துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.9.12

தடை ஓட்டங்கள்

மெரிக்காவிலிருக்கும் மகன் பிரசாதிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது.சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள்...செய்திகள் முடிந்தபின் கடிதத்தின் ஒரு பகுதி என்னைக் கட்டிப் போடுகிறது.

‘’சமீபத்தில் இங்கிருக்கும் தமிழ்ச்சங்கத்திற்குப் போயிருந்தேன்.அங்கே அறிமுகமான ஒரு தமிழர், நான் உங்கள் மகன் என்பதை அறிந்ததும் ரொம்பவே ஒட்டிக் கொண்டார்.உங்கள் ஒவ்வொரு கதையையும் அணு அணுவாக ரசித்து நுட்பமாக அவர் அலசிய விதத்தைப் பார்த்து எனக்கே கொஞ்சம் வெட்கமாகப்போய்விட்டது...உங்களோடு கூட இருந்த நாட்களில் நீங்கள் எழுதுவதைக் கிண்டல் செய்வதைத் தவிர நான் என்ன செய்திருக்கிறேன்?
இப்போது எட்ட இருந்து கொண்டு உங்களுக்குள் இருந்த இன்னொன்றைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை...நாவலுக்கெல்லாம் முயற்சிக்கவில்லையா என்றெல்லாம் அவர் கேட்டார்.வீட்டுக்குச் சென்று தனிமையில் யோசித்தபோது எனக்குக் கிடைத்த பதில்...’’நாங்கள்..’’! ஆமாம்..நாங்கள்..!உங்களில் கொஞ்சத்தைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் எங்களை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள்...அம்மா! இனியாவது தொலைத்ததைத் திருப்பி எடுங்கள் ! எங்களுக்காக வாழ்ந்து எங்களை முழுமைப்படுத்தி விட்ட நிறைவு மட்டும் உங்களுக்குப் போதாது..இனிமேலாவது உங்கள் தேடல்களுக்கு மட்டுமென்றே உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்..’’

தொடர்ந்து நீண்டு கொண்டே சென்ற கடிதத்தைப்படிக்க முடியாமல் பனிப்படலம் கண்களுக்குத் திரை போட..அதனூடே மங்கலான சில காட்சிகள்..!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


திருவிழாச்சந்தையில் தவற விட்ட குழந்தையை மீட்டெடுக்கும் ஆவேசம் அன்று என் ஒவ்வொரு அணுவிலும் ஆக்கிரமித்து என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.இந்தத் திருமணப்பேச்சு என்றைக்குத் தொடங்கியதோ அப்போது முதலாகவே எனக்கே எனக்கென்று ஒரு நிமிடம் கூட வாய்க்கவில்லை.உறவுகளின் வருகை,தொடர்ச்சியான கடைத்தெருப்படையெடுப்புக்கள்,மணத்திற்கு முன்னும் பின்னுமான சடங்குகள்,விருந்துகள்,வேர்களைப்பிரிந்து வேற்றிடம் செல்லும் மன உளைச்சல்கள்,தனிக்குடும்பப்பொறுப்புகள்,புதியதொரு தோழமையுடன் அலைவரிசைப்பொருத்தம் சரிவர அமைந்தாக வேண்டுமே என்ற பயம் கலந்த பரபரப்பு! எல்லாம் ஓய்ந்து மனசும் ஓரளவு சமனப்பட ஆரம்பித்த பிறகு,இன்றைக்குக் கிடைத்திருக்கிற நிம்மதியான சூழலைத் தவற விட்டுவிடக்கூடாதே என்று நெஞ்சு பதைக்கிறது.பொத்திப்பொத்தி மூடி வைத்திருக்கும் பெட்டகத்தைப் பிரிக்கிற தவிப்போடு பரணிலிருந்து அந்தப்பெட்டியைக் கீழே இறக்குகிறேன்.தனி வீடு பார்த்து இருவருமாய்ப் பொருள்களை அடுக்கும்போது அந்தப்பெட்டியை மட்டுமே நானே தனியாகப் பிரித்துக் கொள்வதாய்ச் சொன்னபோது
‘’ஓ..அது உன்னோட அந்தரங்கக் கருவூலமாக்கும்’’
என்று ரவி கிண்டல் செய்தது நினைவுக்கு வருகிறது.கருவூலம் மட்டுமா..என் கருவறையே இதுதானே என்று எண்ணியபடி,பெட்டியைத் திறக்கிறேன்.

