‘’கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை தருவதென்பது அந்தக் குற்றத்தை விடவும் மோசமானது.’’
‘’எவரையும் கொல்லக் கூடாது’’என்பது உறுதியாக எழுதப்பட்டிருக்கும் ஒரு வாசகம்.அவன் கொலை செய்து விட்டான் என்பதற்காக நாமும் அவனைக் கொல்லுவதா..’’
’’குறிப்பிட்ட இந்த மணி நேரத்தில் இதோ இந்த நொடியில் இந்த உயிர் உடலை விட்டுப் போய்விடப் போகிறது,இந்த மனித வாழ்வு முடிந்து விடப் போகிறது என்பதை ஒருவன் அறிந்திருப்பதுதான் உண்மையான வலி..அதுதான் மிகுதியான வேதனை.’’-தஸ்தயெவ்ஸ்கி
முன் குறிப்பு;மரணதண்டனை பற்றிய விவாதங்கள் பல முனைகளிலும் வலுப் பெற்று வரும் இன்றையசூழலில் தானே அனுபவிக்க நேர்ந்த கோரமான அந்த நிகழ்வை மனதில் கொண்டு,அவ்வகையான தண்டனைகள் மீதான தனது கண்டனங்களையும் கடுமையான விமரிசனங்களையும் தனது இடியட்/அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் கூற்றாகப் பல இடங்களில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
விரைவில் என் மொழியாக்கத்தில் வெளிவரவிருக்கும் அந்தப் படைப்பிலிருந்து ஒரு சிலபகுதிகள்
மரணதண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1இன் தொடர்ச்சி
ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இபான்சின் குடும்பத்துப் பெண் ஒருத்தி மிஷ்கினிடம் அதற்கான கருப் பொருள் ஒன்றைக் கூறுமாறு கேட்க,அப்போதும் அவன் மனத்தில் எழுவது மரணதண்டனைக் காட்சிதான்...
‘’தூக்கு மேடையில் நின்று கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நீங்கள் வரைய வேண்டும்...அவன் அந்த மேடையில் நின்று கொண்டிருக்கும்போது -பலகையில் அவன் கிடத்தப்படுவதற்கு முன் அவன் நின்று கொண்டிருக்கும் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் காணும் அவன் முகத்தை நீங்கள் ஓவியமாகத் தீட்ட வேண்டும்’’
‘’தூக்கு மேடைக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டின் கடைசிப்படி தெளிவாகத் தெரியும் வண்ணம் ஓவியத்தை வரைய வேண்டும்.குற்றவாளி அப்போதுதான் அதில் கால் வைத்திருக்க வேண்டும்.அவனது முகம் வெளிறிப் போயிருக்க வேண்டும்..பாதிரியார் சிலுவையைப் படித்தபடி இருக்க அந்த மனிதன் பேராசையோடு தன் நீலம் பாரித்த உதடுகளை அதில் அழுத்தமாகப் பதித்தபடி,எல்லோரையும் பார்த்துக் கொண்டும் நடப்பது எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டும் இருப்பவனைப் போல காட்சியளிக்க வேண்டும்.சிலுவையும் அந்த முகமும் -இவைதான் அந்தப் படமாக இருக்க வேண்டும்.பாதிரியாரின் முகம்,பிற 2 பணியாட்கள்,இன்னும் சில தலைகள் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள் முதலானவை அரை வெளிச்சத்தோடும் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பின்னணி போலவும் மட்டுமே தீட்டப்பட வேண்டும்..ஆம்..அப்படித்தான் அந்த ஓவியம் இருக்க வேண்டும்’’
என்று கூறியபடி மரண தண்டனைக்கு இட்டுச் செல்லப்படும் அந்தக் காட்சியை விவரிக்கிறான் மிஷ்கின்.
’’மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளை எதிர்நோக்கியபடி அவன் அந்தச் சிறையில் குறைந்த பட்சம் ஒரு வார காலமாவது காத்துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன்.வழக்கமான நடைமுறைகளை ஒட்டி மரண தண்டனைக்கான உத்தரவு முறையான கையொப்பம் பெறுவதற்காக எங்கோ அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அந்த உத்தரவு அதிகாரிகளின் கையொப்பமிடப்பட்டுத் திரும்பி வருவதற்குத் தாமதம் ஆகும் என்று அதைக்கணக்குப்போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் இன்னும் ஒரு வார காலம் சென்ற பிறகுதான் அது திரும்பி வரும் என்ற நினைப்பிலேயே இருந்தான்.ஆனால் அதிகாரிகளின் கையொப்பமிட்டு மரண தண்டனைக்கான அந்த உத்தரவு எதிர்பார்த்ததற்கும் முன்னதாக-வெகு சீக்கிரமாக சிறை அதிகாரிக்கு வந்து விட்டது.
