நவீனப் பெண் கவிதைகளில் பெண்மொழி அமைந்துளள தன்மையை மூன்று வகைப் போக்குகளாய்ப் பகுத்துக் காணலாம்.
-மரபு சார்ந்த நெருக்குதல் தாங்க முடியாமலிருப்பதை ஆற்றாமையாய்,வலியாய்-சில வேளைகளில் விமரிசனமாய் வெளிப்படுத்தல்.
-மரபுச் சிறையிலிருந்து வெளிப்பட்டாக வேண்டுமென எழுச்சி கொள்ளல்
மரபுத் தளைகளின் நெருக்கடி;
பெண்ணின் சுதந்திரமான சிந்தனை மீது வன்முறையாகத் திணிக்கப்படும் வரையறைகளை,
‘’வரையறுக்கப்பட்ட எல்லையில் விரிகிறது என் சிந்தனை
நிமிர்ந்தால் தலைதட்டி அமர்த்தும் என் வானம்
நடக்கும் திசையெல்லாம் முட்ட நேர்கிற சுவர்கள்
.....நானொரு சமாதியுள் நிறுத்தி வைக்கப்பட்டு...’’
என்று வரிசைப்படுத்துகிறார் சே.பிருந்தா.
பெண்ணுக்கு மனம் என்று ஒன்று இருப்பதே கருத்தில் கொள்ளப்படாமல் அவளை வெறும் ஓர் உடலாகவும்,வீட்டு வேலைக்கான கருவியாகவும் மட்டுமே கருதும் சமூக மனப்போக்கை
‘’எனக்கு
முகம் இல்லை...இதயம் இல்லை..ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்...நீண்ட கூந்தல்
சிறிய இடை..பருத்த தொடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்...படுக்கையை விரித்தல்
குழந்தையைப் பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்’’
என்று துணிச்சலுடன் விமரிசனம் செய்கிறது ஈழப் பெண்கவிஞர் சங்கரியின் கவிதை...
இல்லம் சார்ந்த பங்குநிலை மட்டுமே பெண்ணுக்கு முதன்மைப் படுத்தப்படுகையில்,தனிப்பட்ட சிறு சிறு விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதும் கூட அவளுக்குக் கடினமாக உள்ளதென்பதை
‘’என் டைரியின் பக்கங்கள்
சுயநலமற்றவை
எனக்கு இடமளிக்க மறுக்கும்
என் டைரியில்
எனது முகவரியை
இப்போது நான் தேடியபடி..’’
என்று வெளிப்படுத்துகிறார் சுகந்தி சுப்பிரமணியன்.
பெண்ணின் வெளி வீடு மட்டுமே என்ற குறுகிய வரம்புக்குள் சமுதாயம் அவளை அடைத்தபோது,அந்த எல்லையை மீறிக்கொண்டு,வரம்புகளை உடைத்துக் கொண்டு,கல்வியாலும்,தனித்துவ ஆளுமையாலும் அழுத்தங்களை மீறி வந்துவிட விரும்பும் பெண்ணின் போராட்டத்தையே இக் கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.வெறும் அழுகை என்றோ,புலம்பல் என்றோ ஆற்றாமை,ஏக்க முனகல் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்தரங்க டைரிக் குறிப்புகள் என்றோ எளிதில் ஒதுக்கி விட முடியாதபடி பெண் சார்ந்த விமரிசனங்களை இவை உறுதியாய் முன் வைக்கின்றன.தன் இருப்புச் சார்ந்த கேள்விகளுடனும்,முரண்களுடனும் இயங்கும் பெண்,தன்னை முற்றிலுமாக இச் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளாமல் - ஒரே வேளையில் அமைப்பின் குரலாகவும்,அதற்கு எதிரான குரலாகவும் ஒலிப்பதன் வெளிப்பாடுகளாகவே இக் கவிதைகள் அமைந்திருக்கின்றன.
சிறை மீட்சிக்கான எழுச்சி;
பெண்ணின் சுதந்திரமான இயக்கத்தை முடக்கும் காரணிகளை முன் வைப்பதோடு,அவற்றிலிருந்து விடுபட்டுத் தனித்துவமுள்ள மனிதப் பிறவிகளாக அவர்கள் தம்மைத் தாமே உணரத் தொடங்க வேண்டுமென்றும் அதற்கான அங்கீகாரத்தைச் சமூகம் அவர்களுக்கு அளிக்க வேண்டுமெனவும் எடுத்துரைக்கும் பெண்கவிதைகளும் இன்றைய கவிதைப் பரப்பில் குறிப்பிடத்தக்கவை..