பழுப்பேறிப்போன புத்தகங்கள்,காகிதக் கத்தைகளிலிருந்து அந்துருண்டை,எறும்புப்பொடி மணங்களெல்லாம் ஒன்றிணைந்து மக்கிப்போன ஒரு நெடி வெளிப்பட்டு நாசியைத் தாக்குகிறது.சற்றே கண்மூடி என்னை எனக்கே நினைவூட்டுகிற அந்த வாசனையின் ரசனையில் அமிழ்கிறேன்.’ஆறாப்பு,ஏழாப்பு’ படிக்கிற நாட்களில் பெரிய மனுஷி மாதிரி,’’நான் கதை எழுதப் போறேன்’’என்று கையில் ஒரு பென்சிலும்,அப்பாவுக்கு யாரோ தந்த புது வருஷ டையரியுமாகத் தனிமை தேடி ஒதுங்கத் தொடங்கிய காலத்தில் கிறுக்கிய முதிராத பிஞ்சுக் கையெழுத்துக் கோணல்மாணல்களில் தொடங்கிக் கல்யாணத்திற்கு முன்பு நான் எழுதிக் கடைசியாக வெளிவந்த வார,மாத இதழ்ச்சிறுகதைக் கத்தரிப்புக்கள் வரை அந்தப்பெட்டியை நிரப்பியிருந்த என் பிரத்தியேக சொத்துக்களை உன்மத்தமாகத் தழுவியபடி உள்ளெரியும் அக்கினிக்கு ஆகுதி வார்க்கிறேன்.

அடுத்த படைப்பைத் தொடங்குவதற்கு முன்பு என்னை நானே உயிர்ப்பித்துக் கொள்ள வழக்கமாக நான் கையாளுகிற உத்திதான் இது. பழசைப்புரட்டுகையில்,மனது படிப்படியே வேகம் எடுக்கும்...முன்னிலும் நன்றாக...முன்னிலும் விரைவாக ஓடும் ஆக்ரோஷம் கிளர்ந்து வர......எழுத்தில் வீச்சும்,வீரியமும் பொங்கி வரும்.

இன்று..எப்படியும் ஏதாவது ஒன்றை எழுதியே ஆக வேண்டும்.படைப்பாக்க அவசத்தில் மனம் துடிக்கிறது.புது வாழ்க்கை...புது அனுபவங்கள்...எழுதச் செய்தியா இல்லை..! என் நினைவுச் சேமிப்பிலிருந்து எழுதத் தோதான ஒன்றை இனம் பிரித்து உருவிப் படிப்படியே அந்த இழையைப் பற்றிக்கொண்டு மேலேறுகிறேன்.தரையிலிருந்து மெள்ள ஒவ்வொரு சுற்றாய் வட்டமிட்டு வட்டமிட்டு உயர்ந்து கொண்டே போகும் பறவைக்கு வான மண்டலத்தில் வாகான பிடி கிடைத்ததும் சீரான கதியில் அது பறக்கத் தொடங்குவதைப்போல..என் சஞ்சாரமும் அதன் உச்சத்தை எட்டுகிறது. சிலந்தி வலைப்பின்னலாய்....இழையோடு இழை கூட்டிப் படைப்புச் சுருதியின் லயத்தில் ஒன்றிக் கரைந்து என்னையே நான் இழக்கத் தொடங்குகிற வேளையில் வாயில் அழைப்பு மணி ஒலிக்கிறது.தவம் கலைந்தவளாய்ச் சென்று கதவைத் திறக்கிறேன்.நடுத்தர வயதுப்பெண்ணொருவர் நின்று கொண்டிருக்கிறார்.

