துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.3.15

சிக்கிமை நோக்கி..-5[பாக்தோக்ரா-காங்க்டாக்]




தீஸ்தா நதி கண்ணில் தென்படத் தொடங்கியது.நதி என்று சொல்வதை விட படுகை என்பதே பொருத்தமாக இருக்கும்.நீர் வற்றிப்போய்க் கூழாங்கற்கள் அடர்ந்த படுகை.


சிக்கிம் மாநிலத்தின் உயிர்நிலையான இந்த நதி,வங்க தேசத்தில் சென்று பிரம்மபுத்திராவுடன் கலப்பதற்கு முன் சிக்கிம் - மேற்கு வங்கத்தைப்பிரிக்கும் எல்லைக்கோடாகவும் இருக்கிறது.

வறட்சியான,குப்பை கூளம்,அழுக்கு மண்டிய மேற்கு வங்கத்தின் சிற்றூர்களையும் சிறிய கிராமங்களையும் தாண்டி வண்டி விரைந்து கொண்டிருந்தது





என்னுடன் பயணித்த வங்காள எழுத்தாளரும் ,அவர் மனைவியும் வண்டியில் ஏறியதுமே நெடுநாள் பழகியவர்களைப் போல என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கி விட்டிருந்தார்கள்;வங்காளத்தின் எழுத்து பதிப்புச்சூழல்…அதே போலத் தமிழ்நாட்டின் சூழல் ,இன்றைய இலக்கியத்தின் போக்குகள் என்று பலவற்றையும் பேசிக்கொண்டு வந்தோம். தமிழக அரசியலின் தற்போதைய நிலவரத்தை அவர்கள் ஆவலோடு விசாரித்துக்கேட்டுக்கொண்டார்கள். மேற்கு வங்க ஆட்சியிலும் கூட லஞ்ச ஊழல் தலை விரித்தாடுவதாலேயே அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் அந்த ஊர்கள் இருப்பதை அவர்கள் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்கள்.


விமானம் உரிய நேரத்தில் வந்து சேர்ந்திருந்தால் மதியம் 1 மணிக்கே எங்கள் பயணம் தொடங்கியிருக்கும், வழியில் தென்படும் மலைக்காட்சிகளையெல்லாம் ஆற அமரப்பார்த்துக்கொண்டு செல்வதற்கு அவகாசம் இருந்திருக்கும் என்று என்னைப்போலவே புகைப்பட ஆர்வலராக இருந்த எழுத்தாளரின் மனைவியும் நானும் பேசிக்கொண்டோம்  மலை சார்ந்த அந்தப் பகுதியில் மாலை மங்கத் தொடங்கியிருந்தது.

காங்க்டாக் செல்லும் வழி மிக மிக அழகானது என இணையத்தில் பார்த்தது போலவும் படித்தது போலவுமான காட்சிகள் அதிகம்  தென்படவில்லை. [அதற்காகவே இணையத்திலிருந்து ஒரு காணொளியை எடுத்து இந்தப்பதிவின் அடியில் சேர்த்திருக்கிறேன்]

பொதுவாகவே கடும்பனிக்காலத்தில் மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது எழிலார்ந்த காட்சிகளைக் காண முடியாமல் நமக்குச் சோர்வுடன் கூடிய ஏமாற்றமே பெரிதும் எஞ்சுகிறது; பனியில் வெம்பிப்போய்க்  கருகிப்போயிருக்கும் இலைதளிர்கள் ,மழைத் துளிகளே காணாமல் அவற்றின் மீது அடர்த்தியாக அப்பியிருக்கும் பழுதி இவற்றை வடமாநிலங்களிலேயே அதிகம் காண முடியும்
[தில்லியில் இருந்தபோது அந்த வாடிய பயிர்கள் கண்டு வாடியிருக்கிறேன்]. 
வெயிலை மட்டுமே தினமும் குடித்து வரும்  ‘என்’னுடைய  தென்மதுரையில் கூட இந்த வகைச் செடிகொடிகளைப்பார்க்க முடியாது.

வெயில் சாய்ந்து கொண்டிருந்தது மட்டுமல்லாமல் மேக மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மலையடுக்குகள் மங்கலாகவே புலனாகிக்கொண்டிருந்தன.





என்னையும் அறியாமல் இலேசாகக் கண் அயரத் தொடங்கியபோது மாலை 6 45 அளவில் சிக்கிமின் எல்லையை எட்டியிருந்தோம்.
இப்போது நிலக்காட்சி மாறிப்போனதோடு நிலத்தின் தூய்மையிலும் மெருகேறியிருந்தது.

