துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.11.17

இரு நிகழ்வுகள்

கல்லூரிச் சூழலில் நீண்ட ஆண்டுகளாகப் பணியாற்றியதால் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளம் மாணவர்களுக்கிடையே உரையாற்றுவதென்பது எப்போதுமே என் மனதுக்கு நிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பதாய் இருக்கிறது. அதிலும் நமக்கு விருப்பமான பேசுபொருளும்…, நல்ல கவனிப்போடு கூடிய பார்வையாளர்களும் அமையும்போது கூடுதல் மகிழ்ச்சி.

அவ்வாறான இரு நிகழ்வுகள் அண்மையில் வாய்த்தன.

ஒன்று..கோவை பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரியின் இந்தித் துறை, சாகித்திய அகாதமியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியங்களில் சமகாலப்போக்குகள் குறித்த கருத்தரங்கம். [16.8.2017]


இந்தித் துறை சார்ந்தவராயினும் தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவரும் பல இந்திப்படைப்புக்களைத் தமிழிலும் , தமிழ்ப்படைப்புக்களை இந்தியிலும் மொழிபெயர்த்திருப்பவருமான துறைத்தலைவர் முனைவர் பத்மாவதி மேற்கொண்ட தீவிர முயற்சியால் கைகூடிய இக் கருத்தரங்கில்
இலக்கியமும் மொழிபெயர்ப்பும் என்னும் தலைப்பில் நான் உரையாற்றினேன். 



மொழிபெயர்ப்புக்கான தேவை…, அதன் இயல்புகள்..போக்குகள்…, மொழிபெயர்ப்பாளரிடம் எதிர்பார்க்கப்படும்  தகுதிகள்,அவரது பொறுப்புகள் ஆகியவை குறித்தும் காலந்தோறும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இலக்கியங்கள் பற்றியும் சொற்பொழிவாற்றியதோடு, மொழிபெயர்ப்பு சார்ந்த என் தனிப்பட்ட அனுபவங்களையும் பார்வையாளர்களோடு விரிவாகப் பகிர்ந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு என்பது சொந்தப்படைப்பை விடத் தரம் தாழ்ந்தது என எண்ணுவதன் அபத்தத்தையும் … இரண்டாம் மொழி வழி செய்யப்படும் [ மூல மொழி- இலக்கு மொழி..- Source language,Target language- இரண்டுக்கும் நடுவே ஓர் இடை மொழி] மொழியாக்கங்களும் இன்றைய சூழலில் அவசியமானவையே என்பதையும் பல மேற்கோள்களுடன் விளக்கமாக எடுத்துக்காட்டும் வண்ணம் என் உரையை அமைத்துக்கொண்டேன்.

நாற்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையை மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு எதிர்வினையாற்றிய இளம் மாணவியர்களையும்  பேராசிரியர்களையும் காண முடிந்ததும் ,சாகித்திய அகாதமியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாச்சிமுத்து அவர்களை சிறிது இடைவெளிக்குப்பின் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்ததும் உற்சாகம் அளிப்பதாய் இருந்தது. கல்லூரி மாணவர்களைக்கொண்டு இந்துஸ்தான் கல்லூரிப்பேராசிரியர் திரு திலீப் குமார் அரங்கேற்றிய வீதி நாடகம் சுருக்கமான கச்சிதத்துடன் சிறப்பாக அமைந்திருந்தது. 

**************************************

அடுத்த நிகழ்ச்சி ..
மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில்.. [13.10.2017]



’70 இல் பாத்திமாக் கல்லூரியில் நான் பேராசிரியரானது முதல் தேர்வுப்பணிகள், பாடத்திட்டக்குழுக்கூட்டங்கள், உரை நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி சென்று பழகிய அந்த வளாகம்… ,என் மகள் இளம் அறிவியல் பயின்ற அந்தக் கல்லூரி இனிய பழைய நினைவுகள் பலவற்றை என்னுள் எழுப்பியது..


இளம் பேராசிரியைகளாய் எனக்கு அறிமுகமாகி இன்று துறைப் பொறுப்பில் இருப்பவர்கள், முன்னாள் மாணவிகளான இந்நாள் பேராசிரியைகள் என்று பலரும் என்ன்னை அன்போடு எதிர்கொள்ள.., மீண்டும் வகுப்பறையில் பேராசிரியையாகப்பிறப்பெடுத்து விட்டது போன்ற உணர்வு…



இலக்கியங்களில் மறுவாசிப்பு என்னும் தலைப்பில் மாணவியருக்கான பயிலரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பின்பு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்த  பேராசிரியர் முனைவர் திரு திருமலை அவர்களும் நானும் உரையாற்றுவதாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது, திருமலை அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவருக்கு மாற்றாக திரு முருகேச பாண்டியன் உரையாற்றினார். பின் நவீனத்துவத்தை ஒட்டிய மறு வாசிப்புக்கோட்பாடுகளை அதிகமும் முன் வைப்பதாக அவர் உரை அமைந்தது.