‘’நான் கீழ் ஃப்ளேட்லே குடியிருக்கேன்..ரவி இல்லையா.’’
‘’அவர் ஆஃபீஸுக்குப் போயிருக்காரே..’’
‘’இல்லே ரவியோட கல்யாணத்தப்ப நான் ஊரிலே இல்லை.இன்னிக்குக் காலையிலேதான் வந்தேன்...அதுதான் விசாரிக்கலாம்னு...ஆமாம்...நீ, ரவியோட சம்சாரம்தானே...?’’
-அந்தப் பெண்ணின்கண்களில் தெரிந்த ஆர்வமும், ஊடுருவுவது போன்ற பார்வையும் ..இவள் தவிர்க்க முடியாதவள் என்பதை அறிவிக்க,
‘’ஆமாம்மா..உள்ளே வாங்க..’’என்று அழைக்கிறேன்.

விருந்துபசாரத்தின் இடைஇடையே பரஸ்பர விசாரிப்புக்கள்,அந்தக்குடியிருப்பின் வேறுபட்ட பல பிரச்சினைகள்..,அங்கேஇருக்கும் குடித்தனக்காரர்களின் பன்முகத் தன்மைகள் -நடுநடுவே புது மணப்பெண்ணாகிய எனக்குச் சில ஆலோசனைகள் என்று நீண்டு கொண்டே சென்ற அந்த  உரையாடலில்.....படைப்புச் சுருதி கூட்டிக் கொண்ட என் மோனநிலை முற்றிலுமாய்க் கழன்று போகிறது.அந்தப்பெண்மணி விடை பெறும் நேரத்தில் தொலைபேசி ஒலிக்கிறது.

‘’ஹலோ இந்து...இன்னிக்கு சாயங்காலம் நான் வரும்போது ரெடியா இரு. ராத்திரி எங்க ஆஃபீஸ்காரங்க நமக்கு டின்னர் கொடுக்கிறாங்க..’’
மணி,மாலை நான்கைத் தொட்டிருக்கிறது.கலைந்து கிடந்த தாள்களைச் சீராக அடுக்கி வைத்து விட்டுக் கிளம்ப ஆயத்தமாகிறேன்..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிரசாத்தின்கடிதத்தை ரவியிடம் காட்டுவதற்காக ஹாலுக்கு வருகிறேன்.டி.வியில் ஏதோ ஒரு பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருக்கிறது.
‘’ஆண்களிலே எத்தனையோ ஐ.பி.எஸ்.அதிகாரிகள் எவ்வளவோ தீரச்செயல்களைச் செய்துக்கிட்டிருக்காங்க.ஆனா...ஒரு பெண் அப்படின்ங்கிறதுக்காகக் கிரண்பேடியைத் தூக்கி வச்சுக் கொண்டாடறோம்...இதுவரைக்கும் விண்வெளிக்குப் போகாத ஆண்களா..ஆனா..இந்த கல்பனா சாவ்லாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பப்ளிசிட்டி..’’
-ஏதோ ஒரு வாதத்திற்காக யாரோ ஒரு பேச்சாளர் மூர்க்கமாகச் சாடிக் கொண்டிருக்க,கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது.கடிததத்தை அவரிடம் கொடுத்து விட்டு அறைக்குள் வந்து அயர்வாய்க் கண்களை மூடுகிறேன்.
விட்ட இடத்திலிருந்து காட்சிகள் விரிகின்றன....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ள்ளிரவின் சிள்வண்டு ரீங்காரம்...என் தனிமைக்கு ஒரு பின்னணி இசையைப்போலக் கேட்டுக் கொண்டிருக்க, படுக்கையறையின் ஒரு மூலையில் மேசை விளக்கின் ஒளி பிறர் தூக்கத்தை உறுத்தாத வகையில் அமைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.எழுத்துக்கள் தாள்களில் அடுத்தடுத்து அரங்கேறிக்கொண்டே போக...கை,கால் முளைத்த ஒரு பிஞ்சுப்பூவாய் மகன் பிரசாத் என்னருகே கிடந்த அந்த முதல் கணத்திலும், பஞ்சுப்பொதியாக மகள் ப்ரீதியைப்பெற்றெடுத்த அந்தப்பொழுதிலும் அனுபவமாகிய அதே கிளர்ச்சி என்னுள் தரிசனமாகிறது.அவர்களை வருடிக்கொடுக்கிற சுகம்...ஆரத் தழுவி அணைக்கிறபோது உள்ளே ஓங்கி வளரும் பரவசம்  இவையெல்லாம் இந்தத் தருணங்களிலும் எனக்கு சாத்தியமாகிறது என்பதால்....எப்படியாவது அதைத் தக்க வைத்துக் கொண்டுவிடவேண்டும் என்பதற்காகவே இந்த ஓட்டத்தையும் நொண்டிநொண்டியாவது ஓடிக் கொண்டிருக்கிறேன்.மெய் சோர்ந்து...கை தளர்ந்து..கண்ணில் இரண்டிரண்டாய்க் காட்சிகள் தெரியத் தொடங்கும் வரை என் எழுத்தும் தொடர்ந்து கொண்டு போகிறது.

