துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.10.11

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 2

’’ஒரே மனிதனால்..ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பெண்களை நேசிக்க முடியும்?அதுவும் இரண்டும் இரு வேறு வகைப்பட்ட அன்பு..இது மிகவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.பாவப்பட்ட முட்டாள் இந்த இளவரசன் மிஷ்கின்..’’-யெவ்கெனி பேவ்லோவிச்
மிஷ்கினின் வாழ்க்கைப் போக்கையே மாற்றும் இரு பெண்களில் ஒருத்தி[அக்லேயா]அவனது காதலுக்கு உரியவள்;மற்றொருத்தி
[நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா ]அவனது கருணைக்குப் பாத்திரமானவள்.
தாய் தந்தையரை இழந்த அனாதைப் பெண்ணாக டாட்ஸ்கி என்ற பணக்கார மனிதன் ஒருவனின் பராமரிப்பிலும்,பாதுகாவலிலும் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் பாத்திரமாக அசடன் நாவலில் இடம் பெறும் நஸ்டாஸியா 
ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்குச் சில வேளைகளில் நினைவூட்டியபோதும் கங்காவிடம் இல்லாத சில இயல்புகளையும் கொண்டிருக்கிறாள்.
குறிப்பாகத் தன்னைப் பற்றிய ஒரு பெருமித உண்ர்வு அல்லது தன்முனைப்பு ஒருபுறமும்,தன்னைப் பற்றிய கீழ்மை உணர்வு மறு புறமுமாக அவளை அலைக்கழித்து ஆட்டி வைக்கின்றன.
சந்தர்ப்ப வசத்தாலும் மிகத் தீயவனான ஒருவனின் நடத்தையாலுமே தன் ஒழுக்கநெறி சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையும் அதில் தன் தவறு ஏதுமில்லை என்பதையும் அவள் உணர்ந்தே இருக்கிறாள்; என்றாலும் முறையான ஒரு வாழ்வைக் கைக் கொள்ளத் தனக்கு அருகதை இல்லை என்ற எண்ணமும் அவளிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.மிஷ்கின் தன்னை மணக்க முன்வரும்போது குதூகலிக்கும் பணிப்பெண்ணிடம் 
,‘’அந்தக் குழந்தையின் வாழ்க்கையைப் போய் நான் சீரழித்து விடுவேனென்றா நினைத்தாய்..’’
என்று அவள் சீறி வெடிப்பதற்கும்,
‘’நான் ஒரு வெட்கம் கெட்ட முரட்டுப் பெண்.டாட்ஸ்கியின் வைப்பாட்டியாக இருந்திருப்பவள்.இளவரசே! இந்த   நஸ்டாஸ்யாவுக்குப் பதிலாக நீங்கள் அக்லேயா இபான்சினைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...’’என்று மிஷ்கினிடம் அவனது கோரிக்கையை நிராகரிப்பதற்கும் தனது கறை படிந்த இறந்தகாலம்,அவளது நெஞ்சுக்குள் நிழலாடி நெருடிக் கொண்டிருப்பதே காரணமாகிறது.
  

   
அதே வேளையில் அளப்பரிய தன்மான உணர்வு கொண்டவளாகவும் இருக்கிறாள் அவள்.பணத்தைக் கொடுத்துத் தன்னை கன்யாவின் தலையில் கட்டத் துடிக்கும் டாட்ஸ்கி,.பணத்தால் துரத்தியபடி,  ஏலத்தில் வாங்குவது போலத் தன்னை உடைமையாக்கிக் கொள்ள எண்ணும் ரோகோஸின்-இவ்விருவரின் போக்கும் தனது தன்மதிப்பை ஊறு செய்வதாகவே எண்ணி அருவருக்கிறாள் அவள்.இவ்விருவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவிக்க மிஷ்கின் முன் வருகையில் அந்த இரக்கமும் கருணையும் கூடத் தனது தன்மானத்தைக் காயப்படுத்துவதாகவே உணர்கிறாள் அவள்.அதனாலும் கூட அதை ஏற்க மறுக்கிறாள் அவள். 


