துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.7.09

''மாளாத காதல் நோயாளன்....''



சங்கச் சமுதாயத்தில் காதலையும் வீரத்தையும் முன் வைக்க மட்டுமே பெரிதும் பயன்பட்டு வந்த தமிழ் மொழி,பக்தியின் பரவசத்தையும் பாங்குடன் புலப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பது.

தீயினுள் தெறலாய்ப் பூவினுள் நாற்றமாய்...அறத்தினுள் அன்பாய்..மறத்தினுள் மைந்தாய் இறைவனின் தரிசனத்தைக் கண்ட பரிபாடல் காலம் தொடங்கித் தமிழின் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த புலவர்களும் இறை அன்பில், கடவுட்பற்றில் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் அழியாத இடம் பெறும் பாடல்கள் பலவற்றை , உள்ளாழத்திலிருந்து பொங்கிவரும் உண்மை உணர்வோடு ஊன் கலந்து, உயிர் கலந்து உருவாக்கியிருப்பவர் குலசேகர ஆழ்வார்.

சேர மன்னராய்க் கோலம் தரித்தபோதும்

’கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்’’


என்று அவற்றைத் துச்சமாய்க் கருதியபடி , திருவேங்கடச்சுனையில் மீனாய்ப் பிறக்க வேண்டுமென வேண்டிக் கொண்ட எளிமையான தொண்டர் அவர்.

வித்துவக்கோடு என்னும் சேர நாட்டு வைணவத் தலத்தில் வீற்றிருக்கும் திருமாலைப் போற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் அனைத்திலும் ஆன்மாவிற்கும், ஆண்டவனுக்கும் உள்ள உறவு - ஜீவாத்மாவிற்கும் , பரமாத்மாவிற்கும் உள்ள பந்தம் , உவமைகளால் வெளிச்சமிடப்படுகிறது.
அந்த உவமைகள் , வெறுமே சொற்களைத் தொடுத்துக்கொண்டு போகும் அலங்காரத் தோரணங்களல்ல;
நடைமுறை வாழ்வில் அன்றாடம் நாம் காணும் யதார்த்த உண்மைகள் அவை.
எளிய வாழ்வியல் செய்திகளை ஓவியமாய் வடித்துக் காட்டி , அவற்றின் வழி,அரிதான பரமநிலை அடைய வழிகாட்டும் அற்புதமான பாடல்கள் குலசேகரருடையவை.

மனிதனுக்கும்,கடவுளுக்கும் இடையிலுள்ள உறவை நோயாளிக்கும், மருத்துவனுக்கும் இடையிலுள்ள உறவாக எடுத்துரைக்கும் குலசேகரர் பாடல் ஒன்று....

’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே’’


புண்ணை ஆற்ற வேண்டுமென்பதற்காக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். காரமான மருந்துகளை வைத்துக் கட்டுகிறார். நோயாளி, வலி தாங்காமல், எரிச்சல் பொறுக்காமல் கத்துகிறான்;துடிக்கிறான். ஆனாலும் அதற்காக மருத்துவரை ஒதுக்கி விட முடிகிறதா என்ன ?
காயம் முழுமையாக ஆறி அவன் பூரண குணம் பெறும்வரை , மீண்டும் மீண்டும் ‘மாளாத காத’லுடன் அவன் நாடிப் போவது அந்த வைத்தியரைத்தான்.

இறைவனும் கூட ஒரு வகை வைத்தியன்தான்; பிறவிப்பிணிக்கு மருந்திடும் அற்புத மருத்துவன் அவன்.
மண்ணுலக வாழ்வில் மனிதன் செய்யும் கரும வினைகளால் மீளாத்துயர் வரும்போதெல்லாம் அவன் பற்றிக்கொள்ளும் ஒரே புகல் பரம்பொருள் மட்டுமே என்ற அழியாத உண்மையைக் கல்வெட்டாக உள்ளத்தில் பதித்து விடுகிறது இந்தப் பாசுரம்.

ஒரு தொடர் குறிப்பு:

இலக்கியம் படிப்பவர்கள்-உண்மையாகவே அதில் தோய்ந்து கலப்பவர்கள் -வாழ்வின் இனிய தருணங்களானாலும் , நெருக்கடியான சூழல்களானாலும் தங்களை இளைப்பாற்றிக் கொள்ளவும் களிப்பேற்றிக் கொள்ளவும் இலக்கியத்தின் துணையையே நாடுவதுண்டு;
இந்தப் பாடல் சார்ந்த அவ்வாறான சுவாரசியமான-சற்றுத் துன்பமான நிகழ்வு ஒன்று ,நான் ஆசிரியப் பணியில் இருக்கும்போது நேர்ந்தது.
முதலாம் ஆண்டு எம்.ஏ.தமிழ் மாணவியருக்கு இந்தப் பாடலையும், குலசேகரின் பெருமாள் திருமொழியிலிருந்து வேறு சில பாடல்களையும் அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்தேன்.
முதல் வரிசையில் அமர்ந்து இலக்கியப் பாடல்களை ரசித்துக்கேட்கும் மாணவி ஒருத்தி, சில நாட்களாய்க் கல்லூரிக்கு வரவில்லை.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டுக் கூட இருந்தாள் அவள் என்று நான் கேள்விப்பட்டேன்.

திடீரென்று இரண்டு நாட்கள் சென்றபின் அவளிடமிருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு.(அது செல்பேசி இல்லாத பொற்காலம்)

‘’அம்மா! அந்த ‘வாளால் அறுத்துச் சுடினும் ‘’பாட்டைக் கொஞ்சம் சொல்லுங்கம்மா எழுதிக்கிறேன் என்றாள் அவள்.