பகற்பொழுதுகளில் எவ்வளவுதான் முயன்றாலும் சிந்தனை ஓட்டத்தின் கண்ணிகளை அறுபடாமல் காப்பதென்பது எனக்குச் சாத்தியப்படாத கானல்நீராகவே இருந்து கொண்டிருக்கிறது.காலையில் எழுந்து பம்பரமாய்ச் சுழன்று ரவியையும்,குழந்தைகளையும் அனுப்பி விட்டுக் கதவைச் சாத்தும் நேரம் முனியம்மா குரல் கொடுப்பாள்.பாத்திரங்களை ஒழித்துப் போடுவதோடு என்னை விட்டுவிட அவளுக்கு மனம் வராது.குடிகாரப்புருஷனின் பிரதாபங்களை என்னிடம் கொஞ்ச நேரமாவது புலம்பித் தீர்ப்பதில் அவளுக்கு ஏதோ ஒரு ஆறுதல்...! சக மனுஷ நேசத்துக்காகவும் ,இதுவும் ஒரு அனுபவக்கொள்முதல்தானே என்றும் நானும் அவள் பேச்சுக்கெல்லாம் அலுக்காமல் செவி கொடுத்துக் கொண்டிருப்பேன்.பறந்து போகிற நேரங்களைப் பிறகென்ன பிடிக்கவா முடிஉம்? சின்னவளை ஸ்கூலிலிருந்து அழைத்து வந்து ,மாலை டிஃபன் தயாரித்து..பிள்ளைகளோடு வீட்டுப் பாடத்தில் உட்கார்ந்து..பிறகு இரவு உணவு தயாரித்து.....!

கணவன் சம்பாதித்துப்போட,ஒழிந்த நேரத்தில் வீட்டில் சொகுசாய் இருந்து ஒரு ஹாபியாய்க் கதை எழுதும் பெண்கள் என்று பிரபல நாவலாசிரியர் ஒருவர் இன்று பத்திரிகையில் தந்திருந்த பேட்டியைப்ப்பார்த்தபோது குமுறிக்கொண்டு வந்தது.அவரைப்போல ‘மூட்’ஏற்படுத்திக் கொள்வதற்காகவே ஹோட்டலில் அறை எடுத்தோ வீட்டின் அறைக்கதவை அடைத்துக் கொண்டு ’தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று போர்டு போடுவது போல சிவப்பு விளக்கை எரிய விட்டுக் கொண்டோ எழுத முடிகிறதா என்ன?

