துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.12.10

’உன்னை விட்டால் யாருமில்லை..’

சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரை தோழியின் பாத்திரம் என்பது ,
ஒரு இலக்கிய மரபாக...
தலைவியால் வெளியிட முடியாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் ஒரு வடிகாலைப் போலவே
பெரிதும் கையாளப்பட்டிருக்கிறது.

தலைவியின் சம வயதே கொண்டிருக்கும் தோழிக்கு...ஒரு அந்நிய ஆடவனோடு-அதிலும் தலைவியைக் காட்டிலும் தனக்கு நெருக்கம் குறைந்த அவளது தலைவனோடு நுட்பமான பல தளங்களில் உரையாடுவதில் -தலைவிக்கு இருக்கும் அதே வகையான மனத் தடைகளே இருந்திருக்கக் கூடும் என்பதை நிராகரித்து விட முடியாது.
‘’தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
  எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை’
(தனது காதல் விருப்பங்களைத் தலைவனிடம் ஒளிவு மறைவுகளின்றி எடுத்துரைப்பது என்பது தலைவிக்கு உகந்த செயலில்லை)
என்று தொல்காப்பியம் வகுத்திருந்த இலக்கணம் தலைவியைக் காட்டிலும் தலைவனிடமிருந்து சற்று அந்நியமான தோழிக்கும் பொருந்தக்கூடியதுதான்;
எனினும் நாடகத் தன்மை கொண்டதாகச் சங்கப் பாக்களை வடிவமைக்கும் புலவர்கள் தலைவியின் எண்ண ஓட்டத்தை ஒலிக்கும் குரலாகத் தோழியைப் புனைந்து பாடல்களின் நயங்களுக்கு மெருகூட்டியிருக்கிறார்கள்.

கபிலரின் குறிஞ்சித் திணைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று..!
பெற்றோர் ஒப்புதலுடன் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ள இயன்ற வரை முயன்று பார்த்தும் ஏதோகாரணத்தால் அது கை கூடாதபோதும்,
தலைவனும் தலைவியும் ஒருவரை மற்றவர்சந்தித்துக் கொள்ளவே இயலாமல் தடை ஏற்பட்டுத் தலைவி வீட்டுக் காவலில்
(சங்க இலக்கியம் அதனை இற்செறிப்பு எனக் குறிப்பிடும்) வைக்கப்படும்போதும் அவற்றைக் கடந்து அவர்கள் வெளிநடப்புச் செய்து பிறர் ஒப்புதலுக்குக் காத்திராமல் மணம் முடிக்கத் தோழி உதவுவதுண்டு.
(தலைவனும் தலைவியும் ஒன்றிணைந்து,பிறரறியாமல் வீட்டை விட்டு வெளியேறிச்செல்லும் இச் செயலை ’உடன் போக்கு’ என்கிறது சங்கச் சொல்லாக்கம்.)

அவ்வாறான ஒரு சூழலைப் பின் களமாகக் கொண்டு இப்பாடலைப் புனைகிறார் கபிலர்.
தலைவி தன் ஊர்,உறவுகளை விட்டுப் பெற்றோரைத் துறந்து தலைவனை மட்டுமே சகலமுமாக எண்ணி அவனோடு ஊர்நீங்கிச்செல்லும் அந்த நிலையில் வழிகூட்டி அவர்களை அனுப்பும் தோழியின் பங்கு .., பொறுப்பு கூடுதலாகி விடுகிறது.
திருமணம் முடிந்து புகுந்தவீடு செல்லும் மகளை வழியனுப்பும் தாய்தந்தைக்குரிய நிலைப்பாட்டை அந்தக் கட்டத்தில் தனக்குரியதாக்கிக் கொண்டு விடும் தோழி,விடைகொடு செய்தியாகப் பின்வரும் கூற்றைத் தலைவன் முன் வைக்கிறாள்.

‘’பெருநன்றாற்றிற் பேணாருமுளரே
   ஒரு நன்று உடையளாயினும் புரிமாண்டு
   புலவிதீர அளிமதி ! இலை கவர்பு
   ஆடமை ஒழுகிய தண்ணறுஞ்சாரல்
   மென்னடை மரையா துஞ்சம்
   நன்மலை நாட! நின்னலது இலளே’

உலக நடப்பில் தனக்கு உதவி செய்பவர்களை ..தனக்கு நன்மையானவற்றையே அதிகம் செய்பவர்களைப் பாராட்டுவதும் போற்றுவதும் இயல்பானதுதான்; ஆனால் இந்தப்பெண் உனக்குச் செய்யும் உதவியும்,நன்மையும் அளவில் மிகச் சிறியதாகிச் சுருங்கிப் போய்விட்ட பிறகும் கூட நீ அவளிடம் ஊடல்(புலவி) கொள்ளாது..பிணக்கோடு பகைமை பாராட்டாமல்- அவள் பால் நீ கொண்டிருக்கும் அன்பையே முதன்மைப்படுத்தி அவளிடம் பரிவாகவும்,இரக்கமாகவும் கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும்;காரணம்....இந்த நிமிடம் முதல் ’உன்னை விட்டால் அவளுக்கு வேறு எந்தத் துணையும் இல்லை’என்பதே பாடலின் பொருள்.

