பெண்மொழியை உடல் மொழியாக்கும் கலகக் குரல்;
‘’ஒரு பெண் எழுத்தாளர்,தன் பேனாவில் வெள்ளை மை(தாய்ப்பால்)அடைத்துக் கொண்டு எழுத வேண்டும்.....எந்த விதமான தணிக்கை உணர்விற்கும் செவி சாய்க்காமல் தன் உடம்பின் அதிர்வுகளுக்கு உண்மையானவர்களாக இருந்து பெண்படைப்பாளிகள் செயல்பட வேண்டும்’’
என மேலைப் பெண்ணியத் திறனாய்வாளர்கள் குறிப்பிடும் போக்குகள் தமிழ்க் கவிதை வெளியிலும் பரவலாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
உடற்கூற்று அடிப்படையில் பெண்படும் அவதிகளையும்,அதை ஒட்டி அவளுக்குள் விளையும் உளவியல் தாக்கங்களையும் தயக்கமின்றி வெளிப்படையாகக் கூறப் பெண்கவிஞர்கள் முன் வந்திருப்பது இன்றைய சூழலின் மாறுதலான போக்காக அமைந்திருக்கிறது.
பெண்ணின் இயல்பான உடற்கூற்று மாற்றத்தைச் சமூக நபர்கள் அணுகும் வேறுபட்ட நோக்கு நிலைகளை,
‘’சிறுமியில் ஆரம்பித்தபோது
‘அதற்குள்ளேயா’என
அம்மாவின் பதற்றம்
அடுத்தடுத்த மாதங்களில்
‘இன்னும் வரவில்லையா’
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்
மாமியாரின் ஆதங்கமோ
இன்னும் வருதா என
..................
காட்டுத் தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்’’
என்று ‘பூத்தல்’என்னும் தலைப்பிட்ட தன் கவிதையில் விவரிக்கும் உமாமஹேஸ்வரி,
‘’வா வலியே
வந்தென்னை ஆட்கொண்டு
அணைத்துப் பகிர்ந்து அம்மா என்றாக்கு’’
எனப் பிள்ளைப் பேற்றில் பெண் படும் துன்பங்களையும் நுட்பமாகப் பதிவு செய்கிறார்.
கைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்த தாய்,அலுவல் களத்தில் படும் உடல் ரீதியான துன்பம்
‘’ஆடைக்குள்ளிருந்து
சொட்டுச் சொட்டாய்
கோப்புகளில் இறங்கும்
தாயின் வாசம்
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில்
பீச்சி விடப்படும்
பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்றலறும்
குழந்தையின் அழுகுரல்’’
என்று வெண்ணிலாவின் கவிதையில் வெளிப்பாடு கொள்கிறது.
அதிகாரத்தின் குறியீடாகிய ஆணுடலின் மீது கொள்ளும் அச்சம்,அதன் மீதான சலிப்பு,விரும்பாத தாம்பத்திய உறவில் நாட்டமற்ற போக்குஆகியவைகளும் நவீன பெண் கவிதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.
நள்ளிரவில் தன்னை விட்டு ஆணுடல் நீங்குகையில் அதனை இறப்புக்கு ஒப்பான அமைதியாகச் சித்தரிக்கிறது பெருந்தேவியின் கவிதை.கணவன் தன்னை விட்டு நீங்கிய பிறகும் அச்சமூட்டும் புலி ஒன்று தன் இரையைப் பார்த்துக் கொண்டிருந்ததான உணர்வு ஏற்படுவதாக,இதே கருத்தைத் தனது ‘இரண்டாம் ஜாமத்துக்கதை’என்ற கவிதையில் விவரிக்கும் சல்மா,
‘’பெரும்பாலும்
தனக்குள்ளாகவே வசிக்க
நேரும் நானும் என் மொழியும்
சற்று
கடுமையாகவே வெளிப்படக்கூடும்
என்றைக்கேனும்’’
என்று பிறிதொரு கவிதையில் எச்சரிக்கை விடுக்கிறார்.
தன் வாழ்வும் தன் உடலும் தனக்கே உரியவை..அவற்றின் மீதான ஆதிக்கமும்,அவை சார்ந்த முடிவுகளும் பிறர் வசம் இல்லை என்ற அளவில் மதிப்பிடுகையில்,சமகாலப் பெண் மொழியின் போக்கு வரவேற்கத்தக்கதே.
