துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.3.12

’’நெஞ்சு நேர்பவளே..’


நன்றி;பயணம் இதழ்-கட்டுரைத் தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-2


சங்கச் சமுதாயத்தில்,பரத்தமை என்பது, ஓர் அன்றாட நடைமுறையாய் - ஓர் ஒழுக்கமாகவே ஏற்கப்பட்டிருந்தது என்பதும் அதை மிக இயல்பாக அந்தச் சமுதாயம் அங்கீகரித்திருந்தது என்பதும் பொதுவாக முன் வைக்கப்படும் கருத்துக்கள்.. இது, சமூகப் பொதுப்புத்தி சார்ந்ததேயன்றித் தனி மனிதர்களின் உள்ளம் அதை ஏற்பதில் எத்தனை அலைக்கழிவுகளுக்கும் ஆத்ம வேதனைகளுக்கும் ஆளானபடி புறக்கணிப்பின் வேதனையால் துடித்திருக்கும் என்பதை எவரும் எண்ணிப் பார்க்காமல் மிகவும் எளிதாக அவ்வாறனதொரு கருத்தை வீசி விட்டுப் போய் விடுகிறார்கள்.சங்கச் சமுதாயத்தின் தொடர்ச்சியாய் வந்த சிலம்பு அதன் மறுபக்கம் குறித்த கண்திறப்பைக் கண்ணகி துயரின் வழி  ஓரளவுக்கு அளிக்க முயன்றிருக்கிறது.. மனம் திருந்தி வந்த கோவலனை  நோக்கிப் ’’போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’’என்று கண்ணகியைப் பேச வைத்ததே கூட அந்தச் சூழலுக்கு ஒரு புதுமைதான். அவள் அதுகாறும் அனுபவித்த மன உளைச்சல்கள் அனைத்துக்கும் வடிகால் தரும் காட்சியாக அதை அமைத்து விடுகிறார் இளங்கோ.

குறுந்தொகையில் இடம் பெறும் அம்மூவனாரின் பாடல் ஒன்று பரத்தமையால் பாதிப்புக்குள்ளான ஒரு தலைவியின் ஆழ்மன ஏக்கத்தை அற்புதமான உளவியல் பாங்கில் பதிவு செய்து தந்திருக்கிறது.

கடலும் கடல் சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலம். அங்கே மண்டிக் கிடக்கும் நீர் முள்ளி எனப்படும் முண்டகப் பூக்கள். அவற்றில் அணிலின் பற்கள் போன்ற கூர்மையான முட்கள் அடர்ந்து கிடக்கின்றன; 
http://tamil.oneindia.in/img/2011/10/09-asteracantha-longifolia2-30.jpg

கூடவே அருமையான தேனையும் அவை உட்செறித்து வைத்திருக்கின்றன. நீலமணி போன்ற (மணிக்கேழ் அன்ன) அந்தக் கருங்கடல் நிலத்துக்குத் தலைவனாகிய சேர்ப்பனும் (நெய்தல் நிலத் தலைவனுக்கு வழங்கும் பெயர்) முள்ளையும் தேனையும் ஒருசேரக் கொண்டிருக்கும் அந்த நீர்முள்ளிப்பூக்களைப் போன்றவன்தான். ஒரு புறம் தன் மனைவிக்கு இனியவனாகத் தேன் போன்ற வார்த்தைகளைப் பேசிக் கொண்டே அவளுக்கு முள்ளாக உறுத்தும் பரத்தமை உறவையும் மறுபுறம் தொடர்ந்தபடி, இரட்டை வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான் அவன். தன் இரத்த வாரிசைப் பெற்றுத் தருபவள் என்கிற மதிப்பைத் தலைவிக்குத் தந்தாலும் அவனது மனம் லயித்துக் கிடப்பது பரத்தையிடம் மட்டுமே என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் தலைவி, பரத்தையிடமிருந்து தன்னை அவன் நாடி வரும் ஒரு  தருணத்தில்,
’’இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே''என்றுதன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள். இந்தப் பிறப்பு மட்டுமில்லை..இனி வரும் பிறப்பு எதுவாயினும் நீயே எனக்குக் கணவனாக வாய்க்க வேண்டும் நான் மட்டுமே உன் நெஞ்சுக்கு உகப்பான பெண்ணாக வேண்டும்’’ என்று தன் நெஞ்சின் விழைவை அவள் வெளியிடுவதாக அந்தச் சங்கக் குறுந்தொகைப்பாடல் உருப்பெற்றிருக்கிறது.

