நூல் மதிப்புரை-கலங்கியநதி-பி ஏ கிருஷ்ணன்
நன்றி:வடக்கு வாசல்,மார்ச்,2012
தீவிர வாதத்தின் நிழலில்…நாட்டின் நதி வளம் மற்றும் அதன் புனிதத்தைப் பற்றிய மேன்மைகளை அடுக்கிக் கொண்டே அதைச் சாக்கடைக்கும் கீழாய்க் கலக்கிக் கொண்டிருக்கும் போலித்தனம் நம்முடையது. தப்பித் தவறி அதைச் சுத்தம் செய்ய ஒருவன் வந்து விட்டாலும் அவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று பகடி செய்து ஓரங்கட்டி ஒதுக்குவதிலேயே சுற்றியுள்ள உலகம் குறியாய் இருக்கிறது; காரணம் மிகவும் எளிமையானது. குழம்பிய குட்டையிலேதானே மீன் பிடிக்க முடியும்? இன்றைய அரசியல் அதிகார முதலாளி வர்க்கங்கள் நாள்தோறும் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் அருவருப்பான சுரண்டல், ஊழல் குப்பைகளால் கலங்கிய நதியாகி விட்டிருக்கும் இந்திய சமூகத்துக்கு அதையே குறியீடாக்கியபடி வெளிவந்திருக்கும் பி ஏ கிருஷ்ணனின் புதிய நாவலான ’கலங்கிய நதி’, மேற்குறித்த அமைப்புக்களின் மீதான விமரிசனங்களையே புதிதான புனைவு மொழியில் முன் வைக்க முனைந்திருக்கிறது.
ஓவியம்,நன்றி-காலச்சுவடு. ‘’ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும் விடக் கலங்கலாக இருக்கும்;ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் அது தெளிவாகி விடும்..முன்னை விடத் தெளிவாக..’’ என்பது, இந்தியப் பிரிவினையின்போது 1948இல் காந்தி சொன்ன வாசகம். அது இன்னமும் கூட மாறாமலிருப்பது குறித்துக் கரிசனம் கொள்ளும் ஒருவன், கலங்கிப் போன நதியைத் தெளிவாக ஆக்கவும் வெள்ளத்தை வடிய வைக்கவும் தன்னால் இயன்ற எளிய முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்கிறான். அந்த உந்துதலைத் தன் தந்தை வழி அவன் கற்ற காந்தியின் சூத்திரமே(talisman)அவனுக்கு அளிக்கிறது(அதை அவன் நேரடியாக ஒத்துக் கொள்ளாவிட்டாலும் கூட..!) தன் முயற்சிகளின் பாதையில் அவன் எதிர்ப்பட நேரும் வெளிப்படையான மற்றும் அருவமான தடைகளும் அவற்றோடு அவன் நிகழ்த்தும் தொடர்யுத்தமுமே நாவலின் நிகழ்வுகளாக விரிந்திருப்பவை. |
மார்க்ஸிய காந்திய சித்தாந்தங்கள் நாவலெங்கும் விரவி வந்தபோதும் தூக்கலாய் ஒலிப்பது காந்தியத்தின் குரலே. தன்னலச் சிறுமைகளும், தீவிரவாத வன்முறைகளும் மலிந்து போயிருக்கும் இன்றைய சமூகத்தில் காந்தியக் கோட்பாடுகளின் நிராகரிக்க முடியாத அவசியத்தை இந்தப் படைப்பும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.’’அஸ்ஸாம், சுதந்திரத்துடன் சுயமாக நிற்க வேண்டும்…அது முழுவதும் சுதந்திரம் அடைந்து தன்னாட்சி செய்ய வேண்டும்’’என்று ஒரு காலகட்டத்தில் காந்தி குறிப்பிட்டிருக்கிறார் என்பது நமக்கு வியப்பூட்டுவதாக இருந்தபோதும், ’’இதற்குத் தேவையான தைரியம்,திடம்,மற்றும் சாமர்த்தியம் உங்களுக்கு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது’’ என்றபடி மேலே தொடரும் அவரது சொற்கள் எத்தனை தீர்க்கதரிசனமானவை என்பதையும் உணர முடிகிறது.
தனி அஸ்ஸாம் கேட்கும் போராட்டம் என்பது, மூங்கில் மரம் பூத்து விதைகளைப் பொழியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றது என்று காவல்துறை அதிகாரி பூயானின் மூலமும், ’’அஸ்ஸாமின் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்தக் கன்றுகளைப் போல(சிம்மாசலம் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டவை).தனி நாடு என்ற கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டுப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்’’என்று சந்திரனின் சொற்களின் வழியாகவும் அஸ்ஸாம் தீவிரவாத இயக்கத்தின் அவலமான பக்கங்களைத் திறந்து காட்டுகிறார் ஆசிரியர்.
