’’வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’
தொடர்ந்த தன் படங்களிலும் - தான் தேர்ந்தெடுக்கும் வேறுபட்ட களங்கள்,நடிகர்களின் தேர்வு,அவர்களிடமிருந்து வருவிக்கும் கடுமையான உழைப்பு எனப் பல கூறுகளால் வித்தியாசமான சுவடுகள் சிலவற்றை அழுத்தமாகத் தமிழ்த் திரையில் வரைந்திருப்பவர்.
ஒரு சில படங்களிலேயே தேசிய விருது என்னும் உயரத்தை எட்டும் அளவுக்கு வளர்ந்தவர்.
இந்த உண்மைகளை மறுக்க முடியாத - அவரது பலங்களை மறுதலிக்க முடியாத அதே வேளையில்......
அவரது சமீபத்திய படமாகிய அவன் - இவன் பற்றி மட்டுமன்றி
அவர் தன் படங்களில் முன் வைக்கும் சில குரூரங்களை-
அவற்றையே திரை அழகியலாக்கும் அவரது போக்கை ஒட்டிய சில விமரிசனங்களை முன் வைப்பதும் தேவையாகவே இருக்கிறது.
சமூக யதார்த்ததில் பல குரூரங்களும்,கொடூரங்களும் அன்றாட நிகழ்வாகவே நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ,
அவற்றைக் கண்டு கண் பொத்தி விலகிச் செல்ல வேண்டியதில்லை என்பதும் உண்மைதான்..
ஆனால் வித விதமான குரூரங்களைக் கற்பனை செய்வதிலேயே பாலாவின் ஆக்கத் திறன் அனைத்தும் விரயமாகிக் கொண்டிருக்கிறதோ என எண்ணுமளவுக்கு அவர் படங்களில் அவையே பெரிதும் மலிந்து கிடக்கின்றன.
விளிம்புநிலை மனிதர்கள் குறித்த வாழ்க்கைப் பார்வை - அவர்களது வாழ்முறை (பழக்கவழக்கங்கள்,சொல்லாடல்கள்) ஆகியவற்றைப் பதிவு செய்வது தேவைதான் என்றபோதும் - அவர்களது வாழ்வில் விஞ்சி நிற்கும் வக்கிரங்களும் ,கொடூர மன நிலைகளுமே பெரிதும் காட்சிப்படுத்தப்படுகையில் அவர்களைப் பாத்திரங்களாக முன் வைப்பதன் வழி பாலா நிகழ்த்திக் கொண்டிருப்பதும் ஒரு சுரண்டல்தானோ என்று கூடத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.
(ஈழப் பிரச்சினையின் ஆழம்-அடிவேர் புரியாமல் அதை இலக்கியம்-திரைப்படம் வழி ஊறுகாய் ஆக்குவது போன்ற செயல்தான் இதுவும்)
நந்தாவில் தாய் மகனுக்கு ஊட்டும் நஞ்சு,
பிதாமகனில் குரல்வளை குதறும் கொடூரம்,
நான் கடவுளில் ஆரியாவின் சம்ஹாரம்...
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது அவன் - இவனில் வில்லன் செய்யும் வக்கிர நிர்வாணச்சித்திரவதை ஒரு புறம் என்றால்..
அதற்குப் பழி வாங்கும் வகையில், இறந்தவரின் தேர்ப் பாடையில் உயிரோடு வில்லனைக் கட்டி ‘உடன்சிதை’ஏற்றும் கொடூரம்.
வக்கிரத் துன்புறுத்தல்களை வித விதமாகக் காட்சிப்படுத்தினால் மட்டுமே தேசிய விருது கிடைக்கும் என்றோ
அல்லது அது தங்கள் படைப்புச் சுதந்திரம் என்றோ
பாலாவும்,‘பருத்தி வீரன்’ அமீரும் நினைக்கலாம்.
ஆனால் அத்தகைய ஆக்கங்களின் எதிர்மறைத் தாக்கங்கள் குறித்த பொறுப்புணர்வு - ஒரு பரவலான சமூக ஊடகமான திரைப்படத்தைக் கையாளும் இயக்குநர்களுக்கு ஓரளவேனும் இருந்தாக வேண்டும்,இல்லையென்றால் இந்தச் சமூகம் சீழ் பிடித்த சமூகமாக மாறி விடும் என்பதே நடுநிலைப் பார்வையும்,ஆரோக்கியமான திரைப்பட ரசனையும் கொண்டோரின் கருத்தாக இருக்க முடியும்.
(’படத்தைப் பார்த்துதான் சமூகம் கெட வேண்டுமா’.போன்ற சப்பையான வாதங்களில் உண்மையில்லை என்பதும் குற்றங்களின் உத்திகள் பலவற்றைப் பல படங்கள் கற்றுத் தந்திருக்கின்றன என்பதும் நம் நெஞ்சறியும் உண்மைகள்)
அவன் இவனைப் பற்றிய விமரிசனத்தை இங்கே செய்யப்போவதில்லை.அது குறித்த நல்ல விமரிசன இணைப்பு ஒன்றைக் கீழே தந்திருக்கிறேன்.