’’அதிருக்கட்டும்.அப்பா எப்படி இருக்கிறார்’’- இது நான்.

‘’அதுதாம்மா....சக்கரையாலே காலிலே சீழ் வச்சுப் புண்ணா இருக்கு. டாக்டர் ‘ஆபரேஷன்’செய்யணும்கிறார். அப்பத்தான் நான் டாக்டர் கிட்டே இந்தப் பாட்டைப் பத்திச் சொன்னேன். அவருக்குப் பாட்டை முழுசாத் தெரிஞ்சிக்கணுமாம்.சொல்லுங்கம்மா’’
என்று தன் கோரிக்கையைத் தொடர்ந்தாள் அவள்.

தந்தைக்கு நேர்ந்திருக்கும் சிக்கல்...மருத்துவமனைச் சூழல் என எல்லாவற்றையும் கடந்து - ஆனாலும் அதற்குள் தான் கற்ற இலக்கியத்தையும் முடிச்சுப்போட்டு மருத்துவரிடமும் அதைப்பகிரத் துடிக்கும் அந்தப்பெண்ணின் ஆர்வம்....இத்தனை நாள் ஆசிரியத் தொழில் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் ,வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதை விட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது.

‘’துன்பம் நேர்கையில் .....தமிழில் பாடி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’’என்ற பாரதிதாசனின் வரிகள் புதிய அர்த்தச் செறிவோடு மனதுக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்த அரிய நாள் அது.

கருத்துரை:
சுசீலா அம்மா,
கட்டுரை சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்
கமலம்

24.7.09

விருதுப்பகிர்வு



விருதுகளும் , பரிசுகளும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றனவேயன்றி அவை நம் செயல்பாட்டின் முடிந்த முடிவுகளல்ல.
முனைவர் திரு குணசீலன் அவர்கள் எனக்கு அளித்த பட்டாம்பூச்சி விருதை - அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்ட மதிப்பினால் மட்டுமே அளித்திருப்பதாக எண்ணி அதை ஏற்றுக் கொண்டபடி , தொடர்ந்த வலைப் பங்களிப்பில் முயன்று வருகிறேன்.

விருதை அளித்தபோது அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க , சிறந்த வலைப் பதிவர்களாக நான் கருதும் ஐவருடன் அவ் விருதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

அந்த ஐவர்......

1.திரு பென்னீஸ்வரன்:


ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல நல்ல படைப்புக்களையும் , அங்கதம் கலந்த பல சமூக, இலக்கிய விமரிசனங்களையும் எழுதி வருபவர் , புது தில்லியிலிருந்து வெளிவரும் 'வடக்கு வாசல்' மாத இதழின் ஆசிரியராகிய மதிப்பிற்குரிய திரு'யதார்த்தா' பென்னீஸ்வரன் அவர்கள். நவீனத் தமிழிலக்கிய முயற்சிகளுக்கும், நவீன நாடக நிகழ்கலை ஆக்கங்களுக்கும் இந்தியத் தலைநகரில் அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர்.

வலை எழுத்தில் என்னிலும் மூத்தவர்;அத் துறையில் கரை கண்டவர்;தொடக்கத்தில்'சனிமூலை'என்ற தலைப்பில் வலைப்பூ எழுதி வந்த அவர், தற்பொழுது தான் நடத்தி வரும் 'வடக்கு வாசல்' இதழுக்கான இணையத்திலேயே 'ராகவன் தம்பி பக்கங்கள்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

மதுரை மண்ணிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன் தில்லி வந்து தமிழ்த் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த எனக்குத் தமிழிலக்கிய ஆக்கங்களைப் பதிவு செய்யத் தன் 'வடக்கு வாச'லை விரியத் திறந்து வரவேற்ற நல்லுள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
அவர் கொண்டுள்ள தணியாத தமிழார்வத்திற்காகவும், அவரது தொடர்ந்த இணையச் செயல்பாட்டை மதித்துப் போற்றும் வகையிலும்...
விருதுகளையெல்லாம் கடந்து விட்டவர் அவர் என்றபோதும் என் எளிய சமர்ப்பணமாக....
பட்டாம்பூச்சிவிருதை அவருடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறேன்.

2.திருமதி திலகபாமா:


கவிஞரும் , விரசம் தவிர்த்த - ஆக்கபூர்வமான பெண்ணியப் படைப்பாளியுமான திருமதி திலகபாமா அவர்கள்,
கணவரின் மருத்துவப் பணிக்குக் கைகொடுக்கும் அதே வேளையில் தன் கவிதை மற்றும் எழுத்தார்வங்களையும் குன்ற விடாமல்,தன்னைத் தானே செதுக்கிச் சீரமைத்தபடி பல கவிதை நூல்களையும் , விமரிசன மற்றும் பயண எழுத்துக்களையும் உருவாக்கி வருபவர்; பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல மாநாடுகளில் பங்கேற்ற செழுமையான அனுபவம் கொண்ட திலகபாமா , நான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் வணிகத் துறை மாணவி என்பது எனக்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடியது.
'சூரியாள்', 'ஒளிக் கவிதை' ஆகிய இரு வலைப்பூக்களின் வழி இணையத் தமிழுக்கு வளம் சேர்த்து வரும் என் அன்பு மாணவிக்கு மன மகிழ்வுடன்
பட்டாம்பூச்சி விருதை அளித்துச் சிறப்பிக்கிறேன்.

