துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.7.11

காட்சியும்,மீட்சியும்...

சிறையிருந்தாள் ஏற்றம்- இது சுந்தர காண்டத்தின் மற்றொரு பெயர்.

சீதையின் துயரத்தின் இடையில் ஊடாடும் அவள் கற்பின் அழகே சுந்தர காண்டத்துக்கு அழகூட்டுவது.
சுந்தரன் எனப்படும் அனுமனின் செயல்திறனாலும் அழகு பெறுவது இக் காண்டம்.


ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற’ உருவினளாய் அசோகவனத்தில் சிறையிருந்த சீதையின் நிலையை அனுமனின் காட்சிக்கும் நம் பார்வைக்கும் வைக்கும் படலத்துக்குக் காட்சிப்படலம் என்றே பெயர் தருகிறான் கம்பன்.

பெண்களின் கண்கள் மழை(மேகம்)போன்ற கருநிறம் கொண்டிருப்பதால் அவற்றை மழைக்கண்கள் எனக் குறிப்பிடுவது உலகப் பொது வழக்கு.
இங்கு சீதையின் கண்கள் இடையறா மழையாகக் கண்ணீரைச் சொரிந்ததால் மழைக்கண் என்பது,இங்கே காரணப்பெயராகவே ஆகி விடுகிறது என்பதை 
‘’மழைக்கண் என்பது காரணக் குறியென வகுத்தாள்’’
என்கிறது கம்பநாடன் கவிதை.

சீதை அணிந்திருந்த மென்துகில்,அவள் விட்ட கண்ணீரால் (அப்பு) நனைந்து,அவள் விட்ட வெம்மையான பெருமூச்சால்
(வெப்பு )உலர்கிறது.
அது ஈர ஆடையா,புலர்ந்த ஆடையா என்றே கண்டறிய முடியாதபடி அப்பினால் நனைந்து வெப்பினால் புலர்ந்து ஒரு நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருந்த தன்மையைக் கீழ்க்காண்ட முறையில் விவரிக்கிறது காப்பியம்.
(அப்பு,தேயு,வாயு என்ற வழக்கத்தின்படி அப்பு என்ற சொல்லை நீர் என்ற பொருளில் ஆள்கிறான் கம்பன்)
’’துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
  ஒப்பினான்தனை நினைதொறும், நெடுங்கண்கள் உகுத்த
 அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்புடை யாக்கை 
 வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள்’’


துப்பு-பவழம்;மஞ்சு-மேகம்.
பவழம் போன்ற கை,கால்களைப் பெற்றிருக்கும்(உள்ளங்கை,உள்ளங்கால்)மழைநீர் பொழியும் மேகம் போன்ற கருநிறம் கொண்ட இராமனை நினைக்குந்தோறும் கண்கள் உகுத்த கண்ணீரால் நனைந்து அவள் விடும் வெப்பப் பெருமூச்சால் புலர்கிறது அவள் ஆடை.
’’கண்ணும் திருவடியும்,கையும்,திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே’’-எனத் திருமாலின் கண்,கால்,கைகளைச் சிவப்பாகவும்,மேனியைக் கறுப்பாகவும் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையும் பாடுகிறது,.

இராமனை விட்டு விலகியிருக்க நேர்ந்த பிரிவின் ஏக்கம்,விரக தாபத்தின் கொதிப்பான வெம்மை,அரக்கனை எண்ணும்போது விளையும் அச்சம்,நடுக்கம்,மானசீகமாக இராமனை வேண்டி இரங்கும் கையற்ற நிலை - என , 
இருப்புக் கொள்ளாத தவிப்பின் வேறுபட்டஅத்தனை நிலைகளையும் தொழிற்பெயர்களாகத் தொகுத்து(’அல்’விகுதி பெற்ற வினைகள்)
‘’விழுதல், விம்முதல் , மெய் உற வெதும்புதல்(மேனி முழுவதும் ஏற்படும் கொதிப்பு,வெம்மை),வெருவல்(அச்சம்),

 எழுதல்,ஏங்குதல்,இரங்குதல்,இராமனை எண்ணித்
 தொழுதல், சோருதல், துளங்குதல்(நடுக்கம்), துயர் உழந்து உயிர்த்தல்
 அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்’’
என்ற ஒரு பாடலுக்குள் அடுக்கிச் சொல்லி விடுகிறான் கம்பன்.
மெலிதான ஆடை ஒன்றை உடுத்தியிருப்பதையும் ,அதை அவ்வப்போது சரி செய்து கொள்வதையும் (காரணம்-மேனியில் ஏற்படும் மெலிவுக்குத் தக்கபடி அதை மாற்றி இறுக உடுத்த வேண்டியிருக்கிறது)தவிர மென்மையான இறகுகள்-தூவிகள் கொண்ட அன்னங்கள் நீந்தும் நீர்நிலைகளில் நீராடும் செயலைக் கூட மேற்கொள்ளாமல்-அயலவன் மனையில் அந்த அடிப்படைச் செயலைக் கூடத் தவிர்த்தபடி இருக்கிறாள் சீதை.

