துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.8.12

’தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’-2

’கள்ளங்கபடங்களும்,மன விகாரங்களும் இன்னும் வந்து ஒட்டிக்கொண்டு தீட்டாக்கி விடாத குழந்தைகள் உலகத்தை வாசகப் பார்வைக்கு விருந்தாகப் பரிமாறிவிட்டு விடைபெற்று விலகி நிற்கிறார் கதை சொல்லி’’.
                                                  
                                         கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

கதைப் பிரியர்களின் நினைவிலும்,கதை சொல்லிகளின் நினைவிலும் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும் முன்னோடிக் கதை இலக்கியப் படைப்பாளி,திரு கு.அழகிரிசாமி .’அன்பளிப்பு’என்னும் தனது சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் கு.அழகிரிசாமி சிறுவர் இலக்கியம்,நாடகம்,மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்.கம்பனின் மீது பிடிப்புக் கொண்டவர்.கி.ராஜநாராயணனின் இளமைக்கால நண்பரான இவர் அதே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
யல்பான ஓட்டத்தில் எளிமையான சொற்களோடு ,படைப்பின் உட்குரல் எந்த மட்டத்து வாசகனையும் போய்ச்சேரும் வகையில் கத்தி நுனி மீது செயல்படுவது  போன்ற நுட்பத்துடன் லாகவமாகத் தீட்டப்பட்டிருக்கும்  ‘ராஜா வந்திருக்கிறார்’என்னும் அவரது சிறுகதை இந்தப்பதிவில்....


ஒளிவுமறைவுகளற்ற....அப்பழுக்கில்லாத உண்மை எப்போதுமே அழகானது,மகத்தானது.அந்த அழகின் தரிசனம் காணக்கிடைப்பது,நடப்பியல் உலகின் கள்ளங்கபடங்களும்,மன விகாரங்களும் இன்னும் வந்து ஒட்டிக்கொண்டு தீட்டாக்கி விடாத குழந்தைகளிடத்தில் மட்டும்தான்.
அந்தக் குழந்தைகள் உலகத்தை வாசகப் பார்வைக்கு விருந்தாக இச்சிறுகதையில் பரிமாறிவிட்டு விடைபெற்று விலகி நிற்கிறார் கதை சொல்லி.

அற்புதமான அந்தக் கதையின் சுருக்கத்தை ஓரிரு வரிகளிலோ,பத்திகளிலோ கோடிட்டுக் காட்டுவதென்பது, அதன் ஜீவனை உருக்குலைத்துப் போடும் ஒரு செயலாகத்தான் இருக்க முடியும் என்றபோதும்...பதிவின் சாரத்தைப் புரிய வைப்பதற்காகக் கதையின் அறிமுகம் தவிர்க்க இயலாததாகிறது.

