மங்கல தேவிகோயிலுக்குக்குச் செல்லும் பாதையிலுள்ள வனத்துறைச் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுப் பயணத்தைத் தொடங்கினால் ஆள் அரவமற்ற அடர்காடுகளில் சில் வண்டுகளின் ரீங்கார ஒலியோடு , முதல் பாதி பயணம் இனிமையாகக் கழியும். பயணத்தின் அடுத்த பாதி சிலிர்ப்பூட்டக்கூடிய அரிதான பல தருணங்களை உள்ளடக்கி இருப்பது. மலைகளையும் , காடுகளையும் கிடைக் கோடாகவும் , சில வேளைகளில் செங்குத்தாகவும் வகிர்ந்தபடி செல்லும் குறுகலான - கரடுமுரடான பாதையில் பயணப்படுகையில் ஏற்படும் உடல்..மன ரீதியான அதிர்வுகளையும், அச்சங்களையும் மட்டும் சற்றே பொறுத்துக் கொள்ளப் பழகி விட்டால்...நம் கண் முன்னே விரியும் இயற்கையின் தரிசனம் அற்புதமானது...மகத்தானது ! உன்னதமான அந்தக் கணத்தை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொண்டு விடலாம் என்ற மன எழுச்சியை ஏற்படுத்தக்கூடியது. மாசுபடுத்தப்படாத இயற்கையின் மடியில்....பிரபஞ்சப் பெரு வெளியில் ஒன்றிக் கலக்கும் பேரானந்தப் பெருக்கைக் கிளர்த்தக் கூடியது.
மங்கல தேவி கோயிலை நோக்கி....
மனித வாடையோ , ஆரவாரங்களோ அற்ற அந்த மலைமுடியின் உச்சியிலிருந்து அழகழகாக , அடுக்கடுக்காகத் தென்படும் மேற்கு மலைத் தொடர்களும் , அவற்றின் கொடுமுடிகளும் ஒரு புறம் ! ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் இருளைப் பரத்தி விரித்துத் தரையே தெரியாதபடி போர்த்தியிருக்கும் அடர்ந்த மரச் செறிவுகள் மற்றொரு புறம் ! வெயில் நுழைய முடியாத காட்டில் குயில் மட்டும் நுழைந்து விடுவதைக் கூறும்
''வெயில் நுழைவு அறியாக்
குயில் நுழை பொதும்பர்''
என்ற இலக்கிய வரிகளை நெஞ்சுக்குள் மோத விடும் பசுமைப் பள்ளத்தாக்குகளைப் பார்த்தபடி சிகரத்தின் உச்சியில் சென்றால் ...அட ! வானம் கூடத் தொட்டுவிடும் தூரம்தான் !
பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்தால் அந்தச் சிகரத்தின் உச்சி வரை ஏறிப் போன கண்ணகி , அங்கிருந்து கீழே பாய்ந்து உயிரை விட்டிருக்கக்கூடும் என்பதே பொருத்தமாக இருக்கக் கூடும் என்றபோதும் , எட்டிப் பிடிக்கும் தொலைவில் இருப்பதைப் போல் தென்படும் அந்த வான் வெளியைப் பார்க்கும்போது....ஒரு வேளை கண்ணகி , இந்த இடத்தில் நின்றபடிதான் தன் கணவனை அழைத்திருப்பாளோ...., அவனும் கூட , அவளுக்குக் கைலாகு கொடுத்து விமானத்தில் ஏற்றியிருப்பானோ என்ற மன மயக்கம் கண நேரமாவது ஏற்பட்டு விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மலைச் சிகரத்தில் கட்டுரையாளர்
பாதுகாக்கப்பட்ட அந்த வனப் பகுதில் , தவறான நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காகவே மிக உயரமான கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது . அதன் உச்சியிலிருந்து பார்க்கும்போது கம்பம் பள்ளத்தாக்கின் செழுமையான வனப்பு நம் கண் முன் விரிகிறது .
