துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.1.12

தேவந்தியே ஆருஷியாய்....

தேவந்தி....ஆருஷியாக...நேற்று  கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக  இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் "தேவந்தியாக "  ...... சிந்திக்காமலேயே ...அவள்...





’தேவந்தி’ சிறுகதை பற்றிய ராஜம் ரஞ்சனியின் விமரிசனம்[வல்லினம் இதழின் இணைப்பு] வெளியானதும்,அதே கதை குறித்து எனக்கு இன்னொரு கடிதமும் தனி மின் அஞ்சலில் வந்தது...தேவந்தி என்ற காப்பியப் பாத்திரம் குறித்த ஒற்றைப் பார்வையாக அது இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவளாக தேவந்தி குறித்த பார்வையைப் பொதுமைப்படுத்தி அது முன் வைத்திருந்தது ..! 


ஆம்...நானும் கூட தேவந்தியை அப்படி ஒரு படிமமாகத்தான் மனதுக்குள் உருவகித்து உருவாக்கியிருக்கிறேன்..
‘’இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி.’’ என்று இச் சிறுகதை இடம் பெற்றிருக்கும் தொகுப்பு நூலின் முன்னுரையில் எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிட்டிருப்பதும் அதையேதான்...! ஆனால் இந்தக் கடிதம் எழுதிய வாசகி அந்த நூலையோ அதன் முன்னுரையையோ படிக்கவில்லை, இந்த வலைத் தள இணைப்பிலுள்ள கதையை மட்டுமே படித்துத் தன் வாசக நுட்பத்தினாலேயே அதைக் கண்டடைந்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்வூட்டுகிறது... ஒரு படைப்பை உருவாக்கி விடுவது பெரிதல்ல...அதன் உண்மையான சாரத்தை-உள்ளுறையைக் கண்டடையும் ஒத்த மனமும்,ஒரே அலைவரிசையும் கொண்ட வாசக உள்ளங்கள் அமைவதே பெரும் பேறு. 


கதையில் தேவந்தியின் சிறிய மாமியாராக வரும் மாலதியுமே கூட வஞ்சனைக்கும் பயத்துக்கும் ஆளான ஒரு பெண் பிம்பம்தான். அவளால் தேவந்திக்குத் துன்பம் என்பது....பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்று  நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்த வைக்க ஆண்கள் புனைந்து வைத்த வார்த்தை ஜாலம் மட்டுமே...தெரிந்தோ தெரியாமலோ நம் பெண்கள் இதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் இந்தக் கடிதம் சுட்டிக் காட்டியிருக்கிறது...இனி அந்தக் கடிதம்......


//அன்பு சுஷீஜி, நலம் வர வாழ்த்துகள்.,
தேவந்தி கதையைப் படித்தேன். அருமையான ஒரு புனைவு.. 
உண்மைதான் . இருத்தலுக்காக ஒரு பெண் ஈடுபடும் போர்க்களத்தில் அதிகமாகக் காயப்படுவதும் அழிவதும் அவளின் மனம்தான். அப்படி வரும் மனநிலையில் அவளுக்குள்  நல்ல ஆரோக்கியமான  சிந்தனைகள் வருவதே  இல்லை. பயம் என்ற அடிப்படை உணர்விலேயே ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கை இருப்பதால்(இந்தக் கதையில் பேசப்படுபவள் அவள் என்பதால்)அவளுக்கென்றொரு கருத்து எதைக்குறித்தும் ,இல்லாமலேயே போகிறது . சுதந்திரமான ஒரு சூழலில்தான் செழுமையான சிந்தனைகள் பிறக்கும். இங்கு மாலதியும் கண்ணகியும் தேவந்தியும் ஏன் மாதவியும் ஒரே ரகம் தான். அவரவரின் இயக்கங்களின் தளங்கள் வேறுப்பட்டிருந்தாலும் சிந்தனைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அச்சம் முற்றிய அடிமைத்தனத்தில் ஊறியவையாகத்தான் இருக்கின்றன. இந்த bio -memory யில் இருந்தும் இன்று வரைக்கும் பெண்கள் வெளியே வர முடியவில்லை. இன்றும் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் நகரங்களிலும் கிராமங்களிலும்  பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்தானே . மாதவிக்கும் தேவந்திக்குமான பிரச்சினைகள் முற்றிலும் எதிர் துருவங்களில் இருப்பதைப் போலான ஒரு தோற்றம் இளங்கோ அடிகளால் வரையப்பட்டாலும் இரண்டுமே அடிப்படையில் ஒரே பிரச்சினையின் இரு புறங்கள்தான். பயம் ஆழமாக வேரோடி இருக்கும் இவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பும் உரிமையும் ஆண்களுக்குத்தான். .. இன்றும் கள்ளிப்பாலின் சுவையை ருசித்து உறங்கும் பெண் சிசுக்கள் நம் கிராமங்களில் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒரு நிஜம். 

