துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.11.10

ஜெயமோகனின் ’டார்த்தீனியம்’

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )
யதார்த்தச் சித்தரிப்பும், அதீதக் கற்பனையின் அழகியல் புனைவுமாய் மாறி மாறிச் சஞ்சாரம் செய்யும் குறிப்பிடத்தக்க ஒரு குறு நாவல், ஜெயமோகனின் டார்த்தீனியம்’.

வாசகக் கற்பனையை விரிவுபடுத்தி-வாசகச் சிந்தனைக்கு மிகுதியான இடமளித்துப் பல அர்த்தத் தளங்களுக்கும்,வாசிப்பு நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் வகையில் ‘டார்த்தீனியம்’என்ற படிமத்தை அமைத்திருப்பதே இப் புனைவின் தனிச் சிறப்பாகிறது.

அமைதியும்,ஆனந்தமுமாய் ஆற்றொழுக்குப்போலக் குதூகலமாகச் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் அமைதியை ‘ ஃபாரின் சரக்கு ’என்று சொல்லியபடி அந்தக் குடும்பத் தலைவர் எங்கிருந்தோ கொண்டு வந்து நட்டு வைக்கும் விதையிலிருந்து முளைக்கும் விஷச் செடியான டார்த்தீனியம் பயங்கரமாகக் குலைத்துப் போடுகிறது.
ஒவ்வொரு நாளும் விசுவரூபமெடுத்துப் பல்கிப் பெருகும் அந்த விஷச் செடியின் தாக்கம், கருநாகங்களை அதனடியில் குடிபுக வைத்துக் குடும்ப உறுப்பினர்களை நஞ்சாகத் தீண்டுகிறது.
குடும்பப்பாசம் மிக்கவராக - அன்பான கணவராக, தோழமையோடு கூடிய தந்தையாக, வளர்ப்புப் பிராணிகளிடம் பாசத்தைப் பொழிபவராக இருந்த தந்தை ‘டார்த்தீனிய தாச’ராகி வேறு எல்லாவற்றையும் விட்டு விட்டு அந்தச் செடி வளர்ப்புக்கு மட்டுமே அடிமையாகிப் போகிறார்.வீட்டின் நடைமுறைச் செயல்பாடுகள் சீர்குலைந்து போக..அதன் முகமே மாறிப் போகிறது.
விஷச் செடியை மேய்ந்ததால் பசுவும் ,அதைத் தொடர்ந்து அதன் கன்றும் மரித்துவிட, ஏதோ ஒரு கண நேரக் கோபத்தில் ‘டார்த்தீனியத்’தை வெட்டிப் போடும் தந்தை மறு நாளே அது மீண்டும் முளைத்திருப்பது கண்டு மகிழ்ந்து போகிறார்.அதன் ஆதிக்கத்திலிருந்து அவரால் கொஞ்சமும் விடுபட முடியவில்லை.வேலையிலிருந்து விருப்ப ஓய்வு வலுக்கட்டாயமாக அளிக்கப்பட டார்த்தீனியக் கொடிகள் அடர்ந்த இருள்மண்டிய அறையே அவரின் புகலாகிறது.தாயின் முகக் களை மடிந்து கிழடு தட்டியது போலாகிறாள் அவள்.
இவ்வாறான வீட்டுச் சூழலிலிருந்து விலகி ஓடி விமானப்படையில் தஞ்சமடைகிறான் மகன்.
டார்த்தீனியத்தின் கோரப்பிடியில் தாயும்,தந்தையும் அடுத்தடுத்து மரணிக்க..,தன்னுள் செலுத்தப்பட்ட நஞ்சைத் தீவிர சிகிச்சைகளால் குணப்படுத்தித் தன்னை மீட்டெடுத்துக் கொண்டுவிடும் மகன்,இருபது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வீட்டைத் தேடி வருகிறான்.
அங்கே நூறு நூறு கிளைகளால் அந்தப் பிராந்தியத்தையே வளைத்தபடி எங்கும் நிறைந்திருந்த டார்த்தீனியக் கொடிகளும்,அவற்றுக்குள் வீடு நொறுங்கிச் சிதிலமாகிக் கிடக்கும் காட்சியுமே அவனுக்குக் காணக் கிடைக்கின்றன.
இன்னும் கூடக் கொத்துக் கொத்தான விதைகள் அடர்ந்திருக்கும் அதன் கிளைகள் அவனை அச்சத்தால் மூச்சடைய வைக்கின்றன;டார்த்தீனியத்தையும், அதன் விஷ வீரியத்தையும் வீழ்த்துவது அத்தனை எளிதில்லை என்பதை அவன் விளங்கிக் கொள்கிறான்.

