துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.7.11

புதிய பிரவேசங்கள்:2

(புதிய பிரவேசங்கள் சிறுகதை பகுதி 1 இன் தொடர்ச்சி)
’’அயலான் ஊரில்...,அவன் அமைத்துக் கொடுத்த உல்லாசச் சோலையில் தன்னை மறந்து , தன் நிலையை மறந்து களித்திருந்தவளுக்குக் கணவனுடன் வாழ என்ன தகுதி இருக்கிறது? நீ இங்கே நடத்தியிருக்கிற வாழ்க்கைக்கு இப்போது நீ புனைந்துள்ள கோலமே சாட்சியம் கூறிக் கொண்டிருக்கிறதே?’’


சாட்டையால் சொடுக்கப்பட்டது போலச் சீதையின் உணர்வுகள் சிலிர்த்தெழுந்து விழித்துக் கொள்ள, இராமனின் சூழ்ச்சி அவளுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.
காதலின் கனிவோடு கணவனை இதுவரை ஏறிட்டு நோக்கியபடி இருந்த அவள் பார்வையில்,இப்போது ஒரு தீவிரம் படியத் தொடங்குகிறது.

’கோலம் மாற்றப் பிறந்த ஆணையும் கூட இந்த விந்தையான அத்தியாயத்தின் வினோதமான ஒரு பக்கம்தானா?
எனது கற்பு மட்டுமா?
அந்தச் சொல்லின் செல்வன்...வாயுபுத்திரன் அனுமன்..
அவன் - தன் கண்களால் என் தவக் கோலத்தைக் கண்டு
வார்த்தை வார்த்தையாய் விண்டுரைத்தானே..,
அவனது வாய்மையுமல்லவா இங்கே சந்தேக ஆகுதிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது?’

புதிர் முற்றும் புரியாதவளாய்ச் சீதை மலைக்கிறாள்.

‘’கடல் கடந்து வந்து நான் போர் செய்தது, உன்னைச் சிறை எடுப்பதற்காகத்தான் என்ற எண்ணம் உன் இதயத்தின் மூலையில் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்குமானால்...இந்த வினாடியோடு நீ அதை அழித்து விடலாம் சீதை!
அயலான் ஊரில் மனைவியை விட்டு வைத்தால் அது எனக்குப் பழி தரும் என்பதாலேயே இந்த முயற்சியை மேற்கொண்டேன்.என் கடமை முடிந்தது. இனி,உனக்கு மீட்சி..உன் சாவில் மட்டுமே கிடைக்கும்! உனக்குப் பாவ மன்னிப்புத் தந்து உன்னைப் பரிசுத்தமாக்கப் போவது,அந்த மரணம் ஒன்றுதான்! நீயாகவே அதைத் தேடிக் கொண்டிருந்தால் அது உனக்குப் பெருமை தரும் ! அதை விட்டுவிட்டுப் பழியோடு என்னைத் தேடி வந்ததால்,பெண்மைக்கே மாறாத ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டாய் நீ ! உன் கணவன் என்ற தார்மீகப் பொறுப்பு இன்னும் என்னிடம் ஒட்டிக் கொண்டிருப்பதால்,நீ செய்ய மறந்ததை இப்பொழுது நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.
லட்சுமணா ! சிதை ஆயத்தமாகட்டும்..!’’

கருணைப் பசையின்றி உதிரும் இவ் வார்த்தைகள் ...,
உயிரின் ஈரத்தில் தோயாமல் வறட்சியோடு வெளிப்படும் இந்தச் சொற்கூட்டல்கள்..,
இவை..தன் தலைவனுக்குச் சொந்தமானது எப்போது?
உயிரின் ஒவ்வொரு அணுவையும் வார்த்தை அக்கினிகளால் பொசுக்கித் தீய்த்தபின் இன்னொரு அக்கினிப் பிரவேசம் அவசியம்தானா?

திகைத்துப் போய் விழிக்கிற சீதையின் கண்கள்...ஒரு கணம்..,
ஒரு வினாடிக்கும் குறைவான ஒரே ஒரு கணம் ....இராமனின் விழிப்புலனோடு நேரடியாக மோதிக் கலக்கின்றன.
அந்தச் சங்கமத்தில்...’என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்பது போல இறைஞ்சும் இராமனின் பார்வையில்..., அரங்கேறிக் கொண்டிருக்கும் அந்த நாடகத்தின் சூட்சுமம், சீதைக்கு ஒரு நொடியில் புரிந்து விடுகிறது.
இனிமேல் தான் செய்ய வேண்டியது இன்னதென்பதும் அவளுக்கு விளங்கிவிட...,
அவள் இப்போது தெளிவாக..,திடமாக நிற்கிறாள்.