"தேவந்தியின் நிலைக்குக் காரணமாகிவிட்டவள் மாலதி. பல தருணங்களில் பெண்களாலேயே பெண்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுவிடுகின்றன". - இந்தக் குரல் மீண்டும் அச்சப்படுத்துகிறது. பெண்கள் மனோதத்துவ ரீதியாகப் பெண்களைப் பார்க்க பயப்படுகிறார்களா? இல்லை....பார்க்க இயலாமல் இருக்கிறார்களா? மாலதிக்கு ஏற்பட்ட மன நிலைப் பாதிப்பு எவ்வளவு பெரிது. ஏற்கனவே குழந்தை இல்லாமல் தவிக்கும் அவள் , மற்றொருத்தியின் குழந்தை தன் கவனக்குறைவால்தான் இறந்தது என்ற சிந்தனைக்குள் வதைபட்டு  ஆயிரம் மடங்கு மன உளைச்சல்களால்  அல்லல் பட்டிருப்பாள் . எப்படிப் பித்துப்பிடித்து மிரண்டோடியிருப்பாள்... ஒரு விதமான பிரமையில் அமர்ந்திருந்த அவளுக்குக் கிடைத்த கடைசி ஆறுதல்தான் அந்த சாத்தன். மரணிக்கவும் முடியாமல் தவித்த அவளுக்கு  இதுபோன்ற மூட நம்பிக்கைகள் இருத்தலின் பிரச்சினைக்கான ஒற்றை மூலையாகவே அமைந்தது,. இது  பெண்களின் சூழலைக் காண்பித்து நம்மைக் கவலைப்படுத்துகிறது,  


சுஷிஜி , தேவந்தியின் விளக்கம் உண்மையானதும் ஏற்கக்கூடியதுமாக இருக்கிறது. தேவந்தியின்  பிரச்சினையை சுதந்திரமான ஆரோக்கியமான மனநிலையில் அழகாக முன்வைத்துக் கதைக்கான தீர்வு இன்றும் கிடைக்கப் பெறாத ஒன்று என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள் .... 
''உன் அன்புக்கோ ...அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி !'' --தேவந்தி 


இங்கிருக்கும் அன்பும் நோன்பும் ஒரே போல இருத்தலுக்காக ஏங்க வைக்கும் இரு ஆசாரங்களாகத்தான் தெரிகிறது,.  இரண்டும் ஆண் துணைக்காக ஏங்கும் அல்லது தங்களுக்கு சமூகம் கற்பித்த வாழ்க்கைத் துணைவனுக்காக மன்றாடும் இரு விதமான ஆசாரங்கள் .....

தேவந்தி....ஆருஷியாக...நேற்று  கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக  இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் "தேவந்தியாக "  ...... சிந்திக்காமலேயே ....அவள்.....//

.தேவந்தி சிறுகதையை வாசிக்க...இணைப்பு
                                         பகுதி-1-http://www.masusila.com/2009/06/blog-post_27.html



1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

நல்ல உள்ளம் எழுதிய கடிதம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....