தீபாவளிக்கு முதல்நாள்..
அந்தச் சிறிய குக்கிராமத்துப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகள் வீடுதிரும்பிக் கொண்டிருக்கிறார்கள்;மேலத் தெரு..சேரி என்ற  பெரியவர்களின் பேதங்கள் அவர்களை இன்னமும் தீண்டியிருக்கவில்லை.
பணக்காரச் சிறுவன் ராமசாமியும்,வறிய குடும்பத்தைச் சேர்ந்த செல்லையாவும் தங்களுக்குள் போட்டியிட்டபடி வருகிறார்கள்.
ஒருவரிடம் இருப்பது ,மற்றவரிடம் இருக்கிறதா என்பதே போட்டி.பள்ளியின் இடைவேளை நேரத்தில் புத்தகத்திலுள்ள படங்களை வைத்துக் கொண்டு தொடங்கிய அந்தப் போட்டி , வீடு போய்ச் சேரும் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தன் அண்ணன் பதில் தெரியாமல் விழிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் துணைக்கு வந்து கொண்டே இருக்கிறாள் செல்லையாவின் தங்கை மங்கம்மா.
மேலத்தெருவிலுள்ள பணக்கார வீட்டுப் பையனாகிய செல்லையா தன் வீட்டை நோக்கிச் சென்றுவிட,செல்லையாவும் அவன் தம்பி தம்பையா,மற்றும் தங்கை மங்கம்மா ஆகியோர் தங்கள் குச்சு வீட்டுக்கு ஆவலோடு ஓடி வருகிறார்கள்.மறுநாள் தீபாவளிக்குத் தந்தை தங்களுக்கு எடுத்திருக்கும் புதுத் துணியைப் பார்க்கும் ஆவேசம் அவர்களுக்கு..!அவர்களது தாய் தாயம்மாவும் அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி விடாமல்..தந்தை அவர்களுக்காகஎடுத்து வைத்து விட்டுப் போயிருக்கும் துணிகளைக் காட்டுகிறாள்.
தாய்க்குப் புதிதாக எதுவும் வாங்க வழியில்லை;தந்தைக்கு ஒரு துண்டு மட்டும்தான்.
தங்களுக்காவது புதுத் துணி கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் ,....விடிந்தால் தீபாவளி என்ற உற்சாகத்துடன் இருக்கும் குழந்தைகள் சீக்கிரமே சாப்பாட்டை முடித்து உறங்க ஆயத்தமாகிறார்கள்.
சிறுவர்கள் இருவரும் இயற்கை உபாதைக்காகவெளி முற்றத்துக்குச் செல்லும்போது,அங்கே சொறி,சிரங்கு மண்டிக் கிடக்கும் ஒரு சிறுவன், ராமசாமி வீட்டிலிருந்து தூக்கிப் போட்ட எச்சில் இலைகளில் எஞ்சியிருக்கும் மீத உணவை வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.அந்தக் காட்சி அவர்களுக்கு அருவருப்பூட்ட ,அவனை அங்கிருந்து விரட்டியடிக்க முயல்கிறார்கள்;அதற்குள் மழை வந்து விடத் தன் பையன்களைத் தேடிக்கொண்டு அங்கே வரும் தாயம்மா,அந்தச் சிறுவனையும் உள்ளே அழைத்துக் கொண்டுபோய் அவனுக்கும் உணவிடுகிறாள்.
ராஜா என்ற பெயர் கொண்ட அந்தச் சிறுவன் தாய் தந்தையற்ற அனாதை என்பதையும் ஏதோ தூரத்து உறவொன்றைத் தேடிக் கொண்டு(அவர்களும் அவனை ஏற்பார்களா என்பது சந்தேகமென்ற நிலையில்) கால்நடையாகச் சென்று கொண்டிருக்கிறான் என்பதையும் அறியும்போது அந்த ஏழைத் தாயின் மனம் கலங்கிக் கசிகிறது.
ஈரத் தரையில் கோணி விரித்து அதன் மீது ஓலைப்பயைக்கிடத்தித் தன் குழந்தைகளோடு அவனையும் படுக்க வைக்கிறாள் அவள்.

 ராமசாமியின் வீட்டில் அவனது அக்காவுக்குத் தலை தீபாவளி..
’’ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். அந்த ஊரில் மட்டுமில்லாமல் அந்த வட்டாரத்திலேயே அவர்தான் பெரிய மிராசுதார். ஜமீன்தாரை, மிகவும் கோலாகலமாக அழைத்து வந்து தீபாவளி நடத்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை, "ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும்" என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்’’
என்று மிராசுதார் வீட்டுக்கு ராஜா வரும்கோலாகலத்தை வருணிக்கிறது கதை.

அந்தப் பணக்கார வீட்டுத் தலை தீபாவளியில்
இரவெல்லாம் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே 
இருக்கத் தனக்கு ஒரு மத்தாப்புக்கூட இல்லையே 
என்று ஏங்கும் மங்கம்மாவுக்கு அந்தக் கதியற்ற 
சிறுவனின் நிலையை வெகு இயல்பாகச் சுட்டிக் 
காட்டுகிறாள் அன்னை.