பிறரைச் சார்ந்தவர்களாகவும்,பிறரைக் களிப்பூட்டும் அழகுப் பொருட்களாகவும் மட்டுமே வாழ்ந்த காலம் மாறி வருவதை உணர்ந்து விட்ட பெண்கள் அத்தகைய உணர்வு பெறாதவர்களுக்கு விழிப்பூட்டுவதாக அமைகிறது பின்வரும் சன்மார்க்காவின் கவிதை.
‘சேலைகளைச் சரிப்படுத்தியே வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே வேண்டாம்
ஆடையின் மடிப்புகள் அழகாக இல்லை என்பதற்காகக்
கண்ணீர் விட்ட நாட்களை மறப்போம்
வெட்கம் கெட்ட அந்த நாட்களை மறந்தே விடுவோம்’’
சுயமுள்ள ஓர் உயிராகப் பெண் தன்னை உணரத் தலைப்பட்டு விட்ட மாற்றத்தை
‘’எனக்குள்ளேயா இந்தச் சக்தி
எனக்கா இத்தனை பயமின்மை
என் கால்களா ஊன்றிக் கொண்டன
எனக்கா இந்தச் சிறகுகள்’’
என்று விரித்துக்கொண்டே செல்கிறார் கவிஞர் வத்ஸலா.
பெண்ணின் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கும் அக்கினிக் குஞ்சான ஆவேச உணர்வு வெடித்துக் கிளம்பு முன் தோழமையோடு அவன் இணைந்து விடுவது நல்லது என்ற பொருளில்
‘’அடை காக்கும் கோழியாய்
சிறகுக்குள் சில
அக்கினிக் குஞ்சுகள்
கனன்ற சிறகுகளுடன் நான்
எனக்குள் வருமுன்
எரியக்கூடிய பொருள்
உன்னிடமிருந்தால்
உதறி விட்டு வா’’
என இறுதி எச்சரிக்கை விடுக்கிறது திலகபாமாவின் கவிதை.
பெண்ணியக் கோட்பாட்டை இயக்க ரீதியாக வளர்த்தெடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபத்ரா போன்ற கவிஞர்களின் படைப்புக்கள் - ஆண்,பெண் ஆகிய இருவரின் கண்ணோட்டங்களிலும் நேர வேண்டிய ஒட்டு மொத்தமான மாற்றத்தை வேண்டி நிற்கின்றன.
‘’தோழா!
இன்னும் எத்தனை காலம்
நான் கைதியாய்
நீ கொடூரனாய்...
நாம் பகையாளியாய்த் தொடர்வது?
உனக்குள்-எனக்குள்
ஒளிந்தே நிற்கும் மனிதர்களை
நாம் என்று அறிமுகப்படுத்திக் கொள்வது?
திருத்த வேண்டியது..சட்டங்கள் அல்ல
நம் சிந்தனை
எதிர்க்க வேண்டியது உன்னை அல்ல
இழிவுபடுத்தும் நம் கலாச்சாரத்தை’’
என,'எந்தன் தோழ’னாய் ஆணை முன்னிறுத்திப் பெண்ணியப் போர்க்களத்தில் அவனையும் ஓர் அங்கமாக்குகின்றன.
(பெண்மொழியை உடல்மொழியாக்கி அதன் வழி எழுப்பும் கலகக் குரல்..தொடர்ந்து வரும் அடுத்த பதிவில்...)
4 கருத்துகள் :
நன்றி.தமிழர்ஸ் தளத்தில் இணைத்து விட்டேன்.
பதிவும் அருமை. கவிதைகளும் அருமை.
அருமையான வரிகள் .ஆழமாக வெளிப்படுகின்றன .அம்மா இந்த சுட்டியை காணுங்கள் அதில் உள்ள காணொளியை காணுங்கள் ,காலை இதை பார்த்ததிலிருந்து எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது
http://edhuvumaethappuilla.blogspot.com/2010/11/blog-post.html
நன்றி டாக்டர்.சுனிதா கிருஷ்ணனின் இதே செயல்பாட்டை இதே யூடியூப் வழி நான் முன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.’பாலியல் தாக்குதல்களும்,பருத்திவீரன்களும்’http://www.masusila.com/2010/01/blog-post_11.htmlஎன்ற அந்தப் பதிவுகள்போன்றவைதான் உடல்மொழி குறித்துச்செய்யப்படும் மிகையான பாவனைகளைச் சாடுமாறு என்னைத் தூண்டியவை.
கருத்துரையிடுக