எனினும் படைப்பின் தேவைக்கும்,சமூகத்தின் தேவைக்கும் அப்பாற்பட்ட வகையில் தேவையற்ற பாலியல் வெளிப்பாடுகள் பெண் எழுத்துக்களில் மிகுதியாகக் கையாளப்படுகையில் பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையான நோக்கம் நீர்த்துப் போவதுடன் கவிதைகளில் இடம் பெறும் பிற செய்திகள் மட்டுமே மலிவான இரசனையுடன் - கொச்சையாக உள்வாங்கிக் கொள்ளப்படக் கூடிய அபாயம் இருந்து கொண்டே இருக்கிறது;
இது ஒரு கலகக் குரல் என்று சொல்லப்பட்டாலும் கூட,இந்தக்குரல் , சமூக மாற்றத்துக்குப் பயன்படாத வெற்று ஓசையாக-பெண்ணியத்தின் முதன்மையான நோக்கத்தையே திசை திருப்பி விடுவதாகத்தான் கட்டமைந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு கலகக் குரல் என்று சொல்லப்பட்டாலும் கூட,இந்தக்குரல் , சமூக மாற்றத்துக்குப் பயன்படாத வெற்று ஓசையாக-பெண்ணியத்தின் முதன்மையான நோக்கத்தையே திசை திருப்பி விடுவதாகத்தான் கட்டமைந்து கொண்டிருக்கிறது.
‘’பெண் பாலுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மட்டும் பெண்மொழி உருவாகி விடாது’’-இது பெண்மொழி சார்ந்தே எழுதியும் பேசியும் வரும் மாலதி மைத்ரி என்னும் கவிஞரின் கூற்று.
வெறும் உடல் மொழியாகக் கட்டமைப்பதனால் மட்டுமே பெண்மொழி உருவாகி விடாது
பெண்ணிய எழுத்தில் பாலியல் கூறுகள் எதற்காகப் பதிவாகின்றன என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல்,அவை ஏதோ ஒரு வகையில் தமக்குக் கிளுகிளுப்பூட்டுவதாக இருப்பதாலேயே அதற்கு முந்திக் கொண்டு முதன்மை தரச் சிலர் முற்படுகிறார்கள் என்பதை இன்றைய பெண்படைப்பாளிகள் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
(இதை இன்னும் சற்று வெளிப்படையாகவே கூறுவதானால்...இத்தனை நாளும் தான் வருணித்துக் கொண்டிருந்த பெண்ணுடலை இப்போது அவளே வருணிக்கத் தொடங்கியிருப்பது ஆணுக்கு ஒரு வகையான புதுமையை அளித்திருக்கிறது;சமூகச் சிக்கல்கள் சார்ந்த பெண் எழுத்துக்களை வெற்றுப் புலம்பல்கள் என ஒதுக்கித் தள்ளிய ஆண் அறிவு ஜீவிகள் உடல் சார் பெண்மொழி எழுத்துக்களை உயர்த்திப் பிடிப்பதன் சூட்சுமம்,சூழ்ச்சி இதன் அடிப்படையிலேதான்.) இதைச் சற்றுக் கருத்தில் கொண்டு - அதிர்ச்சி மதிப்பிற்காகவும்,வெற்று பிரமிப்பை விளைவிப்பதற்காகவும் மட்டுமே கையாளப்படும் பாலியல் படிமங்களைப் பெண் படைப்பாளிகள் த்ங்கள் எழுத்துக்களில் தவிர்க்க முயல்வதே பெண்ணியம் பற்றிய சரியான புரிதலையும்,சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த உதவி செய்வதாக இருக்க முடியும்;அதைச் செய்யத் தவறும்போதுதான் பெண்ணியம் என்ற பதமே பிறழ விளங்கிக் கொள்ளப்பட்டுக் கேவலமான விமரிசனங்களுக்கு உள்ளாகும் நிலை நேரிட்டு விடுகிறது.
