குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்த பிம்பத்தைத் தமிழ்த் திரை பெரும்பாலும் செயற்கையாகவோ அல்லது மிகைப்படுத்தியோதான் இது வரை காட்டி வந்திருக்கிறது .
வயதுக்கு மீறி வார்த்தையாடுபவர்கள் - அறிவுரை கூறும் அளவுக்கு அதிமேதாவிகள் , தியாகத் திரு உருவங்கள்,குழந்தைகளைக் கடவுளின் அம்சமாக்கி வேப்பிலை அடிக்க வைக்கும் விசித்திரங்கள்(ஆடி வெள்ளி , துர்க்கா போல) என்று தமிழ் சினிமா இதுவரை சிறுவர்களைப் படுத்திவந்த பாட்டை ஒரு பட்டியலே போட்டு விடலாம்.
தன் படங்களில் சிறுவர்களையும் , குழந்தைகளையும் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ள மணிரத்னம் போன்ற 'சினிமா மேதை'களும் கூட , பால பருவத்தையும் , அதன் யதார்த்தமான குறும்புகளையும் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை ஒட்டி அதற்கேற்ற ஜிலுஜிலுப்பான ஜோடனைக் கிளுகிளுப்புக்களுடன் மட்டுமே சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதற்குச் சரியான ஒரு உதாரணம் 'அஞ்சலி' .அவரிடம் உள்ள மற்றொரு அம்சம் , பெரும்பாலும் அவரது சித்தரிப்பு மேட்டுக்குடிச் சிறார்களைச் சார்ந்ததாக அமைந்து விடுவதுதான்.
தங்கர் பச்சானின் 'அழகி', 'பள்ளிக் கூடம்', சேரனின் 'ஆட்டோக்ரா..ப்'ஆகிய படங்கள் பட்டிக்காட்டுச் சிறுவர்களின் பள்ளிக்கூடப்பின்புலத்தை நடப்பியல் தன்மையோடு காட்டியிருப்பவை (பாக்கியராஜ் , பாரதிராஜா போன்றோரும் ஓரளவு அதை முயற்சித்துப் பார்த்திருந்தபோதும் பெரியவர்களின் சில்மிஷங்களைச் சித்தரிக்கும் ஊறுகாய் போலவே அவர்களது படங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்).
சேரன் , தங்கர் பச்சான் ஆகியோரின் முன்குறித்த படங்கள் உண்மைக்குச் சற்று நெருக்கமாகச் சிறுவர் உலகைப் படம் பிடித்துள்ளன என்றபோதும் அந்தச் சிறுவர்கள் ஓரிரண்டு ரீலுக்குப் பிறகு வளர்ந்து பெரியவர்களாகி விடுவதால் , சிறுவர் உளவியலை முழுமையாக முன் வைக்கும் படங்களாக அவற்றையும் குறிப்பிட முடியவில்லை.
தமிழுக்கு மிகவும் புதியதாய் - முழுக்க முழுக்க சிறுவர் உலகத்தை - அதிலும் வறண்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த சிறுவர் உலகை மட்டுமே மையமிட்டதாய்....,அந்த உலகின் இயல்பான சுட்டித்தனங்கள்,கிண்டல்கள், பரிகாசங்கள்,விளையாட்டுக்கள் , போட்டி பொறாமைகள்,வீம்புகள் ,கபடற்ற குழந்தைமை முதலியவற்றைத் திரை ஓவியமாக வடித்துத் தமிழர்களைத் தலை நிமிர வைத்திருக்கும் படம் , அண்மையில் வெளியாகியுள்ள புதிய இயக்குநர் பாண்டியராஜின் படைப்பாகிய (தயாரிப்பு 'சுப்ரமணியபுர'த்தின் இயக்குநர் சசிகுமார் ) 'பசங்க'.
