துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.9.12

’’கங்கையின் முழக்கம்..’’


பழகியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிகம் அறிமுகம் ஆகியிராத குறிப்பிடத்தகுந்த ஆளுமை கொண்ட ஒரு பெண்மணியின் வாழ்க்கையை - வரலாறாக அல்லாமல்-நாவலாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.அது சார்ந்த தொடர் சிந்தனைகளுக்கான தனிமை நாடிக் கடந்த வார விடுமுறையில் இரு நாட்கள் ரிஷிகேசம் சென்றிருந்தேன்.

இதற்கு முன்பே நான்கு ஐந்து முறை ரிஷிகேசம் சென்றிருப்பதால் சுற்றிப்பார்ப்பது இப்போது நோக்கமாக இல்லை.
முற்றிலும் தனிமை....கவனச் சிதறலில்லாத தனிமை மட்டுமே தேவையாக இருந்ததால் மடிக்கணினியோ,புகைப்படக் கருவியோ கூடக் கொண்டு செல்லவில்லை.ஊருக்குள் சென்று கூட்டத்துக்குள் கலக்கவும் விருப்பமில்லை.

தயானந்த ஆசிரமத்துக்கு அருகே காரைக்குடி நகரத்தாரால் நடத்தப்படும் கோவிலூர் வேதாந்த மடம் ஒன்று இருக்கிறது;அதை நிர்வகிக்கும் பெண்மணி முன்பு காரைக்குடியில் என் அம்மாவின் மாணவியாக இருந்தவர் என்பதால் அவர் உதவியுடன் அறை ஒழுங்கு செய்து கொண்டேன்...வேளா வேளைக்கு எளிமையான உணவு, கங்கைக்கரையில் அமர்ந்தபடி தூய காற்றை நுகர்ந்தபடி மனதுக்குள் நாவலைத் துழாவுதல் ,கரையோரமாகவே நீண்ட நடை என்று பொழுது கழிந்தது.

மடத்தில் தங்கியிருந்த பயணிகள் சிலர், கால்போன போக்கில் திரியும் சில ‘பண்டா’[சந்நியாசி]களை அழைத்து வந்து பூஜை செய்வித்து அவர்களுக்குத் தங்கள் செலவில் உணவு படைத்ததோடு உடைமைகளையே துறந்த அவர்களுக்குச் சாப்பிடும் தட்டு,குடிக்க ஒரு டம்ளர்,குளிர்காலம் நெருங்கி வருவதால் ஒரு ஜமக்காளம்,போர்வையாகச் சிறிய மெத்தை ஆகியவற்றைக் கொடுத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவதைக் காண முடிந்தது.அந்தப்பகுதியில் நிலவி வரும் ஒரு மரபாக இது இருந்து கொண்டிருக்கிறது...என்னதான் அனைத்தையும் துறந்து விட்டாலும் வடநாட்டுக் கடுங்குளிரைத் தாக்குப்பிடிக்க வேண்டுமல்லவா..?

கோவிலூர் மடத்துக்கு மிக அருகிலேயே -சிறு கோயிலுடன் [சுவாமி நாராயண்] கூடிய குஜராத்தி ஆசிரமம் ஒன்றை ஒட்டினாற்போலக் கூட்டம் அதிகம் இல்லாத நீண்ட கங்கைப்படித்துறை ஒன்றைக் கண்டு கொண்டேன்... காலை எழுந்து காபி அருந்தியதும் அங்கே போய் உட்கார்ந்து விடுவேன். இம்முறை கங்கை பிரவாகமாகப்பெருக்கெடுத்து நுங்கும் நுரையுமாய்ச் சுழித்தபடி பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டிருந்தது. கங்கையின் காட்சியழகு...பல பயணங்களில் பலமுறை என்னைக் கவர்ந்து கட்டிப்போட்ட ஒன்றுதான்...ஆனால்,அதன் குரல்  கேட்க என் செவிப்புலன்கள்...கூர்மை கொண்டது இந்தப்பயணத்திலேதான்...கையில் கேமரா இல்லாதது கூட அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். மேலே உள்ள படி ஒன்றில் உட்கார்ந்து நாவலுக்கான குறிப்பெடுத்துக் கொண்டே அந்தக் காட்சியிலும்  அந்த ஓசையிலும்  மட்டுமே லயித்தபடி...இருந்தது அற்புதமான பேரனுபவமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் கங்கையில் நீராடியதும்தான்.

