புதுமைப்பித்தனின் ‘இது மிஷின் யுகம்’
தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனுக்கு முன்பே தமிழ்ச்சிறுகதை தளர்நடை போடத் தொடங்கியிருந்தாலும் அதற்குத் தீர்மானமான ஒரு உருவத்தை,கட்டுமானத்தை,வடிவ நேர்த்தியைத் தன் பன்முகப்படைப்புக்கள் வழி தந்திருக்கும் புதுமைப்பித்தன், தமிழ்ச்சிறுகதையின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பலவகைப்பரிசோதனைகளை செய்து பார்த்திருப்பவர் .‘துன்பக்கேணி’போன்ற மிக நீண்ட கதைகளும் புதுமைப்பித்தனிடம் உண்டு;’பொன்னகரம்’,இது மிஷின் யுகம்’போன்ற மிகச் சிறிய கதைகளும் உண்டு.
புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் சமூகச்சித்தரிப்புக்கு முன்னுரிமை அளித்தபோதும் தனிமனித உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் நனவோடைக் கதைகள், ’அகல்யா’,’சாப விமோசனம்’ முதலிய மறுவாசிப்புக்கதைகள், இன்றைய மாய யதார்த்தப் போக்குக்கு வாயில் திறந்து விட்ட ’கபாடபுரம்’,’அன்று இரவு’போன்ற படைப்புக்கள் ஆகிய பலவும் இவரிடம் காணக்கிடைப்பது வியப்பூட்டுகிறது.அதனாலேதான் தமிழ்ச்சிறுகதை முன்னோடி என்னும் தகுதிக்கு சொல்லுக்குச் சொல் உரிமை உடையவராகிறார் இவர்.
இன்று புதிய போக்கில் எந்த ஒரு சிறுகதை எழுதப்பட்டாலும் அதற்கான முன்மாதிரி[precedence] ஒன்றைப் புதுமைப்பித்தனிடமிருந்து காட்டி விட முடியும் என்பது ஒன்றே எத்தனை ’வகைமாதிரி’களில்[varieties] அவரது படைப்புத் திறன் ஊற்றாய்ப் பெருகிப்ப் பாய்ந்திருக்கிறது என்பதற்கான சான்று.
‘’உரை கெட்டிருந்து உணர்வற்றிருந்து
சிறையுற்றிறிருந்த தமிழில்
கரை தத்தி வந்த பெருவெள்ளமென்ற
கதை கொண்டு வந்த புலவன்’’
என்று புதுமைப்பித்தனைப்பற்றிக் கவி பாடுகிறார் தமிழ் ஒளி.
இனி....புதுமைப்பித்தனின் ’இது மிஷின் யுகம்’கதை பற்றி ...
சமகாலத்தைப்போன்ற ஆடம்பரமான உணவகங்களும்,மெனு கார்டுகளும்,விதம் விதமான உடை தரித்த வெயிட்டர்களும் புழக்கத்துக்கு அதிகம் வந்திராத ‘40களின் காலம். நடுத்தரமான சராசரியான ஓர் உணவகம். அங்கே உணவருந்த வந்திருக்கும் ஒரு மனிதர்,உணவு பரிமாறும் சர்வர் கிருஷ்ணன் மீது தன் பார்வையை ஓட விடுகிறார். ஒவ்வொருவர் கேட்கும்போதும் இட்லி,வடை,பொங்கல்,பூரி என உணவு வகைகளின் பெயர்களை அலுக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும்,அவர்கள் கேட்கும் உணவு வகைகளைப்பரிமாறிக்கொண்டும்,உண்டு முடித்தவர்களுக்கு பில் போட்டுக் கொண்டும்,தண்ணீர் வேண்டுபவர்களுக்கு அதை எடுத்துக் கொடுத்தபடியும் பம்பரம் போலப் பல மேசைகளுக்கும் சுற்றிச் சுழன்றபடி இருக்கும் அவன் அவருக்கு ஒரு மனிதனாகவே தோன்றாமல்,ஓர் இயந்திரமாக மட்டுமே காட்சிதருகிறான்.