பொழுது புலர்கிறது.தாயம்மாள் தன் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து விடுகையில் அந்தப் பையனுக்கும் நீராட்டி விடுகிறாள்.புதுத் துணி உடுத்தி அவர்கள் வரும்போதுதான் அந்த அன்னியச் சிறுவன் வெறும் கோவணத்தோடு நிற்கும் அவலம் அவள் நெஞ்சில் பகீரென உறைக்கிறது.கணவனுக்கு எடுத்த ஒரே ஒரு துண்டு மட்டும் எஞ்சியிருக்க....அதையும் கொடுத்து விடுவதா என்று அவள் உள்ளத்தில் ஒரு சிறிய போராட்டம் நிகழ.....தொடக்கத்தில் ராஜாவைக் கொஞ்சம் விரோத பாவனையோடு பார்த்துக்கொண்டு வந்த சிறுமி மங்கம்மாள் வெகு இயல்பாக அதைக் கொடுக்கச் சொல்லிச் சிக்கலை முடித்து வைத்து விடுகிறாள்.

தோசையைச் சாப்பிட்டு முடித்து விட்டுத் தெருவில் விளையாடப் போகும் மங்கம்மாவை எதிர்ப்படும் ராமசாமி , நேற்றைய போட்டியின் நினைவுகளை மறந்து வெகு யதார்த்தமாக,சந்தோஷமாக,
‘’எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்!’’
என்கிறான்.
போட்டியை இன்னமும் மறந்து விடாத மங்கம்மாவோ தங்கள் வீட்டின் புது விருந்தாளிச் சிறுவன் ராஜாவை எண்ணியபடி,
‘’ஐயோ!உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்?எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான்...வேணும்னா வந்துபாரு’’
என்கிறாள்.... 

கதை இதனுடன் முடிந்து விட்டாலும் அது நம்முள் மிக இயல்பாகக் கொளுத்திவிட்டுப் போகும் பொறிகள் ஏராளம்....
கபடற்ற குழந்தைமை உலகம்..,
தங்களுக்குரிய மிகச் சிறிய இருப்பில் அந்நியன் ஒருவனையும் பங்கு போட அனுமதித்து உடன் சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் ஆரம்பத் தயக்கம்...
படிப் படியாக அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பரவும் விசாலம்...,
அதற்கு ஆரம்ப அடியெடுத்துக் கொடுத்து, வறுமையிலும் செம்மை காட்டும் அவர்களது தாய்
என்று இந்தச் சிறுகதைக் கிழியில் விரிந்து கொண்டே போகும் சித்திரங்கள் ஏராளம்...

//ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா!..." என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். 'தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருந்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இந்தக் கதிதானே?  அதுகளும் தெருவிலே நின்னிருக்கும்.'  //-
 //யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்.//
என்றெல்லாம் நெகிழ்ந்து குழையும் தாயம்மாவும் கூடக் குளித்து முடித்துவிட்டு அவன் புது உடை இல்லாமல் கௌபீனத்தோடு நிற்கும்போது சற்று நேரம் தடுமாறித்தான் போகிறாள்;
//மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், "ஒரு துண்டு வாங்க வழியில்லையே!" என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப்// பார்த்து அவளது மனம் சற்றே கலங்கி நின்று விடுகிறது.

//"என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ" என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை./
என்று அந்தச் சூழலில் அந்தத் தாய் மனம் அனுபவிக்க நேரும் வேதனையின் நுட்பத்தை...,இரக்க வெளிப்பாட்டுக்கும்,ஏழ்மைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை...,அப்படிப் போராட வேண்டியிருக்கிறதே என்று தன் மீது தானே கொள்ளும் இளிவரலை இந்த இடத்தில் மிக லகுவாகக் காட்சிப்படுத்தி விடுகிறார் அழகிரிசாமி.

