துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.5.09

கேண்டீட்



பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வோல்ட்டேர். வாள் முனைகளும், இரத்தக் களறிகளும் சாதித்ததை விடவும் கூடுதலான - ஆக்க பூர்வமானபல செயல்களைத் தன் பேனா முனையால் சாதித்தவர் அவர்.''நீ சொல்வதை நான் ஏற்காமல் கூட இருக்கலாம்; ஆனாலும் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தாவது நான் காப்பேன்'' என முழக்கமிட்டபடி ,தனி மனித உரிமையை, மனித குல சுதந்திரத்தைக் கண் போலப் பேணியவர்; அதற்காகவே தன் எழுத்தைப் போர்ப் பரணியாக்கியவர்.

1759 ஆம் ஆண்டில் வோல்ட்டேர் எழுதிய 'கேண்டீட்' நாவல், அண்மையில் பத்ரி சேஷாத்ரியால் தமிழாக்கம் செய்யப்பட்டுக் கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது.

வெஸ்ட்.. பாலியா கோட்டையில் வாழ்ந்து வரும் கேண்டீட் என்னும் இளைஞன், ஜமீன்தாரின் மகள் குனிகொண்டேயின் மீது காதல் வயப்பட்டதால் அங்கிருந்து விரட்டப்படுகிறான். ஒரு வகையில் அவன், ஜமீன்தாரின் சகோதரி மகன்தான் என்ற போதும், அவனது தந்தையின் "பூர்வீகத்தில் 71 தலைமுறைக்கு மட்டுமே உயர்குடி ரத்தம் இருந்ததால்'' அவனது பெற்றோர் முறையான திருமண உறவு கொண்டவர்களாக இல்லை. கோட்டையிலிருந்து விரட்டப்படும் கேண்டீட், பல வகையான சூழல்களின் நெருக்குதல்களில் அகப்பட்டு, பல்கேரியா, ஹாலந்து, லிஸ்பன், பராகுவே, எல்டொராடோ, போனஸ் அய்ரிஸ், சுரினாம், பாரீஸ், இங்கிலாந்து, கான் ஸ்டாண்டிநோபிள் என ஒரு உதைபந்தைப் போலப் பலராலும் விரட்டப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறான். அந்தப் பயணங்களின் ஊடே அவன் எதிர்கொள்ளும் சித்திரவதைகள், காண நேரும் மனிதச் சிறுமைகள் ஆகியவற்றை அவன் நோக்கில் காட்சிப்படுத்திக் கொண்டே செல்லும் வோல்ட்டேர் அச் சம்பவங்களைப் பிணைக்கும் சரடாகத் தனிமனிதப் பேராசையையையும், காழ்ப்புணர்வையும் அங்கதத்தோடு முன் வைக்கிறார்.

அரசர்களிடையே நிகழும் தேவையற்ற பூசல்கள், இராணுவத்தினர் மேற்கொள்ளும் மனிதம் துறந்த இராக்கதக் கொடுமைகளால் மலினமாக்கப்படும் மனித உயிர்களின் அவலங்கள், மத குருக்கள், மத நீதிபதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கடைப் பிடிக்கும் போலித்தனமான இரட்டை நிலைப்பாடுகள், நடைமுறையோடு சிறிதும் ஒத்து வராத தத்துவவாதிகளின் வறட்டுத் தனமான சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் போகிறபோக்கில் ஒரு பார்வையாளனைப் போலக் கேண்டீட் பார்த்துக் கொண்டே செல்லும்போது அந்தப் படைப்பைப் படிக்கும் வாசகர்களும் கூட அவனுடன் பயணிக்கும் பார்வையாளர்களாக மாறிப் போய் விடுகிறோம் என்பதே இந்நாவலின் சிறப்பு. சிறுமைகளையும், கொடுமைகளையும் குறித்த நேரடியான சாடல்கள் இன்றி, அவற்றைப் பற்றிய விவரணைகளை மட்டும் புறவயப் பார்வையோடு - விலகி நின்று விளக்கமாகத் தந்துவிட்டு, அவை குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் 'கேண்டீ'டத்திலும், படிப்பவர்களிடத்திலும் விட்டு விடுகிறார் வோல்ட்டேர்.

மூலநூல் படைப்பாளியின் இத் தனித்துவம், மொழியாக்கத்திலும் சுருதி பிசகாமல் வெளிப்பட்டிருக்கிறது.

"நான் படுக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, கடவுள் பல்கேரியர்களைத் தண்டர் - டென் - ட்ராங்க் கோட்டைக்கு அனுப்பி வைக்கப் பிரியப்பட்டார்'' என்று மெலிதான நையாண்டியுடன் தொடங்கி, உக்கிரமான போர்ச் சூழலை ஒரு அன்றாட நடப்பைப்போலச் சர்வ சாதாரணமாக வருணித்துக் கொண்டு போகிறார் வோல்ட்டேர்.

