துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.7.11

மொழியெனும் தேவதை(என்னுரை)


(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் என்னுரை)
மொழியெனும் தேவதை


சிறுவயது முதல் என்னை வசீகரித்த ஒரு வடிவம், சிறுகதை .
.
ஏதாவது ஒரு கதைப் புத்தகத்தை வாசித்தபடியே நகர்ந்த நாட்களும்,  குழந்தைத்தனம் மாறாத பேதமையுடன் கதை எழுதப் போவதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு , வீட்டின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியபடி புத்தம் புதிய டைரிகளின் பக்கங்களில் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்த தருணங்களும் மட்டுமே பாலிய பருவத்தின் நினைவுகளாக என்னுள் பசுமையாகப் பதிந்திருப்பவை.

மொழி , வசப்படத் தொடங்கிச் சற்று மன முதிர்ச்சியும் வளரத் தொடங்கிய பிறகு அவ்வப்போது எதையாவது எழுதிக் கொண்டு வந்தாலும் அச்சு வடிவில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் , அறிமுக எழுத்தாளாரான என் சிறுகதை (’ஓர் உயிர் விலை போகிறது’ ) 
1979ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அந்தக் கணத்திலேதான்..
பலரும் அறியும் தளத்துக்கு என் எழுத்தை நகர்த்தி, எழுத்தாளர் என்னும் ஒரு தகுதிப்பாட்டை எனக்கு முதன்முதலாக வழங்கிய ‘கல்கி’இதழுக்கு இன்றளவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
பிறகு தொடர்ந்து கல்கி,ஆனந்தவிகடன்,தினமணி கதிர்,மங்கையர் மலர், 
அவள் விகடன் , கலைமகள் , அமுதசுரபி, புதிய பார்வை போன்ற இதழ்களிலும், 2006 க்குப்பின் தில்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இதழிலும் என் சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

தொடர்ந்து அதே தளத்தில் தீவிரமாக இயங்க முடியாதபடி அலுவல் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் அமைந்து விட்டபோதும் - எழுத்தென்னும் உயிர்த்தீயைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடியபடி - வரையறுக்கப்பட்ட சூழல்களுக்குள்ளும் கூட எப்பாடுபட்டேனும் படைப்பு முயற்சிகளைத் தொடர்ந்தே ஆக வேண்டும் என்ற தாகத்தோடும் , பிடிவாதமான போர்க் குணத்தோடும் அவ்வப்போது ஒரு சில படைப்புக்களையாவது நான் உருவாக்கிக் கொண்டுதான் இருந்தேன்.


கோவை ஞானி , தொடர்ச்சியாக நடத்திய பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டி எனக்குச் சிறப்பானதொரு களத்தை அமைத்துக் கொடுத்தது. அப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட என் சிறுகதைகள் , கோவைஞானி தொகுத்திருக்கும் பெண் எழுத்தாளர் தொகுப்புக்கள் பலவற்றிலும் பல இடம் பெற்றிருக்கின்றன.
தினமணி கதிரில் வெளியான ‘கண் திறந்திட வேண்டும் ‘என்னும் எனது சிறுகதை , பாலுமகேந்திராவின் ‘கதைநேரம்’பகுதிக்காகத் தேர்வு செய்யப்பட்டு ‘நான் படிக்கணும் ‘ என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றது (கதைநேரம் பகுதி:36) என் சிறுகதைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்.

மேற்குறித்தவை ஒரு புறமிருக்க...என் போதாமையை நானே நன்கு உணர்ந்திருக்கிறேன்.
என் வாழ்க்கை அனுபவங்கள் எல்லை கட்டியவை.
ஒரு ஆசிரியராக மாணவியரோடு எதிர்ப்பட நேர்ந்த அனுபவங்கள்,
பெண்ணியத்தில் முனைப்புக் கொண்டதால் நேரிட்ட தாக்கங்கள்,
நவீன இலக்கிய மாணவியாகத் தமிழ்ப் புராணங்களையும், இலக்கியச் செய்திகளையும் மறு ஆக்கம் செய்வதில் கொண்ட ஆர்வம்..
ஆகியவைகளையே பெரும்பாலும் கதை வடிவங்களாகப் பதிவு செய்ய நான் முயன்றிருக்கிறேன். 

நான் அசை போட்டு வெளிக் கொணர வேண்டிய அனுபவங்களும் நான் பயணித்தாக வேண்டிய இலக்குகளும் இன்னும் கூட எனக்குத் தொலைதுரக் கனவுகளாக மட்டுமே இருந்துக் கொண்டிருக்கின்றன.
இன்றளவும் கூட ’எழுதிப் பார்க்கும்- எழுதிப் பழகும் ‘ முயற்சிகளாகவே என் சிறுகதைகளை நான் கருதி வந்திருக்கிறேன்; 
இது அவையடக்கம் அல்ல ;உண்மையும் கூடத்தான்.
பாரதி உரைத்த ’பெரிதினும் பெரிதை’ எப்போதாவது எட்டி விட.வும்,
 உள்ளே கனன்று கொண்டிருக்கும் நாவல் எழுதும் ஆசையைத் தொட்டுப் பிடித்து விடவும் உதவும் படிக் கற்களாக,அதற்கான சுருதி மீட்டும் சிறு முயற்சிகளாக மட்டுமே இந்த ஆக்கங்களை என்னால் கொள்ள முடிகிறது.