-தோழி தலைவனிடம் முன் வைக்கும் இந்த வேண்டுகோள் அந்தக் காலகட்டச் சூழலுக்கு மட்டுமன்றிக் கண நேரக் காதல் உணர்வுகளை மட்டுமே பிரதானப்படுத்தி அப்போதைக்கு ஏதோஒரு உத்வேகத்தால்..தூண்டுதலால் ஓடிப்போகும் இன்றைய காதலர்களுக்கும், 
அந்தப் போக்கைக் கனவு மயக்கத்துடன் வெளிச்சப்படுத்தும் திரைப்படம் முதலிய ஊடகங்களுக்கும் எவ்வளவு உயர்ந்த ஓர் அறத்தை மிக லகுவாகக் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் புகட்டி விட்டுப் போய்விடுகிறது என்பதைச் சற்றே அசை போட்டுப் பார்த்தால்தான் அதன் மேன்மையை நம்மால் உள் வாங்கிக் கொள்ளமுடியும்.
சமூக ,பொருளாதார ரீதியான தற்சார்பு வாய்ப்புக்கள் பெண்ணுக்கு மலிந்து கிடக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூடத் தான் நம்பி வந்தவனால் கை விடப்படும் பெண் பல வகையான பாதிப்புக்களுக்கு ஆளாகிறாளென்றால் குறிப்பிட்ட பாடல் எழுந்த காலச் சூழல் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை.

உன்னைத் தவிர இவளுக்கு இனி யாரும் இல்லை என்ற பொருள்பட..
’’நின்னலது இலளே’
என்கிறாள் தோழி.
இனிமேல் வரும் நாட்களில் இவளுக்குஏதும் துன்பம் நேர்ந்தால் அவள் உறவினர்கள் துணை வர மாட்டார்கள்;
அவனது சுற்றம் அவளை ஏற்குமா என்பதும் ஒரு கேள்விக் குறிதான்.
இந்நிலையில் அவளது ஒரே நட்பும் சுற்றமும் பாதுகாவலுமாகிய அவன் அவளை அரவணைத்து , அவள் செய்யும் குறைகளைப் பொறுத்துப்போகவேண்டியதன் அவசியத்தை அவனுக்குநினைவூட்டும் அவள்,அதற்குத் துணையாகத் தீட்டிக் காட்டும் படிம ஓவியம் மிக அற்புதமானது.

’’இலை கவர்பு
   ஆடமை ஒழுகிய தண்ணறுஞ்சாரல்
   மென்னடை மரையா துஞ்சம்
   நன்மலை நாட! ’’
என அவனை அழைக்கும் தொனியிலேயே அப் படிம சித்திரத்தின் மூலம் தான் சொல்ல வந்ததை நுட்பமாக உணர்த்தி விடுகிறாள் தோழி.
அது மலைநாடு...
அங்கே காணும் இடங்களிலெல்லாம் மரையாக்கள்தான்*(வரை ஆடுகள்).


அவை மூங்கில்மரங்கள் காற்றில் அசைந்தாடும் மலைச் சரிவில்
 (ஆடமை ஒழுகிய தண்ணறுஞ்சாரல்)
உள்ள பசுமையான இலை தழைகளைக் கவர்ந்து உண்டு விட்டு விட்டு நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சியின் வழி...
(மென்னடை மரையா துஞ்சும்)
இரண்டு செய்திகளை அவன் நெஞ்சில்பதிய வைக்கிறாள் தோழி.


மலைச்சாரலில் நிம்மதியாக உண்டு,உறங்கி இளைப்பாறும் ஆட்டைப்போலத் தலைவியும் உன்னோடான வாழ்வில் உன் அன்பின் கதகதப்போடு வாழவேண்டும் என்பதை இந்தப் படிமத்தின் மூலம் தோழி காட்டுவதாக உரையாசிரியர்கள் மரபாகக் காட்டும் செய்தி ஒன்று.
ஆனாலும் அதை விட..
இலைகளை மேய்ந்து விட்டுச் சுகமாக உறங்கிப்போய்விடும் மரையாட்டைப் போல அவளது இளமையையும் அழகையும் மட்டும் ரசித்துவிட்டு அவளை அவன் புறக்கணித்துவிட்டுப் போய்விடக்கூடாது என்ற மறைமுகமான எச்சரிக்கைச் செய்தியே இப் படிமத்தில் பொதிந்து கிடப்பதாகவும் அதுவே இப் பாடலில் கவனம் பெறக்கூடிய முக்கியமான குறிப்புப் பொருளாக இருக்கக் கூடுமென்றும் தோன்றுகிறது.
காரணம்...காதலிக்கும்போது தெரியாத குறைகள் அது நிறைவேறிய மறுகணமே பூதாகாரமாகத் தெரியத் தொடங்குவதே உலக வழக்கு.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தலைவியின் தரப்பில் குரல் கொடுக்க யாருமில்லை என்பதால் ,அவளது சிறு சிறு குறைகளைப் பெரிதுபடுத்தி அவன் அவளை ஒருபோதும் ஒதுக்கி விடக்கூடாது என்ற தோழியின் ஆதங்கக் குரலாக அற்புதமாக ஒலித்திருக்கிறது இந்த அகப்பாடல்.