‘’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது..’’என்ற எனக்கு மிகவும் பிடித்தமான கண்ணதாசனின் வரிகள்[’அவர்கள்’]எஸ்.ஜானகியின் குரலில்...தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன...ஆம்...கட்டற்றுப் பெருகி வரும் அந்த நீர்ப்பாய்ச்சலை எந்தச் சிமிழுக்குள்ளும் அடக்கிவிட முடியாதுதான்...
வடநாட்டுப் பெண்களுக்கு கங்கா மாதாவின் மீதுள்ள வெறித்தனமான பக்தியும் பற்றும் பிடிப்பும் சொல்லுக்கு அடங்காதவை. அந்தப் பகுதிகளில் அவர்கள் செய்யும் வழிபாடுகளில் பிற தெய்வங்களுக்கான இடம் மிகக்குறைவானதே..அவர்களின் முதன்மையான பூஜை கங்கா மாதாவை நோக்கியதே. அடை மழை பெய்து கொண்டிருக்கும்போதும் கூட தவம் போன்ற தன் வழிபாட்டைக் கலைத்துக் கொள்ளாமல் கங்கைப்படித்துறையில் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒரு வடநாட்டுப் பெண்பயணி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.விளக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவியபடி தங்கள் அன்பை... ஒட்டுதலை இயன்ற வழிகளிலெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் அந்தப்பெண்கள்.

கல்லும் கசடுமாய் எதைஎதையோ அடித்துச் சுமந்து கொண்டு வந்தாலும் கங்கையின் தூய்மையும் புனிதமும் கெடாதது போலவே நெஞ்சில் எத்தனையோ பாரங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாமல்... வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து ஓடியபடி -பிறரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கும் தங்களைப்போலவே இந்த கங்கையும் இருப்பதனால்தான் அந்தப் பெண்களுக்கு அதன் மீது இத்தனை  ஒட்டுதலோ என்று கூடத் தோன்றியது.....

பிரிய மனமே வராமல் கங்கையிடமிருந்து நான் விடை பெற்றுப்பிரிந்து பேருந்துப்பயணத்தைத் தொடங்கியபோது ....தொலைவில் தெரிந்த ஆற்றங்கரை மணலுக்குள் காந்தம் வைத்துக் காசு தேடிக்கொண்டிருந்த  சில சிறுவர்கள் மங்கலாகத் தென்பட்டுக் கொண்டிருக்க...காதுகளுக்குள் கங்கையின் முழக்கம் மட்டுமே தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

பி.கு.;நான் புகைப்படம் எடுக்காத குறை போக்க கூகிளின் உபயத்தால் சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன்.

தொடர்புள்ள இணைப்பு;
2006இல் நான் ஹரித்துவார்-ரிஷிகேசம் சென்றபோது பெற்ற அனுபவத்தை ஒட்டி எழுதிய சிறுகதை
காசு...

5 கருத்துகள் :

தருமி சொன்னது…

சில் நாளாய் இப்படி ஒரு தனிமையை மனது ரொம்ப நாடுகிறது. மரமும் நீரும் அழைக்கிறது ...!

எனக்கு முடியாதது உங்களுக்கு முடிந்தமைக்கு மகிழ்ச்சி.

கே. பி. ஜனா... சொன்னது…

தனிமை எல்லாராலும் விரும்பிச் சுவைக்கப்படுவது அல்ல. ஆனால் அதன் சுவை அலாதியானது. உங்கள் கட்டுரை அருமையாக அதைச் சொல்லிச் செல்கின்றது!

எஸ் சம்பத் சொன்னது…

தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற கேள்விக்கு அழகாக விடை தருகிறது தங்களின் அனுபவ நடை. - சம்பத்

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தங்கள் பதிவை வாசித்ததும் கங்கையை ஒருமுறை பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

இங்கு வைகையாறு ஆறுமாதத்துக்கு ஆறுநாள்தான் ஓடுகிறது. அதனால்தான் ஆறு என்று பெயர் வைத்தார்கள் என அடுத்த தலைமுறை எண்ணப்போகிறது என்ற பயம் வேறு எனக்கு வருகிறது.

உங்கள் நாவலையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி....ஒரு சில நேரங்களிலாவது, மனிதர்கள் எல்லோருக்குமே சிறிது தனிமை தேவைதான்..அதைச் சுவைத்தே அதன் ருசியை முன்வைத்தேன்.
சித்திர வீதி....எனக்கும் பெருகி ஓடும் கங்கையைப்பார்த்ததும் வைகையின் வற்றிய கோலம் மனதுக்குள் நெருடாமல் இல்லை...ஆனால் மலைகளில் உயர உயரச்செல்லும்போதுதான் ஆற்றின் உண்மையான ஓட்டம் தக்க வைக்கப்படுவதைக்காண முடியும்.சமவெளிக்கு இறங்கி விட்டால் அது கங்கையோ..யமுனையோ நம் மக்கள் அதை விட்டு வைப்பதில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....