்கள், எந்த விஷயத்தையும் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துபவர்கள் என்ற வகையில் தான் எனக்கு மதுரையைப் பற்றிய அறிமுகம் உண்டு.
ஆனால் மதுரையைப்பற்றிய மதிப்பு பல மடங்கு உயர்ந்தது என்றால் மிகையல்ல.
காவல் கோட்டத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களுடைய காவல் கோட்டத்தைப் பற்றிய பதிவுகள் அருமையாக உள்ளது. தொடருங்கள்.
வாழ்க வளமுடன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பதிவு ! தொடருங்கள் !

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காவல்கோட்டம் நாவலில் என்னை சிலிர்க்க வைத்த பகுதி என்றால் கோட்டையில் இருந்து காவல்தெய்வங்கள் வெளியேறும் காட்சிதான். மிக அற்புதமாக அதைப் பதிவு செய்திருக்கிறார். வாசிக்க, வாசிக்க காவல்கோட்டத்தின் மீதான காதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அற்புதமான பதிவு. நன்றி.

passerby சொன்னது…

I dont mind the bulkiness of the book running to hundreds of pages. But I mind the cost. Who will buy such a costly book ?

Venkatesan is being falicitated at many places; and wherever it is done, the publishers go with their copies, which sell at the venue well.

Nowadays Tamil writers know how to become commercially successful. They have marketing personnel to advertise their books with their huge flex cut-outs of their faces in Book fair entrance. Recently one popular writer invited the sueperstar of Tamil screen who does not know Tamil to faciliate the writer in a public meeting. A man who does not know Tamil talks about Tamil lit? So, writers go to any extent. :-)

Venkatesan is becoming hugely successful. Good lukc to him.

Do you buy the book or borrow it? I couldn't afford it. Please after reading, give the copy to DTS where I can borrow and read it. Or please tell DTS to add this book to their shelves to help poor readers like me.

I heard speakers eulogising him as a marxist writer. Is there any trace of it in his book Madam?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பாஸ்ஸர்பை,
அதிகமான பக்கங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் விலை பற்றியே கவலை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.பக்கம் கூடுதலாகும்போது விலை கூடுதலாவது இயற்கை.இது எந்தப் பொருளுக்கும் பொருந்தும் என்றபோது புத்தகம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்?ஒரு திரைப்பட டிக்கெட்டுக்கு 100,200 என்று செலவழித்துப் பார்க்கத் துடிக்கும் நாம் புத்தக விலை என்று வரும்போது மட்டும் ஏன் தயங்கி விடுகிறோம்?வாங்கும் சக்தியும் புத்தகத்துக்குக் காசு செலவழிக்கும் விருப்பமும் இருப்பவர்கள் வாங்கி விட்டுப் போகிறார்கள்.மற்றவர்கள் நூலகங்களிலோ நண்பர்களிடமோ பெற்றுப் படிக்க வேண்டியதுதான்.இதில் என்ன குறை இருக்கிறது?ஒரு காலத்தில் மிகத் தடிமனான கல்கியின் நாவல்களையெல்லாம் நானும் கூட நூலகத்தில் படித்தவள்தான்.இப்போது வாங்க முடிவதால்,படித்து முடித்த பிறகு நண்பர்களுக்கோ நூலகத்துக்கோ தந்து விடுகிறேன்.
இரண்டாவதாகப் புத்தக விற்பனை உத்திகள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் விளம்பரம் தேவைப்படும் இந்தக்காலத்தில்- நடிகர்களின் கட்டவுட்டுக்குக் குடம் குடமாகப் பால் கொட்டப்படும் அழுகிப் போன சமூக அமைப்புக்கு நடுவே,ஒரு நூலாசிரியருக்கும் அவரது நூலுக்கும் பேனர் வைக்கப்படுவதில் எந்தப் பெரிய பிழையைக் கண்டு விட்டீர்கள்?அது அறிவு சார்ந்த ஒரு எழுச்சி என்று ஏன் உங்களால் கொள்ள முடியவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை.
இறுதியாக ஒன்று..தமிழகத்தைப் பொறுத்த வரை என்ன விளம்பரம் செய்தாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் எழுத்தை மட்டும் நம்பி ஒரு எழுத்தாளன் காலத்தை ஓட்டி விட முடியாது என்பதே வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் உண்மை.இன்று வரையிலும் கூட -வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் விஷயத்திலும் கூட-அது உண்மையாக இருப்பதனாலேதான் எழுத்தை முழுநேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

இந்த நாவலில் மார்க்ஸியம் இருக்கிறதா என்ற பாஸ்ஸர்பையின் இன்னொரு கேள்விக்குப் பதில்..
‘’முரணியக்கத்தை செவ்வியல் மார்க்ஸியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கில் அமைத்திருக்கிறது காவல்கோட்டம். ’’
என்று நாவல் பற்றிய விமரிசனத்தில் அதிலுள்ள மார்க்ஸிய இயல்பை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன்http://www.jeyamohan.in/?p=4672.என் பார்வையில் விளிம்பு நிலை மக்களான பெண்களையும்,ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் முதன்மைப்படுத்தும் நாவல் போக்கையும் மார்க்ஸியக் கொள்கை சார்ந்ததாகவே நினைக்கிறேன்.நீங்களே நாவலை வாசித்து அது குறித்த விரிவான தேடலை நிகழ்த்தலாமே..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....