பல வகைகளில் பார்த்தால் ரவி என்னவோ நல்லவர்தான். வீணையை முறித்துப் போட்டுக் குரல்வளையே நெரித்து விடும் ஆண்களைப்போல நடந்து கொள்ளாமல் அன்பாக,அனுசரணையாகநடந்து கொள்பவர்தான்! ஆனாலும் இருந்த இடத்திலேயே காப்பியைக்கொண்டு வந்து கொடுத்துத் தட்டிலேயே கைகழுவி எழுந்திருக்க அம்மா உண்டாக்கியிருந்த பழக்கம்,மனைவியிடத்திலும் கூட அப்படிப்பட்ட சௌகரியங்களை அவரை எதிர்பார்க்க வைத்திருந்தது.தன்னுடைய வசதியிலோ...குடும்பத்தின் சீரான ஓட்டத்திலோ சின்னதாக ஒரு அபசுரம் கூடத் தட்டாதபடி அவள் எதைச் செய்தாலும் அவருக்கு சம்மதம்தான்..! ஊரை விட்டுத் தள்ளியிருந்த தொழிற்சாலைப் பணிக்குக் காலை ஆறு மணிக்குக் கிளம்பிப்போகும் அவரிடம் ஸ்கூல் ஃபீஸ்,மின் கட்டணம் ஆகியவற்றைக் கட்டும் சின்னச் சின்ன உதவிகளைக் கூட அவளால் எதிர்பார்க்க முடிந்ததில்லை.

எந்தப்பிடுங்கலும் இல்லாமல் ‘அக்கடா’என்று வாய்க்கும் பகல் பொழுதுகளிலும் பிளாஸ்டிக் குப்பிகளையும், பிஸ்கட் பொட்டலங்களையும் சுமந்து வரும் விற்பனைப்பிரதிநிதிகள் விடாக்கண்டர்களாய் ஒலிக்கும் அழைப்பு மணிகள்..குடிநீர்க் குழாய் பழுது பார்க்க..எரிவாயு  மாற்ற என்று தொடர்ச்சியாக வரும் ஆட்கள் ! இத்தனைக்கும் நடுவே எழுதுகோலையே மறந்தும் கூட எத்தனை மாதங்கள்...?

காளிதாசனையும்,வால்மீகியையும் போலக் காட்டைத் தேடிக் கொண்டா ஓட முடியும்? இதனாலேதான் எனக்கே உரிய சொந்தப்பொழுதுகளாக இந்த இரவுகள் எனக்கு இதம் தருகின்றன..அதுவும் கூட மறுநாள் வேலை நாளாக இல்லாத சனிக்கிழமை இரவுகள் மட்டுமே! குடும்பமே சற்று ஆர அமரச்சோம்பல் முறித்து எழும்  ஞாயிறு காலைகள் முந்தைய இரவின் தொடர் விழிப்புக்குப்பின் எனக்கும் சற்று ஓய்வைத்தந்து மெள்ள விடியும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ரு மாறுதலுக்காக இருக்கையை விட்டெழுந்து அலமாரியருகே வருகிறேன்.ஐந்து சிறுகதைத் தொகுப்புகள்,இலக்கியச்சிந்தனைப்பரிசை வென்றிருக்கும் சிறியதொரு நாவல் என்று அவ்வப்போது என்னை நான் நிரூபித்துக் கொண்டிருக்கும் சாட்சியங்கள்....

‘’பச்சை உடம்புக்காரி...எதுக்கு இப்படி உடம்பை வருத்திக்கிட்டு எழுதிக்கிட்டிருக்கே...உடம்பு தேறினாத்தானே உன் குடும்ப வண்டி ஓடும்....இத பாரு....குடும்பம்,குழந்தை,குட்டின்னு வந்தாச்சுன்னா அதோட திருப்திப்பட்டுக்கணும்....அதுக்கு மேலே ஒரு பொம்பளைக்கு வேறென்ன..?’’
-குழந்தைகளைப்பிரசவித்திருந்த வேளையில் கையிலுள்ள தாளையும்,பேனாவையும் பிடுங்காத குறையாக அம்மா கத்தக்கத்த..அப்போதைக்கு மண்டையாட்டி விட்டு அவள் தலை மறைந்ததும் ஒளித்தும்,மறைத்தும்,துண்டு துண்டாய்க் கிறுக்கிப்போட்டுப் பிறகு  ஒன்று சேர்த்த ஓவியமாக்கிய கொலாஜ் உருவங்கள்!

