துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.5.12

ஊர்மிளை


இன்றைய தினமணி கதிர்-13.05.12-இதழில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை..
இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன்.
"அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்! இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை...நேற்றுப் பகல் முழுவதும் ஏதோ உளைச்சலோடும் வேலைப் பளுவோடுமே இருந்தார். ""அதனால் வலுக்கட்டாயமாக எழுப்பி விடை சொல்லிக் கொள்ள எனக்கும் மனம் வரவில்லை. அதனாலென்ன...அவர்தான் நேற்று மாலையே விடை கொடுத்துவிட்டாரே...நாம் கிளம்பலாம் வா...'' என்றபடி கலகலப்பான உற்சாகமான மனநிலையுடன் வெளிப்பட்டு வருகிறாள் சீதை.
அந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும் நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கிறது.

அவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித் தடுமாறும் இலட்சுமணன்,
""பார்த்து ஏறுங்கள் அண்ணி'' என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.

மீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பான பாவனைகளுடன் ஏதோ ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறிச் சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத இலட்சுமணன், இலேசாகத் துணுக்குற்றுப் போகிறான். ஆனாலும் கூட இலேசான ஓர் ஆறுதலின் நிழல் அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே தனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அவனுக்கில்லை...! ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோ அவள்? நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.
""அட...ஊர்மிளையா? பார்த்தாயா...உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு போகலாமென்று எனக்குத் தோன்றவே இல்லை! இந்த இலட்சுமணனுக்கும் கூடத்தான் அது தோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? அது இருக்கட்டும்... நீ இப்போது வந்திருப்பது எனக்காகவோ...இல்லையென்றால் இனிமேலும் இலட்சுமணனை விட்டுப் பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா? உண்மையைச் சொல்...''
-குறும்புச் சிரிப்புடன் கேட்டபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்ட சீதை குழந்தையைப் போல குதூகலிக்கிறாள்.
ஒப்புக்கு முறுவலித்தாலும் ஊர்மிளையின் புன்னகை உயிரற்ற வறட்சியுடன் இருப்பது, வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதைக்கு அப்போது உணர்வாகியிருக்கவில்லை.
’’ஒரு தடவையாவது கங்கை நதி தீரத்தை...அதில் தவழும் அலையின் வீச்சுக்களை ஆசைதீரப் பார்த்தபடி குளிரக் குளிர அதில் நீராட வேண்டும் ஊர்மிளை. ஆனால் நம்மைப் போன்ற அரசகுலப் பெண்களுக்கெல்லாம் அது அத்தனை சுலபமாக சாத்தியமாகிவிடுமா என்ன? கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது. அவர்கள் பெற்ற அந்த வரம்...! ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது. அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரசக் கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும். இராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும் இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்கு வாய்த்திருக்குமா என்ன?''
-வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன் பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள். இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்தேறும் கருத்துப் பரிமாற்றம் அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.
""ஆனாலும் நீ ரொம்பத்தான் மோசம் இலட்சுமணா! அண்ணன் மீது என்னதான் பாசம் என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது? அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெற வேண்டும் என்று கூடவா உனக்குத் தோன்றவில்லை இல்லையா? வன வாசத்தில் இதைப்பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம்?'' என்று செல்லமாக அவனைக் கடிந்து கொண்டு விட்டு ஊர்மிளையின் பக்கம் திரும்புகிறாள்.