மேலோட்டமான பார்வையில் கதையை இவ்வாறு சுருக்கிச் சொல்லிவிட முடிந்தாலும் ஆழ்ந்த வாசிப்பில் இப் படைப்பு நமக்குள் கிளர்த்திக் கொண்டு போகும் உணர்வுகளும்,முன் வைக்கும் வித விதமான தரிசனங்களும் வித்தியாசமானவை; நுட்பமான வாசிப்பில் மட்டுமே சாத்தியப்படுபவை அவை.
‘’வீட்டை அணுகும் முன்பே டார்த்தீனியம் என் கண்களை அறைந்தது.பெரிய ஆல மரம் போல அது வளர்ந்து விழுதுகளை ஊன்றிப் பரவியிருந்தது.கிளைகள் பந்தலித்து வீட்டின் மீது பரவிப் படர்ந்திருந்தன.அப்பகுதியிலேயே ஆழ்ந்த இருளும்,குளிரும் நிலவியது.காற்றில் கனத்த இலைகள் உரசி ஒலித்தன.அந்தப்பகுதியிலேயே பசுமை நிறம் இல்லை.பெரியதோர் வன விலங்கு கருமயிர்களை சிலிர்த்தபடி நிற்பது போல இருந்தது.அகப்பட்ட இரையை அது முனகியபடியே பெருமூச்சு விட்டபடி தின்று கொண்டிருப்பது போல இருந்தது’’’
என்பது போன்ற ஜெயமோகனின் அடர்த்தியான மொழிநடையும், இருண்மையும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்த விவரிப்பு மற்றும் உரையாடல்களும் இப் படைப்பின் வாசகர்களுக்கு அரிதான ஓர் அனுபவத் திறப்பை அளிக்கக் கூடியவை. 

‘டார்த்தீனியம்’ என்பது கதையில் ஒரு விஷச் செடியாகக் காட்டப்படுவதால் அனைவருக்கும் அறிமுகமான பார்த்தீனியம் தவிர்க்க முடியாமல் நம் நினைவுக்கு வந்து போனாலும், டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கதை ஓட்டத்தின் நீட்சியில் விளங்கிக் கொண்டு விடமுடியும்.

டார்த்தீனியப் படிமம், குடும்பம்,சமூகம் ஆகிய இரு களங்களிலும் பலவகைப்பட்ட விரிவான அர்த்தப் பரிமாணங்களைக் கொள்ள இடமளிப்பதாக வளர்ந்து செல்கிறது.

கதையின் வெளிப்படையான இயங்கு தளத்தில்,அந்தக் குடும்பத்திற்குச்’செய்வினை’ வைக்கப்பட்டதான -பழமரபு சார்ந்த ஐயம் உறவினர்களுக்கு எழுவது குறிப்பிடப்படுகிறது.கதையின் போக்கில் அதை விரிவாக வளர்த்தெடுத்துக் கொண்டு போகாமல் வாசகர்களின் வேறுபட்ட  ஊகங்களுக்கு இடம் தரும் வகையில் அப்படியே விட்டு விடுகிறார் ஆசிரியர்.

நவீனச் சூழலின் சிந்தனை ஓட்டத்தில் இப் படிமத்தை அணுகினால்,
குடும்பக் களத்தில் ‘டார்த்தீனியம்’என்பது....
குடும்பத் தலைவரிடம் தொற்றிக் கொண்ட (புகை,குடி,போதை,சீட்டாட்டம் போன்ற ) ஏதேனும் ஒரு தீய பழக்கத்தின் சுட்டுக் குறியாக இருக்கலாம்;
தவறான தொழில் முனைப்பாகவோ தகாத ஒழுக்க மீறலாகவோ கூட அது இருக்கலாம்..