கண்காணிப்புக் கோபுரம்
கண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் கட்டுரையாளர்
கண்காணிப்புக் கோபுரத்திற்குச் சற்றுத் தூரத்தில் 'ஷோலா' காடுகளை ஒட்டி அமைந்துள்ள மங்கல தேவி கோயிலை ஓர் ஆலயம் என்று அழைப்பதை விட ' சிதைவுண்ட கற்கோயில் ஒன்றின் எச்சம் ' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
கண்ணகிகோயிலில் கட்டுரையாளர்-(கூடவே நட்பும் உறவும்)
தொல்தமிழர்களின் சிற்பத் திறமையைப் பறை சாற்றும் ஒரு சில மிச்சங்களையும் , , பண்டைய கற்கோயில் கட்டுமானங்களைநினைவூட்டும் சில சிதைவான அடையாளங்களையும் மட்டுமே அங்கே காண முடிகிறது.
ஏதோ ஒரு காலகட்டத்தில் கோயிலின் முன் வாசலாக இருந்திருக்குமென்பதை நினைவுபடுத்தும் இரண்டு தூண்கள், அவற்றுக்கு முன்னால் சுற்றுச் சுவர் எதுவுமின்றித் தூர்ந்து போய்க் கிடக்கும் மிகச் சிறிய குளம்..கோயிலைச் சுற்றி , முன்பு மதிற்சுவர் இருந்ததற்கு அடையாளமாகப் பெரிய பாறைக் குவியல்கள்...வனத்துறையின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல் , எப்பொழுதும் , எந்தத் தடையும் இன்றி , விலங்குகள் மட்டும் (குறிப்பாக யானைகள் )அங்கே வந்து சஞ்சரித்துவிட்டுப்போவதன் தடயங்களாக அவற்றின் கழிவுகள் !
இன்றைய மங்கல தேவி கோயிலின் சுருக்கமான சித்திரம் இது மட்டும்தான்
சுரங்கப்பாதையைப்போன்ற ஓர் அறைக்குள் தலையைத் தாழ்த்தி உள்ளே நுழைந்தால்..அங்கே ,கருவறைக்குள் தலையில்லாத ஒரு சிலை உருவம் ! (தலைப்பகுதியைச் செயற்கையாக உருவாக்கி -மஞ்சள்,சந்தனக் காப்பு சார்த்தி-அதுவே கண்ணகி சிலையாகக் கருதப்பட்டு வழிபடப் படுவதாக -அங்கிருந்தவர்கள் வழி அறிய முடிந்தது.)
கண்ணகி கருவறையின் நுழை வாயில்
கண்ணகி சிலை இருந்ததாகக் கருதப்படும் இடம்
புராதனச் சின்னங்களைப் பராமரித்து வரும் தொல்லியல் துறையின் பாதுகாப்புக்கு இப் பகுதி உட்படவில்லை என்பதால் இங்குள்ள சிற்பங்கள், அவற்றின் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான குறிப்புக்களோ , அறிவிப்புப் பலகைகளோ அங்கு எதுவுமில்லை.
திறந்த மைதானம்போலச் சிதைவுண்டு கிடக்கும் அந்த வளாகத்திற்குள் , எப்படியோ ஒரு பிள்ளையார் சிலை மட்டும் பிற்கால இடைச் செருகலாக முளைத்து விட்டிருக்கிறது.
மிக அரிதான இந்தக் காட்டுப் பகுதி அதிக அளவிலான மனிதர்களின் தொடர்ந்த நடமாட்டங்களால் மாசுபட்டுவிடக் கூடாது என்பதாலேயே மிகுந்த கெடுபிடி காட்டி வரும் வனத்துறை , சித்திரா பௌர்ணமியன்று மட்டும் பொதுமக்களை இங்கே அனுமதிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் கண்ணகி கோயில்பற்றிய சர்ச்சைகள் , நாளிதழ்களில் தவறாமல் இடம் பிடிப்பது ஒரு வாடிக்கையாகவே ஆகி விட்டிருக்கிறது. கண்ணகி கோயிலைச் சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டுமென்றும் , தொடர்ந்த வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்றும் குரல்கள் ஓங்கி ஒலிப்பதையும் அச் சமயங்களில் மட்டுமே அதிகமாகக் கேட்கவும் முடிகிறது. எனினும் அக்காட்டுப் பகுதியில் நிலவம் இயற்கைச் சமன்பாட்டை மனித ஆரவாரங்களும் , மனிதப் பயன்பாட்டுக்குரிய பலவகைப்பொருள்களும் குலைத்து விடக் கூடும் என்று அஞ்சுவதனாலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் , வனத்துறையினரும் இதற்கு ஒப்புதலளிக்க மறுப்புக் காட்டி வருகின்றனர்.
