துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.9.11

பாரதியின் விநாயகர்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்-குடைவரைச் சிற்பம்

உலகின் தலையாய எழுத்தர்களில் ஒருவர் விநாயகர்.
வியாசபாரதத்தை வியாசர் சொல்லிக் கொண்டே போகத் தன் கொம்பின் முனை முறித்து அதை விநாயகர் எழுதியதான ஒரு தொன்மம் நம்மிடை வழங்கி வருகிறது.

விநாயகக் கடவுள் என்னும் உருவகத்துக்குள்
‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா!யெஹோவா!எனத் தொழுதன்புறும் தேவருந்தானாய் 

திருமகள் பாரதி உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்’’என அனைத்து சமயங்களின் அனைத்துக் கடவுளரையும் தரிசிக்கும் திறம் பெற்று விளங்கியவன் ஆன்மிக ஞானியாகிய பாரதி.

புதுவை மணக்குள விநாயகரை வழிபடும் வழக்கம் கொண்டிருந்த பாரதிக்கு விநாயக உருவம்...
வாய் திறவா மோன நிலைக்குள் செல்ல வைக்கும் ஓங்காரத்தின் உருவகம்;
அது அகக் கண்ணை விழிக்க வைத்து உள்ளொளியை , ஆக்க சக்தியை மேம்படுத்துவது;                                                                                                                             புறக் கவலைகளிலிருந்து விடுவித்து அச்சமற்ற நிலைக்குக் கொண்டு செல்வது;
சலனமில்லா மனநிலையை வசப்படுத்தித் தருவது.

’கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
   குணமதில் பலவாம்......
   உட்செவி திறக்கும்
   அகக்கண் ஒளி தரும்
   அக்கினி தோன்றும்
   ஆண்மை வலியுறும்
   திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
   கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
   விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
   துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
   நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்
   அச்சம் தீரும்
   அமுதம் விளையும்
   வித்தை வளரும் 
   வேள்வி ஓங்கும்
   அமரத் தன்மை எய்தவும் 
   இங்கு நாம் பெறலாம்’’
என்கிறது பாரதியின் பாடல்..


‘’பக்தி உடையார் காரியத்தில்
   பதறார் மிகுந்த பொறுமையுடன்
   வித்து முளைக்கும் தன்மை போல்
   மெல்லச் செய்து பயன் அடைவார்
    சக்தி தொழிலே அனைத்துமெனில்
    சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
    வித்தைக்கு இறைவா கணநாதா
    மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
என்னும் பாரதியின் பொருள் பொதிந்த வேண்டுதலே நமது வேண்டுதலுமாகிறது...
’ஆழ்க உள்ளம் சலனமிலாது
   அகண்டவெளிக்கண் அன்பினையே
சூழ்க ! துயர்கள் தொலைந்திடுக!
   தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெலாம்!
   கிருத யுகம்தான் மேவுகவே’’
இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை



4 கருத்துகள் :

Unknown சொன்னது…

சுசீலாம்மா, விநாயகர் சதுர்த்தி அன்று பாரதியை மேற்கோள் காட்டி சரியான பாடலுடன் பதிவு. ஒரு சந்தேகம், "கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்" என்று பாரதி சொல்வது சாதாரண பாம்பு என்ற அர்த்தத்தில்லா? இல்லை, இதற்கு முன்னும் பின்னும் வரும் அகவயமான அறிதல்/விழிப்பு நிலைகளைக் குறிக்கும் "உட்செவி திறக்கும், அகக்கண் ஒளி தரும், அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்......அமுதம் விளையும், அமரத் தன்மை எய்தவும் இங்கு நாம் பெறலாம்" போன்ற சொற்களைக் கொண்டு அவர் கூறும் கட்செவி என்பது குண்டலினியைக் குறிப்பிடுகிறார் எனக் கொள்ளலாமா??
நன்றி.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பின் பிரகாஷ்,
நலம்தானே...
"கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்" என்பது -புற ஓசைகள் அடங்கி மோன நிலையாகிய தியான நிலைக்கு -அசைவற்ற நிலைக்கு நாம் சென்று விடும் நிலையில் ஏற்படும் அகவிழிப்பாகவே இருக்கக் கூடும் என்று பாரதியின் ஆன்மிகப்பின்புலத்தை வைத்துச் சொல்லத் தோன்றுகிறது.
புறக் கண் மூடியிருக்க,இங்கு செவியே கண்ணாகி அகத்தைக் காண்கிறது.
இது நீங்கள் சொன்னபடி குண்டலினியாகவும் இருத்தல் சாத்தியமே.
பாரதிக்குப் பல சித்தர்களோடும் ஆன்ம குருமார்களோடும் நெருக்கமான உறவும் பழக்கமும் இருந்திருக்கிறது.

அம்பாளடியாள் சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா.எங்கள் தமிழ் காத்த பாரதியை மேற்கோள் காட்டி தக்க சமயத்தில்
வினையாக சதுர்த்தி ஆக்கத்தினை மிகச் சிறப்பாக எழுதி வெளியிட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் அம்மா.....நன்றி பகிர்வுக்கு ......

அப்பாதுரை சொன்னது…

பின்னூட்டம் இன்னும் சுவை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....