துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.2.12

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-5

நிறைவுப்பதிவு..
'காவல் கோட்டம்’நாவலின் முக்கியமானதொரு சிறப்பு,இனவரைவியல்(குறிப்பிட்ட இனக்குழுக்கள் சார்ந்த செய்திகள்) சார்ந்த படைப்பாக்கங்களில் அது குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது என்பதே.

 ''கொல்லவாருகள்பிரமலைக் கள்ளர்கள் என்ற இரண்டு இனக்குழுக்களைப் பற்றி இந்த நாவல்ல பேசியிருக்கேன்''என்று ஒரு பேட்டியில் நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை முறை,சடங்கு சம்பிரதாயங்கள்,பழக்க வழக்கங்கள்,உட்சாதிப் பிரிவுகள்,வழிபாட்டு முறைகள் என அனைத்தையும் கதைப் போக்கிலிருந்து மிகுதியும் தடம் பிறழ்ந்து செல்லாத சுவாரசியத்தோடு தொகுத்துத் தரும் சுவையான ஆவணத் தொகுப்பாக இந்நாவல் அமைந்திருக்கிறது.

நாவலின் தொடக்கமே விறுவிறுப்பான மாபெரும் திரைப்படம் ஒன்றின் தொடக்கக் காட்சி போலப் பரபரப்புடனும் பிரம்மாண்டத்துடனும் காட்சிப்படுத்தப்படுகிறது. மதுரையைத் தாக்க வரும் நாயக்கர் படைகளின் உட் சாதியமைப்புக்கள் நாவலில் இவ்வாறு விரிகின்றன.


 “கிழக்கே வைகையின் தென்புறமெங்கும் தோப்புக்குள் கொல்லவார்களின் பெரும்படை காத்திருந்தது.அவர்கள் வழக்கப்படி குறுங்குலப் பிரிவுகளின் கீழ் தனித் தனியே அணி அமைத்திருந்தனர்.தொண்ணூற்றாறில் நாற்பத்திரண்டு குறுங்குலங்கள் இங்கே வந்திருந்தன.வைகைக்கரையில் ஆரம்பித்து புல்லாவுலவாருபந்துமுலுவாரு என்று அடுக்கடுக்காய் நீண்டு தென்கோடியில் சூர்ணவாரு வகையறக்களோடு அணிகள் நிறைவுற்றன..''

ஒரு குழுவுக்குள் இத்தனை குறுங்குழுக்களா எனவியக்க வைக்கும் இச் செய்திகள்,ஒவ்வொரு குறுங்குழுவின் தனிச் சிறப்பு அவையவை கையாளும் ஆயுதம்/போர்த்தந்திரம்பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் நாவலாசிரியரின் கடும் உழைப்பினால் மட்டுமே திரட்டப்பட்டிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க வழியில்லை.இவற்றை வெறும் தகவல்கள் என்ற நிலையில் கொள்ளாமல் இதுவரை வரலாற்றில் சொல்லப்படாத தகவல்களாகவும் நிரப்பப்பட்ட இடைவெளிகளாகவுமே பார்க்கவேண்டும் எனக்கூறும்ஜெயமோகன்,''வெறும் வரைபடமாக இருந்த வரலாற்றில் இந்தத்தகவல்களைப் பெய்து அதை வாழ்க்கையாக ஆக்கியிருக்கிறார்.''என்று தன் பதிவில் குறிப்பிடுகிறார்.

கள்ளர் சாதியைப் பற்றிய நுணுக்கமான பல செய்திகளும் நாவலில் விரிவாக இடம் பெற்றிருக்கின்றன. கள்ளர் சமூகஅமைப்புகுடும்ப உறவுகள்,வழிபாடுகவரடைப்பு(சுன்னத்துசெய்வதுபோன்றது),காது வளர்த்தல் ன்று 
பல விரிவான குறிப்புக்கள் நாவலில் பொதிந்து கிடக்கின்றன..

நீளமாகக் காது வளர்த்து அதில் தண்டட்டி எனப்படும் காதணிகளை அணிந்திருக்கும் பெண்களைத் தென்னாட்டுக் கிராமங்களில் இன்றும் கூட மிகச் சாதாரணமாகப் பார்க்க முடியும்.ஆனால்,அந்தக் காது வளர்ப்புக்குப் பின்னாலிருக்கும் கலாச்சாரப் பின்னணியை...குறவனைப் பிடித்து வந்து காது குத்திக் கொள்வதிலுள்ள சிரமங்களை ஒரு அத்தியாயம் முழுக்க விவரித்துக் கொண்டு செல்கிறது நாவல்.