3.கபீரன்பன்:

இணையத்தின் வழி எனக்கு அறிமுகமானவர்.இலக்கியம், ஆன்மீகம்,மருத்துவம்,இணையத் தொழில் நுட்பம் எனப் பல வகை ஈடுபாடு கொண்டிருக்கும் இவர் மைசூருவைச் சேர்ந்த ஒரு பொறியாளர்.

'தேடிவரும் தேன் சிட்டு' என்ற பெயரில் alt-webring.com , தான் வடிவமைத்திருக்கும் வலை சுற்றியில் என் வலைப்பூவைச் சேர்த்துக் கொண்டு பலரும் அதைப் பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு எனக்கு ஆலோசனை வழங்கியவர்.அவர் உருவாக்கியுள்ள அந்த வலைசுற்றி பற்றி அவரது சொற்களிலேயே சொல்வதானால்....
''தேன் சிட்டு- ஒரு வலை சுற்றி
தேன்சிட்டு நில்லாமல் பறப்பது. அடுத்து எந்த பூவிற்கு செல்லும் என்று திட்ட வட்டமாக சொல்ல முடியாது. Random movement. அதுவே அதன் அழகும் கூட.
இணையத்தில் வலைச் சங்கிலிகள் (web ring) உண்டு. அதனைத் தொடர்ந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வலைப்பக்கங்களை அடுத்தடுத்து காணலாம். அது வருகையாளர்களை வலைப் பக்கம் அதிகமாக்கப் பயன் படும். ஓவியம், இசை,ஆன்மீகம் போன்ற பலபிரிவுகளில் இது அதிகம் காணப்படுகிறது.
இந்த தேன் சிட்டைத் தொடர்வதன் மூலம் வாசகரும் பல வலைப்பூக்களை சுற்றி வரலாம்
!''

('தேடிவரும் தேன் சிட்டு'வலை சுற்றிக்கான வார்ப்புருவை என் வலையின் பக்க இணைப்பில் பார்க்கலாம்.)

தற்போது உலகநீதி மற்றும் முதுமொழிக் காஞ்சி இரண்டையும் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் Google Gadget வடிவில் இவர் தயாரித்து வருகிறார்.

தன் இணைய ஞானத்தைத் தமிழிலக்கிய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திச் சக பதிவர்களையும் ஊக்குவித்துவரும் திரு கபீரன்பன் 'கபீரின் கனிமொழிகள்' ,'சித்திரமும் கைப் பழக்கம்','கற்கை நன்றே' என்று மூன்று வலைப்பூக்களை ஒரே நேரத்தில் எழுதிவருபவர்.
அயராத ஊக்கத்துடன் நாளும் நாளும் செயல்பட்டுவரும் திரு கபீரன்பன் அவர்கள் முன்பே ஒரு முறை வலைப் பதிவர்களுக்கான பட்டாம்பூச்சி விருதைப் பெற்றிருந்தபோதும் ,மூன்று வலைப்பூ எழுத்துக்களிலும் தமிழிலக்கிய விட்ஜெட்டுக்களை வடிவமைக்கும் அரிய தொழில் நுட்பத்திலும் முனைந்திருக்கும் அவருக்கு மற்றுமொரு முறை அந்த விருதை வழங்குவதில் தவறில்லை ,அது அவருக்கும் விருதுக்கும் மேலும் பெருமை சேர்ப்பது எனக் கருதிப்
பட்டாம்பூச்சிவிருதைத் திரு கபீரன்பனுக்கு வழங்கிப் பாராட்டுகிறேன்.
எழுதி வருபவர்.

3.கமலாதேவி அரவிந்தன்:



சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் , எனக்கு வலைப் பரிமாற்றங்கள் வழி அறிமுகமானவர். பழகிய சில நாட்களிலேயே தனது அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் தனது மின் அஞ்சல்கள் வழியே எனக்கு அளித்து வரும் இவர் 'கமலகானம்' என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருபவர்.
சிங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனி முத்திரை பதித்து வரும் 'மலையாளச் சேச்சி' இவர்.
தாய்மொழியை மலையாளமாகக் கொண்டிருந்தபோதும் , தமிழ் மீதும் தணியாத ஆர்வம் கொண்டு , இரு மொழிகளிலும் சிறுகதை,நாவல் படைப்புக்கள்,மொழியாக்கங்கள்,ஆய்வுக் கட்டுரைகள்,நாடக நிகழ்கலைஆக்கங்கள் எனப் பல துறைகளிலும் முனைப்போடு தீவிரமாக இயங்கி வருபவர்.
தான் ஈடுபட்டுள்ள துறைகளில் குறிப்பிடத்தக்க பல விருதுகளையும், பரிசுகளையும் ,பாராட்டுக்களையும் பெற்றுள்ள -இன்னும் நேரில் காணாத -இந்த அன்புத் தோழிக்கு என் சார்பில் -அவரது சிறந்த இணையப் பங்களிப்புக்காகப்
பட்டாம்பூச்சி விருதை அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.