குறிப்பிட்ட அந்தப் பருவத்துக்கே உரித்தான குணாதிசயங்களுடன் படத்தில் 'பசங்க'ள் வெளிப்பட்டிருப்பதே இப் படத்தைக் கவன ஈர்ப்புக்கு உரியதாக்குகிறது. குறும்புகளும் கோபங்களும் அந்தக் குட்டிப்பசங்களிடம் தலையெடுக்கின்றனவேயன்றி அவை வன்மமாகப் பரிணாமம் பெற்று விடுவதில்லை. எதிர்நிலைப்பையனாக வரும் ஜீவாவையும் கூட நம்மால் ரசிக்கவும் நேசிக்கவும் முடிவது இதனால்தான். ஜீவா , அன்புக்கரசு என்ற இரு பாத்திரங்களுமே தத்தமக்குரிய குறை நிறைகளுடனேயே படத்தில் உலா வருகிறார்கள்.
அன்புக்கரசுவும் கூடக் குழந்தைமை மாறாத ஒரு சிறுவனாகத்தான் வருகிறானே தவிர அவன் ஒன்றும் ஒரு இலட்சிய புருஷனில்லை.அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். கனவு காணும் அதே வேளையில் , கற்பனையாக பைக்கை ஓட்டும் தன் வயதுக்கேற்ற கனவும் அவனிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.தன் சித்தப்பா , ஜீவாவின் சகோதரியை மணக்கும் சூழ்நிலையில் அதைக் கோபத்துடன் எதிர்க்கும் சராசரிச் சிறுவனாகத்தான் அவனும் சித்தரிக்கப்படுகிறான்.
ஜீவா,பக்கடா குழுவினரின் அட்டகாசமான குறும்புகளுடன் தொடங்கும் படம் , இறுதி வரை தொய்வின்றி - ஒரே சீராகச் சிறுவர்களை மட்டுமே மையப்படுத்திக்கொண்டு போகிறது.சோடா பாட்டில் கண்ணாடி அணிந்து 'அப்பத்தா' என்று கத்தும் பையன் ,பால் வாடியில் 'தூங்காதீங்க டீச்சர்'என்று மழலைகள் குரல் எழுப்பும் வரை உறக்கத்தில் ஆழ்ந்து போகும் ஆசிரியை,வீட்டு வாசல்களில் தொங்கும் பால் பை கவர்களைப் பிரித்து அந்த இடத்திலேயே வாயில் ஊற்றிக் காலி செய்யும் 'பக்கடா',அன்புவின் குட்டித்தம்பியின் இனிய சேட்டைகள் என்று ரகம் ரகமான சிறுவர் உலகம் ஒன்று , அதன் இயல்பு மாறாத வகையில் படத்தில் விரிகிறது.
குட்டிப் பையன்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் கூட மிக யதார்த்தமான வாழ்வியலில் தோய்ந்தவர்களாகவே வந்து போகிறார்கள். ஜீவாவின் தந்தையும் , ஆசிரியருமான சொக்கலிங்கம் ஓர் இலட்சிய ஆசிரியர் இல்லைதான் ; மகன் அடி வாங்கும்போது பாசத்தால் சற்று உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுபவர்தான் ; ஆனாலும் கூடஅவரிடமும் நல்லாசிரிய இயல்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ரேங்க் வாங்கும் மாணவனுக்குக் கைதட்டி வாழ்த்துவதை.....,நல்ல சிந்தனைகளோடு வகுப்பைத் தொடங்குவதை - இவற்றையெல்லாம் தனியார் பள்ளியிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருக்கும் அன்புக்கரசுவின் வழியாகவே அவர் கற்றுக் கொள்கிறார்; அதில் அவருக்கு எந்த 'ஈகோ'வும் இல்லை. படிப்பில் தன் மகனை விட அன்புக்கரசு முந்திக் கொண்டு போவது அவருக்கு நெருடலாக இல்லை. திறந்த மனத்துடன் அன்புக்கரசைப் பாராட்டும் நல்ல மனமே அவருக்கு வாய்த்திருக்கிறது.
அன்புவின் தந்தையும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் சராசரித் தகப்பனின் பிம்பத்தையே வெளிக்காட்டுகிறார். பாசம் அவர் நெஞ்சுக்குள் உறைந்து கிடப்பது அவரது சின்னச் சின்ன முறுவல்களால்...உடல் மொழிகளால் வெளிப்படுத்தப்படுகிறதேயன்றி அதை ஆர்ப்பாட்டமாக அவர் தம்பட்டம் அடித்துக் கொள்ள்வதில்லை.