அதுவரை மீட்சிக்காகக் காத்திருந்தவர்கள் இப்போது சீதையின் சிதையேற்றத்துக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறார்கள்.
மன்னனின் வார்த்தைக்கு மறுசொல் கூறாத பணிவு, இறைவனின் ஆணையை எதிர்த்து இயங்க முடியாத பக்தி, அவர்களை ஊமையாக்குகிறது.
இராமனின் எண்ணத்துக்குக் கருவியாக இருந்தே பழகிப் போன இலக்குவன்
தீ மூட்ட.., அது, அனைவரின் அடிவயிற்றிலும் வந்து பற்றிக் கொள்கிறது.

கரம் கூப்பிக் கண்களை மூடியபடி,மும்முறை அக்கினி தேவனை வலம் வருகிறாள் சீதை.
மண்ணில் உடல் தோயத் தீக் கடவுளை வணங்கித் தொழுதபின் அங்கிருந்து நகர்ந்து வந்து இராமனின் பாதங்களில் ஒரு முறை வீழ்ந்து எழுகிறாள்.

‘’தங்கள் ஆணையை இம் முறை என்னால் நிறைவேற்ற முடியவில்லை சுவாமி! என்னைத் தாங்கள் மன்னித்து அருள வேண்டும் !’’

மெள்ள எழுந்த சீதையின் குரல், அந்தப் பிரதேசத்தின் நாடியையே அதிர்வுக்கு ஆளாக்கி உலுக்கிப் போடுகிறது.எதிர்பாராமல் நேர்ந்த இந்தத் திருப்பத்தின் விளைவு இன்னதென அனுமானிக்க முடியாமல், இராமனும் கூட அதிசயப்பட்டுப் போகிறான்.

‘’என் கணவனாக இருந்து நீங்கள் வழங்கிய தீர்ப்பல்ல இது என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.அயோத்தியின் மன்னர் குலத் தோன்றலாக,நீங்கள் எனக்கு வழங்கியிருக்கும் தண்டனை இது ! அரசக் குடியினர் சுமந்தே தீர வேண்டிய முட்கிரீடங்களில் இதுவும் ஒன்று என்றே நீங்கள் நினைக்கிறீர்கள். தண்டனை இல்லாமல் என்னை ஏற்றுக் கொண்டு விட்டால் நாளை தவறான செயல்களை நியாயப்படுத்த விரும்பும் மக்களும் கூட உங்களை உதாரணம் காட்டி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சுவது எனக்கு நன்றாகவே புரிகிறது...ஆனால், நானும் கூட அதே போன்ற அச்சத்தினாலேதான் தங்கள் ஆணக்கு உடன்பட மறுக்கிறேன்..’’
-இராமனின் புருவங்கள் வியப்பால் உயர அவள் தொடர்கிறாள்.

‘’நாம் இருவரும் மனித உருவத்தில் இந்த மண்ணுக்கு வந்திருக்கலாம் என்றாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுகிற பலம் நம்மிடத்திலே இருக்கிறது.
என்னைச் சுட வரும் அக்கினியையும் கூடத் தீய்த்துவிடும் தெய்வீக ஆற்றல் என்னிடம் இருப்பது தங்களுக்கும் தெரியும்!அதனாலேயே என்னைத் தீக் குளிக்குமாறு ஆணை இடுகிறீர்கள் !
ஆனால்...இனி வரும் காலத்தில்.., தங்களின் இந்த ஒரு செயலை மட்டுமே முன்னோடியாக எடுத்துக் கொள்ளும் மண்ணுலக மனிதர்கள் ....
தவறே செய்யாத ஒரு பெண் மீது களங்கம் சுமத்திக் கழுவிலேற்றத் துடிக்கும்போது ..,
மனைவி மீது சிறியதொரு சந்தேகம் எழுந்தாலும் அதைக் காரணமாக்கி அவளை ஆட்டிப் படைக்க ஆசை கொள்ளும்போது ..
அங்கேயும் தங்கள் பெயர் தவறாகப் பயன்பட்டு விடக் கூடிய அபாயம் இருக்கிறதே...?
அப்போது..பாவப்பட்ட அந்த மானுடச் சீதைகளின் நிலை..?

என் நிலையில் ...இந்தத் தீக் குளிப்புக்கு ஒரு நொடியில் நான் உடன்பட்டு விட முடியும்.
ஆனால்...அக்கினிப் பிரவேசம் செய்து என் பெருமையைப் பறை சாற்றிக் கொள்வதை விட அதைச் செய்யாமலிருப்பதன் மூலம், எதிர்காலத்தில் என் பெயரால் எரியூட்டப்படும் என் சகோதரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் நான்!
தங்களின் செயல்,தவறான ஒரு முன்னுதாரணமாகி வரலாற்றின் பக்கங்களைக் கறைப்படுத்திவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தினாலேயே தயங்கி நிற்கிறேன் நான் !’’