நவீன தமிழ்க்கதை இலக்கியப்பரப்பை முதன்மையாக எடுத்துக்கொண்ட நான், புதுமைப்பித்தனின் சாப விமோசனம், எம் வி வெங்கட்ராமின் நித்ய  கன்னி என மணிக்கொடி காலத்தில் தொடங்கி.. இன்று ஜெயமோகனின் மகாபாரத மறுஆக்கமான வெண்முரசு வரை மறு வாசிப்பும் அதன் உடனிகழ்வான மீட்டுருவாக்கமும் பல வகையான போக்குகளில் நிகழ்ந்திருப்பதையும் நிகழ்ந்து வருவதையும் பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சுட்டிக்காட்டி ஒன்றரை மணிநேரம் உரையாற்றினேன். மலையாளம்,வங்கம் ஆகிய மொழிகளில் [எம்.டி,வாசுதேவன் நாயர், மஹாஸ்வேதாதேவி எனப்பலராலும்] செய்யப்பட்டிருக்கும் மீட்டுருவாக்கங்களையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டினேன். 

என் மீட்டுருவாக்கப்படைப்பனுபவங்களையும் [ புதிய பிரவேசங்கள், மானிடவர்க்கென்று பேச்சுப்படில், தேவந்தி,சங்கிலி,சாத்திரம் அன்று சதி] பகிர்ந்து கொண்டேன். 

டோக் கல்லூரியின் தமிழ்த்துறைப்பாடத் திட்டத்தில் என் கதைகள் சிலவும் இருந்ததால் முன் அறிமுகத்தோடும் ஆர்வத்தோடும் உரையைக்கேட்டபடி மாணவியர் பல வினாக்களை எழுப்பியது நிகழ்ச்சிக்கு மேலும் உயிரூட்டியது…

இரண்டு நிகழ்வுகளையும் நினைக்கும்போது… சிறிது நேரம் எங்கோ பழகிய இடத்துக்கு..பழகிய வேலைக்குக்  கூடு விட்டுக் கூடு பாய்ந்து போய் விட்டு வந்தது போல் மனம் மகிழ்வோடு சஞ்சரிக்கிறது…. 


25.10.17

சில கேள்விகள்-1

 [இலக்கியம்...சமூகம்...மெய்யியல் தொடர்பாக அவ்வப்போது நெஞ்சுக்குள் எழும் சில கேள்விகளும் தேடல்களும் இங்கே..]

அன்பும் அழுகையும்...


ஒரு மாதம் முன்   மதுரைக் கோயிலில் சுற்றிக்கொண்டிருந்தபோது..
 மனதுக்குள்  சில திருவாசக வரிகள்..

‘’யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்பெறலாமே’’

எனக்குப்பிடித்த, என்னுள் எப்போதும் ஓடும் வரிகள்தான்..
ஆனால் மனம்  அன்றென்னவோ  வித்தியாசமாய் ஓடியது.

நெஞ்சும் ..அன்பும் ..நானும் பொய்  என்றால் என்னதான் சொல்ல வருகிறார்..
எதைத்தான் சொல்ல வருகிறார் இந்த மணிவாசகர் என்று மனம் துணுக்குற்றது  

மனிதர் மீதோ இறைச் சக்தி மீதோ நாம் காட்டும் அன்பும்... 
அப்படி ஓர் அன்பு இருப்பதாக நாம் பாவித்துக்கொள்வதும்... 
அந்த  பாவனையில் நம்மை ஆழ்த்துவதுமான  நெஞ்சும்... 
நெஞ்சை சுமந்திருக்கும் அந்த நானும் 
எல்லாமே பொய் என்கிறாரா..

அன்பு செய்தால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்பது தவிர என் அன்பால் நான் எதை ஏற்படுத்துகிறேன்....
 அன்பை எவர் மீது எதன் மீது செலுத்துகிறேனோ அவருக்கு அல்லது அதற்கு - அதனால் நான் சாதித்துத் தருவது எதை?
அந்த என் அன்பால் சக உயிருக்கோ...இறை சக்திக்கோ கிடைப்பது என்ன....

இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து  அன்பு செய்தால் அந்த அன்பே பொய்தானே...
தன்னெஞ்சறிந்து பொய்க்கும் முழுப்பொய்மையல்லவா அது...

மாறாக... வேறொரு இடத்தில் அவர்சொல்வது போல 
‘’அன்றே எனது ஆவியும் உயிரும் உடைமையும் எல்லாம்...
குன்றே அனையாய் எனை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ ....
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’’
என்று  முழுமையான சரணாகதியில் நம்மை ஒப்புவித்து விட்டால்.
நன்மைக்கும் தீமைக்கும் நீயே பொறுப்பு என்று ஒப்படைத்து விட்டால்......
அதன் பின் நான் அன்பு செய்கிறேன்...
நீ இதைத் தா என்ற எதிர்பார்ப்பு தோன்றாது இல்லையா...?