''அவர்கள் என் தந்தையையும், சகோதரனையும் கொன்றனர். என் தாயைத் துண்டு துண்டாக வெட்டினர். இதைக் கண்டு நான் மயக்கமடைந்ததைப் பார்த்த ஆறடி உயரம் உள்ள ஒரு பல்கேரியன் என்னைப்புணர முற்பட்டான். அதனால் என் மயக்கம் தெளிந்தது. நான் சத்தமிட்டேன், போராடினேன், கடித்தேன், கீறினேன்.அந்த பல்கேரியனின் கண்களைத் தோண்டி எறிய முயன்றேன்.....அந்த முரடன் ஒரு குறு வாளால் என் இடது விலாவில் வெட்டினான்.அந்த வடு இன்னும் இருக்கிறது''
என்றோ ஓர் நாள் திடீரென நிகழும் கொடுஞ்சாவுகளை விடத் தினசரி நிகழ்வாகி விடும் உயிரிழப்புக்கள், மனித மனங்களை மரத்துப்போகச் செய்து விடுவதையும், அதனாலேயே எந்த உணர்வுப் பாதிப்பும் இல்லாமல் நடந்ததை நடந்தபடி எடுத்துரைக்கும் சக்தியை அவை பெற்று விடுவதையும் நாவலின் பல இடங்களில் இது போல நுட்பமாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.

சாவுகளும், பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் மட்டுமன்றி, மனிதம் என்பதே ஒரு விற்பனைச் சரக்காகும் இழிவையும் இந்நாவல் முன் வைக்கிறது. கேண்டீடின் காதலி குனிகொண்டேவுக்கு உதவி செய்யும் கிழவி, தான் விற்பனைப் பொருளாக்கப்பட்ட அவலத்தைச் சிறிது கூட உணர்ச்சி கலவாமால் இவ்வாறு சொல்லிக் கொண்டே போகிறாள்.

".....கொள்ளை நோயின் முதல் அலை அடங்கியதும் ஆளுநரின் அடிமைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். என்னை ஒரு வியாபாரி வாங்கி டூனிஸ் நருக்கு இட்டுச் சென்றான். இவன் என்னை மற்றொரு வியாபாரியிடம் விற்றான். அவன் என்னைத் திரிபோலியில் ஒருவனுக்கு விற்றான். திரிபோலியிலிருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கு விற்கப்பட்டேன். அலெக்சாண்ட்ரியாவிலிருந்து ஸ்மிர்னாவுக்கு. ஸ்மிர்னாவிலிருந்து கான் ஸ்டாண்டி நோபிளுக்கு. ஒரு வழியாகத் துருக்கி சுல்தானின் கீழ் இருந்த ஒரு படையின் "ஆகா'' (தலைவன்) ஒருவனுக்குச் சொத்தானேன்.''

வலுவற்றவர்கள் மீது வலியவர்கள் நிகழ்த்தும் ஆதிக்கத்தையும், சுரண்டல்களையும் நாவலின் பல பகுதிகள் அருமையாக முன் வைக்கின்றன.
''...தன் அண்டை நகரை அழிக்க விரும்பாத நகரும், ஏதோ ஒரு குடும்பத்தை நாசமாக்க விரும்பாத குடும்பமும் இல்லையென்றே சொல்வேன் ''என்று இக் கருத்தை வெளிப்படையாகவும் பிரகடனம் செய்கிறார் வோல்ட்டேர்.

வசதியானவர்கள், அறிவாளிகள், உயர் பதவியிலுள்ளவர்கள், தத்துவ போதகர்கள் என்று சொல்லப்படும் எல்லோரிடமுமே ஏதோ ஒரு நிறைவின்மையே நிறைந்திருப்பதையும், அதுவே போர் அல்லது சண்டை செய்யுமாறு அவர்களைத் தூண்டுவதையும் கேண்டீட் காண்கிறான்

"நாடாளுமன்றம், தேவாலயங்களுடன், படித்தவர்கள், பிறபடித்தவர்களுடன், விலைமாதர்கள், பிறவிலை மாதர்களுடன், பணம் வட்டிக்குக் கொடுப்பவர்கள், பொது மக்களுடன், மனைவிகள், கணவர்களுடன், உறவினர்கள், பிற உறவினர்களுடன் என்று தேவையற்ற சண்டைகள் போடுகிறார்கள்.'' என்கிறார் நாவலில் வரும் ஒரு அறிவு ஜீவி. இசை, இலக்கியம், தத்துவம் என நாட்களை நகர்த்தும் படிப்பாளிகளும்கூடச் சலிப்புடனேயே இருக்கிறார்கள்.