Protocal என்ற பெயரில் அதிகார வர்க்கத்தில் நிலவும் அசட்டுத்தனமான சில வரைமுறைகளை '’எங்கள் நிறுவனத்தில் பருப்பு வரைமுறை ஒன்று நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கிறது. இந்த வரைமுறையின்படி தலைவரின் கூட்டங்களில் பாதாம் பருப்பு இருக்கும்; இயக்குநர்களில் ஒருவர் தலைமை தாங்கினால் முந்திரிப்பருப்பு;என்னைப் போன்ற செயல் இயக்குநர்களுக்கு வெறும் வேர்க்கடலை…..முந்திரிப்பருப்பு பாதாம்பருப்பை விட அதிக விலையில் விற்கிற நிலையில் தலைவர் பருப்பின் விலை இயக்குநர் பருப்பை விடக் குறைவாக இருந்தது;இதனால் நிறுவனத்தில் ஒரே குழப்பம்’’ என்று அங்கதப் போக்கில் லாவகமாகச் சொல்லிச் செல்லும் நாவல் அங்கே நிலவும் அர்த்தமே இல்லாத கெடுபிடிகளையும் இயல்பாக விவரித்துக் கொண்டு போகிறது.
காண்டீன் பொறுப்பேற்றிருக்கும் இளம் அதிகாரியிடம் தேநீர் சரியில்லை என்பதற்காகக் கோபப்படுகிறார் அவருக்கு மேல்தட்டிலுள்ள செயலர். சூடாக இருக்கும்போது தேநீரைக் குடிக்க மறந்து விடுவதும்,அவருக்கு ஞாபகம் வரும்போது சூடு குறைந்து விடுவதுமே பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு விடும் அதிகாரி, ‘செயலரின் அறையில் தேநீரை வைத்தபின் அது ஆறிப்போகிறது என்பதை இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நினைவுபடுத்தும்படி ஒருஒலிப்பானை நிறுவப் பரிந்துரை செய்கிறேன்.’என்று எள்ளலான ஒரு குறிப்பை எழுதி வைக்க-தொடரும் அவரது பணிச் சிக்கல்கள் பலவற்றுக்கும் அந்தக் குறிப்பே காரணமாகி விடுகிறது. தன் பணிக்கால அனுபவத்தால் திரு கிருஷ்ணன் விவரிக்கும் இந்தப் பகுதிகள் நம்பகத் தன்மையுடனும்,சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருப்பது ஒரு புறம் இருக்க, இந்தக் குட்டைக்குள்ளேயே காலம் கழிப்பவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற அறச் சீற்றத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. ஊடகங்களின் பரபரப்பு மிகுதியாக இருக்கும் நிலையில் கடத்தப்பட்டவர் மீட்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்ளும் அரசும் அதிகார பீடங்களும் அந்த ஆரம்பப் பரபரப்பின் வேகம் அடங்கியபின் அப்படி ஒரு விவகாரத்தையே அதிகம் கண்டு கொள்ளாமல் இருப்பது இதனால்தான்.
மேற்குறித்த அமைப்புக்களின் மீதான காட்டமான விமரிசனம் வைக்கப்பட்டாலும் அதற்காக ஒரேயடியாக நம்பிக்கை இழந்தும் போக வேண்டியதில்லை என்ற உணர்வை ஏற்படுத்தி நம்மை ஓரளவு ஆறுதலடையச் செய்பவர்கள், நாவலில் இடம் பெறும் சரத் ராஜவன்ஷி போன்ற எளிமையான முன்னாள் முதல்வர்களும்,பூயான் போன்ற காவல்துறை அதிகாரிகளும்.