5.திருமதி கோமதி நடராஜன்:


வலை வழி இவர் எனக்கு அறிமுகமானபோதும் , எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி .தன் இளமையில் எழுதாமல் விட்டதையெல்லாம் சேர்த்து இப்பொழுது எழுதி,'வள்ளுவம்' என்ற தன் வலையில் பதிவு செய்து வருபவர்.
கல்லூரி நாட்களில்தன்னுள் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தாயைத் துயில் கலைத்து (இவை அவரின் சொந்த வார்த்தைகள்) வெள்ளமெனப் பொங்கி வரும் தன் கற்பனைக்கும், எழுத்துக்கும் வலையை வடிகாலாக்கிக் கொண்டிருப்பவர்.
மூத்த குடிமக்களுள் ஒருவரான இவரது தமிழ்ப் பற்றையும், படைப்பார்வத்தையும் பாராட்டும் வகையில்
'பட்டாம்பூச்சி' விருதை இவருக்கு அளித்துப் பாராட்டுகிறேன்.

பி.கு. :
வலை வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
விருது பெற்ற ஐவர் குறித்த அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அவர்களது வலைத் தளங்களுக்கு வருகை புரிந்து கருத்துரை இடுவதே அவர்களை மகிழ்வடையச் செய்யும்..

18.7.09

வலைக்கு ஒரு அன்பான அங்கீகாரம்

முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ் .ஆர் கலை அறிவியல் கல்லூரி , திருச்செங்கோடு ,
நாமக்கல்மாவட்டம்.
http://gunathamizh.blogspot.com/இரண்டு நாட்களுக்கு முன் கீழ்க் கண்டவாறு எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி வைத்திருந்தார்.

''தங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டி
தங்களுக்குப் பட்டாம்பூச்சி விருதினை அளித்துள்ளேன்
(http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_16.html )
இவ்விருதினைத் தங்கள் வலைப்பதிவில் இட்டுக்கொள்ளவும்...
சிறப்பான வலைப்பதிவராகத் தாங்கள் கருதும் ஐவருக்கு இவ்விருதினை அளித்து அவர்களின் பணியைப் பாராட்டுங்கள்.....
நன்றி
தொடர்க தமிழ்ப்பணி...''
(திரு குணசீலனின் கடிதம்)

அதைக் கண்டதும் எனக்கு ஒரு வகையான கூச்சமே மேலோங்கியிருந்தது. நான் கடந்த ஒன்பது மாதங்களாகத்தான் வலை எழுத்தில் ஈடுபட்டுத் தனியே நீச்சலடித்துக் கரையேற முயன்று கொண்டிருக்கிறேன்.இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளும், பதிவு செய்தாக வேண்டிய கருத்துக்களும், கடக்க வேண்டிய தூரமும் நிறைய உள்ளன. எனினும் என் தமிழ் மீது கொண்ட அன்பாலும் மதிப்பாலும் அவர் தர முன் வந்திருக்கும் கௌரவத்தை மறுக்க மனம் வராததால் - முனைவர் திரு குணசீலனுக்கு என் நன்றிகளைக் கூறி அவரது வேண்டுகோளை ஏற்கிறேன்.அவர் அளித்த 'பட்டாம்பூச்சி' விருதினையும் வலையின் ஒரு பகுதியில் வெளியிடுகிறேன்.
த்மிழரசி என்னும் வலைப்பதிவர் தனக்களித்த இப்பெருமையினை மேலும் ஐவருக்குத் தான் அளிக்க முன் வந்திருக்கிறார் திரு குணசீலன்.
இவ்வாறு வலைப் பதிவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்குவித்துக் கொள்ளக் கையாளும் இவ் வழிமுறைகள் ஒருபுறமிருக்க..., நல்ல தமிழை, தமிழ் இலக்கியத்தை...விமரிசனத்தை வளர்த்துச் சமூகத்திற்கு ஆக்கம் தரும் ஊடகமாக இணையம் திகழ வேண்டும் என்பதே என் அவா.
பி.கு.
(திரு குணசீலன் எனக்களித்த இந்தப் பெருமையினை அவர் வழியில் நானும் வேறு ஐவருக்கு விரைவில் வழங்குவேன்).

17.7.09

காற்றில் கலந்த 'கானக்குயில்'



சங்கீத ஜாம்பவான்கள் பலராலும் 'பாட்டம்மாள்' என்று பாராட்டப்பட்ட திருமதி டி.கே. பட்டம்மாள் இன்று நம்மிடையே இல்லை.

இந்தியா சுதந்திரம் அடைவதற்குச் சற்று முன்பும் சுதந்திரம் அடைந்த அண்மைக் காலத்திலும் சிறு குழந்தைகளாக இருந்த தலைமுறையைச் சேர்ந்த பலரும் பட்டம்மாவின் பாட்டைக் கேட்டே பாரதியைப் பழகிக் கொண்டவர்கள்.
பாரதியின் 'கொட்டு முரசு ', அவரது கனத்த...கனிவான சாரீரத்தில் வீரியம் பெற்றுச் சிலிர்த்தெழும். 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே'என்று அவர் ஆனந்தத்தோடு இசைக்கும் பாடல் பாரதியின் தீர்க்க தரிசனக் கனவுகளை அப்பட்டமான நிதரிசனமாக மனக்கண் முன் கொண்டுவந்து சேர்க்கும். 'தாயின் மணிக் கொடி 'அவரது கம்பீரக்குரலில் பட்டொளி வீசிப் பறக்கும்.
எல்லாத் துறைகளையும் போலவே ஆணாதிக்கம் கோலோச்சிய ஒரு காலகட்டத்தில், சங்கீத மும் மூர்த்திகளைப் போலச் சங்கீதப் பேரரசிகளாகத் திகழ்ந்தவர்கள் எம். எஸ், எம்.எல். வி, பட்டம்மாள் ஆகிய மூவரும்.
பட்டம்மாள் பாடிய இசைத் தட்டின் மேலட்டையில் அவரது புகைப்படத்தை வெளியிடக்கூட அனுமதியளிக்க மறுத்த ஆசாரக் குடும்பப் பின்னணி அவருடையது என்று ஒரு செய்தித் தாளில் இன்று படித்தேன்.அப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் இருந்தபடி மேலெழுந்து உயர்ந்த அவரது சாதனை , உறுதியாகக் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.
பட்டம்மாளின் பாட்டை ரசிக்கக் கர்நாடக இசை நுணுக்கங்கள் பற்றிய அறிவோ,தெலுங்குக் கீர்த்தனைகளைப் புரிந்து கொள்ளும் திறனோ கூடத் தேவையில்லை.அப்படிப்பட்ட ஞானம் இல்லாதவர்களையும் கூடத் தன் தமிழிசை வாயிலாகவும் , மெல்லிசை மற்றும் திரையிசை வாயிலாகச் சென்று அவர் பாடல்கள் எட்டியிருக்கின்றன. காதில் தேன் பாய்ச்சும் மதுரமான இசையை ஊனுருக அளித்து உயிருருக நெகிழ்த்தி இசை என்ற சுகமான போதைக்குள் ஆழ்த்தியிருக்கின்றன.