’’எந்தக் காரணத்தை வைத்துப் பார்த்தாலும் எதற்காகவும் உன்னைக் குற்றம் சொல்லவே முடியாது.உன் வாழ்க்கை அப்படி ஒட்டு மொத்தமாக அழிந்து போய்விடக் கூடாது.ரோகோஸின் உன்னை நாடி வந்ததாலோ அல்லது கன்யா உன்னை ஏமாற்ற முற்பட்டதாலோ இப்போது என்ன ஆகிவிட்டது..?நீ ஏன் அதையே நினைத்து உன்னை வதைத்துக் கொண்டிருக்கிறாய்....உன் வாழ்க்கையில் நடந்து போன துரதிருஷ்டவசமான துயரமான விஷயங்களால் உன் மீது நீயே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்...என் ஆயுள் முழுவதும் உன்னை நான் மரியாதையோடு நடத்துவேன் நஸ்டாஸ்யா..’’என்று தன்னிடம் அழைப்பு விடுக்கும் மிஷ்கினின் உயர்ந்த பண்பு அவளை வியக்கவும், நெகிழவும் வைக்கிறது.

‘’கடைசியாக இப்படியும் ஒரு மனிதர்...இவருடைய நல்ல மனத்தைத்தவிர வேறு எதுவுமே இதற்குக் காரணமில்லை...என்னுடைய நலத்தை நாடும் ஒருவரை இறுதியாக நான் கண்டு பிடித்து விட்டேன்........நான் உங்களைப் பற்றியும் கனவு கண்டிருக்கிறேன்...உங்களைப் போன்ற அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் ஒரு மனிதரைப் பற்றி நான் எப்போதுமே கற்பனை செய்து கொண்டிருப்பேன்.அப்படிப்பட்ட ஒரு மனிதர் என்னிடம் வந்து ’நீ எந்தத் தவறும் செய்யவில்லை நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன்..உன்னை ஆராதிக்கிறேன் என்றெல்லாம் சொல்லப் போகிறார் என்று என் மூளையே பிசகிப் போகும் அளவுக்குக் கற்பனை செய்து கொண்டே இருப்பேன்.பிறகு இந்த மனிதர் டாட்ஸ்கி அங்கே வந்து ....என்னைத் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொண்டு விட்டு என்னைத் தரம் தாழ்த்திவிட்டுக் கிளம்பிப் போய்விடுவார்.என்னுடைய இந்த இழிநிலையை எண்ணி எண்ணி அவமானத்தில் கூசிக் கூனிக் குறுகிக் கிடந்திருக்கிறேன்.ஆயிரம் தடவைகளுக்கு மேலாக ஏதாவது குளம் குட்டையில் வீழ்ந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளலாமே என்றும் எண்ணியிருக்கிறேன்.ஆனால் என்னிடம் அந்தத்துணிச்சல் இல்லை’’
என்று அதை வெளிப்படுத்தவும் செய்கிறாள் அவள்.ஆனாலும் அவனை மணந்து கொள்வதில் அவளுக்கு உள்ளூர ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருப்பதனாலேயே ரோகோஸினுடன் ஓடுவதும்,பிறகு சிறிது காலம் மிஷ்கினிடம் மீள்வதுமாய் அவனை அலைக்கழிக்கிறாள்.


அவளையும்,அவளது மன அமைப்பை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருப்பவன் மிஷ்கின் ஒருவனே.
‘’நான் அவளை நேசித்தேன்..ஆமாம் மிகவும் அதிகமாகவே அவளை நான் நேசித்தேன்.ஆனால் பிற்பாடு அவள் மீது நான் இரக்கம் மட்டுமே கொண்டிருக்கிறேன் என்பதையும் அதைத் தவிர அவளை நான் காதலிக்கவில்லை என்பதையும் அவள் எப்படியோ ஒருவாறு ஊகித்து விட்டாள்’’என்று தான் காதலிக்கும்அக்லேயாவிடம் பிற்பாடு அது பற்றிக் குறிப்பிடுகிறான் மிஷ்கின்.