அப்படித் தப்பித் தவறிக்கூடத் தோன்றி விடக்கூடாதென்றே தன்னைத் தானே பழித்துக்கொள்கிறாரோ மணிவாசகர்?

ஒருவர் இறந்து விட்டால் ’’ஐயோ நான் எத்தனை அன்பு வைத்திருந்தேன் இவர் போய் விட்டாரே’’ என்று புலம்புகிறோம்..
எதை எதிர்பார்க்கிறோம் அங்கே..
அப்போதும் நம் சுயநலம்தான் அங்கே துருத்திக் கொண்டு வருகிறது.
எனக்கு அன்பு செய்ய அந்த ஆள் இல்லையே என்ற சுயநலம்..
அப்படித்தானோ...

எதுவும் புரியவில்லை...

ஆனால் மனித ஜீவிதத்தில் அன்பு என்ற ஒன்று  இல்லாமல் இருக்கவும் இயலவில்லை.
தரவும் பெறவுமாய் எல்லாம் வேண்டியும் இருக்கிறது...
நாம் வேண்டியது வேண்டிய விதத்தில் கிடைக்க வேண்டுமென்ற சுயநலமும் கூடவே...

 உண்மையான  அன்பை எதிர்பார்ப்பு  பொய்யாக்கி விடுகிறது...
எதையும் எதிர்பாராத கலப்பற்ற அன்பைச் செய்ய முடியாதபோது 
’நானும் பொய்
என் அன்பும் பொய் 
என் நெஞ்சும் பொய்’ என்றே  ஆகி விடுகிறது...

உடலின்... ஆத்மாவின் ஒவ்வோரு அணுவிலும் இதை உணர்ந்து 
 வேறைதையுமே   வேண்டாமல் 
காதலாகிக் கசிந்து உருகுவது மட்டும்தான் மெய்யன்போ..

 அந்த உருக்கமும் நெகிழ்வும் மட்டுமே போதும் என்று நம் அழுக்குகளைக் கரைத்துக்கொண்டு வெளியேறும் அந்தக் கண்ணீரைத்தான்...
அழுதால் உன்னைப்பெறலாமே’
என்கிறாரோ திருவாத ஊராரான மாணிக்க வாசகர்?

அந்தக்கண்ணீரில் பொய்மை இல்லை..கள்ளம் இல்லை. கசடு இல்லை.
எந்தப்பிரதிபலனும் இல்லாமல் அன்பை அன்புக்காக மட்டுமே செய்யும் ஒப்பற்ற அழுகை அது.
’’கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்...’’
என்று சேக்கிழார் சொல்லும் அன்பும் அதுதானே..?

தலைவனைப் பிரிந்து அவனைத் தவிர வேறு உலகியல் நினைவற்றவளாக இருக்கும் தலைவியின் மனநிலையை  நெடுநல்வாடையில்  சொல்லும் நக்கீரர்
அவள் உடுத்தியிருந்த ஆடையை
’’அம்மாசு ஊர்ந்த அவிர்நூற்கலிங்கம்’’ என்கிறார்.

அழகிய அழுக்குப் படிந்து – ’அம்’ மாசு ஊர்ந்து…  நூல் நூலாய் நைந்து கிடக்கும் ஒரு கிழிசலான கந்தலாடையை உடுத்திக்கொண்டு… அது பற்றிய தன்னுணர்வு கூட இல்லாமல் இருக்கிறாள் அரசியான அவள்..
[அம் என்பது இங்கே சுட்டுச்சொல்லாக அல்லாமல் அழகு என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது ]
  
அழகான அழுக்கு என்பது ஒரு முரண் தொடர்.

தன்னிலை மறந்தவளாய்த் தலைவன் மீது அவள் கொண்டிருக்கும் காதலே அவள் மனதை அழகாக்கியபடி அழுக்குப்படிந்த அவளது ஆடையையும் அழகாக்குகிறது……

பிரிவின் நாட்கள் ஊர்ந்து செல்வது போல ஒவ்வொரு நாளும் அவள் உடுத்தியிருக்கும் ஆடையில் அழுக்கு ஊர்ந்து கொண்டே போகிறது.
அவளின் அக எழில் கூடக்கூட ஆடையில் அழுக்குப்படிந்தாலும் அதன் எழிலும் கூடுகிறது..…

அன்பின் சன்னிதியில் அழுக்கு கூட அழகாகி விடுவது போல்...
தன்னை..தன் அன்பையே பொய் என்று சொல்லும்
 இந்த அழுகையும் தூயதுதான் ..
அற்ப எதிர்பார்ப்புக்களாகிய தூசுகளைக் கரைத்துக்கொண்டு வடிவதால்...




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....