''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை''

என்று கண்ணதாசன் பாடிச் சென்றது போலப் பட்டம்மாளின் தூல உடல் மறைந்தாலும் அவரது இசை , ஏதோ ஒரு வடிவில்....அவரது சிஷ்யைகளின் பாடல்களிலும்....அவரது பேத்தி நித்யஸ்ரீயின் எடுப்பான குரல் வளத்திலும் ....அவரது பழைய ஒலி நாடாக்களிலும் சுற்றிச் சுழன்று கொண்டுதான் இருக்கும்.
பிரபஞ்சப் பேரண்டத்தின் காற்றலைகள் முழுவதும் விரவி வியாபித்து என்றென்றும் நித்தியத்துவம் பெற்றுவிட்ட அந்த அமரக்குரலுக்கு என்றும்...எப்போதும் அழிவில்லை.

14.7.09

படித்ததில் ரசித்தது.........

''சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது''

-பிரமிள்

''அள்ளிக் கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலைபுரளும் அதில்
கைநீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில்
எது என் நீர்''

-சுகுமாரன்

''தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது
இரண்டு நாட்களாகவே எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை''

-வண்ணதாசன்

''செயலின் உச்ச கட்டம் செயலின்மை; பேச்சின் உச்ச கட்டம் மௌனம்; வில் வித்தையின் உச்ச கட்டம் வில்லை எய்யாமல் இருப்பதுதான்''-ஒரு 'ஜென்'கதையிலிருந்து...

''கலைஞனின் திட்டங்களை மீறிப் படைப்பு அவனை அழைத்துக் கொண்டு போகும் இடம்தான் படைப்பின் உச்சம்''
-ஓவியர் மணியம் செல்வன்

''மொழியைப் படைப்பு மொழியாக மாற்றுவதற்கு மொழியை மீட்டியபடியே இருக்க வேண்டும். பல்வேறு விதமாக மொழியைச் சுருதி கூட்ட வேண்டும். ஒரு தருணத்தில் அக மனதின் சுருதியும் , மொழியின் சுருதியும் ஒன்றாகின்றன.
அகமனதின் அலைவரிசைக்கும், மொழியின் அலைவரிசைக்கும் இடையே இசைவு ஏற்பட்டால்தான் படைப்பு உருவாக முடியும்''

-ஜெயமோகன்

7.7.09

தேவந்தி - 3

தேவந்தி -2 இன் தொடர்ச்சி
தேவந்தியை நெருங்கி வந்து அவளை ஆரத் தழுவிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி. ஆயிரம் அர்த்தச் செறிவுகளை அடக்கியிருந்த அந்தக் கண்ணீர் ...தனக்கானதா அல்லது தேவந்திக்கானதா என்பதை அவளே அறிந்திருக்கவில்லை. தேவந்தி அவளை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

''உன் உள்ளம் புரிகிறது கண்ணகி ! நீயும் உன் கணவரைப்பார்த்து வினாக் குறியாகக்கூட ஒரு பார்வையைப் படர விட்டிருக்காதவள்தானே...?என்ன செய்வது ? இது இந்த யுகத்தின் சாபம். சரி. மீதியையும் கேட்டுவிடு.''

''நாங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம் . ஒருவர் நிழல் கூட அடுத்தவர் மேல் படாமல் எட்டாண்டுக் காலம் உலகத்தின் பார்வைக்கு நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்....அவர் உற்றார் , உறவினருக்கு உறுதுணையாக உதவினார்... ; கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றுச் சான்றோனென்று பெயரெடுத்தார் ; குலத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து ...கோலோச்சி உயர்ந்தார் ;...இப்படி...என்னைத் தவிரத் தன்னைச் சுற்றிக்கூடியிருந்தோரையெல்லாம் பலமுகம் காட்டிப் பதமாகக் குளிர்வித்தார் ; பெற்றோரின் காலம் முடிந்தது ; மாலதியும் மரணமடைந்தாள் ; அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் முறைப்படி கழித்த பிறகு ..., மெதுவாக என்னை நாடி வந்தார்...என்னிடம் முதலும், கடைசியுமாக அவர் பேசிய சந்தர்ப்பம் அது ஒன்றுதான் !

