துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.2.12

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-1

சாகித்திய அகாதமி விருது பெறும் திரு சு.வெங்கடேசன் அவர்களுக்கு தில்லி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில்[15.02.12 மாலை ஆறு மணி] நானும் பங்கேற்றுக் காவல் கோட்டம் குறித்த என் கருத்துக்கள் சிலவற்றைப்பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்; மேலும் தில்லியிலிருந்து பதிவாகித் தமிழகத் தென் மாவட்டங்களை எட்டும்[தூத்துக்குடி,திருச்செந்தூர்,கன்னியாகுமரி] ‘திரை கடல் ஆடி வரும் தமிழ் நாதம்’என்னும் வானொலி ஒலிபரப்பில் 16.02.2 காலை 5 45 அளவில் ‘காவல் கோட்டம்’குறித்த என் சொற்பொழிவு ஒலிபரப்பாகவிருக்கிறது.ஆயினும் இந்தப் பதிவுகளுக்கும் அந்த உரைகளுக்கும் வரிக்கு வரி தொடர்பு எதுவுமில்லை.இவை, வலை வாசகர்களுக்கு மட்டுமேயான தனிப் பகிர்வுகள்.



ஒரு கலைப்படைப்பை,முன் அனுமானங்களுடனும் முன் முடிவுகளுடனும் ஏற்கனவே நம்முள் செலுத்தப்பட்ட சில அபிப்பிராயங்களுடனும் அணுகுவது பெரும்பிழை என்பது நெடுநாட்களாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கோட்பாடு. அதனாலேயே ஒரு நாவலைப் படிக்க வேண்டுமென்று தீர்மானித்தாலும், ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தாலும் அது குறித்த விமரிசனங்கள்,மதிப்புரைகள் ஆகியவை வெளியாவதற்கு முன்பே அதைப் பார்க்கவோ/படிக்கவோ செய்து விட வேண்டுமென்று நினைப்பேன்.

காவல் கோட்டம் நாவலைப் பொறுத்தவரை –இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அதைப் படிக்கும் சூழல் வாய்த்ததால் மூலத்தைப் படிப்பதற்கு முன்பே அது சார்ந்த நேர்/எதிர் சார்பு கொண்ட மதிப்புரைகள்,பாராட்டுக்கள்,புகழுரைகள்,கண்டனங்கள்,காழ்ப்புக்கள் என்று பிற எல்லாமே கண்ணில் பட்டு அவற்றைப் படிக்கவும் செய்து விட்டேன்; ஆனாலும் அவற்றால் மூலநூல் வாசிப்புக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதோடு மேலே குறிப்பிட்டிருக்கும் என்னுடைய நிலைப்பாடு சரியானதுதான் என்று எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ஒரு படைப்புக்குள் முழுவதும் பயணப்படாமல்,அதில் துடிக்கும் ஜீவனை அறிந்து கொள்ள முற்படாமல் அது சார்ந்து எழுதப்படும் விமரிசனங்கள்,எதிர் விமரிசனங்கள்,பின்னூட்டங்கள் என்று அந்த இழையை மட்டுமே தொடர்ந்து கொண்டு செல்லும்போது குறிப்பிட்ட படைப்பிலிருந்து நாம் அந்நியப்பட்டு விடுவதோடு – படைப்பின் அகச் சாரத்தை விடவும் புறவயமான கருத்துக்களின் மீது மட்டுமே நம் ஈடுபாடும்,சுவாரசியமும் மையம் கொண்டு விடுகின்றன.அதிலேயே லயித்துப் போய்ச் சுவை கண்டவர்களாய் வம்பான ஒரு மனநிலைக்கு நாம் சென்று சேரவும் அது வழி வகுத்து விடுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் படைப்பை நாமே படித்து முடித்து விட்டது போன்ற கற்பிதமும் கூட நம்முள் தலைகாட்டத் தொடங்கி விட..,அவ்வாறான போலி பாவனைகளுடனேயே நாம் பேசவும் தொடங்கி விடுகிறோம் என்பதே இதன் வினோதம்..மாறாகக் குறிப்பிட்ட அந்தப் படைப்பைப்  படித்து நமக்கென்று  ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டபிறகு, அது சார்ந்த மதிப்புரைகளை வாசித்தால் அப்போதுதான் அவை எந்த அளவுக்கு நேர்மையாகப் பதிவாகியிருக்கின்றன என்பதைத் தெளிவாக எடை போட  முடியும். இலக்கிய வாசிப்பிலுள்ள சில ஆபத்தான போக்குகளைச் சுட்டிக் காட்டுவதுதான் இதை எழுதியதற்கான காரணமே தவிர இதன்வழி,இன்னுமொரு இலக்கிய அரசியலுக்குக் கால்கோளிடுவது என் நோக்கம் அல்ல.