ஒரு நாள் காலை 5 மணி இருக்கும்;அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.அது அக்டோபர் மாதத்தின் இறுதி!காலை 5 மணியாகியும் கூடக் குளிராகவும் இருட்டாகவும் இருந்தது.சிறைக் கண்காணிப்பாளர் அங்கிருந்த காவலன் பின் தொடர அமைதியாக உள்ளே வந்தார்.அவனது தோள்களை மிக ஜாக்கிரதையாகத் தொட்டார்.’’மரண தண்டனை காலை பத்து மணிக்கு நிறைவேற்றப்படப் போகிறது’’என்றார்.அரைத் தூக்கத்திலிருந்த அவனால் அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.அதனால்’’உத்தரவு கையெழுத்திட்டு வருவதற்கு எப்படியும் ஒரு வாரம் ஆகுமல்லவா’’என்றபடி அதை ஆட்சேபித்தான்;ஆனால் தூக்கக் கலக்கத்திலிருந்து முழுமையாக விழித்துக் கொண்ட பிறகு அவ்வாறு எதிர்ப்பதை விட்டு விட்டான்.’’ஆனாலும்..இப்படீத் திடீரென்று இதைச் சொன்னது கடுமையானதாகத்தான் இருக்கிறது’’என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டான்.
அதற்கடுத்த 3,4 மணி நேரங்களில் வழக்கமான விஷயங்கள் எல்லாம் நடந்தன; ஒயின் ,காப்பி,மாட்டுக் கறி ஆகியவற்றோடு காலை உணவை அவனுக்கு அளிப்பது உட்பட எல்லாமே நடந்தது.(அது ஒரு கேலிக் கூத்து இல்லையா?ஆனால்..இப்படி ஒயின் தருவது,நல்ல சாப்பாடு போடுவது இதையெல்லாம் பார்க்கும் இந்த அப்பாவி ஜனங்கள்,சாகப் போகிறவனுக்கு நல்ல உணவளிப்பது ஒரு நல்ல மனிதத் தன்மைதானே என்று சொல்லியபடி தங்களைச் சமாதானம் செய்து கொண்டு விடுகிறார்கள்!)பிறகு சிறை அதிகாரிகள் அவனைக் கழிப்பறக்கு அனுப்புவார்கள்.[ஒரு குற்றவாளியின் கழிப்பறை எப்படி இருக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு..] இறுதியாக அவன் அந்த நகரத் தெருக்களினூடே இட்டுச் செல்லப்படுவான்...
‘அன்று அங்கே மக்கள் பெரும் கூட்டமாகக் கூடியிருந்தார்கள்;பத்தாயிரம் முகங்கள்,பத்தாயிரம் கண்கள்...இவை எல்லாவற்றையும் அவன் பொறுத்துக் கொண்டாக வேண்டும்...!அதை விட மோசமானது அப்போது அவனுக்குள் ஏற்படும் நினைப்பு..’இங்கே பத்தாயிரம் பேர்கள் இருக்கிறார்கள்...ஆனால் இவர்களில் ஒருவர் கூட மரண தண்டனைக்கு உட்படப் போவதில்லை.நான் மட்டுமே அதற்கு ஆளாகப் போகிறேன்....என்னை மட்டும்தான் மரண்ம் இப்போது தழுவப் போகிறது’என்ற அந்த எண்ணமே அவனை வதைத்துக் கொண்டிருக்கும்.
இதெல்லாமே வெறும் தொடக்கம்தான்!
அதன் பின்பு தூக்கு மேடைக்கு ஏறிச் செல்வதற்காக அங்கே ஒரு ஏணி இருந்தது.அந்த ஏணிப் படியின் அருகில் வந்தவுடன் அதன் கீழே நின்றபடி அவன் அழத் தொடங்கி விட்டான்..
