துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.3.12

’தில்லிகை’யில் மதுரை

ராம் மோகன் ,                 நான் ,                                                     விஜய்ராஜ்மோகன்
மல்லிகைக்குப் பெயர் பெற்ற மதுரையைக் கருப்பொருளாகக் கொண்டே தில்லியில் தொடங்கிய தில்லிகை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டமும் நிகழ்ந்ததும் அதில் நானும் உரையாற்ற வாய்த்ததும் ஓர் இனிய பொருத்தம்.


இலக்கிய நண்பர்கள் சிலரது முயற்சியால் தொடங்கியிருக்கும் இந்த இலக்கிய வட்டத்தின் முதல் அமர்வில் கூட்டம் குறைவு என்றாலும் வந்திருந்த பலரும் நுனிப்புல் மேய விரும்பாமல் இலக்கியத்தைச் சற்றுத் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதை ஆழமாக அறியும் ஆவல் கொண்டிருப்பவர்கள் என்பதையும் அதற்காக முயற்சிப்பவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. தில்லியின் [இளம்]தமிழ்வலைப்பதிவு நண்பர்களோடு கலங்கியநதி நாவலாசிரியர் பி ஏ கிருஷ்ணனும் தன் மனைவியோடு வருகை புரிந்திருந்தார்.

முதலில் உரையாற்றிய திரு ராம்மோகன், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மதுரை தொன்மை பெற்றிருப்பதைப் பல எடுத்துக்காட்டுகள் வழி விரிவாக எடுத்துரைத்துக் கடல் கொண்ட- சங்கம் வளர்த்த மதுரை பற்றிய மேற்கோள்களை மதுரைக்காஞ்சி,முத்தொள்ளாயிரம் முதலிய பல நூல்களிலிருந்து முன் வைத்தார்.நக்கீரரின் இறையனார் களவியல் உரையின் தோற்றுவாய் பற்றியும் குறிப்பிட்டார். மதுரைக்குள் ஒரு பயணம் -conducted tour- எனக் கூறி மதுரை மதில், நகரமைப்பு ,தெருக்களின் சிறப்பு ஆகிய பலவற்றை விரித்துரைத்தார்.சங்கம் மருவிய காலத்து நூலென்பதாலோ என்னவோ சிலம்பிலிருந்தும் பல எடுத்துக்காட்டுக்கள் அவர் உரையில் இடம்பெற்று விட்டன

என் உரை சிலம்பு என்பதால்..என் அருகிலிருந்த பி ஏ கிருஷ்ணன் என்னை விடவும் சற்றுப் பதட்டமாகி ’’நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’’என்றார். எனக்கும் சற்று ஆடித்தான் போயிருந்தது. காரணம் சிலம்பில் நான் குறித்து வைத்திருந்த மதுரை சார்ந்த பெரும்பான்மை வருணனைகளையும் அவர் பேசி முடித்திருந்தார்..ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் ‘’நான் மதுரையின் ஆன்மாவைத் தொட முயல்கிறேன்..’’என்றபடி மேடைக்குச் சென்றேன்....

[என் உரையின் ஒரு சில பகுதிகளை நண்பர் தேவராஜ்விட்டலனின் பதிவிலும் காணலாம்.உரையை ஒலிப்பதிவு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கும் அவர் அதைத் தகுந்த முறையில் ஆயத்தம் செய்து அனுப்பியதும் அதை வலையேற்ற முயல்கிறேன்.]

என் உரையின் சாரம் மட்டும் சுருக்கமாக இப்போது ...