தங்கள் உற்ற நண்பர்களின் காதலுக்குக் கைகொடுத்து அதை மேன்மைப்படுத்தத் துடிக்கும் நம் இளைஞர்கள் ,இவ்வாறான எச்சரிக்கைகளும்,வேண்டுகோள்களும் கூட அந்தத் தருணங்களில் தேவையானவைதான் என்பதையும் கூடவே புரிந்து கொள்ள உதவுகிறது இந்த சங்கக் காதல் கவிதை...

மரையா-வரையாடு
மரையா பற்றிய விளக்கம்,
நன்றி;ஜெயமோகன்http://www.jeyamohan.in/?p=9487
மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லபப்டுகிறது. நீலகிரி டார் என்று அதற்கு பெயர். உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில் ஏறிச்செல்லக்கூடியஅபூர்வமான இந்த விலங்கை ஊட்டியின் கல்லட்டி போன்ற பகுதிகளில் நின்றால் தூரத்து மலைகளில் காணமுடியும். பேன் ஊர்வது போல மலைவிளிம்புப் பாறைகளில் வரிசையாகச் செல்லும்.
இந்த ஆடு ஏறாத பாறைகள் இருக்கமுடியாது. இதன் பாதுகாப்பு முறையே உச்சிப்பாறை ஏறுவதுதான். ஆகவே இன்றும் ஒரு மலையை அதி உச்சி என்று சொல்ல வரையாடு ஏறா மலை என்று சொல்வதுண்டு
ஃரைபிள் கண்டுபிடிக்கப்பட்டபோது தூரத்து மலையில் ஏறும் இந்த ஆட்டை தொலைவில் இருந்து குறிபார்த்து சுட்டுத்தள்ளும் விளையாட்டு காலனியாதிக்கவாதிகளுக்குப் பிரியமானதாக இருந்தது இதன் எண்ணிக்கை கணிசமாகக் குறைய அது வழிவகுத்தது
கேரளத்தில் பீர்மேடு பகுதி மலைகளிலும் உள்ளது

2 கருத்துகள் :

தபால்காரன் சொன்னது…

மரையா என இங்கு குறிப்பிடப்படுவது இலங்கையின்
வன்னிக்காடுகளில் மரை என்ற பெயருடன் பெருமளவில் காணப்படுகிறது.
மரையை வேட்டையாடுவது வன பரிபாலன இலாகாவினால் தடை செய்யப்பட்டிருந்தாலும்
மரை இறைச்சியின் சுவை காரணமாக அது தினமும் வேட்டையாடப்பட்டு வநந்தது.
பல ஆண்டுகள் தொடர்ந்த யுத்தம் காரணமாக பெருமளவு மரைகள் கொன்று உண்ணப்பட்டு விட்டன.
35 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தை வன்னியில் புளியங்குளம் என்னும் இடத்தி்ல்
ஒரு சாப்பாட்டுக்கடையை நடாத்தி வந்தார்.
அங்கு தினமும் மரை இறைச்சி ஸ்பெஷல் ஐட்டமாக தயாரிக்கப்பட்டது.
சிலவேளைகளில் மான் இறைச்சியும் அரிதாக மயில் இறைச்சியும் கிடைக்கும்.

யுத்த காலத்தில் சில சிங்கள இராணுவச் சிப்பாய்கள்
இவ் விலங்குகளை கொல்லத் தயங்கிய கதைகளை நான் பெருமளவு கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர்களுககுத் தான் கொல்வதற்கு வேறு ''பிராணிகள்'' இருந்தனரே.
கேட்கத்தான் நாதி இல்லை..

மோகன்ஜி சொன்னது…

//’’இலை கவர்பு ஆடமை ஒழுகிய தண்ணறுஞ்சாரல் மென்னடை மரையா துஞ்சம் நன்மலை நாட! ’//
உங்கள் புது விளக்கம் அழகானது.

எளிமையாகவும் , சுவாரஸ்யம் குன்றாமலும் சங்கப் பாடல்களுக்கு விளக்கம் தந்து வருகிறீர்கள். போற்றலுக்குரிய பணி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....