  
 ’’ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்
     தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
     தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்து 
     ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்’’
அதனால் பாற்கடலிலிருந்து அமிழ்தை எடுத்து மன்மதன் உருவாக்கிய ஓவியம் ஒன்று புகை படிந்து கிடப்பதைப் போல இருந்தது அவள் தோற்றம் என்கிறான் கம்பன்.

இவ்வாறு அயலவன் மனையில் உண்ணாமல்,உறங்காமல்,குளிக்காமல்,ஆடை அணி புனையாமல்,வேறு ஆடை கூட மாற்றாமல்...
ஓராடை தவிர வேறு ஏதுமற்ற பேதையாய் வெதும்பிக் கிடந்த சீதையைப் பார்த்துத்தான்..
மீட்சிப்படலத்தில் அவளை மீட்க வரும் இராமன் 
அக்கினிப் பிரவேச நிகழ்வுக்கு முன்பாக
‘’ஊண்திறம் உவந்தனை ; ஒழுக்கம் பாழ்பட
  மாண்டிலை;முறை திறம்பு அரக்கன் மாநகர் 
  ஆண்டு உறைந்து அடங்கினை..’’

‘’பெண்மையும்,பெருமையும்,பிறப்பும்,கற்பும்
  திண்மையும்,ஒழுக்கமும்,தெளிவும் ,சீர்மையும்
  உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
  வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்’’
(’அரக்கனின் அரண்மனையில் நீ நன்றாக உண்டு,உடுத்தி,உல்லாச வாழ்வு வாழ்ந்திருக்கிறாய்..
உன் ஒழுக்கம் பாழ்பட்டபோதும் நீ இறக்கவில்லை.
பெண்மையின் சிறப்பும் சீர்மையும் -அனைத்தும் உன் ஒருத்தியால் சீர்கெட்டுப் போய்விட்டன’)
என்றெல்லாம் கடுஞ்சொல் பேசிப் பழிக்கிறான் .
சந்தேகத்தின் கொடுங்கரங்கள் தெய்விகத் தன்மை கொண்டோரையும் விட்டு வைப்பதில்லையா...?
அல்லது ஊருக்காகப் புனைந்த நாடகமா இது?
இதற்கு சீதையின் எதிர்வினையாக என் கற்பனையில் உருவான புனைவு
புதிய பிரவேசங்கள்
என்ற பெயரில் முன்பு கலை மகளில் வெளி வந்தது.
அது..அடுத்தபதிவில்....


14 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

ரொம்ப நாளாக என் மனதை அரித்து வரும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதிவிட்டு அடுத்த பதிவு என்கிறீர்களே! ராமனால் சீதைக்கு ஏதாவது பயனுண்டா என்ற கேள்வி நிறைய தோன்றியிருக்கிறது. சீதை எப்படி ராமனுடன் தொடர்ந்து வாழ்ந்தாள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ராமாயண அலசல்கள் பலவும் இந்த ஒரு விவரத்தை அடக்கி வாசிக்கிறார்கள் - தெய்வம் என்று ஒரேயடியாக தூக்கி வைத்து மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று காது செவிடுபட டமாரம் அடித்து விடுகிறார்கள். ஆனால் ராமனின் 'ஒக மாட' மட்டும் மனித நெறிக்கு உதாரணமாகச் சொல்கிறார்கள். conflict ரொம்ப சுவையானது.

உங்கள் 'புதிய பிரவேசங்கள்' படிக்க மிக மிக ஆவலாக இருக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

கம்பன் கவிநயம் அற்புதம்.

காவ்யா சொன்னது…

கம்பன் சொன்னான்; பாரதி சொன்னான். என்று எழுதப்படுகிறது. பேசப்படுகிறது. இங்கேயும் நீங்கள் அப்படித்தான் எழுதுகிறீர்கள். ஏன் ? கம்பன் சரி.ன் விகுதிக்காக. பாரதி ? எந்த விகுதிக்காக ?