சித்திரை முழு நிலவு நாளில் , கண்ணகியைத் தங்களின் ஆதரிசத் தமிழ்ப் பெண் தெய்வமாகக் கருதும் தமிழர் கூட்டமும் , மங்கல தேவியைப் பகவதியாகப் போற்றி வழிபடும் கேரள மக்கள் கூட்டமும் இக் கோயிலை நோக்கி வந்து பொங்கலிட்டுப் படையல் செய்யும் காட்சியைக் காண முடியும், அந்த ஒரு நாளில் மட்டும் அவர்கள் வந்து செல்வதற்கான ஜீப் முதலிய வசதிகளையும் , குடிநீர் ஏற்பாடுகளையும் கேரள அரசின் வனத் துறையே கொடுத்து உதவுகிறது. தனியார் இயக்கும் வாகனங்களுக்கும் ( ஜீப் மட்டுமே அங்கே செல்லமுடியும் ) அன்று மட்டும் அனுமதி தரப்படுகிறது.
கூட்டமும் , ஆரவாரமும் நிறைந்த அந்த நாளைத் தவிர்த்து விட்டு வனத்துறையின் சிறப்பு அனுமதியோடு - சடங்கு , சம்பிரதாயக் கூச்சல்களற்ற அமைதியான தருணத்தில் அங்கே செல்ல முடிந்தால் , உண்மையான கண்ணகியையும், அவளது தொன்மத்தையும் , சுற்றியுள்ள இயற்கை விடுக்கும் எண்ணற்ற இரகசியப் புதிர்களையும் உணர்ந்து உட் கலக்க முடியும். ( அவ்வாறு கிடைத்த அரியதொரு வாய்ப்பே இக் கட்டுரைக்குத் தூண்டுகோல் ).
கலைந்தும் , சிதைந்தும் போன கண்ணகியின் பல கனவுகளைப் போலவே - அவளுடையதென்று சொல்லப்படும் இந்தக் கோயிலும் இருந்தபோதும்.....ஏதோ வினோதமான ஒரு பண்டைத் தொன்மத்தின் அடையாளமாக ( ஒருக்கால்...கண்ணகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட இடமாக...) மர்ம முடிச்சுக்கள் பலவற்றைப் பொதிந்து வைத்திருக்கும் இந்த இடம் இனம் பிரித்துச் சொல்ல முடியாத பல மாயப் பிரமைகளை நம்முள் எழுப்புவதை நிதானமான அந்தக் கணங்களிலேதான் நம்மால் ஆழமாக உள் வாங்கிக்கொள்ள முடியும்.
கண்ணகி ஒரு வழிபாட்டின் அடையாளமா அல்லது சமூக அமைப்பின் ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டும் குறியீடா என்ற சிந்தனையில் சிறிது நேரம் சஞ்சாரம் செய்வதற்காகவாவது....அமங்கலமாகப் போய் விட்ட மங்கலதேவி கோயிலுக்கு - அந்த வனப் பகுதிலுள்ள கானுயிர்களுக்கு நம் மூச்சுக் காற்றால் கூடச் சிரமம் ஏற்படாதபடி ஒரு முறை சென்று வந்தால் ...பரவசத்தில் ஆழ்த்தும் புதுப்புது அனுபவங்கள் நம்மை எதிர்கொள்ளக் காத்திருக்கும் என்பது உறுதி.
நன்றி : வடக்குவாசல் இலக்கிய மலர் , 2008

3 கருத்துகள் :
அருமையான பகிர்வு.
பார்ப்பனீய எண்ணங்களுக்கு பார்ப்பனர் அல்லாத தெய்வீகச் செயல்களில் எப்போதுமே ஒரு சந்தேகம் தோன்றுவதுண்டு. அவ்விதமாகவே இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எப்போதுமே கண்ணகி ஒரு தெய்வம் ஆக்கப் படுவதற்காகவே சிலப்பதிகாரம் தோற்றுவிக்கப்பட்டது என்னும் வகையில் எழுதினார். இந்தக் கட்டுரையின் ஆசிரியராகிய தங்களின் ஊகமாகிய இங்கே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனும் எண்ணமும் இத்தகைய எண்ணத்தின் தொடராகத்தான் என்னால் பார்க்க முடிகின்றது.