''நான் யார் என்பதை நீ அறிய மாட்டாய் தேவந்தி !என் மூவா இள நலத்தை உள்ளபடி நான் காட்டினால் ...அதைப் பொறுக்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை . நான் தான் பாசண்டச் சாத்தன். மாலதியின் பழி துடைக்கவே, மறைந்த குழந்தையின் உருவில் நான் குடி புகுந்தேன். அவளுக்காகவே மனிதப் பிறப்பெடுத்த நான் , மனித வாழ்வின் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்....இனிமேல் நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ !அந்த மகிழ்ச்சியோடு எஞ்சிய உன் வாழ்நாளைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்.''

- இந்த வாசகத்தோடு என் வாழ்க்கையிலிருந்தே விடைபெற்று அவர் அகன்று போனார். வேரற்ற மரமாக நான் விழுந்து கிடந்த நாட்கள்...நீண்டு கொண்டே போன அந்தக் காலகட்டத்தில்தான் என் அறிவில் படிந்திருந்த மாயத் திரைகளெல்லாம் ...படிப்படியாக விலகிக் கொண்டே வந்தன....அது வரையில் புலப்பட்டிருக்காத புதிர்களின் முடிச்சுக்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து கொண்டே வந்தன.நான் ...தெளிந்தேன்..! என் கணவர் கடவுளில்லை ! மனித மனத்தின் கண நேரத் தடுமாற்றத்தால் அவ்வாறு ஆக்கப்பட்டவர் ! அவர் புனிதரில்லை. தாயின் மூளைச் சலவையால் இக வாழ்விலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்ட ஒரு மனிதர்தான் அவர்..!''

''இந்த அளவு யோசித்து வைத்திருக்கும் நீ ...உன் கணவர் திரும்பி வர வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்பதாக ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை தேவந்தி !''

''நான் தான் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டேனே கண்ணகி ! ஊராரின் கண் முன்னால் நான் போடும் வேடம் அது ! கண்ணகி ! நீ அருக (சமண) சமயத்தைச் சேர்ந்தவள்.இப்படிச் செய்வதையெல்லாம் ஒரே வார்த்தையில் 'மடமை' என்று சொல்லி விலக்கி வைத்து விட உன்னால் முடியும் ! ஆனால் .. என் பிறப்புப் பின்னணி அவ்வளவு எளிதாக என்னை விட்டு விடாது .தீர்த்த யாத்திரை சென்றிருக்கும் கணவன் நலமுடன் திரும்ப வேண்டும் என்று வழிபடாமல் நான் சும்மா இருப்பதை அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அந்த வகையான நிந்தனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் நான் இப்படி நெஞ்சறிந்து பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ! இந்த உலகத்தவர்களின் நாக்கு இருக்கிறதே ...அது ...பிளவுபட்டுக் கிடக்கும் அந்த ஆதிசேஷப் பாம்பின் நாக்கை விடவும் கூடுதலான நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது. கண்ணகி ! கோவலன் , மாதவியை நாடிச் சென்றிருப்பது , கலை மீது கொண்டிருக்கும் காதலால்தான் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும் ! ஆனால் உன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதைப் போல நரம்பற்ற நாவினராய் இந்த ஊரார் பேசவில்லையா? ''

- கண்ணகி ,தாளாத துயரத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவள் முகத்தைச் சற்றே உயர்த்திய தேவந்தி...அங்கே அரும்பியிருந்த கண்ணீர் முத்துக்களைத் தன் விரலால் சுண்டி விட்டாள்.

''இப்படி நாமெல்லம் கண்ணீருக்குள்ளேயே கரைந்துபோய் விடுவதனாலேதான் சில கேள்விகளைக் கேட்காமலே விட்டு விடுகிறோம் ! அப்படி நான் கேட்கத் தவறிய ஒரு கேள்வி ...என் உள்ளத்துக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லும் பகலும் என்னைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது .''

-அது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன் விழிகளை அகல விரித்தாள் கண்ணகி.

''மனிதக் கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா...இல்லயா ? அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் ?...மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை ? இதையெல்லாம் அவரிடம் கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி ! இந்தக் கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் !''

-அத்தனை நேரமும் , வேறு யாருடைய கதையையோ சொல்வதைப் போல் நிதானமாகச் சொல்லிக் கொண்டுவந்த தேவந்தியின் குரல் ...அந்தக் குறிப்பிட்ட கணத்தில் உடைந்து சிதறத் தொடங்கியது. உடனேயே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டுவிட்ட அவள் ..ஆவேசமான குரலில் சூளுரைப்பதைப் போல் ஒரு பிரகடனம் செய்தாள் !

''ஆனால் இந்தக் கதை ..இந்தத் தேவந்தி ஒருத்தியின் வாழ்க்கையோடு முடிந்து விடப்போவதில்லை ! இனி வரும் காலங்களிலும் வேறு ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடரத்தான் போகிறது . அப்போது ..இன்றில்லை என்றாலும் ..என்றோ ஒரு நாள் ..ஏதாவது ஒரு யுகத்தில் நான் அந்தக் கேள்விகளைக் கேட்காமல் நான் விட்டுவிட மாட்டேன் ! இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை ...நிச்சயம் நான் நிகழ்த்திக் காட்டத் தவற மாட்டேன் கண்ணகி !''

காலம் , தன் மீது உழுது விட்டுப் போயிருக்கும் பதிவுகளைச் சுமந்தபடி ...யுகங்களின் இருள் படர்ந்த கணங்களின் ஊடே ...மெள்ள ஊர்ந்து பயணிக்கத் தொடங்கினாள் தேவந்தி.