பொதுவாக இப்பழக்கம் தமிழாளளரிடையே காணப்படுகிறது - ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், தமிழறிஞர்கள். இவர்களைப் பார்த்து மற்ற பாமரர்களும் சொல்கிறார்கள். ஒரு நூலைப் படித்து வருகிறேன்; பெயர்: பாரதி ஓடிப்போனானா ? தமிழ். ஹிந்து. காமில் இருக்கிறது.

இப்போது நுங்கள் பதிவுக்கு வருகிறேன்.

இராமர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் எனச்சொல்கிறீர்கள். அவர் தெய்வமே. அஃதாவது அவதாரம். வெறும் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று சொல்லக்கூடாது.

ஆனால், அவரிடம் "நீங்கள் அவதாரம். ஏன் இத்தகைய செயல்களை, அல்லது வாழ்க்கைத் துயரங்களை ஏற்றுக்கொள்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, "'நான் மனிதனாக அவதாரம் செய்திருக்கிறேன். எனவே மனிதனின் தர்மங்களைக் கடைப்பிடிப்பேன்.' என்றார்.

இந்த தன்னிலை விளக்கத்தைக் கொண்டே இராமரின் செயல்கள் கணிக்கப்படவேண்டும் நம்மால்.

ஒருவன் தன் மனைவி இன்னொருவன் அல்லது அன்னியன் இல்லத்தில் மாதக்கணக்கில் தங்கிவிட்டு (கட்டாயத்தின்பேரில் இருந்தால் கூட) பின்னர் திரும்புகிறாள் அல்லது மீட்கப்படுகிறாள். ஊர் உலகம் நாலுவிதமாகத்தான் பேசும். அதைச் சரிசெய்து அவ்வூர் உலகத்துக்குத் தன் மனைவி கற்பு கெடாதவள் என நிரூபணம் செய்வது கணவனின் கடமை. இதைத்தான் மனிதனாகப்பிறந்த இராமர் செய்தார். ஊர் உலகத்தை உதாசீனம் செய்யலாகாது. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலார்',' இல்லையா ?

ஏன் பெண்ணுக்கு மட்டும்? என்றால், நம் சமூகத்தில் ஆதி காலந்தொட்டு ஆண்-பெண் உறவு அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு அப்பாதுரை,
மிக்க நன்றி.இந்தக் கேள்வி மட்டுமல்ல.
தொன்ம இதிகாச,புராணங்களின் பல பகுதிகளும் மாறி வரும் நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவையே.
விரைவில் கதையைப் பதிவிட்டு விடுகிறேன்.

ஞங்கள் கேரளம்,
நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த எதிர்வினை நான் ஏற்கனவே எதிர்ப்பட்டதுதான்...
காலம் காலமாக எதிர்ப்பட்டும் வருவதுதான்!
மனித வடிவில் அவதாரம்..என்றெல்லாம் நீங்கள் தரும் விளக்கங்களும்- பல தடவை சொல்லப்பட்டவையே..
ஒரு தொன்மக்கதையை எப்படிப் பார்க்கவும் ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் உண்டு.
தொடர்ந்து வரும் அடுத்த பதிவாகிய என் சிறுகதையில் இராமன்,சீதை இருவர் புகழுக்கும் களங்கமின்றி நான் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறேன்.அதை வாசித்த பின் சொல்லுங்கள்.
கம்பன்,பாரதி இவர்களெல்லாம் நம் பிரியத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்கள்.
போயும் போயும் ஒரு ’ன்’விகுதியால் அவர்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்போ,அல்லது அவர்களது புகழோ குன்றிப் போய்விடுவதாக நினைப்பது பேதமை.

காவ்யா சொன்னது…

ஒரு தொன்மக்கதையை எப்படிப் பார்க்கவும் ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் உண்டு"

நல்லது.

ஆனால், இராமாயணம் இந்துக்களின் புனித நூல்.
அங்கு உரிமை என்ற பெயரில் இராமரை இகழும் வண்ணம் எப்படியும் பார்க்கலாம் என்பது பேதமை.

இந்துக்களின் உணர்ச்சிகள் மதிக்கப்படவேண்டும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

முதலில் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதை படியுங்கள்.
நீங்கள் மதிக்கும் பாரதியே,
‘’நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக்கண்டோம்’’
‘’மன்னும் இயல்பின அல்ல -இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்’’
எனக் காலத்துக்கேற்பப் பழம்புராணங்கள் மறு ஆக்கம் செய்யப்பட வேண்டுமெனக் கூறியிருக்கிறான்..
அப்படிச் செய்வதால் இந்து மதம் இழிவுபடுத்தப் படுவதாகப் பொருளில்லை.
அத்தனை எளிதாக இந்து மதத்தை இழிவு செய்து விடவும் முடியாது;அது,என் நோக்கமும் இல்லை.