சிலம்பின் இரண்டாவது காண்டமான மதுரைக் காண்டம் தொடங்குவது ‘காடுகாண் காதை’யுடன்..சோழ நாட்டோடு ஒப்பிடுகையில் தரிசான காடுகள் நிறைந்த மண் பாண்டிய நாடு.அதற்குச் செல்லும் வழியை வைத்துத்தான் பாலைநிலத்துக்கே சூத்திரம் சொல்கிறார் இளங்கோ.ஐவகை நிலப்பாகுபாடுகள் பற்றி சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் பேசினாலும் பாலை என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. ‘நடுவணது’என்றே அது குறிப்பிடப்படுகிறது.முல்லை குறிஞ்சி,மருதம் நெய்தல் ஆகியவற்றுக்கு நடுவிலுள்ளது பாலை.அதை மேலும் தெளிவுபடுத்துவது சிலம்பே.
‘’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பிழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம்’’கொள்கின்றன.முல்லையாகிய காடு, தன் வளம் குன்றினால் அது பாலை...குறிஞ்சியான மலை, தன் வளத்தை இழந்து வெற்று மலையாக இருந்தால் அது பாலை.அவ்வாறான தரிசு நிலக் காடுகளையும் வறண்டு போய் வெறுமையாய்க் கிடக்கும் மலைகளையும் கடந்து மதுரைக்குள் நுழைகிறார்கள் கோவலனும் கண்ணகியும்.அவர்களின் வாழ்வும் பாலையாகப்போகிறது என்பதன் முன்னறிகுறியே மதுரைக் காண்டத்தின் முதல் காதையாகும் காடுகாண்காதை.

முதலில் மணங்களையும் பலவகை உணவுப்பொருள்களின் வாசனையையும் சுமந்து வரும் மதுரைத் தென்றல்,அவர்களின் நுகர்வுப்புலனை -நாசியை வந்தடைகிறது.
''காழகில் சாந்தம் கமழ்பூங் குங்குமம் 
  நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
 மான்மதச் சாந்தம் மணம் கமழ் தெய்வத் 
தேமென் கொழுஞ்சேறாடி ஆங்குத்
தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனை வளர் முல்லைப் 
போது விரியல் தொடையற் பூ அணை பொருந்தி
அட்டில் புகையும் அகலங்காடி
முட்டாக் கூவியர் மோதகப்புகையும்’
எனப் பல மணங்களை அளைந்து கொண்டு 
மதுரைத் தென்றல் வந்தது காணீர்..’’என்கிறது சிலம்பு.

அடுத்து,
‘’காலை முரசின் கனைகுரல் ஓதையும்
  நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
  .....வாளோர் எடுத்த நாளணி முழக்கமும்
போரில் கொண்ட பொருகரி முழக்கமும்’’
எனக் கார்கடல் ஒலியென மதுரையின் பலவகை ஒலிகள் அவர்களின் காதுகளை வந்தடைகின்றன.

இறுதியில் வைகை ஆறு அவர்களின் கட்புலனை எட்டுகிறது.
மதுரையை அவர்கள் நெருங்கும் தூரம் குறைந்து கொண்டே வருவதை மணம்...ஒலி..காட்சி என்ற படிநிலை வரிசையில் நுட்பமாக அமைத்துத் தந்திருக்கிறார் இளங்கோ.

மதுரையின் உயிரற்ற பொருட்களான நீரும்,மலரும்,மதில்கொடிகளும் கூடக் கண்ணகிக்கு வரவிருக்கும் துன்பத்தை நினைத்துக் கலங்கிக் கண்ணீரை மறத்துக் கொள்கின்றன.வைகை ஆறு தன்னைப் பூக்களால் மறைத்துக் கொண்டு தன் கண்ணீர் வெளியே தெரியாமல் கரந்தடக்கிக் கொள்கிறது.
’’தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் 
புனல் ஆறு அன்று இது பூம்புனல் ஆறு இது..’’எனத் தோன்றும் வண்ணம் தன் துயர் மறைத்து ஓடுகிறது வைகை.

குவளையும்,ஆம்பலும்,கமலமும் முதலிய பூக்கள்
’கள்’ [தேன்]என்னும் நீரைச் சுமந்து அதன் சுமை தாங்க மாட்டாமல் காற்றில் நடுங்குவது...‘’தையலும் கணவனும் தனித்துறு துயரம் ஐயம் இன்றி’’அறிந்து வைத்துக் கொண்டு அவை நடுங்குவது போலிருக்கிறது.