4.7.09

தேவந்தி -2

தேவந்தி - 1 இன் தொடர்ச்சி

'குறுகுறு நடந்து ...சிறுகை நீட்டி ..இட்டும் தொட்டும் , கவ்வியும் ..துழந்துமாய் ..அந்தப் பிஞ்சுக் குழந்தை தரும் பிள்ளை இன்பத்தில் தன்னை மறந்து லயித்துக் கிடந்தாள் மாலதி.மயங்க வைக்கும் அந்த மழலைச் செல்வத்திற்கு முன்னால் தன் கணவர் மறுமணம் செய்து கொண்ட துயரம் கூட அவளைப்பெரிதாகப் பாதிக்கவில்லை.

அவள் மடியில் கிடந்த அந்த மகவு சிணுங்கியது; கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதது ;துணி விரிப்பில் அதைக் கிடத்தி விட்டுச் செம்பில் பாலும் , வெள்ளிச் சங்கும் எடுத்து வந்த மாலதி குழந்தையை மடியில் கிடத்திச் சங்கில் பால்புகட்டத் தொடங்கினாள். அதன் தாயும் , அவளதுகணவரும் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.

'இந்தப் பாவியைக்குடல் விளக்கம் செய்ய ஒரு மகள் ஜனிக்காமல் போனால்தான் என்ன ?நான் தான் பத்துத் திங்கள் சுமக்காமல்...பிள்ளைவலி என்னவென்றே தெரியாமல் இந்தக் குழந்தைக்குத் தாயாகி விட்டேனே..? நல்ல வேளையாக ...இவ்வாறு நான் குழந்தையைப் பார்த்துக் கொள்வதை அவள் தவறாக எண்ணவில்லை. ஒருக்கால் கணவரோடு கூடச் சேர்ந்து , நினைத்த நேரத்தில் , நினைத்த இடங்களுக்குச் சென்றுவர இது வசதியாக இருப்பதாகக் கூட அவள் எண்ணிக் கொண்டிருக்கலாம்...சரி! அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே ! அதைப் பற்றி எனக்கென்ன வந்தது ?மடியை நிறைத்துக் கிடக்கும் இந்த மழலையைப் பார்த்தபடியே என் பொழுதை ஓட்டி விடலாமே..?''

ஏதேதோ எண்ணங்களில் மிதந்தபடியே அவள் பாலைப் புகட்டிக் கொண்டிருந்தாள். திடீரென்று , சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் குழந்தையிடமிருந்து ஒரு செருமல் ! புரையேறி மூச்சு அடைத்துக் கொண்டுவிட்டதைப் போல ஒரு திணறல்..! செய்வதறியாமல் அவள் திகைத்து நின்ற அந்த ஒரு நொடிக்குள் குழந்தையின் தலை துவண்டு சரிய , அது இறந்து விட்டதாகவே முடிவு கட்டிக் கொண்ட மாலதி....,பிரபஞ்ச சோகம் முழுவதையும் ஒன்றாக உள்ளடக்கி ஓலமிட்டாள்.

குழந்தையை இழந்து விட்ட அவலம் ஒரு புறமும் , மாற்றாளின் மகவைச் சாகடித்துவிட்ட பழிச் சொல் மறுபுறமுமாய்ப் பதை பதைத்து நடுங்கியது அவள் உள்ளம் ! அண்டை அயலாரிடம் ஆலோசனை கேட்கப் போய்..அந்தச் செய்தி அனைவருக்கும் அஞ்சலாக்கப்படுவதிலும் அவளுக்குச் சம்மதமில்லை.

சேலைக்கிழிசல் ஒன்றில் குழந்தையைப்பொதிந்து தோளில் கிடத்தியபடி...பூம்புகார் நகரத்திலுள்ள இந்திரக் கோட்டம் தொடங்கி , வேற்கோட்டம், நாகர் கோட்டம் என அங்குள்ள கோயில்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வலம் வரத் தொடங்கினாள் மாலதி. அங்கிருந்த தெய்வ சன்னிதிகளின் முன்னிலையில் குழந்தையக் கிடத்தி மனதுக்குள் கதறினாள். குழந்தை இன்னும் கூடப் பேச்சு மூச்சு இல்லாமல்தான் கிடந்தது.

மாலதியின் உள்ளுணர்வில் ..அவளது குலதெய்வமான பாசண்டச் சாத்தனின் உருவம் திடீரென்று மின்னலடிக்க ...அங்கே சென்று பாடு கிடக்கலாம் ...அந்தக் கடவுள் முன்பு பழியாய்க் கிடக்கலாம் என்று எண்ணியவளாய் , அலறிப் புடைத்தபடி... அங்கமெல்லாம் அலுங்கிக் குலுங்கக் கோயிலை நோக்கி ஓட்டமும் , நடையுமாய் அவள் செல்லத் தொடங்கினாள். நகரத்திற்கு வெளியே ..எங்கோ தொலைதூரக் காட்டுப் பகுதியில் இருந்த அந்தக் கோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்த அவள் ,அதன் முற்றத்திலேயே குழந்தையோடு மயங்கிச் சரிந்தாள்.