அப்பாதுரை சொன்னது…

ஞங்கள் கேரளம் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சிலவற்றை ஏற்க முடிகிறது. 'ஊர் உலகம்' சொல்லும் என்பதற்காக ராமன் செய்தான் என்பதை ஒரு முறை ஏற்கலாமென்றே வையுங்கள், மறுமுறை செய்வது? நல்ல மனிதனானவன் என்ன செய்ய வேண்டும்? ஊர் உலகத்துக்குப் பாடமாக அல்லவா நடக்க வேண்டும்? 'உலகத்தோடு ஒட்ட் ஒழுகலுக்கு' புதுப்பொருள் கண்டிருக்கிறீர்கள் :)

நூலில் புனிதம் ஏது? பாவம் ஏது?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் அப்பாதுரை.
என் புனைவின் சீதையும் இராமன் ஊர் உலகத்துக்குப் பாடமாக இருக்க வேண்டுமென்று நினைப்பவள்தான்...
பொறுத்திருந்து படித்து விட்டுச் சொல்லுங்கள்.
ஆனால் கேரளக்காரரின் எந்தக் கருத்தை உங்களால் ஏற்க முடிகிறது என்றுதான் புரியவில்லை...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எம்.எஸ்.ராஜேந்திரன் அனுப்பிய மின் அஞ்சல்,எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது.

கம்பன் எழுதிய காலம் பழையது.ஆனால் இன்றும் அதன் சொல் புதிது. பொருள் புதிது.அதிலும் உஙகளைப் போன்றவர்கள் கூறும் போது அதன் சுவை இனிது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எம்.எஸ்.ராஜேந்திரன் அனுப்பிய மின் அஞ்சல்,எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பெற்றது.
கம்பன் எழுதிய காலம் பழையது.ஆனால் இன்றும் அதன் சொல் புதிது. பொருள் புதிது.அதிலும் உங்களைப் போன்றவர்கள் கூறும் போது அதன் சுவை இனிது.

அப்பாதுரை சொன்னது…

மன்னிக்க வேண்டும்; 'சிலவற்றையே' என்று எழுத நினைத்தவன் 'சிலவற்றை' என்று எழுதிவிட்டேன். ஏற்க முடிந்த கருத்து இது: "நம் சமூகத்தில் ஆதி காலந்தொட்டு ஆண்-பெண் உறவு அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது". இந்த அமைப்பு சரியா தவறா என்பது இன்னொரு விவாதம், ஆனால் அந்த அமைப்பு ஏற்பட்டிருப்பது உண்மை என்றே நினைக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

//சமூகத்தில் ஆதி காலந்தொட்டு ஆண்-பெண் உறவு அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது". இந்த அமைப்பு சரியா தவறா என்பது இன்னொரு விவாதம்,//
ஆம் அந்த அமைப்பிலுள்ள கோளாறுகளைத்தான் இப்படிப்பட்ட ஆக்கங்கள் மூலம் சரி செய்ய முயல்கிறோம்.
மற்றபடி தெய்விகத்துக்கோ இந்து மதத்துக்கோ இழுக்குத் தேடும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை.இதை அந்த அன்பர் புரிந்து கொள்ளாதததே வருத்தம்.
வெறும் பழங்கதைகளால் மட்டும் கட்டமைக்கப்பட்டதல்ல இந்து மதம்.
அதன் ஆழ்ந்த தத்துவப் பின்னணியே முரண்பாடுகளுக்கு நடுவே அதை நிலைநிறுத்தி வருகிறது..இல்லையா?

அப்பாதுரை சொன்னது…

மதங்கள் ஒழியும் நாள் வரும்.

suneel krishnan சொன்னது…

காவியங்களில் ஒரு நேர்மை உண்டு ...அப்பழுக்கற்ற ஒரு உயிர் இந்த மண்ணில் ஜனித்ததில்லை அது கடவுளாகவே இருந்தாலும் ..காவிய நாயகர்களையும் /மனிதர்களையும் நாம் இப்பொழுது அறம் / தர்மம் என்று நம்பும் ஒரு விஷயத்துக்காக வெட்டி ஓட்டகூடாது , குறை நிறைகளோடு ,கருப்பு வெள்ளையாக ஏற்று கொள்ள வேண்டும் , அந்த பக்குவம் வர வேண்டும் , கம்பனை அறியாமல் விட்டது எனக்கு பெரும் குறையாக இருக்கிறது ..தொடர்ந்து தங்களிடம் கம்பனை அறிய வேண்டும் ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....