குழந்தை மனதில் அப்படிப்பட்டமுரணான போராட்டங்கள் ஏதுமில்லை.அது நேரடியாக யோசித்துத் தயக்கமே இல்லாமல் முடிவெடுத்து விடுகிறது.
//மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.
"பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!//

மானுட அழுக்குகளும் , கசடுகளும் படியாத -பரிசுத்தமான பூரணத்துவத்தை மகளிடம் அப்போது தரிசிக்கும் அந்தத் தாய்க்கு அவள் உலகுக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணியாக...மகாலட்சுமியாகவே தோற்றமளிக்க..அந்த இன்பத்தின் முழுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு கணம் தன்னை மறந்து கண்கலங்கி விடும் தாய் 
"என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா!" என்று தன்னை மறந்து சொல்லிவிட்டுப் பிறகு அதற்காகவே குழந்தையின் கையைப் பிடித்து வெகுவேகமாக வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு வந்து, திருஷ்டிப் பரிகாரமாக அவளுடைய கன்னத்தில் சாந்துப் பொட்டையும் எடுத்து வைக்கிறாள்.

சிறுகதையின் உச்சகட்டத் தருணமாகிய இதுவே வாழ்வின் உன்னதமான மகத்துவத்தை - சகல ஜீவராசிகளின் ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவத்தை,
அனைத்திலும் உறைவது ஒரே இறைநிலைதான் என ஞானிகள் உணர்த்த முற்படும் சாரத்தை, குழந்தை உலகத்தை வைத்து, வெகு இயல்பாக எளிமையாக உணர்த்திவிட்டுப் போகிறது...

‘’‘ராஜா வந்திருக்கிறார்’,என்னை மீண்டும் மீண்டும் நெகிழச்செய்த கதை.அதன் வழியாகவே இலக்கியத்தின் சாராம்சம் என்ன என்ற தெளிவை நான் அடைந்தேன்.....களங்கமின்மை மூலமே தத்துவ தரிசனத்தின் ‘உயர்பாதுகாப்பு’வளையத்தை சாதாரணமாகத் தாண்டிச் சென்று மெய்ம்மையின் பீடம் வரை சென்றுவிட்ட மாபெரும் படைப்பு
‘ராஜா வந்திருக்கிறார்’’-
மண்ணும் மரபும் நூலில் ஜெயமோகன்


சிறுகதையை முழுமையாகப் படிக்க;

இணையத்தில் ;

அச்சில்;
கு.அழகிரிசாமி,முத்துக்கள்பத்து,[தேர்ந்தெடுத்த 10 சிறுகதைகள்]அம்ருதா வெளியீடு,சென்னை.
கு.அழகிரிசாமி சிறுகதைகளின் முழுத் தொகுப்பையும் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

இணைப்புக்கள்;

5 கருத்துகள் :

புதியவன் பக்கம் சொன்னது…

கதையைப் படித்த நினைவு இல்லை. ஆனால் கதைச்சுருக்கமே போதுமாக இருக்கிறது. மனதுக்குள் ஒரு நெகிழ்வுணர்வு. இதுதான் கதையின் வெற்றியோ?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி ஷாஜகான்...ஆனாலும் இணையத்திலேயேதான் கதை கிடைக்கிறதே.ஒரு முறை படித்து விடுங்கள்.இன்னும் சிறப்பான உன்னத அனுபவம் கிட்டும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

Ranjakumar Somapala S shared your link: "இப்போ பெரிதும் பேசப்படாத மிகத் தரமான எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மிக அருமையான கதை."

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

நன்றி சுசீலா .........

அருமையான கதையை காலம் கருதி சுருக்கு அதே சமயம் கதையை படிக்கும் ஆவலையும் நல்ல விமர்சனத்தையும் ஒருங்கே கொடுத்து மனதை நிரப்பியிருகிரீர்கள்

Unknown சொன்னது…

அன்புள்ள ராஜா வந்திருக்கிறார் சிறுகதையை ஏற்கனவே வாசித்திருந்தேன். அருமையான கதை. குழந்தைகளின் உலகத்தை அழகாக படம்பிடித்து காட்டியிருப்பார் ஆசிரியர். தாங்கள் தந்துள்ள கதைச்சுருக்கமும் , விளக்கமும் கதையை மேலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....