ஐம்பெரும் காவியங்கள் உங்களுக்கு உண்மையானதாக இல்லாமல் போகலாம். சமஷ்கிருத அனுசரணை கொண்டு இராமயணமும், மகாபாரதக் குப்பைகளும் இலக்கியம் என்பவர்களுக்கு இவற்றை ஒத்துக் கொள்ள மனம் வராமல் போவது இயற்கையே. ஆனால் மூன்று தமிழ் மன்னர்களையும், அரசுகளையும் இணைத்து நடந்த ஒரு சமூக நிகழ்வு, உண்மை உங்களின் அரைகுறை ஊகங்களுக்கு ஆட்பட்டு சின்னாபின்னப் படுவதுதான் தமிழுணர்வுமிக்க உண்மையாளர்களுக்கு வருத்தம் தரும் விடயமாகும்.
பார்ப்பனீய எண்ணங்களற்று, தமிழ்ச் சமுதாயத்தின் உண்மைகளை அறிபவர்கள் உங்களின் கட்டுரையில் உள்ள அனுமானங்களை பார்ப்பனீய உட்கருத்துக் கொண்டவை என்று தள்ளட்டும் என்பதற்கே எமது இப்பதிவு. நன்றி.
அன்பு நண்பருக்கு,
வணக்கம்.
முதலில் பார்ப்பனச் சார்பு என்று எதை வைத்து எழுதினீர்கள் என்பது புரியவில்லை.அப்படிப்பட்ட சார்புகள் துறந்தவள் நான்.
காவியங்களை..இலக்கியங்களை,அவை குறிப்பிடும் இயற்கை இறந்த செய்திகளை -( உங்கள் வார்த்தையில் தெய்வீகம்) - விலகி நின்று மதிப்பீடு செய்வதுதான் என் வழக்கமே ஒழிய அது தமிழ்க் காப்பியமா,ஆரிய - சமஸ்கிருதக் காப்பியமா என்றெல்லாம் நான் பேதம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
சொல்லப் போனால் ராமாயணச் சீதை என் ‘புதிய பிரவேசங்கள் ‘கதையில் மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்கிறாள்.
அதைவிட ஒரு படி கூடுதலாகவே சென்று ராமன் தற்கொலை செய்து கொள்வதாகக் கூட ‘சாத்திரம் அன்று சதி’ என்ற சிறுகதையை எழுதி அது செம்மலர் இதழிலும் வெளிவந்துள்ளது.
‘’உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும்(அனுமன் ராமாயணம்)
வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியினுள்ளே முழுகிப் போய் அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும்(பாரதம்) கற்பனை என்பது கண்டோம்’’
..
‘’’’நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதை பல பல தந்தார்
கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’’
என்று ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’என்னும் பகுதியில் பாரதி சொல்லியிருப்பதே என் வேதம்.(பாரதியும் ஒரு பார்ப்பான் என்ற சிமிழுக்குள் நீங்கள் அடைக்கப் பார்க்காதீர்கள்)
நீங்கள் சொல்லும் ராமாயண மகாபாரதக் கதைகளின் தெய்வீக புனிதங்களையும் அவனே கட்டுடைத்துப் போடுகிறான்.
தெய்வீகத் தன்மை இணைக்கப்படுவதே மூடத்தனம்,பகுத்தறிவுக்கு மாறானது என்னும்போது அதில் சமஸ்கிருதம்,தமிழ் எனப் பிரிவினைகள் ஏன்.
40 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியமே சுவாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உங்கள் அளவுகோலின்படி ஐம்பெருங்காப்பியங்களை மதிக்க..போற்றத் தெரியாவிட்டால் போகிறது.
ஒன்றை
மதிப்பவன் அதை வழிபட மாட்டான்.
அதன் நுட்பங்களை மட்டுமே உணர்ந்து உணர்த்துவான்.
கடைசியாக ஒரு செய்தி.எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.
கருத்துரையிடுக