‘’பெண்ணுக்கு அழகு காது;பொடனி வரை காது வளர்த்து தண்டட்டியைக் காற்றில் நீந்தவிட்டு நடக்கும் அழகிகள்தான் கள்ள நாட்டைக் கட்டி ஆள்கின்றனர்.வளர்ந்த காதுகளின் வகை வைக்க முடியாத அழகை மெச்சி பாடி வைத்துள்ள பாட்டு ஊருக்கு ஊர் அம்பாரமாகக் குவிந்து கிடக்கிறது.தொங்கும் காதின்பெருந்துவாரம் என்பது...கன்னவாசல் என இருக்கிறது.அடைபடாத கன்ன வாசல் கொண்டு காற்றை அளைந்தபடி அவள் வாழ்வெல்லாம் அலைந்து திரிகிறாள்’’என்று வருணிக்கும் நாவல் இந்த வழக்கம் சார்ந்த அந்த இனப் பெண்களின் உளவியலையும் கூடவே முன் வைக்கிறது.

கள்ளர் இனப் பெண் எப்படிப்பட்ட ஏச்சையும் பேச்சையும் தாங்கிக் கொண்டு எதிரடி தரக் கூடியவள்;ஆனால் அவளாலும் கூடத் தாங்க முடியாத அவலம் காதறுந்து போகும் நிலை.’போடி காதறுந்த மூளி’என்பதே அவளை உக்கிப் போகவைக்கும் சொல்.’’அறுந்த காதோடு அலையும் அவலம் எவளுக்கும் வரக் கூடாது என்று ஒவ்வொருத்தியும் நினைப்பாள்.ஒருபோதும் ஒட்ட வைக்க முடியாத காதோடு இருப்பவளின் மனதில் ஏற்படும் ஊனம் மரணம் வரை சரி செய்ய முடியாது’’என்று அந்த மனநிலையை விவரிக்கிறார் வெங்கடேசன்.

காது வளர்த்துக் கொள்ளும் சம்பிரதாயம் ஒருபுறம் இருக்கக் காது வளர்க்க ஓட்டை போடும் குறவனைப் பற்றியும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேல் படிப்படியாக அவன் செயல்பட்டுக் கொண்டே வரும் முறைபற்றியும் கூட அதே அத்தியாயம்,விவரங்களை அடுக்கிக் கொண்டு போகிறது.தாதனூரில் காது வளர்க்கும் குறவனே இல்லாமல்போக,எங்கிருந்தோ ஒருவன் தேடிப் பிடித்துக் கொண்டு வரப்படுகிறான்.இது வரை காது வளர்க்காத பெண்களுக்கெல்லாம் அவன் வரிசைக்கிரமப்படி காதுகுத்திப் படிப்படியாக ஓலை செருகி...துணி செருகி ஓட்டையைப் பெரிதாக்கிக் காது வளர்த்து விடுகிறான்.இவ்வாறு செய்யும் அவனே,பிறகு தாதனூருக்குள் ஒரு திருட்டையும் நிகழ்த்தி விட்டுப் போய்விடுகிறான்.‘காது குத்துதல்’என்பது திருட்டு என்ற பொருளில் வழங்கப்பட இது போன்ற செயல்களே காரணமாகியிருக்கலாம்.காது வளர்க்கும் சம்பிரதாயங்கள் போன்றவை அருகிப் போன இன்றையை சூழ்நிலையில் அது பற்றிய நுட்பங்களை அறிவதற்காக அத்தகைய குறவன் ஒருவனைத் தேடித் தான் பல நாட்கள் அலைந்து திரிய வேண்டியிருந்ததை தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழா ஏற்புரையிலும் குறிப்பிட்டார் திரு வெங்கடேசன். .

நாவலில் இடம்பெறும் இன்னொரு முக்கியமான விவரிப்பு தாது வருட பஞ்சம் பற்றியது.மழை பொய்த்து நீர்நிலைகள் வறண்டு போகப் பஞ்சமும் பட்டினியுமாய்ப் பரிதவிக்கும்கிராமமக்கள்,பஞ்சம் பிழைக்க கேரளத்துக்கும்,மலாயாவுக்கும் கொழும்புக்குமாக- ஊரைவிட்டுப் பெயர்ந்து செல்கிறார்கள். அவ்வாறு பெயர்ந்து செல்லும்போதே மரணமும் அவர்களை விடாது துரத்தியபடி இருக்க,அதன் கோரப்பிடிக்குப் பலர் இரையாகிப் போகிறார்கள்.
'’தாயைப் புதைத்த மகனும் மகனைப் புதைத்த தந்தையும் எல்லோரையும் புதைத்த மருமகளும் நின்று வடிக்க சொட்டுக் கண்ணீரும் நேரமும் இன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர்…கலங்கிய குட்டையில் கிடந்த தண்ணீரைக் குடிக்கும்பொழுது மரணம் அவர்களைக் குடித்தது.பெரும் படையெடுப்பு போல அந்த இடப்பெயர்வு நடந்தது.’’என்று அந்தக் காட்சியை விவரிக்கிறது நாவல்.