அரசுப் பணியில் நேர்மையுடன் கூடிய துடிப்புக் காட்டும் சந்திரன் மீது ஏற்படும் பிடிப்பால் பிணைக் கைதியின் விடுதலைக்கு உதவ முன் வந்து மர்மமாக மறைந்து போகும் அனுபமா, ஒரே மகளின் இறப்பால் சற்று உடைந்தாலும் கணவனின் மீது கொண்ட கரை காணாக் காதலால் அவனோடு இணையாகப் பயணிக்கும் சந்திரனின் மனைவி சுகன்யா, பாதைகள் பிரியும் இடத்தில் நின்று கொண்டு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதை யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்கும் சந்திரனின் காந்தியவாதத் தந்தை, போராளிகளின் சார்பில் பிணைத்தொகை பேரம் பேச வரும் மார்க்ஸியப் பேராசிரியர், கடத்தப்பட்ட பொறியாளரின் மனைவியாக அவநம்பிக்கையுடனேயே அலைபாய்ந்து கொண்டிருக்கும் நந்திதா என்று பலவகையான மாறுபட்ட பாத்திரங்கள், அவர்களின் முரண்களுடனும்,ஒத்திசைவுடனும் மிக இயல்பாக நாவலில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நதியின் ஓரத்தில் உட்கார்ந்தபடி, இளைப்பாறிக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருக்கும் வரையில்…- அதன் வெள்ளத்தில் மிதந்து பிழைக்கத் தேவையில்லாத வரையில்- நதியின் காட்சி பார்வைக்கு அழகானதுதான்… நெருங்கிச் செல்லும்போது கசண்டும் குப்பையுமாய்ச் சாக்கடை நாற்றமடிக்கும் அந்தக் கலங்கிய நதிக்குள் இறங்கித் தூர் வாரித் தூய்மை செய்யும்போதே சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனாலும் அதைச் செய்தாக வேண்டியதே பதவியைக் கையில் வைத்திருப்பவர்களின் தார்மீகப் பொறுப்பு..! அதை மிகையின்றிப் பதிய வைத்திருக்கும் இந்த நாவல் தங்கு தடையில்லாத மொழி ஓட்டத்துடன், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பதற்கேற்ற விறுவிறுப்புடன் அமைந்திருப்பது சமகால நாவல் களத்தில் சற்று அரிதாகவே சந்திக்கக் கூடியது.அப்படி வாசிக்க முடிந்து விட்டாலே அதன் இலக்கியத் தரத்தை மாற்றுக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்ற தயக்கமின்றி இயங்கி அத்தகைய மாயப்பிரமைகளை உடைத்திருப்பதற்காகவே கிருஷ்ணனுக்குக் கூடுதல் நன்றிகள். தனது முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை’யைப் போலவே இதையும் ஆங்கிலத்தில் எழுதித் தானே தமிழாக்கமும் செய்திருக்கிறார் அவர்.’’ ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விடத் தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும்.’’என்று இந்த நாவல் குறித்த ஒரு நேர்காணலில் திரு கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். சரளமும்,சொற்கட்டும்,காத்திரமுமான தமிழ் அவருக்குள் இருப்பதை அவரது முதல் இரண்டு நாவல்களின் தமிழாக்கங்களும் உறுதிப்படுத்திவிட்டதால், தனது அடுத்த நாவலை அவர் நேரடியாகத் தமிழிலேயே எழுதி விட்டுப் பிறகு ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
[கலங்கியநதி-பி ஏ கிருஷ்ணன்,
வெளியீடு-காலச் சுவடு,
முதற்பதிப்பு டிச.2011,
விலை 250.00
பக்.332]
6 கருத்துகள் :
ரொம்ப நன்றிங்க !
கலங்கிய நதி' நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் படியான பதிவு. பகிர்விற்கு நன்றி.
332 பக்க நாவல்- அதை படித்துவிட்டு கருத்துரையை 3 பக்கத்தில் சொல்வதும், அதை படிக்கும் போதே, நாவலை முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் அந்த மதி்ப்புரை அமைவதும் அற்புதமான ஒன்று. (மதுரை) அம்மாவின் தமிழுக்கு வணக்கங்கள்
எஸ்.சம்பத், மதுரை
vaasiththuk kondu irukkiren... aavali thundum vannam nalla vimarsanam..vaalththukkal
//'’எங்கள் நிறுவனத்தில் பருப்பு வரைமுறை ஒன்று நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கிறது. இந்த வரைமுறையின்படி தலைவரின் கூட்டங்களில் பாதாம் பருப்பு இருக்கும்; இயக்குநர்களில் ஒருவர் தலைமை தாங்கினால் முந்திரிப்பருப்பு;என்னைப் போன்ற செயல் இயக்குநர்களுக்கு வெறும் வேர்க்கடலை…..முந்திரிப்பருப்பு பாதாம்பருப்பை விட அதிக விலையில் விற்கிற நிலையில் தலைவர் பருப்பின் விலை இயக்குநர் பருப்பை விடக் குறைவாக இருந்தது;இதனால் நிறுவனத்தில் ஒரே குழப்பம்’’//
மாட்டிகிட்டன்டோய்!!!
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
கருத்துரையிடுக