தனியார் பள்ளிகளுக்கும் , அரசாங்கப் பள்ளிகளுக்கும் உள்ள இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.....,பெற்றோரின் சண்டையால் படிப்பில் கவனமிழக்கும் மாணவன் போன்ற சமூக விமரிசனங்களும் போகிற போக்கில்படத்தில் இடம் பிடித்திருக்கின்றன.
காதலைக் கிளைக் கதையாக்கி , ஒரு வகையில் அதை நகைச் சுவை 'டிராக்' ஆகவும் கூட ஆக்கி விட்ட படம், இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
இன்றைய உலகமய - நகர்மயச் சூழலில் ,தொலக் காட்சிக் கார்ட்டூன்களிலும் , கணினி விளையாட்டுக்களிலும் மூழ்கிக் கிடக்கும் பெருநகரக் குழந்தைகளுக்கு இப் படத்தில் இடம் பெறும் பல பிள்ளைப்பருவச் சொலவடைகளும் ,சாட் பூட் த்ரீ , ரயில் வண்டி ஓட்டம் ,என்ன கோ?டீ கோ முதலிய விளையாட்டுக்களும் அன்னியமாக ஏன் வினோதமாகக் கூட இருக்கலாம்.அதே வேளையில் தங்கள் பாலிய பருவத்தைச் சிற்றூர் ஒன்றின் சிதிலமான பள்ளிக் கூடம் ஒன்றில் கழித்திருக்கும் அவர்களது பெற்றோர்கள் சிலருக்கோ இது மலரும் நினைவுகளைக் கிளர்த்துவதாகவும் கூட இருக்கலாம்.
குத்துப் பாட்டு ,வன்முறை விகாரங்கள் தவிர்த்து - கோடிக்கணக்கான பட்ஜெட்டுடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போகாமல் திருமயத்தையும் விராச்சிலையையும் சிறுவர்களால் அழகு செய்திருக்கிறது இந்தப்படம். பார்வையாளர்களின் ரசனையின் மீது பழி சுமத்தித் தங்கள் ஆபாசச் சித்தரிப்புக்களை நியாயப் படுத்திக்கொண்டிருக்கும் தமிழ் இயக்குநர்களும்,தயாரிப்பாளர்களும் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பையும் இது பெற்றுள்ள வெற்றிக்கான பின்புலத்தையும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் ' பசங்க 'போன்ற பல நல்ல படங்களை அடிக்கடி காணும் வாய்ப்பு தமிழ்த் திரை ரசிகர்களுக்குக் கிடைக்கக் கூடும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
4 கருத்துகள் :
குழந்தைகள் உலகம் கரிசனத்தோடு அணுக வேண்டியதொரு நுண்களம். அவர்களின் விளையாட்டுகளையும் மகிழ்ச்சிகளையும் கொண்டாட அதே போன்றதொரு மனதைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு பெரிய முயற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அது நம்மிடமே இருக்கிறது, உறைந்த நிலையில். அதை உயிர்ப்பிக்க வேண்டியது மட்டுமே பாக்கி.
நல்ல பதிவு.
நல்ல விமர்சனம்.
வணக்கம் மேடம்.
உங்கள் "பசங்க" திரை விமர்சனம் அப்படத்தை பார்த்து ரசிக்க ஆவலை உண்டாக்கியது. இன்றுதான் முதன் முதலில் தங்களின் பக்கத்திற்கு அறிமுகமானேன் முன்னரே வராமல் போனது பற்றி சிறு வருத்தம் கூட உண்டு. கல்லும்,முள்ளும் ,காட்டுச்செடிகளும் மண்டிக்கிடக்கும் இந்த Blog வனத்தில் தங்களின் பக்கங்கள் காட்டு முல்லையாக மனம் வீசுவது மகிழ்ச்சியளிக்கிறது.
நன்றி தங்களின் பகிர்தலுக்கு.
சும்மா பதிவு நச்சுன்னு இருக்கு.
கருத்துரையிடுக