நாத்தனார் கல்யாணப்பரபரப்பில் வீடே திமிலோகப்பட்டுக் கொண்டிருக்க....சாமான்கள் எடுத்துத்தரும் சாக்கில் உள்ளறையில் ஒளிந்து கொண்டு இரண்டே நாட்களில் அனுப்பியாக வேண்டிய சிறுகதைப்போட்டிக்கான கதையை அவசர அவசரமாய்ப் பிரதியெடுத்த நேரங்கள்..!

இடுப்பெலும்பு முறிந்த மாமியாருக்குத் துணையாயிருக்க நேர்ந்தபோது மருத்துவமனையில் கிடைத்த தனிமைப் பொழுதுகளில் ’பிரிஸ்கிருப்ஷன்’சீட்டுக்களுக்குப் பின்புறம் ஒட்டுப்போட்டு உருவாக்கிய குறுநாவலுக்குப் பரிசு கிடைத்த நிமிடத்தில் அடைந்த சிலிர்ப்புகள்!

சிதறுகாய் வில்லைகளாக .அவ்வப்போது சில தெறிப்புகள் என்னிலிருந்து வெளிப்பட்டிருந்தாலும் எனக்கென்னவோ திருப்தியில்லை.!’பெரிதினும் பெரிது’கேட்கச் சொல்லிஉள்ளேயிருந்து இன்னும் பிறாண்டிக்கொண்டே இருக்கும் பாரதி,இன்னும்..இன்னும் என்று கொட்டத் துடிக்கும் படைப்புச் சூல் கொண்ட மனது...படைப்புச் சுகத்தின் பூரணத்துவத்தில் மூழ்கி மூச்சடைத்து சில முத்துக்களையாவது எடுத்தாக வேண்டும் என்ற கரை காணாத தாகம்...!! எனக்கும் ஒரு காலம் வரும்...எனக்கென்று ஒரு அறை...இடையீடுகளற்ற சிந்தனைத் தவம்செய்ய வாகான தனிமை...சுமையிறக்கம் செய்து விட்டதில் லேசான உள்ளம்...இவையெல்லாம் என் வாழ்வின் அந்திப்பொழுதிலாவது நிச்சயம் வாய்க்கும்...! உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கைப்போலக் காத்திருக்கிறேன்..!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ன்ன கை வலி எப்படி இருக்கு...’’
-காட்சிகள் அப்படியே மனதுக்குள் உறைந்து போய் நின்றுவிட..,ரவி உள்ளே வருகிறார்.
‘’பிள்ளையோட லெட்டர் வந்ததுதான் சாக்குன்னு உடனே பேனாவைத் தூக்கிடாதே...டாக்டர் சொன்னதுஞாபகமிருக்கட்டும்’’எச்சரித்துவிட்டு வெளியேறுகிறார்.

கைவிரல்களைப்பிரிக்கிறேன்.இரத்தம் சுண்டி வெளிறிப்போன சோகை பிடித்த விரல்கள்..

வேலையிலிருந்து ரவி ஓய்வு பெற்றுக் குழந்தைகளும் அவரவர் வாழ்க்கையைத் தேடிப்போய் விட்ட பிறகு எழுத உட்கார்ந்த ஒரு நாளில் பேனா ஒரு பக்கமும்,எழுத்து இன்னொரு பக்கமுமாச் சறுக்கிக் கொண்டு போகப் பொறுக்க முடியாத கைவலியின் கடுமையில் டாக்டரிடம் போகிறேன்.