 ‘’இங்கே மக்கள் தொகை குறைவு,அதுவே காரணம் ’’என்றார் மேற்கு வங்கத்தை விட்டுத்தர மனம் வராத எழுத்தாளர்.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் கண்ணில் படாத அளவுக்குக் காரிருட்டு படர்ந்திருந்தது. இன்றென்னவோ வானத்தில் மிக நெருக்கமாய் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடப்பதைப்போல ஒரு கணம் எல்லோருக்குமே தோன்ற, சற்று நேரம் சென்ற பிறகுதான் கண்ணில் படாத இருளப்பிய மலை உச்சிகளிலும் சரிவுகளிலும் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகள் அவை என்பது அனைவருக்குமே உணர்வாயிற்று; ஒரு கணம் மதிமயங்கச்செய்து விட்ட அற்புத அனுபவம் அது.

பின்னும் அரை மணிநேரப்பயணத்துக்குப்பிறகு காங்க்டாக்கை எட்டினாலும் அங்கே நகருக்குளொரு சில வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் வேறொரு சிறிய வண்டியில் மூட்டைமுடிச்சுக்களோடு நாங்களும் ஏறிக்கொண்டு இரவு சரியாக எட்டு மணிக்கு மகாத்மாகாந்தி மார்க்கில் இருக்கும் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேஷி தலிக் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

வண்டியை விட்டு இறங்கியதும் நாம் இருப்பது இந்தியாவில்தானா அல்லது வேறெங்காவது வெளிநாட்டிலா எனத் திகைக்க வைத்தது மகாத்மா காந்தியின் மார்பளவுச்சிலையை முகப்பில் கொண்டிருந்த மகாத்மாகாந்தி மார்க் என்ற பெயரைத் தாங்கிய அந்த காங்டாக் வீதி. ஏதோ லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்தில் இருப்பது போன்ற உணர்வையும் கூடத் தோற்றுவித்த தெரு…!![சில மாதங்களுக்கு முன் அங்குசென்றிருந்ததால் ஒப்பிடத் தோன்றுகிறது] 

வழவழப்பான கற்பாளங்கள் பாவிய சுத்தமான சீரான சாலை; அதை இரண்டாகப்பிரித்து நடுவே உள்ள பகுதியில் மின் விளக்குக் கம்பங்கள், அவற்றில் தொங்க விடப்பட்ட வண்ண மலர்கள் தாங்கிய பூந்தொட்டிகள், ஓய்வாக உட்கார்ந்து பொழுதுபோக்க வசதியாக ஆசனங்கள். 

தென்னாட்டிலுள்ள கோடை கால சுற்றுலா ஊர்களைத்தவிர சிம்லா, நைனிடால், டல்ஹவுஸி போன்ற வடநாட்டு மலை ஊர்களையும் நான் பார்த்திருக்கிறேன்; சுத்தத்திலும் பராமரிப்பிலும் ஓரளவு சிம்லாவைப்போலவும் அதை விடச் சிறியதுதான் என்றாலும் இன்னும் சில மேலான அம்சங்கள் கொண்டதாகவும் இருப்பது  காங்க்டாக் என்பது முதற்பார்வையிலேயே புலப்பட்டு விட்டது.






வெளிப்பார்வைக்கு மிகச்சிறியதாய் ஏதோ ஒரு சத்திரத்துக்குள் நுழைவது போலத் தோன்றினாலும் உள்ளே பரந்து விரிந்த இட வசதிகளோடு  எளிமையும் வசதியுமாய் இருந்தது தேஷி தலிக் விடுதி. நுழைந்ததும் வரவேற்பு, இடப்புறம் மிகப்பெரிய உணவுக்கூடம்,அதை ஒட்டி அழகான திறந்த வெளி,அதைக்கடந்து உள்ளே சென்றால் லிஃப்டில் எல்லாத் தளங்களுக்கும் செல்லும் வசதி.

அன்று மாலையே டார்ஜீலிங்கிலிருந்து வந்து சேர்ந்து விட்டிருந்த நேபாளத் திறனாய்வாளரும் கவிஞருமான மோனிகா முகியாவுடன் அறையைப்பகிர்ந்து கொள்ளுமாறு வரவேற்பில் தெரிவிக்க நானும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டேன்; திருமணம் செய்து கொள்ளாத என் சம வயதுப்பெண்மணியான அவர் பழகுவதற்கு மிக மிக எளிமையானவரக இருந்தார். இரவு உணவை அவர் முன்பே முடித்து விட்டிருந்ததால் நான் என்னோடு வந்தவர்களுடன் இரவு உணவை முடித்துக்கொண்டேன்.

மோனிகாவுடன் இலக்கியம் குறித்து பொதுவாக சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபின்  உறங்க ஆயத்தமானேன்; தில்லியில் வசித்தபோது குளிரும் கடும் குளிரும் பழகிப்போயிருந்தன என்றாலும் நள்ளிரவுக்கு மேல் மலைக்குளிர் கடுமையாய்த் தாக்க எழுந்து போய்க் கையுறைகளை அணிந்து கொண்டு உறக்கத்தைத் தொடர்ந்தேன்.. 

இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி;
பாக்தோக்ரா-காங்க்டாக்-ஹெலிகாப்டர் பயணம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....