அடிப்படை உரிமைகள் கூட மீட்கப்படாத நிலையில் அன்றாடம் தனித்தும்,குழுவாகவும்(gang rape) பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்கள் பற்றியும்,குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்கள் பற்றியுமான தகவல்கள் அன்றாடச் செய்தித் தாள்களின் பக்கங்களை மிகுதியாக நிரப்பிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,அந்தச்சமூகப் பார்வையிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு,உடல் மொழியைப் பிரதானப்படுத்தி அகச் சிக்கல்களுக்கு அதிக இடம் அளிக்கும் பெண் எழுத்துக்கள் எனக்குப் புளிச்சேப்பமாகவே படுகின்றன.
சக பெண்ணியர்கள் பிற்போக்குவாதம் பேசுவதாக என்னைச்’சாதிப்பிரஷ்ட’மே செய்தாலும் கூட நினைவு தெரிந்த நாள் முதல் பெண்ணுக்காக மட்டுமே அதிகம்பேசியும்,எழுதியும் வரும் என் உறுதியான நிலைப்பாடு இதுவே.
எந்தக் கருத்துருவாக்கமும் அடிமட்டம் வரை ஊடுருவிச் சென்று உதவவில்லையென்றால்,அது வெறும் போலியான வெளிப்பகட்டு மட்டுமே.
ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிரி மனோபாவத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து-
......
பெண்ணியம் என்ற சொல்லைப் பகடி செய்து ஏளனம் புரிவதை ஆணும்,
ஆணைப் பகைவனாகமட்டுமே கருதும் எண்ணத்தைப் பெண்ணும் கைவிட்டு,
......
தன்னைத் தாழ்வாகக் கருதும்போக்கிலிருந்து பெண்ணே வெளிவந்து..
......
பெண்ணியம் என்பதன் சமூகத் தேவையை உணர்ந்து.
தனிமனித,சமூக மனப்போக்கிலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு,
நிறுவனமாக்கப்பட்டு நிலைத்தும்போன சமூக அமைப்புக்களுக்கெதிரான குரலை ஒருமித்து முன் வைத்து-
அவற்றுக்கான சட்டப்பாதுகாப்புக்களிலும் முனைந்து..
அவை வெறும் காகிதச் சட்டங்களாகிவிடாமல் முறையே பயன் கொண்டு.
சமத்துவம் குன்றாத மானுடச் சமூகம் மலர வேண்டுமென்ற நோக்கில் செயல்படுவது மட்டுமே..
என்றென்றைக்கும் பயனளிக்கும்பெண்ணியக் கோட்பாடாக இருக்கமுடியும் என்பதும்,பிற அனைத்தும் ஆடிக் காற்றில் அடித்துச் செலப்படும் துரும்புகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதும்...
களத்தில் இறங்கியும்,எழுத்தில் முனைந்தும் செயலாற்றியிருக்கும் என் அனுபவத்தில் தெளிந்த திடமான முடிவு.
ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிரி மனோபாவத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து-
......
பெண்ணியம் என்ற சொல்லைப் பகடி செய்து ஏளனம் புரிவதை ஆணும்,
ஆணைப் பகைவனாகமட்டுமே கருதும் எண்ணத்தைப் பெண்ணும் கைவிட்டு,
......
தன்னைத் தாழ்வாகக் கருதும்போக்கிலிருந்து பெண்ணே வெளிவந்து..
......
பெண்ணியம் என்பதன் சமூகத் தேவையை உணர்ந்து.
தனிமனித,சமூக மனப்போக்கிலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு,
நிறுவனமாக்கப்பட்டு நிலைத்தும்போன சமூக அமைப்புக்களுக்கெதிரான குரலை ஒருமித்து முன் வைத்து-
அவற்றுக்கான சட்டப்பாதுகாப்புக்களிலும் முனைந்து..
அவை வெறும் காகிதச் சட்டங்களாகிவிடாமல் முறையே பயன் கொண்டு.
சமத்துவம் குன்றாத மானுடச் சமூகம் மலர வேண்டுமென்ற நோக்கில் செயல்படுவது மட்டுமே..
என்றென்றைக்கும் பயனளிக்கும்பெண்ணியக் கோட்பாடாக இருக்கமுடியும் என்பதும்,பிற அனைத்தும் ஆடிக் காற்றில் அடித்துச் செலப்படும் துரும்புகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதும்...
களத்தில் இறங்கியும்,எழுத்தில் முனைந்தும் செயலாற்றியிருக்கும் என் அனுபவத்தில் தெளிந்த திடமான முடிவு.