அவனோடு கூடவே ஒரு பாதிரியாரும் இருந்தார்;முழுநேரமும் அவனோடு பேசிக் கொண்டே வந்திருந்தார் அவர்.ஆனால்,அவன் அதைக் கேட்டானா என்பது சந்தேகம்தான்...இறுதியாக அவன் ஏணியின் மீது ஏறத் தொடங்கினான்.பாதிரியார் அவனிடம் பேசுவதை விட்டுவிட்டு அவன் முத்தமிடுவதற்காக ஒரு சிலுவையை மட்டும் அவனிடம் தந்தார்.ஏணிப் படியின் கீழ் நிற்கும்போதே அவன் முகம் வெளிறிப் போய்விட்டான்..அதன் மேலேறி வந்து தூக்கு மேடையில் நிற்கும்போதோ எழுதுகிற தாள் போல வெள்ளை வெளேரென்று இன்னும் அதிகமாக வெளிறிப் போய்விட்டான்.
ஏதோ ஒன்று அவனைப் பிடித்து அழுத்தி மூச்சுத் திணற வைத்தது போல...அவனது தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பதைப் போல ..இப்படியெல்லாம் அவன் உணர்ந்திருக்க வேண்டும்....அந்தச் சிலுவையைப் பேராசையோடு அவன் முத்தமிட்டான்..ஒரு வேளை பின்னால் அது தேவைப்படலாம் என்று நினைத்திருப்பவனைப் போலவும்,தனக்கு உதவக் கூடிய எதையும் மறந்து விடக் கூடாது என்று எண்ணுவதைப் போலவும் ஆவேசத்தோடு அவன் இயங்கினான்.ஆனாலும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் கடவுள் சார்ந்த எண்ணங்கள் அவனுக்கு இருந்திருக்கக் கூடுமா என்பது எனக்கு சந்தேகம்தான்!
அவன் அந்த மரப்பலகையில்-தலையைச் சிரச் சேதம் செய்வதற்கான அந்த பலி பீடத்தில்-கிடத்தப்படும் வரை நடந்தது இதுதான்.அதன் பிற்கு அந்த நொடிக்காக அவன் காத்துக் கொண்டிருப்பான்;நடக்கப்போவது என்னவென்று அவனுக்குத் தெரியும்.திடீரென்று தனது தலைக்கு மேலாக அசைந்தாடிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய..கூரான் அந்த இரும்புத் துண்டு சுழன்று வரும் ஓசை அவனுக்குக் கேட்கும்.நிச்சயமாக அந்த ஓசையை அவன் கேட்டுத்தானாக வேண்டும்.ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்திற்குள் மட்டுமே அது நிகழ்ந்த்போதும் அந்த ஓசையைக் கேட்காமல் எவராலும் இருக்க முடியாது...
‘’தலை உடம்பிலிருந்து துண்டிக்கப்பட்டுப் பிறகு கிட்டத்தட்ட ஒரு விநாடி நேரம் அது உயிர்ப்போடு இருக்கக் கூடுமென்றும் அவ்வாறு துண்டிக்கப்பட்டு விட்டதைக் கூட அது அறிந்தே வைத்திருக்கும் என்றும் இன்னும் கூடச் சில விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் அதுதான் எவ்வள்வு அபத்தமாக இருக்கிறது...சற்றுக் கூடுதலாக ஐந்து விநாடி நேரம் அது பிரக்ஞையோடு இருந்தால்தான் என்ன வந்துவிடப் போகிறது..’’
மற்றொரு கட்டத்தில் மிஷ்கினுக்கும் ஒரு பணியாளனுக்கும் நடக்கும் ஓர் உரையாடல்...
’’நம்மிடம் மரண தண்டனை என்பது இல்லையல்லவா..’’
‘’அப்படியானால் அங்கே மரணதண்டனை இருக்கிறதா என்ன..’’
‘’ஆமாம்..ஃபிரான்ஸில் உள்ள லியான்ஸ் என்ற இடத்தில் நானே அதைப் பார்த்திருக்கிறேன்.’’
‘’குற்றவாளிகளை அங்கே தூக்கிலா போடுகிறார்கள்..’’
‘’இல்லை.ஃபிரான்ஸில் அவர்களது தலைகளைச் சிரச்சேதம் செய்து விடுகிறார்கள்..’’