மதுரை  மாநகரின் முதன்மையான வரலாற்றுக்கு ஊடாக,எழுதப்படாத பல வரலாறுகளைச் சொல்லியபடி வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டுசெல்லும் இந்நாவல்,பத்தாண்டுக் காலம் நாவலாசிரியர் மேற்கொண்ட அயராத முயற்சியால், தமிழின் மிக முக்கியமான நாவலாகச் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. 

வரலாறு,சமூகவியல்,இனவரைவியல்,நாட்டார் மரபுகள்,மிஷினரிகளின் ஆவணங்கள் எனப்பலவற்றினூடாகவும்  பயணப்படும் இந்நாவல் ,தமிழ்ச்சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படைப்பு என்பதோடு,இப் படைப்பை முழுவதுமாக வாசிப்பதே இதன் பின்னணியிலுள்ள உழைப்புக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும்...


8 கருத்துகள் :

R. Gopi சொன்னது…

சுவாரஸ்யம். கூடிய விரைவில் நாவலைப் படித்துவிட வேண்டும்.

Unknown சொன்னது…

மதுரையை சேர்ந்தவனாதலால் பிரமலைக் கள்ளர்களின் வாழ்வியலோடு நானும் பினைந்து வளர்ந்தவன். காது வளர்த்த பாட்டிகள் எங்கள் கிராமத்தில் இருக்கின்றனர்.இப்போது மிகவும் குறைந்தே உள்ளனர், தங்களின் பதிவை வாசிக்கும் பொழுது எனக்கு அந்த பாட்டிகளின் நினைவு வந்து சென்றது.

Unknown சொன்னது…

மதுரையை சேர்ந்தவனாதலால் பிரமலைக் கள்ளர்களின் வாழ்வியலோடு நானும் பினைந்து வளர்ந்தவன். காது வளர்த்த பாட்டிகள் எங்கள் கிராமத்தில் இருக்கின்றனர்.இப்போது மிகவும் குறைந்தே உள்ளனர், தங்களின் பதிவை வாசிக்கும் பொழுது எனக்கு அந்த பாட்டிகளின் நினைவு வந்து சென்றது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பதிவுகள் ! நன்றி !

Easwaran சொன்னது…

தமிழ்ச்சங்கத்தில் தங்கள் வாழ்த்துரை/மதிப்புரையை நேரில் கேட்டதாலும், 'காவல் கோட்டம்’ பதிவினைப் படிக்கப் பெற்றதாலும் அந்த நாவலை படித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் மிகுகிறது.

காது வளர்ப்பு என்பது கள்ளர் இன மக்களிடம் மட்டுமல்ல, தென் தமிழகத்தின் பிற பல சமூகத்தினரும் பெருமையுடன் பின்பற்றிய ஒரு வழக்கம். எனது தந்தைவழிப் பாட்டியின் பெரிய பெருமிதமே தான் அணிந்திருந்த பாம்படம் என்று சொன்னால் மிகையில்லை.

சிறு பிள்ளைகளின் விளையாட்டுகளில் கூட தண்டட்டி இடம் பெற்றது. ஒரு விளையாட்டுப் பாடல் இதோ:-

‘கிச்சுக் கிச்சுத் தாம்பலம்!
கியா கியாத் தாம்பலம்!
குச்சுக் குச்சுத் தண்டட்டி!
சுப்பிரமணியன் பொண்டாட்டி!‘

வாழ்க.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காவல்கோட்டம் குறித்த தங்கள் பதிவு அற்புதம். ஞாயிற்றுக்கிழமை விக்ரமங்கலம் பசுமைநடை சென்றபோது அமணமலை, நாகமலையை எல்லாம் பார்க்கும்போது காவல்கோட்டம் ஞாபகம் வந்தது. செக்காணூரணி தாண்டி செல்லும்போது தண்டட்டி அணிந்த பாட்டிகளை காண முடிந்தது. மதுரையைப்போல காவல்கோட்டமும் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது. பகிர்விற்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆவலாக இருக்கிறது. சென்னை வரும் பொழுது வாங்க வேண்டியப் புத்தகங்களின் பட்டியல் நீளுகிறது :)

பெயரில்லா சொன்னது…

இன்ன இன்ன இருக்கு, உனக்கும் பிடிக்கும், படிச்சு பாரேன், எனக்கு பிடிசிருக்குயா என்கீறீர்கள்.ஆனா நல்லா சுவாரஸ்யமா
சொல்லி இருக்கீங்களே அதான் மேட்டர்,சூப்பர் மேடம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....