‘’இதிலே பயப்பட ஒண்ணுமில்லேம்மா...உங்க வயதுப் பெண்கள் பலருக்கும் இந்த வயசிலே மெனோபாஸ்னாலே வரக்கூடிய வழக்கமான பிரச்சினைதான் இது...! ஹார்மோன் கோளாறுகளினாலே எலும்பு நரம்பெல்லாம் வீக்காயிடுது இல்லையா அதுதான்....! மருந்து சாப்பிடுங்க..ஊசி போட்டுக்கங்க. முக்கியமா..கொஞ்ச நாளைக்குக் கை விரல்களுக்கு எந்தக் கடுமையான வேலையும் தரக்கூடாது நீங்க’

காற்றில் படபடத்த பிரசாதின் கடிதத்தை விரக்தியாய்ப் பார்த்தபடி மனதை வேறு திசையில் திருப்ப எண்ணியாளாய் அருகிலுள்ள வார இதழைப்பிரிக்கிறேன்.ஒன்றரை கிலோமீட்டர் நீச்சலடித்து,நாற்பது கிலோமீட்டர் சைக்கிளை மிதித்துப் பத்து கிலோமீட்டர் ஓடுகிற ட்ரையத்லான் போட்டி பற்றி அதில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.



என் நெஞ்சுக்குள்ளும் ஒரு ட்ரையத்லான் பந்தயம் விரிகிறது.அங்கே தோளிலும் முதுகிலும் கனக்கும் பாரங்கள் ஒரு பக்கம் வேகத்தைக்குறைக்க....திசைக்கொன்றாய் இழுக்கும் சக்திகள் தொய்வுகளை உண்டாக்க..முன்னேயிருக்கும் வேலிகளையெல்லாம் தண்டிக்குதித்தபடி....ஓட்டத்க்தை எதற்காகவும்,யாருக்காகவும் எந்த இடத்திலும் நிறுத்தி விடாமல் பெண்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்...


[கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர் சிறுகதைப்போட்டியில் தேர்வு பெற்று அவரால் தொகுக்கப்பெற்ற’காயங்கள்’தொகுப்பில் இடம் பெற்றுள்ள என் சிறுகதை.
என் தேவந்தி தொகுப்பிலும் இது இடம் பெற்றிருக்கிறது]






2 கருத்துகள் :

புதியவன் பக்கம் சொன்னது…

அண்மையில் ஊருக்குப் போயிருந்தபோது நானும் பழைய சூட்கேசை எடுத்து 15 ஆண்டுகளுக்கும் முந்தைய - கணினியின் ஆதிக்கத்துக்கு உட்படாத காலத்தைய பழைய டயரிகள், நண்பர்களின் கடிதங்கள், அப்போதைய வழக்கப்படி நான் எழுதும் கடிதங்களுக்கும் கார்பன் காப்பி வைத்திருந்ததில் கிடைத்த என் கடிதங்கள்... இவற்றையெல்லாம் சில நிமிட நேரத்திற்குப் புரட்டினேன். தட்டிலேயே கைகழுவி எழுவதே எங்கள் சமூகத்தின் வழக்கம் என்பதையும் மீறி பலப்பல ஆண்டுகளாக என் வீட்டிலும் யார் வீட்டிலும் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்து விடுகிறேன். என் குழந்தைகளும் இதைப்பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிறைவேறாத எதிர்பார்ப்பு. பெண் என்பவளின் கடமைகள் எவை, உரிமைகள் எவை என்பதை பெண்களே அறியாத நிலையில் ஆண்களை குறைகூறி என்ன பயன்? வீட்டுல வேலைக்குப் போறாங்களா என்ற கேள்விக்கு ஊஹூம், வீட்டுல சும்மாதான் இருக்காங்க என்பதுதானே இன்றும் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது? சும்மா...? !

Murugeswari Rajavel சொன்னது…

தடை ஓட்டங்கள் சிறப்பான சிறுகதையா?உண்மை நிலையா?தெரியவில்லை.எப்படியிருப்பினும் மனது கனப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....