’’அவள் என்னிடமிருந்து ஓடிப் போனது ஏன் தெரியுமா....தான் ஒரு இழிந்த பிறவி என்பதை எனக்கு வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான்.அதை என்னிடம் நிரூபித்தாக வேண்டும் என்பதோடு அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வேறொரு உள் மனத் தூண்டுதலும் கூட இருந்தது.உள்ளத்தின் ஆழத்தில் இப்படித் தொடர்ச்சியாக அவமானத்தைச் சுமந்து கொண்டே இருப்பதென்பது,அவளைப் பொறுத்த வரையில் இயற்கைக்கு விரோதமான-குரூரமான ஒரு சந்தோஷத்தை அவளுக்கு அளிப்பதாகக் கூட இருக்கலாம்.அதன் மூலம் யாரையோ பழி வாங்குவதாகக் கூட அவள் நினைத்திருக்கலாம்....’இந்த உலகத்திலேயே தான் மட்டும்தான் மிக மிக மோசமான இழிந்த பிறவியென்றும் மிகவும் கீழானவள் என்றும் அந்தப் பாவப்பட்ட பெண் தன்னப் பற்றி உறுதியாக முடிவு கட்டிக் கொண்டிருக்கிறாள்.தயவு செய்து அவளைக் கேவலப்படுத்திப் பேசாதே..அவள் மீது கற்களை வீசாதே...அவமானகரமான தனது நிலையை உள்ளத்தில் எண்ணி எண்ணி அவள் தன்னைத்தானே மிகுதியாக வதைத்துக் கொண்டிருக்கிறாள்.ஆனால்..பழி சுமத்தப்பட வேண்டியது அவளில்லை....அந்த மனிதான் குற்றவாளி என்று அவன் மீது பழி சுமத்தினாலும் அவளே கூட அதை நம்பத் தயாராக இல்லை என்பது உனக்குத் தெரியுமா....தான் மட்டுமே குற்றவாளி என்றே அவள் உளப் பூர்வமாக நம்பிக் கொண்டிருக்கிறாள்.அப்படி அவள் கொண்டிருக்கும் அந்த மாயையை அகற்ற நான் முயற்சி செய்யும் தருணங்களிலெல்லாம் அது..அந்த எண்ணம் - அவளை இன்னும் கொடுமையான துயரத்திற்கு ஆளாக்கி விடுகிறது.தன்னைத்தானே அவள் வருத்திக் கொள்கிற பயங்கரமான அந்தத் தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கூட என் இதயம் வலிக்கிறது.’’

என்றபடி மிகத் தெளிவாக நஸ்டாஸ்யாவின் இயல்புகளை அவளது நடவடிக்கைக்கான காரணங்களை பின் புலங்களை அக்லேயாவிடம் ஆத்மார்த்தமாக அவன் பகிர்ந்து கொண்டபோதும் 
பணக்காரக் குடும்பம் ஒன்றின் கடைக் குட்டி பெண்ணாகக் குறும்பு கொப்பளிக்க வளையவரும் அக்லேயாவால் அதை உள்ளபடி உள் வாங்கிக் கொள்ள இயலவில்லை;

வெளியுலகத்தைப் பொறுத்தவரை எல்லை கட்டிய அனுபவத்தை மட்டுமே பெற்றிருக்கும் அவளுக்கு நஸ்டாஸ்யாவின் மீது மிஷ்கின் வைத்திருப்பது கருணையும் இரக்கமும் மட்டுமே என்பது புரிகிறது;ஆனாலும் அவன் தனக்கு மட்டுமே முழுமையாகச் சொந்தமானவனாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் அவளுக்கு அவனது மென்மையான அந்த இரக்க உணர்வும் கூட உவப்பானதாக இல்லை;அதை வைத்தே பல முறை அவள் அவனைச் சீண்டுகிறாள்.தங்கள் திருமணம் நிச்சயிக்கப்படவிருக்கும் நிலையிலும் கூட அவன் முன்னிலையில் வைத்தே நஸ்டாஸ்யாவின் நடத்தை குறித்த அவதூறுகளை ஆவேசமாகக் கொட்டுகிறாள்.
இருவேறுபட்ட குண இயல்புகள் கொண்ட இரு பெண்கள் மீதும் வெவ்வேறுவகையான அன்பு வைத்திருந்தாலும் அந்த வேளையில் நஸ்டாஸ்யா இழிவுபடுத்தப்படுவதே மிஷ்கினைப் பெரிதும் பாதிக்கிறது;அவனது இதயம் அக்லேயாவால் அவளுக்கு நேர்ந்து விட்ட காயத்தை எண்ணியே கசிகிறது.
‘’உன்னால் எப்படி இந்த மாதிரி நடந்து கொள்ள முடிந்தது?அவள் எவ்வள்வு துரதிருஷ்டசாலியான ஜீவன் தெரியுமா?’’என்பதற்கு மேல் 
அவனால் எதையும் தொடர முடியவில்லை.அப்போது அந்தக் கணத்தில் அக்லேயாவின் விழிகளில் தென்பட்ட விசித்திரமான பார்வை,அளவு கடந்த துயரத்தையும்,அதே வேளையில் எல்லையற்ற வெறுப்பையும் உள்ளடக்கி இருந்ததைக்கண்டதும் அவன் கூச்சலிட்டுக் கொண்டே அவளிடம் ஓடுகிறான்;ஆனால் அதற்குள் நேரம் கடந்து விடுகிறது;அவனது காதலும் கை நழுவிப் போகிறது.