இனி…காவல் கோட்டம்….[இதை ஒரு மதிப்புரை அல்லது திறனாய்வாக முன் வைக்காமல் இந்த நாவலின் வாசிப்பு சார்ந்த என் உணர்ச்சிகரமான அனுபவங்களை மட்டுமே இங்கு பதிவு செய்திருக்கிறேன்]

காவல்கோட்டத்தைப் பொறுத்தவரை அது என்னை வசீகரித்ததற்கான முதல் காரணம்…அது நான் நேசிக்கும் மதுரையின் வரலாற்றைப் பேசுவது என்பதும் மதுரையை மையம் கொண்டதாக அதன் நிகழ்வுகள் சுற்றிச் சுழல்வதும்தான்… 

என் ஆயுளின் உயிர்த் துடிப்பான முப்பத்தாறு ஆண்டுகள் மதுரையிலேதான் கழிந்திருக்கின்றன.…. என்னோடும்.. என் உணர்வுகளோடும்..என் வளர்ச்சியோடும்,என் ஏற்றத் தாழ்வுகளோடும்  பிணைந்திருந்த மதுரை…,என் சந்தோஷத்திலும்,சஞ்சலத் தருணங்களிலும் என் உடனிருந்த மதுரை…,மொட்டாக இருந்த என் ஆளுமையைச் செதுக்கி இன்றைய நானாக என்னை மாற்றியிருக்கும் மதுரை…என்னைப் பொறுத்தவரை அது ஒரு ஊர் அல்ல..என் உற்ற தோழி அது..!


அந்த நான்மாடக் கூடலின் கண் வழியாகவே காவல்கோட்ட நாவல் வாசிப்பு என்னுள் விரிந்தது.பாண்டியக் கொடி பறந்த மதுரை, ,சங்கம் கண்ட மதுரை ..,கடல் கொண்ட மதுரை - மாலிக் காபூரின் படையெடுப்புக்கு ஆட்படுவதில் தொடங்கி,விஜயயநகர அரசர்களின் வசமாவதில் தொடர்ந்து, நாயக்க அரசர்களால் சீரமைக்கப்படுவதில் வளர்ந்து பிரிட்டிஷாரின் பிடிக்குள் இருப்பது வரை விரிந்து கொண்டு செல்லும் காவல் கோட்டம் மதுரையின் அழியாத சித்திரத்தை என்னுள் நிறுத்தி என் நினைவுகளை மீட்டெடுத்துக் கொள்ள உதவியது.