மதுரை மதிலின் கொடிகள் காற்றில் அசைந்து இங்கு வராதே திரும்பிப்போ என்பது போல மறித்துக் கை காட்டுகின்றன.
’’போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
   வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட..’
இவை அனைத்தும் தற்குறிப்பேற்றமாக [இயல்பாக நடக்கும் நிகழ்வின் மீது கவிஞன் தன் கற்பனையை ஏற்றி வைப்பதாக] இருந்தாலும் இவற்றின் வழி இன்னொரு உயிரின் துன்பத்துக்காகப் பரிந்து துயருறும் மதுரையின் ஆன்மாவையே அங்கே சித்திரமாக்குகிறார் இளங்கோ.

 உயிரற்ற பொருட்களுக்கே இத்தகைய உணர்வென்றால் உயிருள்ள மாந்தர்கள் அதையும் விஞ்சுகிறார்கள்.கவுந்தி அடிகளால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கோவலன் அபாண்டமான பழியால் உயிர் நீத்தமை கண்டு..கண்ணகியின் துயர் கண்டு வருந்தும் மாதரி என்னும் இடைக்குலப்பெண் தன் மகள் ஐயையின் நிலையைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் அடைக்கலப்பொருளைத் தவற விட்ட குற்றத்துக்காகத் தீயில் மூழ்கித் தன்னையே ஆகுதியாகுகிறாள். தான் செய்தது குற்றம் என உணர்ந்த மதுரை மன்னனும்
‘’பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்’’
என்று கூறியபடி உயிர்த்தியாகம் செய்கிறான்.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற காப்பியச் செய்தியை அவன் வழி நிறுவுகிறார் இளங்கோ.

கண்ணகி மூட்டிய நெருப்பில் முதலில் வருணித்த மதுரையின் அழகுக் கோலம் புகை மண்டிப் பொசுங்கிப் போகிறது.
’’அந்தி விழாவும் ஆரண ஓதையும்
 செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் 
மனை விளக்குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்கு குரல் முரசமும் மடிந்த ‘’மாநகராகிறது மதுரை.முதலில் காட்டிய விரிவான எழிலான மதுரைக்கு நேர் முரணான எதிர் வடிவம்..புகையுண்ட..எரியுண்ட மதுரையின் அவலத் தோற்றம்.

அப்போதும் கூட அவளது அவலம் கண்டே மதுரைப் பெண்கள் இரங்கி நிற்கிறார்கள்.அவளது சாபம் விளைந்து விடக்கூடாதே எனக் கைதொழுது வாழ்த்துகிறார்கள்.தங்கள் மன்னனது செங்கோல் வழுவி விட்டதே என மாய்ந்து போகிறார்கள்.
’’மல்லல் மதுரையாரெல்லாரும் தாம் மயங்கிக்
களையாத துன்பம் இக்காரிகைக்குக் கை காட்டி
வளையாத செங்கோல் வளைந்ததிது என் கொல்’’
என வியக்கிறார்கள்.
’’வரு விருந்து ஓம்பி மனையறம்’’காக்கும் முது பெண்டிர்...’’சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்றே..’’என்று முடிவு செய்து அவள் தீர்ப்புக்குத் தலை வணங்கி அவளைத் தொழுது ஏத்துகிறார்கள்.