வாராத மாமணியாய் வந்து வாய்த்த பெண்விடுதலையைப் பிறர் பழிக்கப் பெண்களே இடமளித்து விடக் கூடாது .
பெண் பற்றிய சமூக நிலைப்பாடுகளுக்கும்,காலம் காலமாக ஊறிப்போயிருக்கும் கருத்து நிலைகளுக்கும் எதிரானதாகப் பெண்மொழி உருவெடுக்க வேண்டும்;
அப்போது மட்டும்தான் இந்தப் படத்திலுள்ள குழந்தையைப்போல் மானுடம் பற்றி...மானுடச் சிக்கல்களுக்காகக் குரல் கொடுப்பவர்களாகப் பெண்கள் உருவாகி வர முடியும்.
இதுவே பெண்ணிய நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு...
என் மதிப்பீடுகளை ,நிலைப்பாட்டை இத் தொடரின் இறுதிப் பகுதியாகிய இப் பதிவில் அழுத்தமாகவே வெளியிட்டிருக்கிறேன்.
இது சார்ந்த தொடர்ந்த விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன......
8 கருத்துகள் :
பெரும்பாலும் ஆண்கள் சுதந்திரம் அல்லது உரிமையின் பெயரால் சலுகை வழங்கும் மனோ நிலையில் இருப்பது தான் உண்மை .எதையாவது ஒன்று நாம் வழங்கும் நிலையில் இருந்தால் இன்னும் எட்டர தாழ்வுகள் இருக்கு என்றே பொருள் .இன்னும் சமத்துவம் மற்றும் பாலின வேறுபாடுகள் அகல பல காலங்கள் ஆகும் போல் தெரிகிறது .சமத்துவத்திற்கு சலுகை விடை ஆகாது ,ஏனெனில் சலுகைகள் தற்காலிகமானவை ,ஆயினும் கூட முக்கியமானவை ,உதாரணம் -பெண்கள் அரசிய இட ஒதுக்கீடு மசோதா ,இப்போதைக்கு இது தீர்வாக இருந்தாலும் ,(பல பெண்களை சமூக வாழ்விற்கு அழைத்து வரும், நிச்சயமாக ) இந்த இட ஒதுக்கீடு நீங்கி மைய ஓட்டத்தில் இயல்பாக பெண்களின் அரசியல் பங்கேற்ப்பு வர வேண்டும் .இந்த மொத்த தொகுப்பு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது .ஓரளவு இன்றைய காலக்கட்டத்தில் பெண்ணிய பார்வைகள் மாறி உள்ளன .உடல் மொழி விஷயத்தில் உங்களின் கருத்து அபாரமானது .வாழ்த்துக்கள் அம்மா .
சமத்துவத்துக்குச் சலுகை தீர்வல்ல.100 சதம் தங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்டாக்டர்!அது நாய்க்கு எலும்புத் துண்டு போடுவது போன்றது.
முதலில் தான் திடமானவள்,உரமானவள்,எதற்காகவுமயாரையும் சார்ந்திராதவள்,சுயச்சார்புகொண்டவள்,
சுதந்திரமானவள்,எதையும்கேட்டு..இரந்துபெற வேண்டிய நிலையில் தான் இல்லை என்ற விழிப்பு பெண்ணுக்குள்ளேயே உதயமாக வேண்டும்.அது ஒன்றுதான் முழுமையான தீர்வுக்கு அடித்தளம் அமைக்கக்கூடியது.
ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிரி மனோபாவத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து-
......
பெண்ணியம் என்ற சொல்லைப் பகடி செய்து ஏளனம் புரிவதை ஆணும்,
ஆணைப் பகைவனாகமட்டுமே கருதும் எண்ணத்தைப் பெண்ணும் கைவிட்டு,
......
தன்னைத் தாழ்வாகக் கருதும்போக்கிலிருந்து பெண்ணே வெளிவந்து..
......
பெண்ணியம் என்பதன் சமூகத் தேவையை உணர்ந்து.
தனிமனித,சமூக மனப்போக்கிலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு,//
இதே தான் என் கருத்தும். ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் எதிரியாக பாவிக்கும் தன்மை நிறைந்திருக்கின்றது. அது மாற வேண்டும்.