உணவு மேசையில் உட்கார்ந்திருப்போரின் ஏவலை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தவிர அவன் முகத்தில் வேறு எந்த பாவமுமே இல்லாமலிருப்பதையும்,எந்த உணர்ச்சியையுமே அந்த முகம் வெளிப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்கும்போது அவர் வியப்படைகிறார். இந்தக் காலத்து ரோபோக்கள் போல- அந்தக்காலத்தில் ஒரு மிஷினாகவே மாறி அவன் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறானோ என்று அவருக்குத் தோன்றுகிறது.
கதையின் இறுதிக்கட்டம்...! சாப்பிட்டு முடித்து அங்கிருந்து அவர் விடைபெறப்போகும் தருணம்;அப்போது அவரது கைக்குட்டை கீழே விழுந்து விட,அங்கே வரும் அவன் சட்டென்று அதை எடுத்து அவரிடம் தருகிறான்...இன்னும் அவன் முழுமையான இயந்திரமாகிவிடவில்லை என்பதையும் வாழ்வின் அன்றாட நடப்பியல்களுக்குள் அவனும் அவ்வப்போது வந்து போகிறவன்தான்..என்பதையும் அதன் வழி
உறுதிப்படுத்திக் கொண்டு ’அவன் மனிதன்தான்’என்பதை அவர் முடிவு செய்து கொள்கிறார்.
மீண்டும் ஒரு குரல் ‘’ஒரு ஐஸ்கிரீம் ‘’என்று அதிகாரம் செய்ய...
அவன் ’’திரும்பவும் மிஷினாகி விட்டான்’’என்று கதை முடிகிறது.
மிகச்சிறிய ஒரு சம்பவம்தான்...! ஆனாலும் அதை வைத்து மனித இயல்புகளையே தராசில் வைத்து நிறுத்து மதிப்பிட முயலும் ஒரு படைப்பு இது; மனிதத்தின் மீதான கரிசனத்தையும், இன்றைய மிஷின் யுகம்...,மனிதனை முற்றிலும் ஓர் இயந்திரமாகவே ஆக்கிவிடக்கூடுமோ என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்தும் அற்புதமான ஆக்கம் இது.
'இது மிஷின் யுகம் 'சிறுகதையை இணையத்தில் படிக்க...
தொடர்புள்ள இணைப்புக்கள்;
தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’-அறிமுகம்
தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’-1
தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-2
தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-3
தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-2
தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-3
4 கருத்துகள் :
அருமை ஒரு மிஷின்க்கும் மனிதனுக்கும் உள்ள உணர்வுகளை சொன்னது! நீங்க சொல்லியவிதமும் மிக மிக அருமை.
அடடா... எப்படி இதை படிக்காமல் விட்டோம் என்று யோசித்துக்கொண்டே கீழே வருகையில் அதற்கான இணைப்பு. நன்றி.
இதுவரை தப்ப விட்டுவிட்டேன். இவர் எழுத்தின் சிறப்பை பற்றி தெரிந்த பின் இனி தப்ப விடமாட்டேன். என் உறவினர் ஒருவரிடம் இவரின் சிறுகதை தொகுப்பை எனக்காக வாங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவர் கதைக்கான லிங்க் இணைத்ததற்கு மிகவும் நன்றி. இதுவே நான் படிக்கும் இவரின் முதல் சிறுகதை. இதற்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இந்த கதை பற்றிய உங்களின் கருத்தும் சிறப்பாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
கையோடு படித்து முடித்தேன். கிளாஸ்! அந்த தமிழும், அழகான எழுத்து நடையும் மனதை மயங்க வைத்தது. படித்த அந்த சில நிமிடத்தில் நானும் அந்த இடத்தில் இருந்த உணர்வு. இதற்கு மேல் என் உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை.
கருத்துரையிடுக