மதுரை நகரின் வீதி அமைப்புக்கள் மிகச் சீரானவை;ஒழுங்கான ஒரு வரையறைக்குள் அடங்குபவை..
’’மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீறூர்
பூவின் இதழகத்து அனைய தெருவம்’’என்கிறது பரிபாடல்.
மாயவனாகிய திருமாலின் நாபிக் கமலத் தாமரையின் உள் மொட்டுப் போலக் கோயில்,, அதைச் சுற்றி அடுக்கடுக்காய் விரியும் இதழ்கள் போலக் கோயிலைச் சூழ்ந்திருக்கும் தெருக்கள் என்ற அந்த வருணனைக்கேற்ப..மீனாட்சியன்னையின் ஆலயத்தைச் சுற்றி..சித்திரை வீதி,ஆவணிமூல வீதி,மாசி வீதி.வெளி வீதி என நான்கு திசைகளிலும் விரிந்து கிடக்கும் தெருக்கள்…அந்தத் தெருக்களைக் குறுக்கு நெடுக்காக இணைக்கும் சரடுகளாக நான்கு திசைகளிலுமே அமைந்திருக்கும் வடம்போக்கி,பெருமாள் மேஸ்திரி ,மாரட் தெருக்கள்! உலகின் வேறு எந்த அதிசயமான தெருவும் கூட மதுரை வீதிகளில் சஞ்சரிக்கும் சுகத்தை எனக்கு அளித்ததில்லை. பெருவீதிகள் மட்டுமன்றி இங்குள்ள மூலை முடுக்குகள்..சந்து பொந்துகள்..இண்டு இடுக்குகள் ,அருகிலுள்ள சிற்றூர்கள் என எல்லா இடங்களிலுமே கால் தேயத் தேய நான் சுற்றியலைந்திருக்கிறேன் என்பதோடு ஆண்டுக்கு ஓரிரு முறையே மதுரை செல்லும் இப்போதும் கூட நகரத்துத் தெருக்களுக்குள் இலக்கற்றுத் திரிவதற்காகவே ஒரு நாளை ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.அந்த அளவுக்கு அந்த மண்ணோடும்,அந்த இடங்கள் ஒவ்வொன்றோடும் முந்தைய நாட்களில் நான் பெற்ற அனுபவக் கணங்களோடு கூடிய நினைவு முடிச்சுகள் பின்னிப் பிணைந்து கிடப்பதால்,காவல் கோட்டத்தில் விரியும் மதுரை வருணனை,என்னுள் சொல்லால் விவரிக்க இயலாத மன எழுச்சியை உண்டாக்கியது..தெருவாக மட்டுமே இது வரை பார்த்துவந்தவற்றின் மூலமான மனிதர்கள்,பெருமாள் மேஸ்திரியாகவும் மாரட்துரையாகவும் நாவலில் என் முன் பாத்திரங்களாக வந்து நிற்பதைக் கண்டேன்.மங்கம்மா சத்திரமாக,மங்கம்மாளின் அரண்மனையாக,நாக மலையாக,அனுப்பானடியாக,வண்டியூராக மதுரை பற்றிய சித்திரத்தை என்னுள் விரித்துக் கொண்டே சென்றது நாவல்.மதுரையின் வீதிகள் அனைத்திலும்,அதன் நரம்போட்டமாகப் படர்ந்து கிடக்கும் குறுக்குச் சந்துகளிலும் காவல் கோட்டத்துக் கள்வர்களோடும்,காவலர்களோடும் நானும் சுற்றித் திரிவதான பிரமையை என்னுள் கிளர்த்தியது நாவல்..


நாவலில் என்னை ஈர்த்த மற்றுமோர் அம்சம்..இதில் இடம் பெறும் பெண்களின் வீரியம் மிக்க ஆளுமை. பொதுவாகப் பெண் பாத்திரங்களைக் காதலிகளாகவோ, மதிக்கத் தகுந்த வீர மங்கையராகவோ -இந்த இரு  நிலைகளில்மட்டுமே பெரும்பாலான வரலாற்றுப் புதினங்கள் இது வரை பதிவு செய்து வந்திருக்கின்றன(சிவகாமியின் சபதம் ஒரு விதி விலக்கு);ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் இந்தப் பொதுப் போக்கிலிருந்து பெரிதும் மாறுபட்டவையாகப் பல நிலைகளில்..பல தரங்களில் உள்ளபெண்களின் ஆளுமைத் திறனை,அவர்களின் துணிவை,நிர்வாகத் திறனை,அவர்களிடமிருந்து பெருகும் கருணை ஊற்றை,அவர்களது நாட்டு பற்றை,இலக்கியப் படைப்பாக்கத் திறனைப் பதிவு செய்திருக்கின்றன என்பது இந்த நாவலைப் பெண் நோக்கில் முக்கியத்துவம் கொண்ட ஒரு படைப்பாகக் காட்டுகிறது.



