துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.12.11

தேரும் யானையும்...

அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் ஔவைக்கும் இருந்த நட்பும் உறவும் பால் பேதம் வயது பேதம் ஆகியவை கடந்தவை.
அதியமானைப் பல பாடல்களில் பாடியிருக்கும் ஔவை அவனது வேறுபட்ட ஆளுமைகள் பற்றி முன் வைக்கும் இரு உவமைகள் அற்புதமானவை...

அதியனுக்கு எதிராகப் போர்க்களம் புகும் பகைவரை நோக்கி இவ்வாறு அறை கூவுகிறாள் ஔவை.
‘’ஒரே நாளில் எட்டுத் தேர் செய்யும் வல்லமை படைத்த ஒரு தச்சன் ஒரு மாதம் முழுவதும் முயன்று - அதே நேரத்தையும்,உழைப்பையும் செலவிட்டு- அந்தத் தேரின் ஒரு காலை மட்டும் செய்தால் அது எந்த அளவு வலிமையுடன் இருக்குமோ அந்த அளவு வலிமை பெற்றவன் அதியமான்.
எனவே..மறவர்களே...அவனுக்கு எதிராகப் போர்க்களத்துக்கு வரத் துணியாதீர்கள்...’’என்று அவள் எழுப்பும் குரல் புறநானூற்றில் இவ்வாறு பதிவாகிறது
‘’களம் புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
   எம்முளும் உளன் ஒரு பொருநன்
   வைகல் எண் தேர் செய்யும் தச்சன்
   திங்கள் வலித்த கால் அன்னோனே’’--புறநானூறு-87
[தெவ்விர் -மறவர்,பொருநன்-போர்செய்பவன்,வைகல் -ஒரு நாள்,வலித்த -செய்த]
ஒவ்வொரு நாளும் எட்டுத் தேர் செய்யும் உழைப்பை அதன் ஒரே காலைச் செதுக்குவதில் ஒரு தொழிலாளி செலவிட்டால் அந்தக் கால் எத்தனை வலிமையோடு இருக்கக் கூடும் என்ற கற்பனை அன்றைய போர்ச் சூழலின் பின் புலத்தில் பிறந்ததுதான் என்றாலும் அதியனின் வீரத்தை மட்டும் காட்டுவதோடு நின்று விடாமல்,ஔவையின் வித்தியாசமான படைப்பாக்கப் புனைவுக்கும் சான்றாகக் காலம் கடந்து நிற்கிறது.


அதியமான் பகைவர்களிடத்தில் மட்டுமே தன் வல்லமை காட்டுபவன்;ஔவையைப் போன்ற நண்பர்களிடம் பாசத்தில் குழைபவன்.அதையும் உவமை வழி எடுத்துரைக்கிறாள் ஔவை.
பிரம்மாண்டமான மிகப்பெரிய யானை ஒன்று நீர்த்துறையில் நீராட வருகிறது.
அப்போது ஊரிலுள்ள சின்னஞ் சிறுவர்கள் கூடி அதன் கொம்புகளைத் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள்;அவர்களுக்கேற்றபடி அது வளைந்தும் நெளிந்தும் அனுசரித்துப் போகிறது.தன்னை வைத்து அந்தக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் கோபமே கொள்ளாமல் தானும்  குதூகலித்துக் களிக்கிறது அது.

அதியனும் அது போன்றவன்தான்.சிறுவர்களிடம் இனிமை காட்டும் களிறு போல அதியமானும் ஔவை போன்ற புலவர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனியவன்;ஆனால்...யானையைச் சீண்டி விட்டால் அது மதம் கொண்டு சீறுவது போலத் தன் பகைவர்கள் தன் எதிரிகள் ஆகியோருக்கு அவன் இன்னாதவன் என்கிறது பின் வரும் புறப்பாடல்.
‘’ஊர்க் குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
   நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
   இனியை பெரும எமக்கே மற்றதன்
   துன்னரும் கடாஅம் போல
   இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே’’-புறநானூறு-94
[ஊர்க் குறு மாக்கள் -சிறுவர்கள்,கடாஅம் -மதம்,ஒன்னாதோர்-பகைவர்]


4 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய படைப்பு

அப்பாதுரை சொன்னது…

பாடலும் அருமையான விளக்கமும் மிகவும் ரசித்தேன். உவமையின் ஆழம் நினைத்து நினைத்து வியக்க வைக்கிறது.

பெயரில்லா சொன்னது…

மிகவும் ரசித்தேன். பாடலும், விளக்கமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது போல பதிவுகளை நீங்கள் எழுதி தமிழின் இனிமையை என் போன்றவர்களை அனுபவிக்க வைப்பதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை பலமுறை கூறுகிறேன். நன்றி!

பெயரில்லா சொன்னது…

தமிழைப் படிக்க படிக்க,மெல்ல கிறங்கித்தான் போனேன்.அதற்க்கு இந்த பதிவு நல்ல உதாரணம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....