துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.12.12

வாய்ச்சொல் அருளாதீர்!

அண்மையில் தில்லியில் நடந்த குரூரமான பாலியல்தாக்குதலும் அது தொடர்பாக நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களும் அனைவரும் அறிந்ததுதான்...அவை எழுப்பி வரும் ஆத்திர அலைகளே அடங்காமலிருக்கையில், ஒரு சில பெரிய மனிதர்கள் திருவாய்மலர்ந்து அருளும் உபதேசங்களும் ஆலோசனைகளும் பெண்களை மட்டுமல்ல....கொஞ்சநஞ்சம் மனச்சாட்சி மீதமுள்ள எவரையுமே கோபப்படுத்துபவை;காயப்படுத்துபவை...

நள்ளிரவில் நம் நாடு சுதந்திரம் பெற்றதென்பதற்காக நள்ளிரவில் பெண்கள் நடமாடலாமா என்று கேட்டிருக்கிறார் ஓர் ஆந்திர அமைச்சர்...

அனைத்து ஆடை ஆபரணங்களுடன் கூடிய-சர்வாலங்கார பூஷிதையான- அழகான இளம்பெண் ஒருத்தி நள்ளிரவில் தனியே நடந்து போகும் நாளே நாம் சுதந்திரம் பெற்ற நாளென்று சொன்ன மகாத்மாவின் வாக்கு...பாவம் அவருக்கு   மறந்து போயிருக்கலாம்....
அல்லது ....மகாத்மாவே யாரென்று கூட அவர் அறியாமலும் இருக்கலாம்..
அறியாமைதானே இன்றைய அரசியலின் அணிகலன்?

முன்பு ஒரு முறை  பெண்கள் வேலைக்குப் போவது தவறென்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிய உதாரணம் கூட நம்மிடம் இருக்கிறது....

நம் வீட்டுப் பெண்களை சொகுசுக்கார்களிலேயே அனுப்பிப் பத்திரப்படுத்திவிட்டோம்...
அயல்நாடுகளுக்கெல்லாம் அனுப்பிப் படிக்கவும் வைத்து விட்டோம்....

நகரப்பேருந்துகளில் போகும் சாமானியர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?

அது கூட எப்படியும் போய்த் தொலையட்டும்..
அவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகும்போது ஆதங்கமோ அனுதாபமோ கொள்ள வேண்டாம்...
எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டாம்..

கருத்துச் சொல்வதாக இப்படிக் கண்டதையும் உளறாமலாவது இருக்கலாமல்லவா?
நல்லதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,பாதகமான கெட்டதைச் செய்யாமலிருந்தாலே போதும் !
’’நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’’
என்று பழந்தமிழ் இலக்கியம் சொல்கிறது.
காந்தி சொன்னதையே தெரிந்து வைத்துக் கொள்ளாதவர்களுக்கு இது எங்கே தெரியப்போகிறது?

தவறு செய்பவர்களைச் சிறையில் அடைத்துப் பூட்டுப்போடுவதோடு இப்படிப்பட்ட ’பெருமக்களின்’வாய்க்குப்  பூட்டுப்போடுவதும்   இப்போது   தேவைதான்! காரணம் சமூகத்தின் பொதுப்புத்தியில் விஷவிதைகளை உடனடியாகத் தூவும் திருப்பணியைச் செய்பவை இப்படிப்பட்ட கருத்துப்பரப்பல்கள்தான்...நல்லவற்றை விடவும் வெகுவேகமாகச் சென்று தைக்கும் நச்சு அம்புகள் இவையே !

நல்ல சமூகப்பணிகளுக்குப் பணம் படைத்தவர்கள்  பொற்குவையாகவும்,காசுகளாகவும் தாருங்கள்...மற்றவர்கள் நன்மொழிகளைத் தாருங்கள் என்ற பொருளில் 
‘வாய்ச்சொல் அருளீர்’
என்றான் பாரதி.
மேலே குறிப்பிட்டிருக்கும் நாகரிகக் கோமாளிகளை நாம் கரம் கூப்பிக் கேட்பதெல்லாம் அவர்கள் தங்கள் வாயிலிருந்து எந்தச்சொல்லும் அருளி விடாமல் இருக்க வேண்டும் என்பது மாத்திரமே...!

பி.கு;
நாளும் செய்தித் தாளில் குளிர்தில்லியின் கொதிப்புக் கண்டு கசியும் நெஞ்சங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கண்டன மனுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்..
முடிந்தால் உங்கள் இணைய தளங்கள்,முகநூல்களில் இணைப்பையும் கீழுள்ள படத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக மாற்றத்துக்கு நம் எழுதுகோல்களும் சிறு நெம்புகோல்களாகட்டும்....