''நாவலே சடச்சி, கங்காதேவி என்ற இரண்டு பெண்களுடைய வழித்தோன்றகளைப் பற்றித்தான்''என்று நாவலாசிரியர் சு.வெங்கடேசன் குறிப்பிடுவது போல இந்த நாவல் முதன்மைப்படுத்தும் பிறமலைக் கள்ளர்[சடச்சி] கொல்லவாருகள்[கங்காதேவி]ஆகிய இரு இனக் குழுக்களுமே குறிப்பிட்ட அந்தப் பெண்களின் வழி வந்தவர்களாகவே உள்ளனர்.


மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரைக் காவலில் இருக்கும் கருப்பணனைக் ’’காப்பாத்து..இல்லேன்னா சாகு’’என்னும் அவன் மனைவி சடச்சியின் வார்த்தைகளே உலுக்கியெழுப்புகின்றன.தொடர்ந்து விஜயநகரப் பேரரசு சுல்தான் மீது தொடுக்கும் போரின் தொடக்கமாகத் தன் கழுத்தைத் தானே சீவியபடி,போரின் களபலியாகத் தன்னை ஆக்கிக் கொள்ள முன் வருகிறாள் கனகநூகா. குமாரகம்பணனின் மாபெரும் சக்தியாக இருந்து மதுரைப் படையெடுப்புக்கு அவனை இயக்கி’மதுரா விஜயம்’ என்னும் படைப்பையும் எழுதுகிறாள் கங்காதேவி..அடுத்து அமையும் நாயக்க அரசில் .
சதியாக மறுத்து ஆட்சிப் பொறுப்பேற்று மகனை இழந்த பின்னும் நற்பணிகள் பலவற்றை விடாமல் தொடர்ந்து பின்னாளில் தன் பேரனாலேயே சிறை வைக்கப்படுகிறாள் ராணிமங்கம்மா.அவளது தனித்த ஆளுமை துலங்கும் இரு கட்டங்கள் நாவலில் இவ்வாறு விரிகின்றன.சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ஒருவனின் வீரத்தை மெச்சி அவனிடம் சாளுவக் கட்டாரியை வழங்கி மதுரை அரண்மனையின் காவல் பொறுப்பேற்க அவனுக்கு அழைப்பு விடுக்கிறாள் மங்கம்மா.அவனோ அன்றைய சாதி அமைப்புக்கு அஞ்சி ஒடுங்குகிறான்.
‘’ஒரு சக்கிலியனை அரண்மனைக் காவல் தலைவனாக யாரும் ஏற்க மாட்டார்கள்;எங்கள் விதிபோர்க்களத்தில் இரத்தம் சிந்துவது மட்டும்தான்’’என்கிறான் அவன். 
’’இது என் அரண்மனை,என் நாடு..இங்கு விதியை நான் மாற்றுவேன்’’ என்று அதற்கு மங்கம்மா கூறும் துணிச்சலான விடையை இன்றைய தலைவர்கள் சொல்வதும் கூடக் கடினம்தான்..போர்முகத்தில் காட்டும் வீரத்தோடு சமூகநீதி காக்கும் வீராங்கனையாகவும் உருவாகியிருக்கிறது ராணி மங்கம்மாவின் பாத்திரம்.