’’பெண்டிரும் உண்டு கொல்,சான்றோரும் உண்டுகொல்,தெய்வமும் உண்டுகொல் ?’’என அடுக்கடுக்காய்க் கண்ணகி தொடுக்கும் வினாக்களுக்குப் பதில் தர மதுராபுரித் தெய்வத்தையே அனுப்பி வைக்கிறார் இளங்கோ.அவளுக்கு முன்னால் வரக் கூட அஞ்சும் அது அவளை ஓசையின்றி மெதுவாய்ப் பின்தொடர்ந்து வந்து உண்மையை விளக்குகிறது.
தங்கள் நாட்டு மன்னன் குடி பழி தூற்றும் கொடுங்கோலன் அல்ல,அவன் மறை நாவின் ஓசை கேட்டதன்றி ஆராய்ச்சி மணியின் ஓசையைக் கூடக் கேட்டதில்லை என்பதை விளக்கி...’’ஆடித் திங்கள் அழல் சேர் குட்டத்தில்’’ மதுரை அழியும் என்பது முன் கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு விதி...அந்த விதிக்குக் கண்ணகி கருவியானது முன்பிறப்பில் அவளுக்கும் அவள் கணவன் கோவலனுக்கும்   நேரிட்ட நீலியின் சாபத்தின் விளைவு என்பதை அவளுக்குப் புரிய வைக்கிறது. வாழ்தல் வேண்டி மதுரையை நாடி வந்த ஒரு பெண்
’’கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல்திசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்’’
என அவலத்தோடு அந்நகரம் விட்டு நீங்குகையில் அதற்குப் பொறுப்பான பதில் கூறும் கடமைக்காகவே மதுராபுரித் தெய்வத்தை ஒரு பாத்திரமாக்குகிறார் இளங்கோ.

இவையே மதுரையின் ஆன்மத் துடிப்புகள்.

இனி..நகரின் புறத் தோற்றங்கள்...
சங்கத்தின் பரிபாடல் ’’மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீறூர்’’ என மதுரையை வருணிப்பது போல அடுக்கடுக்காக அமைந்திருக்கும் மதுரைத் தெருக்களையும் அவை கூடும்
இடங்களையும் மறுகு,வீதி,தெரு,சதுக்கம் என சிலம்பும் சொல்லிக் கொண்டே போகிறது.
’’பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
  அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
  மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து..’’

[காமராசர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது நகர் அமைப்பைத்தெரிந்து கொள்வதற்காக வெளிநாடு செல்ல விரும்பிய தன் அமைச்சரக சகாக்களை அழைத்து ‘முதலில் போய் மதுரையின் நகரமைப்பைப் பார்த்து விட்டு வாருங்கள்’எனக் கூறிய நிகழ்வை இங்கு நான் நினைவுகூர்ந்தேன்]

மதுரைக்குள் வந்து சேர்ந்ததும் கவுந்தியடிகளின் பொறுப்பில் கண்ணகியை விட்டு விட்டு நகர் உலாப் போகிறான் கோவலன்.காமக் கிழத்தியரும் நாடகக் கணிகையரும் வாழும் வீதியே அவன் முதலில் எதிர்ப்படுவது. தன் வாழ்வின் இறந்தகாலத் தவறை மன உரத்தோடு தவிர்த்து விட்டு அவற்றை அவன் கடந்து போகிறான்.அதற்காகவும் , அக்காலச் சமூகத்தில் அவற்றுக்கு இருந்த முதன்மையைக் காட்டுவதற்காகவுமே அவற்றை முதலில் சுட்டுகிறது காப்பியம். பிறகு அங்காடி வீதிகள், இரத்தின வீதிகள், தங்கவிற்பனை நடக்கும் தெருக்கள், துணிக் கடைத் தெருக்கள்,கூல வாணிக[தானிய விற்பனை]வீதிகள் எனப் பலவற்றைக் கடக்கிறான் அவன்.

