துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.9.10

மூடித் திறந்த இமையிரண்டும்....

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடைத்தாள் திருத்தப் போன இடத்தில் வாய்த்த வேடிக்கையான அனுபவம் ஒன்று.

தமிழ் இலக்கணத்தில் எப்போதுமே தற்குறிப்பேற்றத்துக்குத் தனியான ஓரிடம் உண்டு..
இயற்கையாக...தன்னிச்சையாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குள்
கவிஞன் புதிதான ஒரு அர்த்தப் பரிமாணத்தை ஏற்றிக் கூறுவதே தற்குறிப்பேற்றம்.(தன் குறிப்பையும் அத்துடன் ஏற்றிக் கூறுதல் )!

கம்பனில் ஒரு காட்சி!
கைகேயி வரம் கேட்டு அதற்கு ஒப்புதலும் அளித்த பிறகு தயரதன் மயங்கி வீழ்ந்து உயிர் துறந்து கிடக்கிறான்.
காலை விடிகிறது.
கதிரவனின் உதயம் நிகழ , எப்போதும்போலக் கோழிகள் கூவுகின்றன.
சூரிய குலத்தின் வழித் தோன்றலாகிய தயரதன் மாண்டதற்காக வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவதைப் போல-ஒப்பாரி வைப்பதைப் போலவே இருந்தது அந்தக்கோழிகளின் கூவல் என்று அங்கே கம்பன் தன் கற்பனையைக் கலக்கும்போது அது அங்கே தற்குறிப்பாகி விடுகிறது.
‘’வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்
  கண்டு நெஞ்சு கலங்கி அம்சிறையான காமர்துணைக்கரம்
  கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றனகோழியே’’

சிலம்பில் கண்ணகி கோவலனின் கரம்பற்றிமுதன்முதலாக மதுரை நகருக்குள் நுழைகிறாள்.
மதிலின் உச்சியில் பறந்து கொண்டிருக்கும் வண்ணமயமான கொடிகள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கின்றன.
மதுரைக்குள் நுழைந்தால் அவளுக்காகப் பேரின்னல் காத்திருக்கிறது என்பதால் அவளை வராதே என்று சொல்லுபவை போல அவை காற்றில் அசைந்தன என்று அதில் தன் குறிப்பை ஏற்றுகிறார் இளங்கோ.
‘’போருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி
   வாரல் என்பன போல மறித்துக் கை காட்ட’’
இது அழகான உவமைதான்;அற்புதமான கற்பனைதான்.
ஆனாலும் காலம் காலமாக வேறு எடுத்துக் காட்டுக்களே சொல்லப்படாமல்  இந்தப் பாடல் வரிகள் மட்டுமே வகுப்பறைகளில் திரும்பத் திரும்ப வறட்டுத்தனமாக எடுத்தாளப்பட்டு வந்ததால்...பொருளும்,இலக்கணக் கோட்பாடும் புரிகிறதோ புரியவில்லையோ தற்குறிப்பேற்றம் என்றாலே இந்த வரிகளை உருப்போட்டு எழுதி விட்டால் போதும் மதிப்பெண்கிடைத்துவிடும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டுப் போயிருந்தார்கள் மாணவர்கள்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேதான் பொது விடைத்தாள் திருத்தும்பணிக்குச்சென்றிருந்தபோது மாறுதலான ஒரு விடைத்தாள் கையில் சிக்கியது.
அந்தத் தாளில் தற்குறிப்பேற்றத்துக்குச் சான்றாகக் கீழ்க் காணும் கண்ணதாசனின் வரிகள் இடம் பெற்றிருந்தன.
‘’மூடித் திறந்த இமை இரண்டும்பார் பார் என்றன
   முந்தானை காற்றிலாடி வா வாஎன்றது’
 இயற்கையாக மூடித் திறக்கும் காதலியின் விழிகள், பார்..பார் என்று தன்னை அழைப்பது போலவும்,
காற்றில் பறக்கும் அவளது சேலை ,தன்னை அன்போடு அழைப்பது போலவும் காதலனுக்குப் படுகிறது என்று கூறும் இந்த வரிகளை மேற்கோளாகத் தந்திருக்கும் மாணவர் மேலே சொன்ன சிலம்பின் உதாரணத்தை மட்டுமே இயந்திரம் போல எழுதிவிட்டுப் போகும் வேறு எவரையும் விட அந்த இலக்கணக் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறாரென்று எனக்குப் பட்டதால் மானசீகமாக அவரது தனித்தன்மையைப் பாராட்டியபடி,முழு மதிப்பெண் வழங்கினேன்.
வழி வழி வந்த செக்குமாட்டுத் தனத்தில் ஊறிய நம் கல்வி அமைப்பு அதை அத்தனை சுலபமாக அங்கீகரித்து விடுமா என்ன?
நான் திருத்தும் விடைத்தாள்களைப் பார்வையிடும்பொறுப்பிலிருந்த முதன்மைத் திருத்துநர் வினாக் குறியை முகத்தில் தேக்கியவாறு என்னை அழைத்தார்.
‘’என்னம்மா இது...சினிமா பாட்டை எழுதியிருக்கான்..முழு மார்க்கைப் போட்டிருக்கீங்களே’’
 அந்தக் கேள்வியின் மிக மோசமான அபத்தத்தைத் தாங்கிக் கொண்டபடி நிதானமாகப் பதில் சொன்னேன்.
‘’அதில் தற்குறிப்பேற்றம் இருக்கிறதா இல்லையா.......பாருங்க சார்’’
‘’அதுக்காக...’’
 அவர் ஏதோ பேச முற்பட்டார்.
அடுத்த அபத்தத்துக்கு ஆயத்தமாக இல்லாத நான்,
‘’இவ்வளவு நாளிலே இப்பதான் ஒரு மாணவர் தற்குறிப்பேற்றம்னா என்னன்னு சரியா விளங்கிக்கிகிட்டிருக்கார்னு நினைக்கிறேன்.எனக்கு அதிகாரம் இருந்தா அவருடைய தனித்தன்மைக்காகவே இன்னும் கூட அதிகமா மார்க் போட்டிருப்பேன்’’
என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால்...அவரது பரிசீலனைக்குப் பிறகு - நான் அந்த மாணவருக்கு வழங்கிய மதிப்பெண்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும் என்பது எளிதாக எதிர்பார்க்கக் கூடியதுதான்!