பேரனால் சிறை வைக்கப்பட்டுச் சிறையில் இருந்தபடியே மடிய நேர்ந்தாலும் அவளின் உரமும் திட்பமும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன.தான் இறக்கும் தருவாயிலும் கூடத் தான் செய்த நல்லவற்றையே நினைத்துப் பார்த்தபடி உயிர் துறக்கிறது பொதுநலமே வாழ்வாய்க் கொண்டு இயங்கிய அந்த நெஞ்சம்.
‘’ஒருமுடிவுக்கு வந்தவளாய்க் கட்டிலில் ஏறிப் படுத்தாள்;..பசியையும் தாகத்தையும் வலிந்து மறந்து இனிய நினைவுகளுக்குள் போக முயன்றாள்.பேரனும் அரண்மனை மனிதர்களும் நினைவிலிருந்து கழன்றனர்;அன்ன சத்திரங்கள் வந்து மறைந்தன;நிறை குளங்கள் தோன்றி நீரலைகள் போலக் கலைந்து போயின;பொதிகை மலையையும்,கீழக்கடலையும்,தென்கடலையும்,காவிரியையும்,நீலமலையையும் தொட விரியும் நிழல் படிந்த கல்சாலைகள் தோன்றித் தோன்றி மறைந்தன’’என அவள் வாழ்வின் கடைசித் தருணம் நாவலில் அகச் சித்திரமாய் விரிகிறது.

மேற்குறித்த பெண்களோடு...விளிம்பு நிலைப் பெண்களும் கூட ஆளுமையில் கொஞ்சமும் சளைக்காதவர்களாகவே வெளிப்படுகின்றனர்.
தாது வருடப் பஞ்சம் வந்தபோது தன் செல்வம் முழுவதையும் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றி நாதியற்றவர்களின் தெய்வமாகவே மாறிப் போகும் தாசி குஞ்சரம்மா, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக் குதறும் கிழவி,மன்னனின் அந்தப்புரத்துக்கு நிரந்தரமாய்க் குடியேற வேண்டுமானால் வைகைக் கால்வாய் ஒன்றைத் தங்கள் ஊருக்குத் திருப்பி விட வேண்டுமென நிபந்தனை போடும் ராஜம்மா-[கூத்தியார் குண்டு]- என்று விஜயநகரப்பெண்களாக... நாயக்கர் பெண்களாக..,கள்ளர் பெண்களாக.... நாவலெங்கும் பெண்களின் பன்முகங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.


அடுத்த தொடர்ப்பதிவில்,மேலும்....

5 கருத்துகள் :

மதுரை சரவணன் சொன்னது…

மதுரை பற்றிய வரலாறு என்பதால் தீவிரமான அலசல்.. மதுரை பற்றிய முழுதகவல் கொடுக்கப்பட்டுள்ளது என நம்புகிறேன்….

சித்திரவீதிக்காரன் சொன்னது…

மதுரை வீதிகளில் அலைந்து, அலைந்து பித்தேறி சித்திரவீதிக்காரன் என்ற பெயரோடு எழுதிவருகிறேன். மதுரை குறித்து இந்த நாவலில் வாசிக்க வாசிக்க மனது அந்தப்பகுதிகளுக்கே சென்றுவிடுகிறது. சடச்சி தங்கியிருக்கும் அமணமலை குகைக்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அமணமலை அடிவாரத்திலுள்ள கருப்புகோயில், ஆலமரம், தாமரைக்குளம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். இராமாயணச்சாவடி, மதுரைவீதிகள், புதுமண்டபம் எல்லாவற்றிலும் அலையும் ஞாபகங்களை கிளறிவிடுகிறது. மதுரைக்காரர்கள் காவல்கோட்டம் குறித்து எழுதும் போது தான் அதைக்குறித்து மற்றவர்கள் இன்னும் அதிகமாக அறிய முடியும். தங்கள் பதிவு அற்புதம். தொடர்ந்து வாசிக்க ஆவலாயிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

Unknown சொன்னது…

மதுரையை பற்றிய நாவல் , மதுரையில் நானும் அலைந்து திரிந்துள்ளேன், அந்த வீதிகள், மண்டபங்கள் இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது. வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

ரிஷிகேசிலிருந்து தேவராஜ் விட்டலன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பதிவு ! தொடருங்கள் ! நன்றி !

Nirmal சொன்னது…

காவல் கோட்டம் பற்றி ஒரு சாதரன வாசகனின் பதிவு. http://nirmalcb.blogspot.com/2012/03/6.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....