’’பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும் இரவுகளும்...! எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை...? அசோக வனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன...! ஆனால் அத்தனை நாளும் இவன் தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக் கொள்கிறார்களாம்...! பேசுபவர்களுக்கு என்ன? தங்களுக்கென்று வந்தால்தானே எந்த நோவின் வலியும் தெரியும்''
""ஊர்...ஊர்...ஊர்... எப்போது எல்லா இடத்திலும் எல்லோருக்கும் ஊரைப்பற்றிய கவலை ஒன்றுதான். அதன் நாற்றமடிக்கும் வாயில் விழாமல் என்னைக் காத்துக்கொள்வதற்காகவே வெளி வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தேன் சீதா...! நல்லது கெட்டது என்று எதற்கும் எந்தக் காரணத்துக்காகவும் நான் வெளியே வரவே இல்லை. அதற்குத்தான் இந்தப் பட்டம்...''
வறண்ட புன்னகையோடு விரக்தியான தொனியில் விடையளிக்கிறாள் ஊர்மிளை.
""சரி விடு ஊர்மிளை...அதற்காக நீ இலட்சுமணனை வெறுத்துவிடாதே. அண்ணாவுக்குப் பணிவிடை செய்த நேரம் போக பாக்கியிருந்த நேரம் முழுக்க அவன் மனதுக்குள் நீயும், உன் நினைவுகளும் மட்டும்தான் நிறைந்து கிடந்தன. பர்ணசாலை வாசலில் வில்லைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக அவன் காவலிருந்த அந்த நெடிய இரவுகளில் அவன் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் உன் நினைவுகளின் ஈரத்தையும் சுமந்து கொண்டுதான் ஓடியிருக்கிறது. அப்போது அவன் தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அது சாத்தியமாகாதபடி அவன் உதடுகள் உன் பெயரைத்தான் உச்சாடனம் செய்து கொண்டிருந்தன. இந்த உண்மையை அவனோடு துணைக்கிருந்த குகன் என்னிடம் சொல்லியிருக்கிறான். சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தபோது அவன் கொண்டிருந்த மூர்க்காவேசம் கூட உன் மீது அவன் வைத்திருந்த காதலின் வேகத்தால் விளைந்ததுதானே...''
அந்தப் பேச்சின் ஓட்டத்தை திசை மாற்ற முயல்கிறாள் ஊர்மிளை. ’’போதும்...போதும்...இப்போது வேறு ஏதாவது பேசலாம் சீதா. நாம் இருவருமாகச் சேர்ந்து அபூர்வமாக ஒன்றாக வந்திருக்கிறோம். நம் வழியில் தென்படும் காட்சிகளோடு பிணைந்திருக்கும் உன் அனுபவ முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துச் சொல்லிக்கொண்டே வாயேன், கேட்கிறேன். அங்கே மாளிகையில் உனக்கோ எனக்கோ அதற்கான அவகாசமே கிடைத்ததில்லை''
அந்த ஒரு வார்த்தைகாகவே காத்துக்கொண்டிருந்த சீதை, ""சஞ்சலமான சூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும், அனுபவங்களும் பின்னாளில் அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப் பார்த்தாயா ஊர்மிளா...'' என்று தொடங்கி, சித்திரகூடம், தண்ட காரண்யம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களைப் பிரித்து மலர்த்த ஆரம்பித்துவிடுகிறாள்.
இராவண வதம் முடிந்து, அயோத்தியில் மறுவாழ்க்கையைத் தொடங்கி அவள் கருவுற்ற நாள் தொட்டு அந்தப் பழைய பாதைகளுக்குள் ஒரு முறை பயணித்து வர வேண்டும் என்பதே அவளது கனவாக இருந்து வந்திருக்கிறது. முந்தைய சுமைகளும் மனக்குழப்பங்களும் நீங்கப் பெற்ற புதிய நிறைவுகளின் பெருமிதத்தோடு, அதே இடங்களுக்குள் உலவி வர வேண்டுமென்ற தன் தாகத்தை அவ்வப்போது இராமனிடம் அவள் பகிர்ந்து கொண்டுமிருக்கிறாள். அவனும் உடன் வந்திருந்தால் இன்னும்கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அது முடியாமல் போனாலும் தனது நுட்பமான விருப்பத்தைக் கூடச் சரியான தருணத்தில் நிறைவேற்றித் தந்திருக்கும் கணவனை எண்ணி, அவள் உள்ளம் ஒரு கணம் கசிகிறது.
அந்தப் பேதை உள்ளம் போட்டு வைத்திருக்கும் கணக்கு இலட்சுமணனின் உள்ளச் சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும் தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின் வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒரு புதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சை ஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவே அவனுக்குப்படுகிறது.
நேற்றை இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.



