துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.8.12

’’எம் குன்றும் பிறர் கொளார்...’’

’’என்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை......பிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...’’
மதுரையிலுள்ள பாத்திமாக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1970. 

முதல் இரண்டு ஆண்டுகள்[’70-’72]கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததால் எப்போது விடுமுறை வந்தாலும்,நீண்ட வார விடுமுறை குறுக்கிட்டாலும் சொந்த ஊரான காரைக்குடியை  நோக்கிய என் இனிய பேருந்துப்பயணம் தொடங்கிவிடும்.விமானத்தில் செல்கிற வாய்ப்புக்களும் கூட இன்று கிடைத்து விட்டாலும் அன்று மேற்கொண்டிருந்த அந்த மதுரை-காரைக்குடி பஸ் பயணத்துக்கு ஈடாக எதுவும் என் நெஞ்சில் பதிந்திருக்கவில்லை.

பேருந்தில் ஏறி அது நகரத் தொடங்கியதுமே கண்ணில் நீளமாக விரியும் யானை மலையின் அற்புத அழகும்,அதன் மடியில் பசுமை போர்த்திக்கொண்டு கிடக்கும் வேளாண் கல்லூரியும்[பின்புதான் அது பல்கலைக்கழகமாயிற்று],தொடர்ந்து நீண்டு கொண்டு செல்லும் பாதையில் இருக்கும் கீழவளவுக் கற்குன்றுகளும் தென்படத் தொடங்கியதுமே ஊருக்குச் செல்லும் பரவசத்தில் மனம் திளைக்கத் தொடங்கி விடும்.
.
பசுமையான தாவரங்கள் ஏதுமில்லாத...உயிரற்ற... வறண்ட மொட்டைப்பாறைகள்தானே அவை என்று புறமொதுக்க முடியாதபடிஎன்னோடும் என் உணர்வுகளோடும் அவை கதை பேசிக் கொண்டிருந்த இனிய நாட்கள் அவை...
அந்தக் கல்மலைகளில் பலவும் விளம்பரங்களுக்கும் பயன்படுவதுண்டு.மதுரைக்கு நெருக்கமான மலைகள் என்றால் மதுரையிலுள்ள கடைகள்...காரைக்குடியை நெருங்கும்போது அங்கே உள்ள கடைகளின் விளம்பரங்கள். ஊருக்கு எத்தனை தொலைவில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள மைல் கற்களை விடவும் மிகச் சிறந்த   இடுகுறிகளாக-indicatorகளாக அவை எனக்கு இருந்து கொண்டிருந்தன.அதிலும் மிகக் குறிப்பாக என் நினைவில் பதிந்திருப்பது ’பேக்கரி டிசோட்டா’என்று கொட்டை எழுத்துக்களால் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறிய மலைக்குன்று.

காரைக்குடியில் இன்றும் கூடப்புகழ் பெற்று விளங்கும் அந்த பேக்கரி தன் ‘மக்ரூன்’பிஸ்கட் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது[மக்ரூன் என்பது முந்திரிப்பருப்பும் சீனியும் மட்டும் கலந்து செயப்படும் பொரபொரப்பான ஓர் இனிப்பு].பொதுவாக தூத்துக்குடி மக்ரூன்களையே மிகவும் சிறப்பாகச் சொல்லுவதுண்டு.ஆனால் தூத்துக்குடி மக்ரூன் சாப்பிட்டுப் பார்த்த பிறகும் கூட என் ஓட்டு எங்கள் ஊர் டிசோட்டா மக்ரூனுக்குத்தான்.என்னைப்பார்க்க விடுதிக்கு வரும்போதெல்லாம் அதை வாங்கிக் கொண்டு வர என் அம்மா தவறியதே இல்லை.பேக்கரி டிசோட்டா விளம்பரம் வரைந்திருக்கும் மலை வந்து விட்டால் போதும் ஊருக்கே வந்து சேர்ந்து விட்டதைப்போல மனம் உல்லாசத்தில் குதூகலிக்கத் தொடங்கி விடும்.

வருடங்கள் செல்லச்செல்ல வாழ்க்கையின் இடப்பெயர்வு முற்றிலுமாய் மதுரையை மையம் கொண்டதாக அமைந்து விட்ட பிறகு, என் மதுரை-காரைக்குடி பஸ் பயணங்களும்  குறையத் தொடங்கின.எப்போதாவது நண்பர்களைக் காணவோ பிள்ளையார்பட்டிக் கோயிலுக்குச் செல்லவோ மட்டுமே அந்தப் பாதையில் பயணம் செய்கையில் அந்தக் குன்றுகளும் கூடப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியிருந்ததைப்பார்க்கையில் அந்த இடத்தின் வெறுமைக் கோலம் உள்ளத்தைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது....