இன்று சிறுகதையின் மொழியும்- கட்டமைப்பும் உள்ளடக்கமும் மாறியிருக்கிறது என்பதையும் நான் அறிவேன்.
இருந்தபோதும் என் தொடர் வளர்ச்சி,மாற்றங்களை நானே கணித்துக் கொள்ளவும்,
என் குறைநிறைகளை நானே கணக்கிட்டுக் கொள்ளவும் துணை வரும் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்பை வெளியிடத் துணிந்திருக்கிறேன்

1979 முதல் 2009 வரை -  தொடர்ந்து வெளிவந்த இக் கதைகள் - இன்றைய மதிப்பீட்டில் எவ்வாறு கணிக்கப்பட்டாலும், 
என் வாழ்வின் குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தின் ஆவணங்கள்.தொடக்கத்தில் மூன்று தனித் தொகுப்புக்களாக வந்த இவை, இன்று கிடைக்காத சூழலில் -  
இவற்றில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டுமாவது தொகுத்துப் பதிப்பிக்க வேண்டும் என்று நான் விரும்பியபோது , புதுதில்லியிலிருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழின் ஆசிரியரான என் மதிப்பிற்குரிய நண்பர் திரு பென்னேஸ்வரன் அவர்கள் அதற்கு ஒரு களம் அமைத்துத் தந்து வடக்கு வாசல் வெளியீடாக இதனை வெளியிட முன் வந்திருக்கிறார்.
மேலும் மிகச் சிறப்பான தனது பதிப்புரையால் இந்நூலை அர்த்தச் செறிவுடையதாகவும் ஆக்கியிருக்கிறார்.
2006க்குப் பிந்தைய எனது இலக்கியப் பயணத்தில் தோன்றாத் துணையாக எனக்குத் தோள் கொடுத்து வரும் இலக்கிய நண்பர்களின் வட்டத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

நண்பர் திரு பாவண்ணனின் எளிமையும் , மெய்ம்மையும் கூடிய எழுத்துக்களின் மீது என்றுமே எனக்கு ஒரு மரியாதை உண்டு. இக் கதைகளுக்கான அணிந்துரைக்காக அவரை நாடியபோது , தன் பணிச் சுமை மற்றும் மாறுதல்களுக்கிடையே எந்த மறுப்பும் கூறாமல் கனிவோடு என் வேண்டுகோளை ஏற்றுச் சிறப்பான தனது எழுத்தால் இத் தொகுப்பின் முகப்பை அணி செய்திருக்கும் அவருக்கு என் அன்பு கலந்த நன்றி.

இந்நூலுக்கு மிகக் குறுகிய காலத்தில் அருமையானதொரு முகப்போவியம் வரைந்தளித்த ஓவியர்(வலைப் பதிவர்/திரைப்பட விமரிசகர்)
 திரு சந்திரமோகன் அவர்களுக்கும் மற்றும் அச்சுப் பதிப்பால் இந்நூல் சிறப்புற வெளிவர உதவிய வடக்கு வாசல் பதிப்பகத்தின் திரு செந்தில் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளை வெளியிட்டிருக்கும் குறிப்பிட்ட தமிழ் வார மாத இதழ்களுக்கும் நன்றியுடையேன்..

மொழியோடு ஏதோ ஒரு தொடர்பில் இருக்கிறேன் என்பதை எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ள மட்டுமே இத் தொகுப்பு...

எம்.ஏ.சுசீலா,
புதுதில்லி
17.06.2011

5 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

இந்த முன்னுரையின் மூலம் எழுத்தாளர்கள் உலகில் உங்கள் தடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.
பாலு மகேந்திராவின் 'கதை நேரம்' முழுதும் பார்த்திருக்கிறேன். எல்லாமே அருமையாக இருந்தது. தலைப்புகள் நினைவில் இல்லாததால் அதில் நீங்கள் எழுதிய கதை எது என்று என்னால் நினைவு கூற முடியவில்லை. மன்னிக்கவும்!
உங்களை போன்றவர்களின் எழுத்தில் மொழியானவள் தேவதையாகத்தான் காட்சி தந்து கொண்டிருக்கிறாள்.
'தேவந்தி' புத்தக வடிவம் வசீகரமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

santhosam amma...
vazhththukkal amma...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நான் அசை போட்டு வெளிக் கொணர வேண்டிய அனுபவங்களும் நான் பயணித்தாக வேண்டிய இலக்குகளும் இன்னும் கூட எனக்குத் தொலைதுரக் கனவுகளாக மட்டுமே இருந்துக் கொண்டிருக்கின்றன.//

மொழி என்னும் தேவதை அழ்கான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
மீனாக்ஷி,கதைநேரம் 36ஆவது பகுதியில் என் கதை இடம் பெற்றது.உண்மையில் அக் கதைக்கு நான் சூட்டிய பெயர் ‘கண் திறந்திட வேண்டும்’.அதே பெயருடன் இந்த வலைத் தளத்தில் கதையைப் படிக்கலாம்.
ராஜராஜேஸ்வரி.!ஆம்..நான் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்தான்..உடலும் உள்ளமும் அதுவரை வலுவாக இருந்தாக வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி! கதையை படித்து நினைவு கூர்ந்தேன். கதை நேரத்தில் வந்த கதைகள் எல்லாமே மனதை நெகிழ செய்த கதைகள்தான் இந்த கதை உட்பட. இதை பார்த்ததை விடவும் இப்பொழுது படித்தபோது கதா பாத்திரத்தின் உணர்வுகளோடு இன்னும் லயிக்க முடிந்தது. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....