துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.11.10

பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)

கருத்துப் பரிமாற்றத்திற்கு மட்டுமே கருவியாக உள்ள மொழியில்,பால் பாகுபாட்டிற்கு இடமில்லை என்றபோதும்,பொதுவாக மொழியைக் கையாளும் அதிகாரம் எவர் வசம் உள்ளதோ,அவரது கண்ணோட்டத்தை ஒட்டியே மொழியும் வடிவமைக்கப்படுவதைக் காண முடிகிறது.
தாய்வழிச் சமூக அமைப்பு,தந்தை வழிப்பட்டதாக மாறிய பிறகு,பல முதன்மையான துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதால் மொழி ஆண் வயப்பட்டதாக மாறிற்று.பெண்ணின் அடையாளங்கள் ,மதிப்பீடுகள்,பங்குநிலைகள் என அனைத்தும் ஆண் மொழியாலேயே வகுக்கப்பட்டன.
''பெருமையும் உரனும் ஆடூஉ மேன''
''அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
 நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப''’
போன்ற இரட்டைநிலைப் போக்குகள் கிளைக்க ஆண்மொழியே அடிப்படை அமைத்தது.

இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் காணும் முயற்சியாகவே பெண்மொழி குறித்த சிந்தனைகள் பெண்ணியப் படைப்புத் தளத்திலும்,திறனாய்வுத் தளத்திலும் வலுப்பெற்று வருகின்றன.'பெண்மொழி'என்பது,ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான ஒரு மாற்று அரசியலாக,கலகக் குரலாகக் கருதப்படுகிறது.
''பெண்மொழி என்பது,அரசியல்;பெண் இருப்பைப் பற்றியும்,பெண்ணுடலைப் பற்றியும் மொழி மற்றும் சமூக,குடும்ப,நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களைச் சிதைப்பதும்-அவற்றின் வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவதும்தான் பெண்ணின் மாற்று அரசியல்''
என்று குறிப்பிடுகிறார் இன்றைய நவீனப் பெண்கவிஞர்களில் ஒருவரான மாலதி மைத்ரி.

பாரதி தொடங்கி அறிவுமதி வரை ஆண்கவிஞர்கள் பரும் பெண்விடுதலைக்கான தேவையை வலியுறுத்தி உள்ளபோதும்,உடல்,மனம் சார்ந்த தனது அக,புறத் தடைகளைப் பாதிப்புற்ற தன் கண்ணோட்டத்திலிருந்து பெண்ணே முன் வைக்க முனைகையில் பெண்ணியச் சிக்கல்களின் பலவகைப் பரிமாணங்களை விரிவாக இனம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது.
''பெண்ணியச் சிந்தனைகளை ஆண் தீவிரமாகப் பேசலாம்;ஆனால் பெண்ணை நோக்க இவன் அதைப் பேசப் பொருத்தமானவன் அல்லன்.ஆண்கள் பேசும் பெண்ணியத்தை வரவேற்கக் கூடாது என்பதில்லை.ஆனால் அவர்களின் நோக்கம்,மற்றும் சொல்லாடலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்''என்ற பெண்ணிய ஆய்வாளர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.
பெண் தன் குரலைத் தானே பதிவு செய்ய முன்வரும் நிலையிலேதான்,பண்பாட்டு அடிப்படையிலும்,சமூக மரபுகள் சார்ந்தும்,ஆழ்மன நிலையிலும் காலந்தோறும் எவ்வாறான ஒடுக்கு முறைகளுக்கெல்லாம் அவள் ஆளாகியிருக்கிறாள் என்பது சரிவரப் பதிவாக இயலும்.அத்தகைய ஒடுக்குதல்களுக்கு எதிரான சிந்தனை ஓட்டங்களை எழுப்பிச் சமூக மனச் சாட்சியைத் தூண்டுவதும் பெண் மொழியினாலேயே சாத்தியமாகும்.