பெண் எப்போதும் சமையல்கட்டைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறாள். சமையலைவிட வேறு ஒன்றும் தெரியாதா அவளுக்கு. சுயமாக ஏன் சிந்திக்க மறுக்கிறாள். படிக்கும் காலத்தில் அதிக அதிகமாய் மார்க் வாங்கி மாநிலத்தில் முதலாவதாக வருகின்றாள். ஆனால் தன் திருமணத்தை தன் வாழ்க்கை நிர்ணயம் செய்யும் உரிமையை பிறரிடம் தந்துவிடுவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இருக்கிறாள்.
ஆடை குறைப்பு ஃபேஷன் ஷோ, தன்னை சிங்காரித்துக்கொள்ள முட்டையிலிருந்து, களிமண் வரை பாலிலிருந்து பாயசம் வரை எதனையும் தன் முகத்தில் பூசிக்கொள்ள தயங்காதவள், இவள் அடிமை சங்கிலியை உடைப்பாள் என்றா நம்புகின்றீர்கள். எனக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. ஏன் ஆண்களை கவர அலங்கரித்துக்கொள்ள வேண்டும். சுய கவுரவத்தை ஏன் மலிவு விலைக்கு விற்கத் துணிகிறாள்?
பெண் புத்தி பின் புத்தி தான் என்று மறுமறுபடியும் ஆண்களிடத்தில் ஏமாறுவதினால் நிறுபித்தபடியே தானே இருக்கிறாள்.
எல்லா விளம்பரங்களிலும் தன்னை கீழ்மை படுத்திக்கொள்ள அவளே இடம் கொடுக்கின்றாள். தாய்மை என்கின்ற போர்வையில் வீடு கணவன், குழந்தைகள் என்று ஒரு சிறு வட்டத்திற்குள் நின்று விடுகின்றாளே. சிலர் ஏதோ அத்திப் பூத்ததைப் போன்று வெளிப்படுகின்றனர். ஆனால் பெண்ணின் வாழ்க்கை பெண்ணின் கையில் இல்லை என்பது தானே நிதர்சன உண்மை அக்கா!
உங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை;
1.அம்பை எழுதிய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’படியுங்கள்;அப்போதுதான் காலம் காலமாகச் சமையலறை அவளைக் கட்டிப்போட்டிருப்பது எப்படி என்பதை அதன் முழு வீரியத்துடன் புரிந்து கொள்ள முடியும்.யுகக்கணக்காக ஆட்பட்டுப்போன மூளைச் சலவைகளிலிருந்து உடனடியாகத் துண்டித்துக் கொண்டு விடுவது அவ்வளவு சுலபமல்ல.படிப் படியாக இன்று விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.தன் வாழ்வைப் பெண் தன் கையில் எடுத்தாக வேண்டும் என்பதை
இன்றைய மாற்றங்களின் மூலம் அவள்தான் அறிந்துதெளிந்தாக வேண்டும்.அதுவரை அடிமை நிலைதான்
2.பெண் அழகானவள்,அழகு சாதனங்களுக்கு உரியவள்,மெல்லியலாள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே தலைமுறை தலைமுறையாகப் பெண் உருவாக்கப்பட்டிருக்கிறாள்.அவையெல்லாம் கற்பிதங்கள் என்பது புரியும்போது அந்தப் பொய்மைக் கூடு தகர்த்து அவள் வெளி வருவாள்.
தன்னைப் பிணைத்திருப்பது சங்கிலியல்ல விலங்கென அப்போது உணர்வாள்.
ஏன்..எங்களையெல்லாம் பார்த்தால் நம்பிக்கை தோன்றவில்லையா உங்களுக்கு?
என் முதல் வருகை இன்று தான் இந்த தளத்தை பார்க்க முடிந்தது.
ஆனால் உங்க படைப்புகளை நான் அவள் விக்டனிலும், மங்கையர் மலரிலும் படித்திருக்கேன். அது நிங்க என்பது இப்ப தான் தெரியவந்தது.
மிக்க சந்தோஷமாக இருக்கு. வான் உங்க எல்லா படைப்புகளும் நல்ல அருமை.
www.vijisvegkitchen.blogspot.com
www.vijiscreation.blogspot.com
கருத்துரையிடுக