தன் நினைவு தவறிக் கிடந்த மாலதியின் ஆழ்மனதிற்குள் ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தான் பாசண்டச் சாத்தன். ஒரு நேரம் அவளுக்குள் விசுவ ரூபம் எடுத்து விண் முட்ட வளரும் அவன் , அடுத்த கணத்திலேயே அழகுக் குழந்தையாகித் தவழ்ந்து தளர் நடையிட்டபடி ..அவள் மடி தேடி ஓடி வந்து விடுவான்.ஒரு நிமிடம் தெய்வமாக ஆசி வழங்கும் அவன் , அடுத்த நிமிடத்திலேயே மண்ணளைந்த கையோடு ...மிரண்டு போன பாலகனாக அஞ்சி வந்து அவள் முன்பு நின்று விடுவான். அவன் தெய்வமா...? இல்லை தெய்வக் குழந்தையா..?

மயக்கம் முழுதுமாய்த் தெளிந்திராத மாலதி ..சாத்தனின் திரு உருவச் சிலைக்குமுன்னால் அரைகுறையாகக் கண் விழித்தாள்....

'என்ன இது...சிலை வடிவத்தில் சாத்தனின் முகம் என் கண்ணுக்குத் தெரியவில்லையே ..?அங்கே எனக்குத் தட்டுப்படுவது ...என் குழந்தையின் முகமல்லவா..?'

எங்கிருந்தோ ஒரு குழந்தையின் முனகல் ஓசை ...மெதுவாய்...மிக மெதுவாய்க் கேட்கச் சாத்தனின் முகத்திலிருந்து மெள்ளத் தன் பார்வையை மீட்டுக் கொண்டாள் மாலதி. கோயில் முற்றத்தில் அவள் கிடத்தியிருந்த குழந்தை...கை, கால்களை உதைத்தபடி , சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.அதை அள்ளி எடுத்துக்கொண்ட அவள் அதன் காதுகளில் ஓதினாள் 'நீ....குழந்தை இல்லை..கண்ணே ..நீ என் தெய்வம்..'
.............................................

''அந்தக் குழந்தைதான் என் கணவர்''என்றபடி கதைக்குச் சற்று இடைவெளி விட்டாள் தேவந்தி.

''அப்படியென்றால் உன் கணவர் உருவில் உருவில் பாசண்டச் சாத்தனா...?''

''அப்படி யார் சொன்னது..?அது என் மாமியார் அவளாகவே ஏற்படுத்திக் கொண்ட மனப்பிரமை! அது அவள் கொண்ட மன மயக்கம்! குழந்தையைச் சாகடித்துவிட்ட பழி , தன் மீது விழுந்து விடுமோ என்ற பதட்டமான உணர்ச்சியின் பிடியில் அவள் சிக்கியிருந்த நேரத்தில் , பால் விக்கியதால் பாலகன் சோர்ந்திருக்கிறானா ...அல்லது உண்மையிலேயே அவன் மாண்டு விட்டானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட அவளுக்குத் தோன்றாமல் போயிருக்க வேண்டும் ! குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடிய ஓட்டத்திலும் , அதைப் போட்டுக் குலுக்கி எடுத்ததிலும் அதற்கு ஏற்பட்ட விக்கலும் மூச்சுத் திணறலும் இயல்பாகவே சீராகி விட்டிருக்கிறது ! அப்படித்தான் அது நடந்திருக்க வேண்டும் ! ஆனால் இறுதி வரை அவள் அப்படி நினைக்கவே இல்லை .தான் உறுதியாக நம்பிய கடவுளின் அருளால்தான் மகன் பிழைத்தான் என்று பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல எண்ணக் கூட அவள் தயாராக இல்லை. குழந்தை முதலிலேயே இறந்து போய் விட்டது என்றும் , பிறகு அதற்குள் உயிராக வந்து உலவியது தன் இஷ்ட தெய்வம்தான் என்றும் அவள் திட்ட வட்டமாக முடிவு கட்டிக் கொண்டு விட்டாள். ஆனால் கணவரிடமும், மாற்றாளிடமும் அதைச் சொல்லித் தன்னையே காட்டிக் கொடுத்துக்கொள்ளும் துணிச்சலும் அவளிடம் இல்லை ! அதற்கு மாறாகக் குழந்தையோடு தனித்திருக்கும் தருணங்களிலும் ...வாய்ப்பு நேரும்போதெல்லாம் அதன் அசாதாரணத் தன்மையை அந்தப்பிஞ்சு மூளைக்க்குள் அவள் செலுத்திக் கொண்டே இருந்தாள்.....

'இதனால் பாதிக்கப்பட்டவர் என் கணவர்தான் ! மானுடத்திற்கும் , அமானுஷ்யத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்திலேயே வளர்ந்து வாலிபரானார் அவர். சராசரி மகனாகத் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய யதார்த்தக் கடமைகள் ஒரு புறம் ! தெய்வீகமான தன் புனிதம் கறைப்பட்டு விடாமல் காத்துக் கொண்டு விட வேண்டுமென்ற இடைவிடாத போதனை மற்றொரு புறம் ! அவரது லௌகீக வாழ்வின் தவிர்க்க முடியாத திருமணக்கட்டத்தில் நான் அவரோடு இணைந்தேன். மணமேடையைத் தீவலம் வரும்போது என்னைப் பற்றிய அவரது கரங்கள் ...தொடர்ந்து நாங்கள் மண வாழ்க்கை நடத்திய எட்டாண்டுக் காலத்தில் என்னைத் தீண்டியதே இல்லை. அது ஏன் என்பது ...அப்போது எனக்கு விளங்கியிருக்கவில்லை.அப்படிப்பட்ட கேள்விகளை அவரிடம்கேட்க நான் வளர்ந்த சூழல் என்னை அனுமதிக்கவும் இல்லை.''

(தேவந்தி -2 இன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....