துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.10.11

’அசடன்’- நூல்வெளியீடு

வலை வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
என் மொழிபெயர்ப்பில் உருவான உலகப் பேரிலக்கிய மாமேதை தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’தமிழாக்க நூல் அக்டோபர் இறுதியில் வெளிவரவிருக்கும் நற்செய்தியை வலையுலக நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறேன்...அசடன்’என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் இந்நாவல், தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் மிகவும் பாவியல்பு கொண்டது .சுவிட்சர்லாந்தில் மனநல விடுதியில் இருந்து ருஷ்யாவிற்குத் திரும்பி வந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் ,அவன் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான நெசவைக் கண்டுகொள்கிறான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்புடன் ஒரு புனிதனாக அவன்கடந்துசெல்கிறான்.-ஜெயமோகன்முன்னுரையிலிருந்து


இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்.தமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு.நாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்-எஸ்.ராமகிருஷ்ணன்


மொழிபெயர்ப்பாளரின் மு(எ)ன்னுரை

தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவலை ‘அசடனா’க மொழிமாற்றிய அற்புதமான கணங்கள்,என்றென்றும் நினைவு கூரத்தக்க வாழ்நாள் அனுபவமாக எனக்கு வாய்த்ததால் இந்நூல் வெளியாகும் இத் தருணம் என் மனதுக்கு மிகவும் நிறைவளிக்கிறது.

முழுமையான தீமை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.


காமுகனான சுவிட்ரிகைலோவ்,கண்டிப்பான கடுமை காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச் ஆகியோரிடமும் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களைக் குற்றமும் தண்டனையும் நாவலிலும் கூட மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.  அவரது இடியட்/அசடன் நாவலும் அதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை என்பதோடு கூடுதலான ஒரு பரிமாணமும் அதில் சேர்ந்திருப்பதே அவரது பிற படைப்புக்களிலிருந்து தனித்து நிற்கும் தகுதியை அசடனுக்கு அளிக்கிறது.அசடனாகச் சொல்லப்படும் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் - கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே - மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின்.பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல்,அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை.இயேசுவை மனதில் கொண்டுதான் மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கக் கூடும் எனத் திறனாய்வாளர்கள் கூறுவது இது பற்றியே.

தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்..வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..! இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான் ; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்.உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கப்படுவதற்கான காரணம் அதுவே...


''எனக்கு இருபத்தேழு வயதாகிறது..
ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்...
என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.
நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன.
அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’’
என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும் -ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

பொதுவாகவே பிறநாட்டு,பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே அவற்றின் மீது நாட்டம் செலுத்துவதில்,அவற்றை படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதிய அளவு விற்பனை செய்யப்படாமலும், அவற்றுக்கான அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை இங்கே ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
’விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’மொழியாக்கம் முயல்கிறது(மணிக்கொடி,நவ.1937.) என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுவதைப்போலப் பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனித இயற்கையே அசடன் நாவலிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிகிறது; உறவு/நட்புக்களின் மோதல்கள் ,தனி மனித அவசங்கள், கொந்தளிப்பான உணர்வுப் போராட்டங்கள் ஆகியவை நாடு மொழி இனம் கடந்து சகலர்க்கும் பொதுவானவை என்பதாலேயே இப் படைப்பு உலகம் முழுமைக்கும் பொதுவான உலகப் பேரிலக்கியம் என்ற தகுதியையும் பெற்றிருக்கிறது.

பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா , ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துவதில் வியப்பில்லை;
செல்வந்தர் வீட்டுச் சின்னப் பெண்ணாகக் குறும்பு கொப்பளிக்க ஏதாவது ஒரு சாகசம் செய்தே தீரும் ஆவலுடன் நாவலில் வளைய வரும் அக்லேயா.., தளபதி என்ற அதிகார மிடுக்கு ஒரு புறம் இருந்தாலும் குடும்பப் பாசமும் மிஷ்கின் மீது பிரியமும் கொண்டவராய் நாவலில் இடம் பெறும் இபான்சின்,வெள்ளை மனம் கொண்ட அவளது அன்னை,பாசம் காட்டும் சகோதரிகள் என நாவல் காட்டும் அந்தக் குடும்பத்தின் சூழல் நம்மைச் சுற்றி நாம் பார்க்க முடியாததா என்ன?
மரணத்தின் நாளை எதிர்நோக்கியபடி தன் இறுதி சாசனத்தை வாசிக்கும் நோயாளியான இப்போலிட்,வன்மத்தோடு வளைய வரும் கன்யா, கொலைவெறியோடு சுற்றிவரும் ரோகோஸின்,பணம் படைத்தவர்களிடம் வளைந்து நெளிந்தபடியே வாழ்வை நகர்த்தும் ஒட்டுண்ணி மனிதர்களின் பிரதிநிதியாகிய லெபதேவ் என நாவலில் இடம் பெறும் வேறுபட்ட பல பாத்திரங்களின் குண இயல்புகளை நாம் வாழும் சூழலிலும் கூட நாம் எதிர்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆள் பெயர்,இடப்பெயர்,பழக்க வழக்கங்கள்..ஒரு சில கலாசார வேறுபாடுகள் ஆகியவற்றைச் சற்றே கவனத்தோடு உள் வாங்கிக் கொண்டபடி நாவலின் முதல் ஐம்பது அறுபது பக்கங்களை மட்டும் கடந்து விட்டால் உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான் ஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.

குழந்தையைப் போன்ற அப்பாவித்தனத்துடனும்,களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறையுடனும் இந்நாவல் முழுவதும் வியாபித்திருக்கும் மிஷ்கினுடனும்...அவன் எதிர்ப்பட்டு அன்பு செய்யும் சக மனிதர்களுடனும் ஊடாடுவதற்கும், தஸ்தயெவ்ஸ்கியின் அலைவரிசையில் அவர்களை அணுக்கமாக விளங்கிக் கொள்வதற்கும் இம் மொழியாக்கம் எனக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக் காலம் தொடர்ந்த இப் பணியில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்குள் ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க இயலாத மகத்துவம் கொண்டது.