******************************

நினைவு மலரத் தொடங்கிய நாள் முதலாக அண்ணனின் சொல்லுக்கு அடுத்த சொல் இல்லாமல் வாழ்ந்து பழகி விட்டிருந்தாலும் அன்று...அந்தக் கணம்...இராமன் தந்த அதிர்ச்சியைத் தாங்கும் வல்லமை இலக்குவனுக்கு இருந்திருக்கவில்லை. நீர்ப்பந்து போல முண்டியடித்துக்கொண்டு மேலெழும்பி வரும் எதிர் வார்த்தைகள் வலுக்கட்டாயமான மனோதிடத்துடன் பிடித்தழுத்தி உள்ளத்தின் பாதாள ஆழங்களுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே ஒரு மெüனச் சிலை போல அண்ணனின் முன்பு பாறையாய் இறுகி நின்று கொண்டிருக்கிறான் அவன்.
’’இந்தக் காரியத்தை நான் என் உள்நெஞ்சின் ஒப்புதலோடு செய்து கொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி'' தழுதழுத்துத் தள்ளாடும் இராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல் வெடித்துச் சிதறுகிறான் இலட்சுமணன்.
""மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள் நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லை இலட்சுமணா! ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன் ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ளம் சொல்வதை மட்டுமே நான் கேட்கும் வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்''
மறுமொழியாக, அபிப்ராயமாக, ஆலோசனையாகச் சொல்ல நினைத்த ஒரு சில வார்த்தைகளையும் அண்ணனின் கண்ணீர் கரைத்துவிட,""தங்களின் ஆணையை நாளை கட்டாயம் நிறைவேற்றி விடுகிறேன் அண்ணா...'' என்று மட்டுமே சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டுச் "சட்'டென்று வெளியேறித் தன் அந்தப்புரம் வந்து சேர்கிறான் இலட்சுமணன்.
உணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின் நெருடலை இனம் கண்டுவிட்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறு கேட்கிறாள், ""இன்று உங்கள் அண்ணா...என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார்?''
இந்தக் கேள்வி இலட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும் அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்க முடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறு மகிழ்ச்சியும்கூட! திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப்பிரிந்து போய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும் தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்கு இலேசான ஆறுதலை அளிக்கிறது.
ஊராரின் ஒரு வார்த்தைக்காக உள்ளத்தின் தடையையும் மீறிக்கொண்டு அண்ணியைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டாக வேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் அண்ணனின் ராஜநீதி அவனுக்குப் போட்டு வைத்திருக்கும் கைவிலங்கு பற்றிக் கழிவிரக்கத்தோடு அவளிடம் விவரிக்கிறான் அவன்.
ஒரே கணம் அதிர்ந்துபோகும் ஊர்மிளை, அடுத்த நொடியே சமநிலைக்கு மீண்டு விடுகிறாள்.
’’அரச பதவி அளிக்கப்படுவதே முறையில்லாத வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப் போடுவதற்கும் தவறான நீதிகள் அரங்கேறி விடாமல் தடுக்கவும்தான் என்பதை உங்கள் அண்ணா என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்..?''
"அண்ணாவை குற்றம் சொல்லாதே ஊர்மிளை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே என்னென்ன நெருக்கடிகள் எங்கிருந்தெல்லாம் எதிர்ப்படும் என்பதைப் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும்''
""போர்ப்பகை என்ற ஒன்று மட்டுமே புறப்பகையாகி விடுமா என்ன? அதை மட்டும் விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை...? என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின் மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத் துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன? சரி...அதெல்லாம் போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டு முறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது?''
""இதைப்பற்றி இனிமேல் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை ஊர்மிளை. நாளை அண்ணியிடம் இதை எப்படிச் சொல்வது? அதைத் தொடர்ந்து அவளுடைய வேதனையை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே இப்பொழுது என்னைத் தின்று கொண்டிருக்கிறது''
""அப்படியானால் அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்...''
""வேறு வழி?''
""வெறுமே ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். நாளை இதே போல வேறொரு நெருக்குதல் நேரும்போது...சரயு நதியில் மூழ்கி உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் தமையனார் கட்டளையிட்டால்.?’
"அதையும் கூட நான் நிறைவேற்றுவேன் ஊர்மிளை...'' ஏதோ அவசர வேலையிருப்பதுபோல அவன் கரங்களின் பிடியிலிருந்த தன் விரல்களை மெல்ல விடுவித்துக்கொண்டு உள்ளே நகர்ந்து போகிறாள் ஊர்மிளை.