இது மிக மிகச் சாதாரணமான சராசரியான ஒரு சம்பவம்தான் என்றாலும் இத்தனை ஆண்டுகளின் நகர்வுகளுக்குப் பின்னும் இவ்வாறான நிலைகளில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை..என்பதோடு இன்னும் மோசமான சறுக்கல்களும் கூடச் சம்பவித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
கீழ் மட்டம் தொடங்கி ....உயர் பட்டம் பெறும் கட்டம் வரை, மாணவர்களின் சுயத்தை - தனித்துவமான சிந்தனைகளை அழிக்கும் பலிபீடங்களாகவே பெரும்பாலான கல்விக் கூடங்கள் இன்று வரையிலும்கூட விளங்கிக்கொண்டிருக்கின்றன என்கிற கசப்பான நிஜம் நெஞ்சைச் சுடுகிறது.6 கருத்துகள் :

என்னது நானு யாரா? சொன்னது…

கட்டுரை அழகாக இருக்கிறது. இதுப்போன்ற இறுக்கமான மனநிலை எல்லா இடத்திலும் அதிகமாகவே இருக்கிறது.

அதனால் தான் இங்கில்லாத சுதந்திரம் வெளிநாடுகளில் ஆராய்ச்சிகளில், மற்ற பணிகளில் இருப்பதாக அறிய நேர்கிறது. பலரும் வெளிநாடுகளுக்கு குடியேற இதுவும் மிக முக்கிய காராணமாக இருக்கிறது.

கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி!

டோண்டுராகவன் சொன்னது…

1962-63 கல்வியாண்டில் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியிலே பி.யு.சி.படித்தபோது, நீங்கள் சொன்ன அதே சிலப்பதிகாரத்தில் ’கூடலூர் துயிலெழுப்ப" என்று வரும் பகுதியைக் குறிப்பிட்டுக் கூடலூராகிய மதுரை விழித்து கொண்டது என்று பொருள் கொள்ள வேண்டும் என்று எங்கள் தமிழாசிரியர் அயூப் அவர்கள் எடுத்துக் காட்டி,இதை இடவாகு பெயர் எனக் குறிப்பிட்டார்.
நான் குறுக்கிட்டு அதையே இரு பெயரொட்டு பண்புத்தொகையாகவும் கூறலாம் எனக்கூற சக மாணவர்கள் கேலியாக சிரித்தனர். அயூப் அவர்களோ என்னை விளக்கும்படி கூற, கூடல் என்று மதுரைக்குப் பெயர் உண்டு, ஊர் பொதுப்பெயர். சிறப்புப்பெயராகிய பொதுப்பெயர் (உதாரணம் மாமரம்) என்னும் கணக்கில் இது இரு பெயரொட்டு பண்புத்தொகை என ஏன் சொல்லக்கூடாது என கேட்டதற்கு அவர் மகிழ்ச்சியடைந்து இலக்கணத்தில் ஒருவர் இவ்வாறு பிடிப்புடன் இருப்பது தனக்கு சந்தோஷமளிக்கிறது எனவும் கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Jeyapandian Karuppan சொன்னது…

"எவனெவனோ எழுதியத எழுத்து கூட்டி படிச்சுபுட்டு, நீ படிக்க வேண்டியத விட்டு புட்ட" என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது!!!

அப்பாதுரை சொன்னது…

எனக்குக் கிடைத்த தமிழாசிரியர்களை நன்றியோடு நினைக்க வைத்த பதிவு.

தேவராஜ்விட்டலன் சொன்னது…

அம்மா தங்கள் மூடித்திறந்த இமையிரண்டும் என்ற பத்தியை வாசித்தேன் தற்குறிப்பேற்ற இலக்கணத்தின் பொருளை உணர்ந்து கொண்டேன்.

தங்கள் ஆழ் மனதில் பதிந்திருந்த நினைவுகளை மீள் எழ செய்து ஒரு அர்த்தமுள்ள பொருள் செறிந்த பத்தியை பதிவுசெய்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

இன்றைய கல்வி சூழலின் போலித்தனத்தை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

பூரணத்துவம் பெற்ற ஆசிரியப் பணி உங்களுடையது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....