ஆனாலும் ..இறுதியாக அந்தப்படத்தைப் பற்றிய என் கணிப்பு ஒன்றை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன்.
தன் படைப்புக்களைத் தானே பிரதி(அல்லது ‘காப்பி’என்றும் வைத்துக் கொள்ளலாம்) எடுக்கத் தொடங்கி விடும்போதே அந்தப் படைப்பாளியின் படைப்பூக்கம் வற்றிப் போய்விட ஆரம்பித்து விடுகிறது.
இலக்கியவாதி முதல் ஒளி ஓவியர் வரை புனைவு சார்ந்த படைப்புச் செயல்பாட்டில் முனைந்திருக்கும் அனவருக்குமே இது பொருந்தக் கூடிய சூத்திரம்தான்.
அவன் இவனில் பாலா அதைத்தான் தொடங்கியிருக்கிறார்..
நந்தாவை நினைவூட்டும் வாழ்ந்து கெட்ட நிலக் கிழார்....
அவருக்கு ஊழியம் செய்யும் நாயகன்(அவன் இவனில் அதே வேலையை இரண்டு பேர் சற்றுத் தமாஷாகச் செய்கிறார்கள்,அவ்வளவுதான்!)
பிதாமகனில் சிம்ரன் வருவது போல இங்கு சூரியா..
பிதாமகனின் ‘இளம் காத்து வீசுது’பாடலைப் போல ஜமீன்தாருடன் மக்கள் கொண்டிருக்கும் பாசத்தின் நெருக்கத்துக்கு ஒரு பாடல்..
இவ்வாறு ஒரு கூட்டுக்குள் மட்டுமே முடங்கிப் போய்ச் சொன்னதையே வெவ்வேறு வகையாகச் சொல்லும் கிளிப்பிள்ளையாக பாலா போன்ற நல்ல இயக்குநர்களும் மாறிவிட்டால்...தமிழில் நல்ல படங்களின் எண்ணிக்கை இன்னும் கூடக் குறைந்துதான் போகும்.
இவ்வளவு விமரிசனங்களையும் மீறி பாலாவின் படைப்புக்கள் மீதும் இயல்பான காட்சிப்படுத்தல் மீதும் இன்னும் மதிப்பிருக்கிறது.
வறுமையின் கொடுமையிலும் பாசம் என்னும் உணர்வின் ஊற்று வற்றாமலிருப்பதைத் தன் படங்களில் பாலா அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதை மறக்க முடியுமா?
பிதாமகனில் விக்ரம்-சூர்யா நட்பு,
அவன் இவனில் மக்களுக்கும் நிலக்கிழாருக்குமான எதிர்பார்ப்பில்லாத நேசம்,
நந்தாவில் நெருப்பின் மீது நிற்பது போன்ற சூழ்நிலையிலும் பிறக்கும் சூர்யா-லைலா காதல்,
நான் கடவுளில் பிச்சைக்கார முதலாளியின் துணையாள் மறைமுகமாக அந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் மீது காட்டும் பரிவு
என்று பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.
வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.
பார்க்க;
3 கருத்துகள் :
திரைப்படம் பார்க்க வாய்ப்பு அதிகமில்லை. (தோன்றவும் இல்லை :)
நம்மாழ்வார் பாடல் அருமையான தேர்வு.
திரு சந்திரமோகன் அனுப்பிய மின் அஞ்சல்-எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது.
உங்கள் பதிவு மிக சரியான அவதானிப்புடன் பாலா என்ற படைப்பாளியை அணுகுகிறது. நான் அவரிடம் கண்ட குறைகளை மட்டுமே மையப்படுத்தி எழுதினேன். நீங்கள் அப்படி தட்டையாக பார்க்காமல் அவரது படங்களில் மிக அவலமான நிலையிலும் மனிதர்களுக்குள் அன்பு வெளிப்படுகிறது என்று அவரது நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறீர்கள். அருமையான பதிவு! உங்கள் பதிவில் என் பதிவின் இணைப்பாய் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
அன்புள்ள........ இவர்கள் மருவங்கன்னு நினைக்கறீங்கள.. நல்ல குடும்ப படத்த விட்டுட்டு இந்த மாதிரி படங்களுக்கு தானே விருதுகளும் கிடைக்குது...ஊக்கப்படுத்துவோர் நிறுத்தினால் இவர்களும் நிறுத்திவிடுவார்கள். ரசிகர்களையும் சேர்த்து ஹ்டான் சொல்றேன்..
கருத்துரையிடுக