நகைக் கடைகளை மட்டுமே பெரிதும் கொண்டிருக்கும் தெற்காவணி மூலவீதி,தானியக் கடைகளை மட்டுமே பெரிதும் கொண்டிருக்கும் கீழ ஆவணிமூலவீதி எனஇன்றைய மதுரையும் கூடப் பெரிதும் மாற்றமின்றி இப்படித்தான் இருக்கிறது. மதுரையை எட்டிக் கொண்டிருந்தபோது கோவலன் கண்ணகியை எட்டிய பலகாரங்களின் மணங்கள் [முட்டாக் கூவியர் மோதகப் புகை] அப்பமாக,புட்டாக,பணியாரமாக,பஜ்ஜி வடையாக,இடியாப்பமாக,பரோட்டாவாக - இன்றும் கூட உறங்கா நகரமான மதுரைக்குள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே வரையிலும் கூடச் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன.வழி தெரியாது தடுமாறும் வெளியூர்க்காரர்களைக் கனிவோடும் கரிசனத்தோடும் வழிநடத்தி உபசரிக்கும் மாதரியின் மாண்பும் மதுரைக்குள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.சிலம்பின்மதுரையில் ‘பொய்யாக் குலக்கொடியாக ’’க் காட்சிதந்த வைகை மட்டுமே இன்று நீர் வற்றிப் பொய்த்துக் கிடக்கிறது..[மேலும் ஒலிப்பதிவில்..].

என் உரையைத் தொடர்ந்து மகாவம்சம் என்னும் நூலிலிருந்து பலருக்கும் எட்டியிராத பல புதுத் தகவல்களை முன் வைத்த திரு விஜய்ராஜ்மோகனின் சொற்பொழிவு, மதுரையை வெவ்வேறு புதிய கண்ணோட்டங்களில் காணவும் பல புதிய செய்திகளை அறிந்து கொள்ளவும் வழியமைத்துத் தந்தது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது போன்றதொரு இலக்கியக் கூடுகை அமையும் என்னும் அறிவிப்போடு தில்லிகையின் முதல் கூட்டம் நிறைவு பெற்றது. பிரபலங்களை அழைக்காமல்..பொருட்செலவு செய்யாமல்..நீர்த்துப் போகாத இலக்கிய உரைகளைமட்டுமே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்னும் ஆர்வத்தோடு இம் முயற்சியில் முனைந்திருக்கும் இலக்கிய நண்பர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.

6 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

தங்களின் உரை நன்றாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

தங்களின் உரை நன்றாக உள்ளது.

அப்பாதுரை சொன்னது…

தில்லிகை - நயமான பெயர்.
உரையாடலை நேரில் பார்க்காமல்/கேட்காமல் போனேனே என்று பல இடங்களில் தோன்றியது. அருமை.
மதுரையின் ஆன்மா என்று எதைச் சொல்கிறீர்கள்? நகர அமைப்பா, மக்களின் கரிசனமா? காமராஜ் மேற்கோள் மிகவும் சுவையானது. மதுரையை மறுபடியும் பார்க்கும் பொழுது நினைவில் வைக்கிறேன்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

சிலப்பதிகாரத்தில் மதுரை குறித்த தங்கள் உரை அருமை. கொற்றவையில் ஜெயமோகன் இப்பகுதியை மிகவும் அருமையாக எழுதியிருப்பார். தில்லிகையில் முதல் கருத்தரங்கு 'உலகின் தொல்நகரமான மதுரை' குறித்து நடந்தது பெருமகிழ்வு தருகிறது. பகிர்விற்கு நன்றி.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி நண்பர்களே...மதுரை என் மூச்சுக் காற்றில் கலந்திருப்பது.அதை மிக இயல்பாக முன் வைப்பது சாத்தியமானது அதனாலேதான்.
அப்பாதுரை,ஒரு நகரின் ஆன்மா என்பது அதன் புற அமைப்பிலே தொடங்கி உயிரற்றபொருட்கள்,சாமானியமனிதர்கள் என நீண்டு அரசியல்,தெய்வம் என்ற எல்லை வரை விரிவது என்பதையே சொல்ல முயன்றிருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//மதுரை என் மூச்சுக் காற்றில் கலந்திருப்பது.அதை மிக இயல்பாக முன் வைப்பது சாத்தியமானது அதனாலேதான்//

எப்படியெல்லாம் எழுதுறீங்க.அழகான பதில்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....