விரிவான சமூகக் களத்தில்
அணுக்கதிர் வீச்சாக, சுற்றுச் சூழல் மாசுபாடாக,உலகமயமாக்கலாக
 இன்னும் பல வகைப்பட்ட நச்சுத் தாக்குதல்களின் குறியீடாக ‘டார்த்தீனியத்’தைக் கற்பிதம் செய்து கொண்டால்..,ஏதோ ஒரு மாயக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு அதற்கு அடிமையாகி விட்ட பிறகு , அதன் கோரப் பிடியை விட்டு விலக முடியாமல் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதத்தை இப் படைப்பு குறிப்பாகச் சுட்டுவதாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கிறது.

மேற்குறித்தவற்றில் எந்தத் தளத்தில் அர்த்தப்படுத்திக் கொண்டாலும், அழிவுச் சக்திகளின்பால் மனித உள்ளத்திற்குத் தீராத ஈர்ப்பு ஒன்று இருந்து கொண்டே இருப்பதையும்,
‘’நம்மை அழிக்கும் தீமைகள்,இருள்கள் ஆகியவை நாமே வலிந்து ஏற்று நட்டு வளப்பவை’’என்பதையும் உருவகப் போக்கில் அழுத்தமாகப் பதிய வைக்கும் இக் குறுநாவல் அக் காரணத்தினாலேயே கவனமும் பெறுகிறது.

( முதலில் ’கணையாழி’யில் வெளிவந்த இக் குறுநாவலை ஜெயமோகன் குறுநாவல்கள் -உயிர்மை வெளியீடு முழுத் தொகுப்பில் காணலாம்)



3 கருத்துகள் :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பு நண்பரும் சக வலைப்பதிவருமான திரு தேவராஜ் விட்டலன் எனது கடந்த வார நட்சத்திர இடுகைகளில் தனக்குப் பிடித்தவற்றைத் தொகுத்து அவை சார்ந்த தன் கருத்துக்களை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.அவை...இங்கே..

விட்டலன்

சின்னக் கண்ணன்அழைக்கிறான்....

சமய இலக்கியங்களின் புரிதல்களை தந்ததற்கு நன்றி

டார்த்தீனியம்’

திரு ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள் அனைவரும் நேசிக்கும் தன்மை கொண்டவை. ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் போலவே , அவரும் நல்ல பண்பாளர் .
டார்த்தீனியம் என்ற குறியீட்டு நாவலை இன்னும் வாசிக்காததை இந்த பதிவு எனக்கு நினைவு படு்த்தியது

தீபாவளியும்,ஒருராஜாவும்..
கு. அழகிரிசாமி , கி . ராஜநாராயணன் அவர்கள் இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்த சிகரங்கள். அம்மா இந்த கதையின் அழகியலையும் , இயல்பான மொழி நடையையும் தாங்கள் எடுத்து இயம்பிய விதம் வாசிக்க அழகாக இருந்தது.

’சக்ராதா’வின் மலைமடிப்புகளில்...
மலை தரும் புரிதல்களை வார்த்தைகளில் அடைக்க முடியாது. ரானுவத்தில் பணிபுரிவதால் பல மலைகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கிறது . அப்படி சினாவின் எல்லை பகுதிக்கு சென்ற போது, மலை எனக்கு தந்த புரிதல்களை மலைவாசம் என்ற பத்தியில் பதிவு செய்துள்ளேன் .
அந்த பத்தியின் தொகுப்பு தங்களிடம் கொடுத்துள்ளேன் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்.
நன்றி அன்புடன்
தேவராஜ் விட்டலன்

suneel krishnan சொன்னது…

ஜெயமோகன் அவர்களின் பல படைப்புகளை வாசித்து வருகிறேன் , ஒவ்வொரு முறையும் எனக்கு அது வேறொரு திறப்பை தருகிறது .இந்த குறு நாவலை நான் வாசிக்க உங்களின் இந்த அறிமுகம் எனக்கு உதவும் .

VELU.G சொன்னது…

ஆஹா கணையாழியில் வந்ததா?

நான் படித்திருக்கிறேன். புத்தகமும் அந்தக் கணையாழியும் என்னிடம் உள்ளது. ஆனால் கதை மறந்து விட்டது, படித்துவிட்டு வருகிறேன்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....