சங்கம் மற்றும் பக்திக் கவிதைக் களத்தில் பெண்மொழி;
சங்கக் கவிதை வெளியில் ஆணாதிக்கச் சொல்லாடல்களை அடியொற்றி,அன்றைய சமூக நிறுவனம் ஏற்படுத்தியிருந்த மரபு நெறிகளுக்குள் எந்த முரண்பாடும் இன்றிப் பொருந்திப் போனதாக
''ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே''
என அதை வழிமொழியும் போக்கிலேயே பெரும்பாலும் பெண்குரல் ஒலிக்கிறது.
பண்பாட்டு மரபுகளால் பெண் மீது சுமத்தப்பட்ட விதவைநிலைக் கொடுமை போன்றவற்றைச் சில புறநானூற்றுப் பெண்கவிஞர்கள் பதிவு செய்துள்ளபோதும் அவை தன்னிரக்க வெளிப்பாடுகள் மட்டுமே.
தான் கொண்ட காதல் வேட்கையை வெளிப்படுத்தும் உரிமை பெண்ணுக்கு இல்லை எனக் குறிப்பிடும்
''தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை''
என்ற தொல்காப்பிய மரபை மீறித் தன் காதல் உணர்வைப் பெண் வெளிப்படையாகப் புலப்படுத்தும் ஒரு சில கவிதைகள் சங்கக் களத்தில் அரிதான விதி விலக்குகளாகப் பதிவாகியிருப்பதையும் காண முடிகிறது.
''காமம் பெரிது..களைஞரோ இலரே''-
''வருத்தி வான்தோய்வற்றே காமம்''-

சங்கத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் சமயப் பின்புலத்தைச் சார்ந்தவர்களாய்த் தமிழ் இலக்கியத்தில் முகம் காட்டும் காரைக்கால் அம்மையும்,ஆண்டாளும் மரபுகளின் தாக்கத்தால் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புக்களை,மனக் காயங்களைத் தங்கள் எழுத்துக்களில் இறக்கி வைத்திருப்பதைக் காண முடிகிறது.இவ்விருவருள் உடலையும்,பாலியலையும் மறுப்பதன் வழி தன் எதிர்ப்பைக் காட்டுபவர் காரைக்கால் அம்மை;ஆண்டாளோ பாலின பேதங்களால் இது வரை பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருந்த கலாச்சாரக் கட்டுமானங்களைத் தகர்த்தெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர்.
தமிழ் இலக்கியப் பரப்பில் பெண்மொழி குறித்த சிந்தனைக்குத் தாங்கள் அறியாமலேயே அடித்தளம் அமைத்து விட்டவர்களாக இவர்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
''பெண்மை பற்றி ஆண் நோக்கு நிலை நிறுவியுள்ள அழகியற்கோட்பாடுகளையே பெண் எழுத்தாளர்களும் வளர்த்தெடுத்துச் செல்கின்றனர்''
எனப் பெண்படைப்பாளிகளின் மீது பொதுவாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டை உடைத்துத் தனித்துவமுள்ள பலரும் சமகாலக் கவிதைப் பரப்பில் தங்கள் முத்திரைகளை அழுத்தமாகப் பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
''சங்க காலத்துக்குப் பிறகு ஏறக்குறைய 200ஆண்டுகளுக்குப் பின் 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் தமிழ்க் கவிதையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளது''என்று கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிடுவதைப்போல இரா.மீனாட்சி,கனிமொழி,சுபத்ரா,உமாமகேஸ்வரி,சல்மா,இளம்பிறை,வெண்ணிலா,திலகபாமா,சுகந்தி சுப்பிரமணியன்,க்ருஷாங்கினி,வத்சலா,மாலதி மைத்ரி,குட்டி ரேவதி,சே.பிருந்தா,ஆண்டாள் பிரியதர்ஷினி என நீண்டு செல்லும் இப் பட்டியலில் செல்வி சிவரமணி,அவ்வை,சங்கரி,சுமதிரூபன்,றஞ்சி முதலிய ஈழப் படைப்பாளிகளும் இடம் பெற்றுள்ளனர்.