4 கருத்துகள் :

குலசேகரன் சொன்னது…

காந்தி சொன்னது, உண்மையான சுதந்திரம் என்பது இரவில் ஒரு பெண் அணிகலன்களோடு தன் வீடு திரும்ப எப்போது முடியுமோ அப்போதுதான். ஆந்திர அமைச்சர் சொன்னது: நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்.

இரண்டையும் நீங்கள் உய்த்துணரவில்லையென்பதே என் அச்சப்பாடு.

காந்தி சொன்னது நாம் ஆகஸ்து 1947 ல அடைந்த சுதந்திரம் வெள்ளைக்காரனிடமிருந்து மட்டும்தான். அது நாட்டுச்சுதந்திரம். மக்கட் சுதந்திரமன்று. என்று நம் நாட்டில் பெண்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களோ அன்றுதான் நமக்கு உண்மைச்சுதந்திரம்.

இதையே ஆனந்தப்பள்ளு பாடும்போதுபாரதியார் குறிப்பிட்டார். அப்பாட்டில், முதலில் பறையருக்கும் புலையருக்கும் சுதந்திரம். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று கற்பனையாகக் குறிப்ப்ட்டார். அதாவது எப்படிப்பட்ட சுதந்திரம் வரவேண்டும்? தீண்டாமையில்லா ஏற்றத்தாழ்வுகளில்லாச்சுதந்திரமனைவருக்கும். வந்துவிட்டதா? இல்லையென்பதை உங்கள் ஊரே நிருபித்துக்கொண்டு வருகிறது. மொததம் 12 பேர் தேவர் குருபூஜையின் போது மதுரை சிந்தாமணியில் கொல்லப்பட்டார்கள். மூவர் பரமக்குடிக்கருகில் கொல்லப்பட்டார்கள். ஒரு போலீசு ஆய்வாளர் அடித்துக்கொல்லப்பட்டார் சாதிவெறியர்களால். இருவர் என்கவுன்டரில் டிஎஸ்பி வெள்ளைத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வந்ததா பாரதி சொன்ன சுதந்திரம் உங்கள் ஊரில்? இல்லை. அதே போல,

காந்தி சொன்ன அந்தச்சுதந்திரம் இன்று வந்துவிட்டதா? பெண்களுக்குப் பாதுகாப்பு வந்துவிட்டதா? இல்லையென்பதை தில்லிச்சம்பவமட்டுமன்று; நாடோறும் நடக்கும் பல பெண்ணெதிர் வன்கொடுமைகள் நிருபிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாழ வேண்டும் என்கிறார் ஆந்திர அமைச்சர்.

ஐயமேயில்லை. அவர் வாக்குச்சரியே.

பெண்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும். All other helps from other sources are secondary.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

சமீபத்தில் நடக்கும் சில சம்பவங்கள் மனதை மிகவும் நோகச் செய்கின்றன.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

asan bes அனுப்பிய மின்னஞ்சல்-என்னால் உள்ளிடப்பெற்றது-
நன்றாகக் கூறினீர்கள்.முதலில் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு சில அடிப்படைத்
தகுதிகளை நிச்சயம் வகுக்கவேண்டும்,அதில் அடிப்படைக் கல்வித் தகுதி நிசசயம்
வேண்டும்.ஏனெனில் கல்வி அறிவே இல்லாதவர்களிடம் நாம் எப்படி
வள்ளுவத்தையும்,பாரதீயத்தையும் எதிர்பார்க்கமுடியும்,மேலும் இன்னும்
எவ்வளவு காலம் காமராஜரையே உதாரணம் சொல்லிக்கொண்டிருக்க முடியும்.அந்தத்
தலைமுறை மகாத்மா காந்தியை நேரடியாகப் பார்த்து வளர்ந்தவர்கள்.எனவே அந்தத்
தாக்கம் அவர்களிடம் இருந்தது,அடுத்த தலைமுறை நிச்சயம் கல்விமூலமே
அவர்களைப்பற்றியும்,அவர்களின் கொள்கைகளையும்
அறிந்துகொள்ளமுடியும்.அதற்குக் கல்வி அவசியம்.நமது
பாரம்பரியம்,கலாச்சாரம்,புவி சார்ந்த அறிவு,விவசாய நுண்ணறிவும்
வேண்டும்,இத்தனையும் அடிப்படைத் தகுதியாக்கப்பட வேண்டும்,அதற்கு அரசியல்
சாசனத்தில் மாற்றம் கொணரவேண்டும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

குலசேகரருக்கு,
உங்களுக்குத் தனிப்பதிவில் விரிவான மறுமொழி தருகிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....