******************************



தேர், சீதை இறங்க வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலை அடுக்குகளும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் பச்சை மரகதமாய் மினுங்கிக் கொண்டிருக்க, இடையிடையே கீற்று வேய்ந்த ஓலைக்குடில்கள் தென்படுகின்றன. துல்லியத் தெளிவுடன் சலசலக்கும் சிற்றோடை நீர்ப்பரப்புகள், தாமரை பூத்த தடாகங்கள், விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் புள்ளினங்களின் கலவையான ஒலி, எழும்பித் துள்ளும் பந்துபோன்ற லாகவத்துடன் கால் தூக்கி அநாயாச வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மான்கள்...
’’இந்த இடம் கண்ணுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா இலட்சுமணா?''
சீதையின் கேள்வியில் அவளே அறியாதபடி தொக்கி நிற்கும் முரண்நகையின் விசித்திரம் இலட்சுமணனை மேலும் வேதனைக்கு ஆளாக்க...
""அப்படியே செய்யலாம் அண்ணி'' என்று மட்டுமே விடையளிக்கிறான்.
ஓடை நீரைக் கால்களால் அளைந்தபடி ஊர்மிளையிடம் சலிக்காமல் பேசிக்கொண்டிருக்கும் சீதையிடம், காலப் பிரக்ஞையெல்லாம் எப்போதோ கழன்று போய்விட்டிருக்கிறது. பொழுதடையும் நேரம் நெருங்குவதை உணர்ந்த இலட்சுமணன் அவர்களின் அருகே செல்கிறான்.
""அந்த மானைப் பார்த்தாயா தம்பி...? முன்பு வந்த பொன்மானைப் போலவே இருக்கிறதல்லவா? பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும் உன்னை அனுப்பிவிட மாட்டேன்''
""அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கே அருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ள மான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்''
""என்ன...வால்மீகி மாமுனியா? ஊர்மிளை! நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன?''
""தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்...இது...அண்ணனின் விருப்பம்...''
எந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத் தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச் சொல்லி முடித்தபோது இலட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.
நச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போல வினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமே நிதானத்துடன் நிமிர்கிறாள்."இது...இப்படி...நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம் இப்போது புரிகிறது! உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின் அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா இலட்சுமணா?''
நடைபிணமாய் தளர்ந்து துவண்டபடி...முனிபுங்கவரின் குடிலுக்கு வழிகாட்டச் செல்கிறான் இலட்சுமணன்.
குடிலின் வாயிலை அணுகும் நிமிடத்தில்...
""இனிமேல் உன் உதவி தேவைப்படாது. நீ விடை பெற்றுக்கொள்ளலாம்...'' என்று உறுதியான தொனியுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொள்கிறாள் சீதை.
கழுவாய் தேடிக்கொள்ளவே வழியில்லாத பாவம் ஒன்றைச் செய்துவிட்ட பரிதவிப்புடன் திரும்பியே பார்க்காமல் தேர் நின்ற திசையை நோக்கி விரையத் தொடங்கிய இலட்சுமணனின் உள்ளத்தில் ஊர்மிளையின் நினைவு குறுக்கிட, அவளை உடனழைத்துச் செல்வதற்காகக் திரும்புகிறான். அதற்குள் அவளே அவனை நோக்கி வருகிறாள்.
""நீங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாக இங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு அவனது எந்த மறுமொழிக்கும் காத்துக் கொண்டிருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடி வால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.
தேர்த்தட்டில் இலட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்த மாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்.

5 கருத்துகள் :