 மேற்குறித்த நாடக நிகழ்ச்சி நடந்தேறிச் சில நாள் கழிந்த பிறகு மிஷ்கினிடம் இதைச் சுட்டிக் காட்டும் யெவ்கெனி பாவ்லோவிச் மிஷ்கினின் கிறுக்குத்தனமான அந்தச் செயலைச் சுட்டிக் காட்டி அவனைக் கடிந்து கொள்ளும்போதுதான் அது அவனுக்கு உறைக்கிறது.

‘’என் பிரியத்துக்குரிய இளவரசே ...ஏன் இந்த மாதிரியெல்லாம் நடக்க இடம் கொடுத்தீர்கள்...அந்த நேரம் எப்படி சாதுரியமாக நடந்து கொள்வதென்பது உங்களுக்குத் தெரியாமல் போயிருக்க வேண்டும்.கர்வம் பிடித்த கிறுக்குத்தனமான அந்தப் பெண்ணைக் கட்டுக்குள் கொண்டு வரக் கூடிய சக்திஉங்களிடம் இல்லாமல் போயிருக்க வேண்டும்;அதையெல்லாம் என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.ஆனாலும் கூட அக்லேயா உங்களிடம் கொண்டிருந்த அன்பு எத்தனை ஆழமானது,ஆத்மார்த்தமானது என்பதும் உங்களுக்குக்கட்டாயம் புரிந்திருக்க வேண்டும்.இன்னொரு பெண்ணோடு உங்களைக் கூறுபோட விரும்பாதவள் அவள்.அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் போய் உடைத்து விடவும் அதைத் துறந்து விடவும் உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’’

ஆனாலும் கூட மிஷ்கினின் தராசுத் தட்டிலுள்ள முள் தன் காதலை விடவும் நஸ்டாஸ்யாவின் மீதான இரக்கத்துக்கே முன்னுரிமை அளிக்கிறது.
’’நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவின் அருகில் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் மிஷ்கின்;அவளை ஒரு குழந்தையைப் போலக் கருதிக் கொண்டு அவள் தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும்,அவள் கன்னங்களைத் தன் கைகளால் வருடிக் கொடுத்தும் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.அவள் சிரித்தபோது கூடவே சிரிக்கவும்,அவள் அழுதபோது கண்ணீர் வடிக்கவும் அவன் தயாராக இருந்தான்.சம்பந்தமில்லாத அவளது பிதற்றல்களும்,உணர்ச்சிவசப்பட்ட அவளது வார்த்தைகளும் அவனுக்குக் கொஞ்சம் கூடப் புரியாதபோதும் மென்மையாக அவளைப் பார்த்துப் புன்னகை செய்தபட் அவற்றை வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தான் அவன்....’அவள் மீது அவன் காட்டிய நேசத்தில் மென்மையான பரிவுணர்ச்சியும் கூட ஓடிக் கொண்டிருந்தது.சுயமாக நகர்ந்து செல்ல முடியாத நோயுற்ற சந்தோஷமற்ற ஒரு குழந்தையின் பால் காட்டும் பரிவைப் போன்றதே அது.ஆனால் அவள் மீதான அந்த உணர்வை ஒருபோதும் எவரிடமும் விளக்கிக் கூற அவன் முற்படவே இல்லை;’’என்கிறது நாவல்...