நாவலின் இறுதிக் கட்டத்தில்,மிகச் சிறிய தோட்டத்துக்குச் சொந்தக்காரரான துருக்கியர் ஒருவரைச்சந்திக்கிறான் கேண்டீட்.அவர் எந்த மத நீதிபதியையோ, அமைச்சரையோ அறிந்ததில்லை.நாட்டு நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் யோசித்துத் தலையைக் குழப்பிக் கொள்வதில்லை.அமைதியான வாழ்வு நடத்தும் அவர், தன் எளிய வாழ்க்கையின் சாரத்தை மிகச் சில வார்த்தைகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
''என்னிடம் வெறும் 20 ஏக்கர்தான் உள்ளது......நானும் ,என் பிள்ளைகளும் அவற்றில் விளைக்கிறோம்; எங்களது உழைப்பு எங்களை சோர்வு, பாவம் செய்தல், ஆசை ஆகிய மூன்று பெரும் தீமைகளிலிருந்து காக்கிறது.''
வறட்டுத்தனமான தத்துவங்களை விடவும்,தொடர்ந்த உடலுழைப்பும், சக மனித நேயமுமே முக்கியமானவை என்பதை அவர் வார்த்தைகள், மற்றும் செயல்கள் வழி தரிசிக்கிறான் கேண்டீட்.

கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பிரெஞ்சு நாவலை ஆங்கில வழி தமிழாக்கம் செய்திருக்கும் பத்ரி சேஷாத்ரி மிகவும் பொறுப்புணர்வுடன், மூலத்தின் சாரத்தை உள் வாங்கிக் கொண்டு இம் மொழியாக்கப் பணியைச் செய்திருக்கிறார். அடுத்தடுத்துச் சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டே போகும் மூலப் படைப்பாளியை அடியொற்றித் தமிழிலும் அந்த வேகத்தையும், விறுவிறுப்பையும் கொண்டு வர முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சரளமான - உறுத்தாத தமிழ் நடை, சம்பவங்களின் விரைவுக்கேற்ற சிறு சிறு வாக்கிய அமைப்புக்கள், வியாக்கியானங்களை வாசகர் தீர்ப்புக்கு விட்டுவிட்டு செய்திகளை மட்டும் சொல்லிக் கொண்டுபோகும் மூல நூலின் போக்கிலிருந்து துளியும் பிறழாத துல்லியம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இந்நாவலை வோல்ட்டேர் வழி படித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அவற்றையே உண்டாக்குகின்றன.

"செத்துக் கிடந்த பல பிணங்கள், செத்துக் கொண்டிருக்கும் சில உயிர்கள் மீது ஏறி நடந்து பக்கத்து கிராமத்துக்குச் சென்றான். அது எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. அந்த 'அபேர்' கிராமத்தை பல்கேரியர்கள், போரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எரித்திருந்தனர். ஒருபக்கம் உடல் முழுவதும் காயமடைந்த வயதானவர்கள், தங்கள் முன்னாலேயே படுகொலை செய்யப்பட்ட தங்களது மனைவிகள், குழந்தைகளின் உடல்களைக் கட்டிப் பிடித்தபடி இருந்தனர். மற்றொரு பக்கம், அவர்களது பெண்கள், பல்கேரிய நாயகர்களின் இச்சையைப் பூர்த்தி செய்த பிறகு, வெட்டப்பட்டுக் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருந்தனர். பாதி எரிந்து கொண்டிருந்த சிலர் தங்களைக் கொன்று விடுமறு கெஞ்சிக் கொண்டிருந்தனர். பூமியெங்கும் மூளைகள், கைகள், கால்கள் சிதறிக் கிடந்தன.''
என்று விவரிக்கப்பப்படும் போர்ச் சூழல் வருணனை இன்றைய ஈழப்போரின் அவலத்தைக் கண் முன் நிறுத்துவதோடு வோல்ட்டேரின் தொலைநோக்குப் பார்வைக்கும் தக்க சான்றாகிறது. இதைத் தமிழில் உணர்ச்சிகரமாக வடித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

காலம் கடந்து நிலைத்திருக்கும் 'கேண்டீட்' போன்ற மகத்தான இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து நம் தாய் மொழிக்கு மேலும் வளம் சேர்த்திருக்கும் பத்ரி சேஷாத்ரி அவர்களும், இந்நூலை அழகுற வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தாரும் போற்றுதற்குரியவர்கள்.

கேண்டீட்
ஃபிரெஞ்சு நாவல்
வோல்ட்டேர்
ஆங்கில வழி தமிழாக்கம்: பத்ரி சேஷாத்ரி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 160
விலை ரூ.100/-
Kizhakku, An Imprint of
New Horizon Media Pvt. Ltd.,
No.33/15, Eldams Road
Alwarpet, Chennai-600 018.
Phone: 044-42009601
நன்றி:
வடக்கு வாசல் - மே '09

1 கருத்து :

geethappriyan சொன்னது…

வணக்கம் அம்மா
இந்த புத்தகம் தேடித் படிக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
படிக்க நிறைய பதிவுகள் வைத்திருக்கிறீர்கள்
நிதானமாக படிக்கிறேன்
எல்லாவற்றிற்கும் ஒட்டு போட்டிருக்கிறேன்.
நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....