‘’அப்போது அவகள் கூச்சல் போடுவதுண்டா..’’
‘’அது எப்படி சாத்தியமாகும். எல்லாம்தான் ஒரு கணத்திற்குள் முடிந்து போய் விடுகிறதே..தண்டனைக்குரிய மனிதனைப் படுக்க வைத்து விடுகிறார்கள்.பிறகு ‘கில்லட்டின்’எனப்படும் கனமான சக்தி வாய்ந்த இயந்திரத்தின் துணையால் ஒரு பெரிய கத்தி கீழ் நோக்கி இறக்கப்படுகிறது.கண் சிமிட்டுவதற்குக் கூட நேரமில்லாதபடி உடனே தலை அறுந்து விடுகிறது.
கில்லட்டின் என்னும் கொலைக் கருவி ஆனால் அதற்கான தயாரிப்புக்கள்தான் மிகவும் கொடுமையானவை.தண்டனை இன்னதென்பதை வாசித்தபிறகு அந்தக் குறிப்பிட்ட மனிதனை ஆயத்தப்படுத்தி அவனை இறுகக் கட்டிக் கழுமரத்தின் அருகே அழைத்து வருவார்களே அந்தக் காட்சிதான் மிக மிகக் கொடூரமானது. |
நான் பார்த்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட குற்றவாளி மிகுந்த பலசாலி;தைரியமுள்ளவன்.ஆனால்...நான் சொல்வதை நீங்கள் நம்பக் கூட மாட்டீர்கள்;நான் அதைப் பார்த்த காரணத்தால் உறுதியாகச் சொல்கிறேன்.மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கான அந்த மேடையில் ஏறும்போது அவன் அழுது கொண்டிருந்தான்.ஒரு காகிதத்தைப் போல அவன் வெளிறிப் போயிருந்தான்....அப்படிப் பயந்து அழுவது யார்...அவன் ஒரு குழந்தை இல்லை;வளர்ந்த மனிதன். இதுவரை அழவே செய்திராத நாற்பத்தைந்து வயதான ஒரு வளர்ந்த மனிதன் கூடப் பயத்தால் அப்படி அழ முடியும் என்று நான் கற்பனை கூடச் செய்ததில்லை. அந்தத் தருணத்தில் அவனது ஆன்மாவுக்குள் எப்படிப்பட்ட எத்தனை எத்தனை எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்திருக்கும்...அவனுக்குள் எப்படிப்பட்ட ஆத்ம வேதனையை அது அளித்திருக்கும்...
‘’எவரையும் கொல்லக் கூடாது’’என்பது உறுதியாக எழுதப்பட்டிருக்கும் ஒரு வாசகம்.அவன் கொலை செய்து விட்டான் என்பதற்காக நாமும் அவனைக் கொல்லுவதா...இல்லை அது கூடாது கூடவே கூடாது..நான் அந்தக் காட்சியைப் பார்த்து ஒரு மாதமாகி விட்டது.ஆனால் இன்னும் அந்தக் காட்சி என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு கனவிலும் வந்து கொண்டிருக்கிறது’’
‘’தலை துண்டிக்கப்பட்டு விழும்போது அதிக வலியில்லாமலாவது இருக்கிறதே அதுதான் ஒரு நன்மை’’என்றான் பணியாள்.
‘’நீங்கள் இப்போது சொன்னதையேதான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த நோக்கத்துடந்தான் கில்லட்டினும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அதனால் நிலைமை இன்னும் கூட மோசமாகி விட்டது! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்....உடல் ரீதியான சித்திரவதைகள் இருக்கும் பட்ச்த்தில் காயங்கள் ஏற்படும்;வேதனை மிகுதியாக இருக்கும்;உடல் படும் துன்பம் அதிகமாக இருக்கும்...ஆனால்,அதே சமயத்தில் மன உளைச்சல்களும்,மன வேதனைகளும் ஏற்படாதபடி அந்த வலி திசை திருப்பி விட்டு விடும்.அதனால் சாகும் வரை ஒருவன் உடல் காயங்களால் மட்டுமே துன்புற்றபடி இறந்து போவான்.