மனிதச் செயல்பாட்டுக்கான காரணங்கள் இன்னதுதான் என்று கூறிவிட முடியாத அளவுக்குச் சிண்டும் சிடுக்குமானவை.மிகவும் சிக்கலானவையும் வெவ்வேறு வகைப்பட்டவைகளுமான அவை நாம் தரும் விளக்கங்களுக்குள் எளிதாக அடங்கக் கூடியவைஅல்ல.அவற்றை மிகத் தெளிவாக வரையறுத்துச் சொல்வது கடினம்.’என்னும் தஸ்தயெவ்ஸ்கியின் பார்வை ஒன்றே இம்மூன்று வேறுபட்ட பாத்திர அமைப்புக்களையும் புரிந்து கொள்ள வழிகாட்டக் கூடும்.


அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1


3 கருத்துகள் :

வவ்வால் சொன்னது…

//’’ஒரே மனிதனால்..ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பெண்களை நேசிக்க முடியும்?அதுவும் இரண்டும் இரு வேறு வகைப்பட்ட அன்பு..இது மிகவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.பாவப்பட்ட முட்டாள் இந்த இளவரசன் மிஷ்கின்..’’//

இந்த கருத்து யாரோடது, எனக்கு இப்படி படித்த நியாபகம் இல்லை, எனக்கு நியாபக மறதி!

ஒரு ஆணால்(பெண்ணாலும் கூட) 100 வேறு வகைப்பட்டவர்களோட காதல் , நேசம் கொள்ளமுடியும். இப்போ (எப்பவுமே)மனித மனத்தில எல்லாமே சப் லேயராக , அப்படியே போகும்.2,4..8..16 னு போய்டே இருக்கும்.

தஸ்தவோஸ்கி எல்லாம் நான் 5-6 ஆம் வகுப்பு படிக்கும் போது நியுசென்சுரி புண்ணியத்தில் சல்லிசாக வாங்கி படித்தேன், இப்போ எல்லாமே அவுட் ஆப் போகசிலே இருக்கு. என்ன மாதிரி பேப்பர், அச்சு நேர்த்தி! 10 ரூ க்கெல்லாம் சூப்பர் புக் கிடைக்கும். இப்பவும் போடுராங்க விலை ஏத்தி. முந்தாநேத்துக்கூட இங்க மஞ்சகுப்பம் மைதானத்தில் நியு சென்சுரி கடைப்போட்டுருக்குனு போய் பார்த்தேன், எதுவும் கொள் முதல் செய்ய முடியலை!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நீங்கள் எடுத்துக் காட்டிய கருத்து அசடன் பாகம் நான்கின் இறுதிப் பகுதியில் யெவ்கெனி பேவ்லோவிச்சின் தனி மொழியாக இடம் பெற்றிருப்பது.யெவ்கெனி பேவ்லோவிச்,அக்லேயா குடும்பத்தின் நண்பர்;அக்லேயாவை மணந்து கொள்ள அவர் விரும்பியபோதும் அது நிறைவேறவில்லை.எனினும் அதைப் பொருட்படுத்தாமல்,மிஷ்கினுக்கும் அந்தக் குடும்பத்தார்க்கும் ஆதரவாகவே அவர் இருக்கிறார்;
நீங்கள் படித்தது எந்த ஆங்கில மொழியாக்கம் என்பது தெரியவில்லை;சில மொழியாக்க நூல்கள் சுருங்கிய வடிவில்-abridged- இருக்கும்;அவற்றில் மூல நாவலின் எல்லாச் செய்திகளும் இடம் பெறுவதில்லை.

ஜோதிஜி சொன்னது…

நலமா இருக்கீங்களா? நேரம் கிடைக்கும் போது எனது தளத்திற்கு நீங்கள் அவசியம் வர வேண்டும் என்பதை அன்புடன் கட்டளையாக வைக்கின்றேன். உங்கள் விமர்சனங்கள் எனக்கு அவசியம் தேவை என்பதால்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....