4 கருத்துகள் :

என்னது நானு யாரா? சொன்னது…

//'பெண்ணியச் சிந்தனைகளை ஆண் தீவிரமாகப் பேசலாம்;ஆனால் பெண்ணை நோக்க இவன் அதைப் பேசப் பொருத்தமானவன் அல்லன்.//

இது சரியில்லை என்றே எண்ணுகின்றேன். மனிதம் என்கின்ற பரந்து விரிந்த நோக்கில் பார்த்தால் யாருடைய வலியையும் வேதனையையும் புரிந்துக்கொள்ள முடியும். அதனால் விடுதலைக்கு யாரும் குரல் கொடுக்கலாம் பெண் விடுதலையில் ஆணின் விடுதலையும் பின்னிப் பினைந்துள்ளது. காந்தி மகாத்மா ஆனார் என்றால் கஸ்தூரி பாய் அவர்களின் பங்கு நிச்சயம் உண்டு. அதனால் ஆண் பெண் பேதம் வேண்டாம்.

ஒட்டு மொத்த மனித சமூகம் உயரட்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் களத்திற்கு வரவேண்டும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

சரியான கருத்துதான்.ஆனாலும் வலிக்கிறவன் அழுவதற்கும்,வலியைப் புரிந்து கொள்ள முயல்பவன் அழுவதற்கும் வேறுபாடு உள்ளதில்லையா.
மேலும் ஆண் பேசவே கூடாது என்பது வாதமில்லை.இன்றைய பெண்ணியப் பார்வை இது என்பது மட்டுமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.தொடரும் அடுத்த பதிவுகளில் இன்னும் கூட விரிவாக அது அலசப்படும்.

என்னது நானு யாரா? சொன்னது…

//ஆனாலும் வலிக்கிறவன் அழுவதற்கும்,வலியைப் புரிந்து கொள்ள முயல்பவன் அழுவதற்கும் வேறுபாடு உள்ளதில்லையா.//

அப்படி இருக்கமுடியுமா என்றுத் தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அழுதுப்புலம்பினாரே வள்ளலார்! பெண்கள் மட்டும் தங்க்ளுக்கான உலகத்தை அமைத்துக்கொண்டு கோட்டைக் கட்டிக்கொண்டு, அந்த கோட்டையில் இருந்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியுமா? ஆண்களை சந்தேகப்படுவதாகத்தான் அமையும் இந்த நிலை. உண்மையாக ஆண்கள், பெண்கள் மேலே வரவே விரும்புகின்றார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படித்தான். ஆனால் பெண்கள் தான் இன்னமும் இன்னமும் சிறிய வட்டத்திற்குள் அடங்கிக் கொண்டு சுகம் கண்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது எனக்கு வியப்பும் வேதனையும் அளிக்கின்றது.

உதாரணத்திற்கு எத்தனைபேருக்கு தங்களின் பெயர்களை வெறுமனே உமா ரமா என்று சொல்கின்றார்கள். உமா ராமநாதன் ரமா விஸ்வநாதன் என்று தானே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் பெண்ணே தன்னை சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளும் முயற்சி அள்ளவா?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அப்படி மேலோட்டமாகச் சொல்லி விட முடியாது வசந்த்!அதற்கு எத்தனையோ ஆழமான உட்காயங்களும்,உளவியல் அடிப்படைகளும் இருக்கின்றன.
சிறிய வட்டத்துக்குள்ளிருந்து விடுபட்டுப் பிரபஞ்சத்தை நோக்கித் தன் எல்லைகளை விரிவுபடுத்தவும்,ஆணோடான தன் மனத்தடைகளை நீக்கிக் கொண்டு சுமுகமான முறையில் - இயற்கைக்கு முரணின்றி வாழ்வைத் தொடரவுமே பெண் விரும்புகிறாள்.அந்தப் பாதையில் அவள் எதிர்ப்பட நேரும் தடைகள் இப்படியெல்லாம் கூட அவளைச் சந்தேகப்படவும்,எதிர் மனோபாவம் கொள்ளவும் தூண்டி விடுகின்றன.
பெண்களைச் சக உயிரிகளாகக் கருதும் மனோபாவம் ஆண்களிடம் மேலோங்குகையில் இவையெல்லாம் தானே மறைந்து மானுடம் மட்டும் எஞ்சும்.அதுவே நம் இலக்கு.தொடர்ந்து பல பதிவுகளில் இது பற்றி விரிவாகப் பேசுவோம்.காத்திருங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....