’’மிக முக்கியமானதும்...மிக மோசமானதுமான வலி,உடல் சார்ந்த துன்பத்தில் இருப்பதில்லை.குறிப்பிட்ட இந்த மணி நேரத்தில்-அதாவது சரியாக 6;05க்கு அல்லது இன்னும் 10 நிமிடங்களில் அல்லது இன்னும் அரை மணியில் அல்லது இதோ இந்த நொடியில் இந்த உயிர் உடலை விட்டுப் போய்விடப் போகிறது,இந்த மனித வாழ்வு முடிந்து விடப் போகிறது என்பதை ஒருவன் அறிந்திருப்பதுதான் உண்மையான வலி..அதுதான் மிகுதியான வேதனை.
‘’உங்களுடைய தலையைக் கத்திக்குக் கீழே வைத்து விட்டு அந்தக் கத்தி தலைக்கு மேல் சரிகிற ஓசையைக் கேட்க நேரும் கால் நொடி நேரம் இருக்கிறதே அது மிக மிகக் கொடுமையானது..
‘’கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை தருவதென்பது அந்தக் குற்றத்தை விடவும் மோசமானது.சட்டபூர்வமான ஆணையின்படி நடந்தேறும் அந்தக் கொலை..வழிப்பறிக்காரர்களாக் கழுத்தறுபட்டுக் கொல்லப்படுவதையும் விடக் கொடூரமானது...அது போன்ற சூழலில் கூடக் கடைசி நிமிடத்தில் தான் தப்பித்து விட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்கும்...ஆனால் மரண தண்டனையின்போது சாகப் போவது உறுதி என்பது தெரிந்து விடுவதால்,சாவதைப் பத்து மடங்கு எளிதாக்கும் கடைசி நிமிட நம்பிக்கை இங்கே ஒரேயடியாகத் துடைத்தெறியப்பட்டு விடுகிறது.கண்ணுக்கு முன்பாகவே தண்டனை இருப்பதால் தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பது நிச்சயமாகத் தெரியும்போது அதுவே பயங்கரமான சித்திரவதையாகி விடுகிறது.இந்த உலகத்தில் அதை விடப் பெரிய சித்திரவதை வேறு எதுவுமில்லை.
‘’போர் முனையில் நீங்கள் ஒரு வீரனைப் பிடித்துக்கொண்டு வந்து பீரங்கி முன் நிறுத்திச் சுட முயலும் வேளையிலும் கூட அவனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இருந்துகொண்டுதான் இருக்கும்.ஆனால் அதே போர் வீரனுக்கு மரண தண்டனை என்று அறிவித்தால் அவன் மன நிலை பிறழ்ந்தவனாக ஆகி விடுவான்..கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்து விடுவான்...இப்படி ஒரு கொடுமையைப் பைத்தியம் பிடிக்காமல் தாங்கிக் கொள்வது மனித இயல்புக்கு எவ்வாறு சாத்தியம்..
‘’பிறகு ஏன் இப்படிப்பட்ட கொடூரமான உதவாக்கரையான தேவையே இல்லாத அக்கிரமம்..
ஒரு வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டு -தனக்கு மரணம் நெருங்கி விட்டது என்ற மன வேதனை தரும் சித்திரவதைகளையெல்லாம் அனுபவித்தபிறகு ‘நீ இனிமேல் போகலாம்.உன்னை மன்னித்தாயிற்று’என்று யாராவது ஒரு மனிதனிடம் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட ஒரு மனிதன் மட்டும்தான் அவன் அந்தக் கணத்தில் அனுபவித்த வேதனைகளையும் சித்திரவதைகளையும் விரிவாகச் சொல்ல முடியும்...
ஒரு மனிதனை இப்படியெல்லாம் நடத்துவதென்பது கூடாது..கூடவே கூடாது..’’
தொடர்புடைய இணைப்புக்கள்
1 கருத்து :
மரண தண்டனை பற்றிய கருத்தும் விவாதமும் என்றைக்குமே சர்ச்சைக்குரியது. இருப்பினும் அந்தக் காலந்தொட்டு இருந்து கொண்டே வருகிறது. தஸ்தெய்வ்ஸ்கியின் கருத்துக்களை கோடிட்டுக் காட்டியதற்கு நன்றி.,,"இன்னும் ஐந்து வினாடிகள் ப்ரக்ஞை இருந்துவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது" சற்று அதிரவைத்தது.
இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் படிக்க வேண்டும்.
அறிமுகத்துக்கு நன்றி.
கருத்துரையிடுக