’குற்றமும் தண்டனையும்’ நாவல் மொழியாக்கத்தைத் தொடர்ந்து என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்து, தஸ்தயெவ்ஸ்கியின் இரு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்பினை எனக்கு அளித்த மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை முதலில் உரித்தாக்குகிறேன். குற்றமும் தண்டனையும் நூலைப் போலவே உரிய பின்னிணைப்புக் கட்டுரைகளுடனும்,திரைப்படக் காட்சிப் படங்களுடனும் - ‘அசடன்’நாவலையும் மிகச் சிறப்பான பதிப்பாக வெளிக் கொணர - பல வகையான சிக்கல்களுக்கு நடுவிலும் அயராது அவர் மேற்கொண்ட முயற்சிகளை வணிகநோக்கம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி விட முடியாது; இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈர்ப்பும்,அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய இந்தச் சாதனையை மெய்யாக்கித் தமிழுக்கு வளம் சேர்த்த அவருக்கு என் பாராட்டுக்கள்.

அசடன் மொழிபெயர்ப்பின் தொடக்க நிலையிலிருந்து என்னை ஊக்குவித்து உத்வேகப்படுத்தியதோடன்றி ‘அசடனும் ஞானியும்’என்ற அற்புதமான முன்னுரைக் கட்டுரை ஒன்றையும் இந்நூலுக்காகவே வழங்கியிருக்கும் என் அன்பிற்குரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு என் உள்ளம் நிறை நன்றி..

இந்நாவலின் இடையிடையே விரவி வந்திருக்கும் ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவற்றைத் தமிழில் பிழையின்றிக் கொண்டு சேர்க்க எனக்கு உதவிய புது தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக ஃபிரெஞ்சுத் துறைப் பேராசிரியை திருமதி ஷோபாசேகர் அவர்களையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

ரஷிய மூலத்திலிருந்து ஆங்கிலம் வழியாக இடியட்டை மொழி மாற்றம் செய்ய CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே எனக்குப் பெரிதும் துணை நின்றது; அதை அடியொற்றியே என் மொழியாக்கம் அமைந்திருக்கிறது என்பதையும்,கூடுதல் தெளிவுக்கு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் JULIUS KATZER இன் 
ஆங்கில
மொழிபெயர்ப்பையும் நான் ஒப்பு நோக்கிக் கொண்டேன் என்ற தகவலையும் இங்கே பதிவு செய்ய விழைகிறேன்.
உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான நல்ல பக்கங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள். அந்த உச்ச கட்ட கணங்களின்போது நான் பெற நேர்ந்த தரிசனங்களை - மூல நாவலிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் எனது மொழி அளித்திருப்பதாக இதைப் படிக்கும் வாசகர்கள் சிலர் கருதினாலும் கூட அதுவே இம் மொழியாக்கப் படைப்பின் வெற்றியாக அமையும்.
எம்.ஏ.சுசீலா

அசடனும் ஞானியும்-அசடன் மொழியாக்க நாவலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அளித்துள்ள முன்னுரை

அறிவிப்பு;
அசடன் நாவலுக்காக உடுமலை.காம் வழியாகவும்,நேரடியாக பாரதி புத்தக நிலையம்,மதுரையில் முன் பதிவு செய்து கொண்டோரும்,இனிப் புதிதாய் நூலை வாங்க விரும்புவோரும் நவ.இரண்டாவது வாரத்திற்குள் நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.
நூல் விற்பனை-இணைய வழி உடுமலை.காம் 

நேரில்,அஞ்சலில்;பாரதி புத்தக நிலையம்,மதுரை
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001

பின் குறிப்பு;
கடந்த ஒரு மாத காலமாக மேற்குறித்த நூலின் இறுதிக் கட்ட வேலைகளில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தமையால் மனம் முழுவதையும் அந்த நாவல் மட்டுமே ஆட்கொண்டிருந்தது;எனவே அந்நாவல் சார்ந்த பதிவுகளே தொடர்ந்து வந்து கொண்டிருந்ததென்பதை இவ்வலைத் தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசககர்கள் கவனித்திருக்கக் கூடும்.மேலும் பெரியதொரு நாவலில் உட்புகுந்து ஒன்றிக் கலக்க உதவும் சிறு முன்னோட்டமாகவும் என் பதிவுகள் அமையக் கூடும் என்பதாலும் அவற்றை இத் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன்.எனினும் இலக்கிய ஆர்வலர்கள்,வாசகர்கள் இந்நாவலை முழுமையாகப் படித்துக் கருத்துரை அனுப்பும் நாளே என் உள்ளம் முழுமையான நிறைவு பெறும்.
[அக்.28 முதல்,நவ.7 வரை நான் பயணத்தில் இருப்பதால் நவ 10க்குப் பின்பு புதிய பதிவுகள் வெளியாகும்]

காண்க இணைப்புக்கள்

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3

மரணதண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1
மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-2

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

7 கருத்துகள் :

தருமி சொன்னது…

அயராத உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.

இந்நூல் வணிகத்திலும் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி..

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் அம்மா.....

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா ..

viki சொன்னது…

இங்கு வாழ்த்து சொல்பவர்கலேல்லாம் புத்தகத்தை முன்பதிவு செய்து விட்டீர்களா?அதுதான் இவருக்கு நாம் செய்யும் நன்றி கடன்!

viki சொன்னது…

போன வருட முன்பதிவிற்கு இன்னும் புத்தகம் வரவில்லையே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....