Suresh Subramanian சொன்னது…

nice imagination... nice story... thanks to share.... http://www.rishvan.com

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மதுரையிலிருந்து எழுத்தாளர் உஷாதீபன் அனுப்பிய மின் அஞ்சல்(என்னால் உள்ளிடப்பட்டது)
மதிப்பிற்குரிய மேடம், வணக்கம். கதிரில் ஊர்மிளை சிறுகதை படித்தேன். சமூகக் கதைகளிலிருந்து சரித்திரக்கதைகள், புராணக்கதைகள் எழுத முயல்கையில் அதிலே நம் எழுத்துத் திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள்ளாகிறோம். இம்மாதிரிக் கதைகளுக்கென்றே ஒரு தனி நடையும், சமூகக் கதைகளிலிருந்து மாறுபட்ட சொல்லாடல்களும் தேவைப்படுகின்றன. இவை சிறந்த வாசிப்பனுபவம் இருப்பவர்க்கே சாத்தியமாகும். உங்களின் ஊர்மிளை சிறுகதை மூலம் நீங்கள் இதை நிரூபித்திருக்கிறீர்கள். வலியத் திணிக்கப்பட்ட வார்த்தைகள் என்பது பட்டவர்த்தனமாய்த் தெரியாத தெளிந்த நடையில் கச்சிதமாகக் கதை சொல்லியிருக்கிறீர்கள். சீதாதேவியின்பாற்பட்ட அதீத இரக்கமும், கருணையும், படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக ஏற்படும் என்கிற தீர்க்கமான முடிவில், ஊர்மிளையைத் துணைக்கு இருக்க வைப்பதன் மூலம் ஒரு புதிய புனைவை உட்செலுத்தி புராணமே இம்மாதிரிதானோ என்று நினைக்க வைக்குமளவு இயல்பான நடையோட்டத்தில் ஒரு யதார்த்தமான முடிவின் மூலம் நீங்கள் சொல்ல நினைத்ததை ஸ்தாபித்திருக்கிறீர்கள். மறுவாசிப்பு என்பதை இம்மாதிரி நற்சிந்தனைகளின் மூலம் நிரூபிப்பதுதான் அந்தந்தக் காப்பியங்களின் மீது நாம் கொண்ட மதிப்பின் அடையாளங்களாகக் கருதப்படும். அல்லாமல் இன்றைய பல மறுவாசிப்புகள் குதர்க்கமான சிந்தனைகளை முற்போக்கான முன்னெடுப்பு என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு அப்படியான விபரீதப் புனைவுகளைச் சிறுகதையாக்கி முன் வைப்பதும், அதற்கு முற்போக்கு முகாம்களில் பாராட்டுக் கிளம்புவதும், அம்மாதிரியான எழுத்துக்களுக்கு அடையாளம் காட்ட முயல்வதும், இன்றைய நவீனப் போக்காக இருந்து வருவதை இங்கே வேதனையோடு பதிவு செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. புராணங்களையும், இதிகாசங்களையும், இன்றைய நிலையில் மறுவாசிப்பு என்கிற பெயரில் இப்படித்தான் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களின் ஊர்மிளை சிறுகதை அந்த வேதனைக்கு இழுத்துச் செல்லவில்லை. மனம் திறந்த, நிறைந்த, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்பன் உஷாதீபன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஒரு வாசகர் கடிதம்;என்னால் உள்ளிடப்பெற்றது-
Thank you very much for 'Urmilai'. I have always liked how you bring the marginal characters to the centre and through them provide an alternative commentary to the story that flows as it always had. And more importantly, you endow those marginal characters with such poise and logic that they are always the ones who question the values behind those stories without tampering with its sacredness in an explicit way.when Urmilai chooses to go with Sita, she makes the most poignant indictment against her loved one and his master, and yet she acts perfectly within conventional parameters of propriety, in short an outrage that can never be indicted back, bordering on self-destruction.

It was an extremely powerful literary justice, and I really thank you for sharing with me.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனின் கடிதம்;என்னால் உள்ளிடப்பெற்றது-
Dear Susila
Your story is an interesting subversion of Sita's exile to Kanva's ashram in the forest. May be, quite deliberately, you've written it in the ornate, formal style that would suit the epic, and that makes the satirical element even more effective, according to me. If you had written this story in a modern, contemporary Tamil, it would have less impact.In the conclusion, it's not just Urmile, but also Sita who give Lakshman a fitting reply. I enjoyed reading it.

ஜடாயு சொன்னது…

வால்மீகி சொல்லாமல் விட்ட ஊர்மிளையின் பதினான்கு ஆண்டு கால காவிய தாபத்தைப் பற்றி சில படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள் (ஹிந்தியில் மைதிலி சரண் குப்தா என்ற நவீனக் கவிஞர் ஒரு பெரிய காவியம் எழுதியிருக்கிறார் - 'ஸாகேத்').

ஆனால், சீதை மீண்டும் காட்டுக்குப் போகையில் ஊர்மிளையின் மனநிலை எப்படி இருந்திருக்கும், அவள் என்ன செய்திருப்பாள் என்று யோசித்திருப்பது உண்மையிலேயே ஒரு புதிய திறப்பு. ஒரு பெண்மனம் தான் நுட்பமாக அதை அடையாளம் கண்டிருந்திருக்க முடியும்.

மிக அருமையான சிறுகதை சுசீலா அம்மா. வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....