‘80களில் மிக இலேசாக ஆரம்பித்த அந்த வீழ்ச்சி ‘90,2000 எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெருகி இன்று கோடிக்கணக்கான கிரானைட் கொள்ளையாக விசுவரூபமெடுத்து வளர்ந்திருக்கிறது;அது குறித்த செய்திகள்,படங்கள் இவற்றையெல்லாம் இப்போது பார்க்கும்போது மனித மனங்களின் பேராசை வெறி ஒரு புறம் அருவருப்பூட்டினாலும் உயிரில்லாததாகக் கருதப்படும் அந்தக் கற்பாறைகளோடு பல காலம் பிணைந்து கிடந்த என் கற்பனைகளும் கனவுகளும் கலைந்து சிதைந்து கிடக்கும் அவலமே பேரதிர்ச்சியோடு என் முகத்தில் அறைகிறது.

குழந்தைகளைக் கூறுபோடுவதைப்போலக் குன்றுகளைக் கூறு போட்டு அடுக்கி அந்த இடத்தையே வெட்டவெளிப்பொட்டலாக சூனியமாகச் செய்துவிட்ட அவலத்தில் நெஞ்சம் கையற்றுப் புலம்புகிறது.



அவ்வாறான தருணங்களில் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’என்னும் பாரிமகளிரின் புறப்பாடல் வரிகளே மனதுக்குள் ஓடுகின்றன...

’’அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே’’.
கடந்த மாதத்து நிலா நாளில் எங்கள் தந்தையும் உடனிருந்தார்;எங்கள் குன்றும் பிறர் வசமாகவில்லை...ஆனால்..இந்த மாதத்து முழுநிலாப் பொழுதிலோ நாங்கள் தந்தையையும் இழந்தோம்...எங்கள் குன்றும் எங்கள் வசமில்லை...என்ற அந்தப்பாடலைப்போலவே...
என்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை...
அவற்றைத் தாண்டி யாரைப்பார்க்க நான் ஆவலுடன் விரைவேனோ அந்தத் தாயும் நாங்கள் வாழ்ந்த வீடும் இப்போது இல்லை..
பிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...


6 கருத்துகள் :

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அன்றைக்கு பாரி மகளிர் பாடிய ” கையறு நிலை “ பாடல் இன்றைக்கும் எப்படி ஒத்துப் போகிறது என்பதனை படங்களோடு விளக்கியதற்கு நன்றி! மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே “ மலையும் மலைசார்ந்த இடமும் “ என்று இலக்கிய மணம் கமழ்ந்த குறிஞ்சி கூட்டுக் கொள்ளையால் அழிந்து விட்டது. அலைகடல் கோபத்தில் சுனாமியாய் பொங்கியது போன்று ஒருநாள் மண்ணும் அனலாய் கொதிக்கப் போகிறது.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்கள் கட்டுரையை கூகிள்+ இல் பகிர்ந்துள்ளேன். நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்வு - மனம் கனத்தது...

Unknown சொன்னது…

மலைகள் நேசிக்கப்பட வேண்டியவை, தங்களது பதிவை வாசித்துவிட்டு , சில கணங்கள் மனதில் வலி நிரம்பி இருந்தது.

நன்றி

தேவராஜ் விட்டலன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஆம் நண்பர்களே..அந்தக் கற்குன்றுகளுக்கும் உயிர் உண்டு என்றே தோன்றுகிறது.மனிதப்புலம்பலே எட்டாத பண அரக்கர்களுக்கு அவற்றின் மௌனப்புலம்பல் எப்படி எட்டிவிடப்போகிறது?

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காக்கை குருவி
எங்கள் ஜாதி -நீள்
கடலும் மலையும்
எங்கள் கூட்டம்!
நோக்கும் திசையெல்லாம்
நாமின்றி வேறில்லை
நோக்க நோக்க
களியாட்டம் - பாரதி.

பாரதியின் கவிதைகளை மனப்பாடம் செய்த அளவிற்கு அவைகளைப் பின்பற்றி இருந்தால் இச்சமூகம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்.

மீதமிருக்கும் மலைகளை காப்பது நம் கடமை. பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....