மனமும் உடலும் களைத்துப் போய்ப் பேச்சை நிறுத்திய அந்தப் பெண்குல திலகத்தை ஆதரவோடு நெருங்கி,அவளது குழல் கற்றையை வாஞ்சையோடு நீவி விடுகிறான் இராமன்.அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவன் எடுத்துவிட்ட முடிவைப் புரிந்து கொண்ட பூரிப்பில் அங்கே கூடியுள்ளோரின் நெஞ்சங்கள் அமைதியால் நிறைகின்றன.

(கம்பராமாயண யுத்த காண்டத்தின் மீட்சிப் படலப் பாடல்களை முழுவதும் உள்வாங்கிக் கொண்டு, அதன் அடிப்படையில் 
சிறிது புனைவையும் இணைத்து, மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட கதை இது.
’கலைமகள்’மாத இதழில் நவ. 1988 ஆம் ஆண்டில் முதலில் வெளிவந்த இச் சிறுகதை,மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தார் தொகுத்து வெளியிட்டிருக்கும் ‘கதை அரங்கம்’ - 4 ஆம் தொகுதியிலும் இடம் பெற்றிருக்கிறது.
பி.கு;
சிறுகதைப் பிதாமகரான புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ சிறுகதையே இப் படைப்பை எழுத என்னைத் தூண்டியது.
‘சாப விமோசனம்’ வெளிவந்த அதே கலைமகள் இதழில் இக் கதையும் வெளிவந்தது, நான் பெற்ற பெரும் பேறு)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


கதை அரங்கம்’ - 4 ஆம் தொகுதி முன்னுரையில் மதுரை காமராசர் பல்கலைப் பேராசிரியர் திரு சு.வேங்கடராமன் இச் சிறுகதை குறித்து எழுதியதிலிருந்து சில பகுதிகள்..
’’புதிய பிரவேசங்கள் சிறுகதையில், இராமாயண காலச் சீதையின் அக்கினிப் பிரவேசம் , இன்றைய சமகாலச் சமூக உணர்வுடன், பெண் உரிமைக் குரலுடன் படைக்கப்பட்டுள்ளது. ..
வருணனைத் திறனும் ,உரையாடல் நயமும் இணைந்த கதை இது.’’

4 கருத்துகள் :

suneel krishnan சொன்னது…

அம்மா ,மிக சிறப்பாக உள்ளது , சீதையின் உள்ளத்தில் உள்ள conflict நன்றாக வெளிபடுகிறது , மேலும் இறுதி பகுதியில் உள்ள பெண்ணிய குரல் இதற்கு நல்ல கனத்தை அளிக்கிறது .

பெயரில்லா சொன்னது…

மிகச் சரியான முடிவு! ராமாயணத்தின் முடிவும் இப்படியே இருந்திருந்தால், அது மேலும் எப்படி தொடர்ந்திருக்கும் என்று எண்ண தோன்றுகிறது. இப்படி ஒரு முடிவு இருந்திருந்தால் ராமாயணம் இதிகாசம் ஆகி இருந்திருக்குமா?!

//கருணைப் பசையின்றி உதிரும் இவ் வார்த்தைகள் ...,
உயிரின் ஈரத்தில் தோயாமல் வறட்சியோடு வெளிப்படும் இந்தச் சொற்கூட்டல்கள்..,
இவை..தன் தலைவனுக்குச் சொந்தமானது எப்போது?
உயிரின் ஒவ்வொரு அணுவையும் வார்த்தை அக்கினிகளால் பொசுக்கித் தீய்த்தபின் இன்னொரு அக்கினிப் பிரவேசம் அவசியம்தானா?//
மிகவும் அற்புதம்! கண்ணீரை வரவழைத்து விட்டது இந்த அருமையான வரிகள்.

அப்பாதுரை சொன்னது…

மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். கருத்தும் சொல்லாட்சியும் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது. சீதையின் முடிவில் புரட்சியை விட அவள் ராமனுக்கு சொன்ன விளக்கம் புரட்சியானதாகப் படுகிறது.

பெயரில்லா சொன்னது…

//கனவு கண்டு விழித்தது போல் இருக்கிறது மனம். இதை படிக்க படிக்க அந்த ராமாயண காலத்தில் அந்த கூட்டத்தில் ஒருத்தியாய் நானும் வேதனையில் நின்று இந்த காட்சியை பார்ப்பது போல் ஒரு உணர்வு. மிகவும் அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்//

என் கருத்தும் இதுதான் மேடம்.மேலும் இந்த கதையில் சிறந்த எழுத்து திறன் வெளிப்பட்டு இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....