துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.10.11

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1




மற்றவர்கள் வாழ்கிற உலகத்திற்குள் நுழையவே முடியாதபடி அப்படி 
சடனைத் தடுப்பதுதான் எது?
ஏதோ ஒரு வகையில்அவனை  எல்லோருமே நேசித்தாலும்,இரக்கமும் கனிவும் காருண்யமும் அவனிடம் சற்றுக் கூடுதலாகவே நிரம்பித் 
தளும்புவதை எல்லோருமே இனம் கண்டு கொண்டாலும் அவனை அவர்களால் புரிந்து கொள்ள மட்டும் முடியாமல் போவது ஏன்?
 மற்றவர்களிடமிருந்து - பிற சராசரிகளிடமிருந்து அந்த ‘மாயக்காரனை வேறுபடுத்துகிற அம்சம்தான் என்ன?

எல்லாவற்றுக்கும் காரணம் அசடனின் எண்ண ஓட்டம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருப்பதுதான்.

அவன் தர்க்கபூர்வமாகச் சிந்திப்பதில்லை என்பதோ அவனது மனம் ஒருகுழந்தையைப் போன்றது என்பதோ இதற்குக் காரணமில்லை.
அவன் சிந்திக்கும் பாங்கே ‘மாயமானது என்கிறேன் நான்.

மென்மையான இந்த அசடன்,இந்த உலகத்தை,அதன் சிந்தனைப் போக்குகளை,ணர்வுகளை-இங்கு வாழும் மனிதர்கள் கைக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான்.அவனது உண்மை,அவர்களின் யதார்த்தத்திலிருந்து முழுமையாக வேறுபட்டிருக்கிறது;அவர்களின் யதார்த்தம் அவன் கண்களில் ஒரு நிழலைப் போல மட்டுமே தோற்றம் தருகிறது.
முற்றிலும் புதிதான ஒரு உண்மையான யதார்த்தத்தைக் காண விரும்பி அதை அவர்களிடம் கோருவதனாலேயே அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்.
ஹெர்மன் ஹெஸ்ஸே


.அசடன் கதைச் சுருக்கம்
ரஷ்யநாட்டின் பழமையான ஒரு அரச/பிரபுத்துவக் குடும்பத்தின் வழி வந்த காரணத்தால் இளவரசன் என்ற பெயரை முன் ஒட்டாகக் கொண்டிருக்கும் இளவரசன் மிஷ்கின் என்னும் லேவ் நிகொலெயெவிச், தன் பெற்றோரை இழந்து குடும்ப நண்பர் பாவ்லிஷ்ட்சேவின் பராமரிப்பில் விடப்பட்டவன்; வலிப்பு நோயும் ,இலேசான மனப் பிறழ்வும் கொண்டிருக்கும் அவனை ஷ்னீடர் என்னும் மருத்துவரின் பொறுப்பில் ஒப்புவித்து சிகிச்சைக்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறார் பாவ்லிஷ்ட்சேவ்.சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுக் காலம் சிகிச்சை பெற்ற பின் தன் தாய்நாடான ரஷியாவில்,அங்குள்ள பீட்டர்ஸ்பர்க் நகரில் முதன் முறையாகக் கால் பதிக்கிறான் மிஷ்கின். 


தனது குடும்பப் பாரம்பரியத்தில் வந்த தூரத்து உறவினளான லிசவெதா ப்ரகோஃபியேவ்னாவை முதலில் தேடிச் செல்லும் அவன்,அவளது கணவர் தளபதி இபான்சினையும் அவளது மூன்று மகள்களையும் அறிமுகம் செய்து கொள்கிறான்.அவர்கள் வீட்டில் தற்செயலாக அவன் கண்ணில் படும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவின் படம் அவனுள் இனம் புரியா உணர்வுகளைக் கிளர்த்துகிறது; 

பேரழகியான அவளுக்குள் பெரும் துயரம் ஒன்றும் உறைந்திருப்பதை அவன் அந்தப் படத்திலிருந்து கண்டு கொள்கிறான்.

நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா


நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,பெரும் செல்வந்தரான டாட்ஸ்கி என்பவரால் வஞ்சிக்கப்பட்டவள்;தன்னிடம் பணி புரிந்து இறந்து போன அலுவலரின் மகளான அவளை வளர்க்கும் பொறுப்பை முதலில் ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி பிறகு அவளைத் தன் ஆசை நாயகியாக்கி அவளது வாழ்வைச் சீரழித்திருக்கிறார்.அவளை எவருக்காவது திருமணம் செய்து வைத்துத் தன் கடனைக் கழித்து விட்டுப் பணக்காரக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ளும் விருப்பத்தில் இருக்கும் அவர் போட்ட தூண்டிலில் சிக்குகிறான் கன்யா.இபான்சினின் உதவியாளராக இருக்கும் அவன்,அவரது மூன்றாவது மகள் அக்லேயாவின் மீது ஆசை கொண்டிருந்தபோதும் அவளிடமிருந்து சரியான விடை கிடைக்காததாலும் டாட்ஸ்கி தரும் 75,000 ரூபிள்களுக்கு ஆசைப்பட்டும் நஸ்டாஸ்யாவை மணக்கச் சம்மதித்திருக்கிறான். இடையே 

நஸ்டாஸ்யா மீது வெறித்தனமாகக் காதல் கொண்டிருக்கும் ரோகோஸின் என்னும் திடீர்ப்பணக்காரனும் உள்ளே நுழைந்து ஒரு லட்சம் ரூபிள்களைக் கொண்டுவந்து கொட்டி அவளைத் தன்னுடையவளாக்கிக் கொள்ளப் போவதாக சபதமிட்டுப் போகிறான்.



அன்று மாலை நடக்கும் பிறந்த நாள் விழாவில் நஸ்டாஸ்யா யாரை மணப்பதென்ற தன் முடிவைச் சொல்லவிருக்கும் அந்த நேரத்தில் - கன்யா வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குத் தங்கியிருக்கும் 

மிஷ்கினும் அழையா விருந்தாளியாக அங்கு செல்கிறான். கன்யாவும் ரோகோஸினுமாக அவளை மாறி மாறி ஏலம் போடுவதைப் பொறுத்துக் கொள முடியாத அவன் ஒரு திடீர் மன எழுச்சியில் அவளை மனைவியாக்கிக் கொள்ளும் தன் விருப்பத்தை அறிவிக்கிறான்.அவனைப் போன்ற கள்ளமற்ற நேர்மையான ஒருவன் தன்னை மணக்க வருவதில் நஸ்டாஸ்யா ஒரு புறம் மகிழ்ச்சியடைந்தாலும்,மறுபுறம் தான் அதற்கு லாயக்கற்றவள் என்ற எண்ணமும் அவளை வதைக்கிறது.எதிர்பாராத விதமாக மிஷ்கின் ஒரு சொத்துக்கு வாரிசாகப் போகிறான் என்ற செய்தியும் கூடவே கிடைத்து விட நஸ்டாஸ்யா சற்றே நெகிழ்ந்த தன் உள்ளத்தை மேலும் இறுக்கமாக்கிக் கொள்கிறாள்.டாட்ஸ்கி நஷ்ட ஈடாகக் கன்யாவுக்குத் தரும் 75000 ரூபிள்களும் வேண்டாம் என்ற எண்ணத்தில் அவனை மறுதலிக்கும் அவள் ரோகோஸின் கொண்டு வரும் ஒரு லட்சம் ரூபிள்களையும் எரியும் நெருப்பில் தூக்கிப் போட்டபடி தன் சுய கௌவரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறாள்.பணத்தாசை கொண்ட கன்யா வேண்டுமானால் எரியும் நெருப்பில் கை விட்டு அந்தத் தொகையை எடுத்துக் கொள்ளட்டும் என்று அவள் பிரகடனம் செய்ய கன்யாவின் தன்மான உணர்வு அவனைக் கட்டிப்போட்டு விடுகிறது. மிஷ்கினைப் போன்ற ஒரு அப்பாவிக்குத் தான் தகுதியற்றவள் என நினைக்கும் நஸ்டாஸ்யா அவனது கோரிக்கையை நிராகரித்தபடி ரோகோஸினுடன் ஓடிப் போகிறாள்.மிஷ்கினும் அவர்களைத் தொடர்கிறான்.


[இந்தப் பகுதி முழுவதும் ஒரே நாள் நிகழ்வாக - நாவலின் முதல் பாகம் முழுவதுமாக அமைந்திருப்பது இந்நாவலின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்]





2 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

அசடன் பற்றி ஜெயமோகன் மிகவிரிவான கட்டுரை,முன்னுரை படித்தேன்.இதுபோலொரு நூலை ஆங்கிலம் அறியாத என்போன்ற பலருக்கும் தந்தமைக்கு நன்றிகள் போதா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....