''அணிற்பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே''-                                
அம்மூவனார்--குறுந்தொகை 49                                                          

மேலோட்டமான முதற்பார்வையில் பாடலின் சூழலும் , தலைவியின் வேண்டுகோளும் முரண்பாடாக ஒலிப்பதுபோலவே நமக்குப் படுகிறது.தலைவன் சென்று வந்திருப்பது பரத்தையின் வீட்டுக்கு; கல்லானாலும் கணவன் என்ற மரபில்ஊறிப்போனவளாகவே இருந்தாலும் கூடஊடலும் ஒதுக்கமும் காட்ட வேண்டிய ஒருவேளையில், தலைவி இப்படி ஒரு விருப்பத்தைக் கொண்டிருப்பது சாத்தியம்தானா என்ற ஐயம் நமக்குள் எழுவதுமிகவும் இயல்பானதே.

தலைவி வெளியிடும் இந்த வினோதமான விருப்பத்துக்குத் தலைவன் மீது அவள் கொண்டிருக்கும் மாறாக் காதலையோ,வழிவழி வந்த கற்புக் கோட்பாட்டையோ காரணம் காட்டுவதென்பது நமக்குள் ஊறிய மரபு சார்ந்த கண்ணோட்டத்தாலேயே நேர்கிறது.அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை என்றாலும் கூட-சற்றுநேரம் அவற்றையெல்லாம் புறமொதுக்கி விட்டுத்தலைவியின் ஆழ்மனதுக்குள் பயணிக்கத் தொடங்கும்போதே இதன் மர்மம் துலங்குகிறது; புதிரின் முடிச்சும் அவிழத் தொடங்குகிறது. 

பாடல் விவரிக்கும் குறிப்பிட்ட இந்தச் சூழலை மட்டும் வைத்து அவள் விருப்பத்தை மதிப்பிடும்போதுதான்,கணவனை முன்னிட்டு இன்னொரு பெண்ணிடம் தோற்றுப் போக விரும்பாத பெண்மையின் குரலாய் அது ஒலிப்பதை நம்மால் இனங்கண்டுகொள்ள முடியும். பெயரளவில் தலைவனுக்கு மனைவியாய்த் தான் இருந்தபோதும் தன்னில் காணாத நிறைவை –தன்னிடம் கொள்ளாத ஏதோ ஒரு மன நெருக்கத்தை வேறொரு பெண்ணிடம் அவனால் காண முடிந்திருக்கிறது என்பதும் அவளே அவனது நெஞ்சுக்கு நெருக்கமானவளாக இருக்கிறாள் என்பதும் அவளது உள்ளத்தில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தைக் கிளர்த்தியிருக்கின்றன. 

‘’நான் உன் மனைவியாக இருந்திருக்கலாம்..ஆனால் உன் மனதின் ஒத்த அலைவரிசைக்குள் வரும் வாய்ப்பு-அந்த இடம்-இன்னொருத்திக்கல்லவா கிடைத்து விட்டது’’என்ற பெருந்தாபமும் அதை எப்படியாவது வென்றெடுத்தாக வேண்டும் என்ற உந்துதலுமே ’’யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’’என்னும் வரியில் அவளது ஆழ்மன ஏக்கத்தின் வெளிப்பாடாய்க் கசிகின்றன.இந்தப் பிறவியில் தான் அடைய முடியாத நெஞ்சு நெருக்கத்தை அடுத்த பிறவியிலாவது தான் அடைந்தே தீர வேண்டும் என்பதற்காகவே- அந்த வெற்றி இலக்கைக் குறியாகக் கொண்டே அடுத்த பிறவியிலும் அவன் கணவனாக வாய்க்க வேண்டும் என விழைந்திருக்கிறாள் அந்தத் தலைவி என்ற புரிதலும் தரிசனமும் அப்போது நமக்குக் கிட்டி விடுகின்றன.

ஏழேழு பிறவிக்கும் அவனே கணவனாக வர வேண்டும் என்ற மரபு வழிக் கற்பு நெறி மட்டுமே அவளை இயக்கியிருக்குமென்றால் அந்த இரண்டாவது வரிக்கான தேவையே இல்லாமல் போயிருக்கும். சங்கப் பாடலில் எந்தச் சொல்லும் தொடரும் வெற்றாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போதுதான்…அந்த இறுதி வரிக்குள் பாடலின் சூட்சுமம்…..அதன் சாரமே பொதிந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது..

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் உரிப்பொருளாகச்சொல்லப்படுபவை. தலைவியின் ஆற்றாமையை அற்புதமான இரங்கல் தொனியில் ஒலித்திருக்கும் அம்மூவனார் பாடலும் கூடத் தலைவியின் மீதான நம் இரக்கத்தை ஊற்றெடுக்க வைப்பதுதான்.

காண்க.-1.யானை புக்க புலம்..

24.3.12

’குற்றமும் தண்டனையும்’-இரண்டாம் பதிப்பு

2007ஆம் ஆண்டின் இறுதியில் என் மொழியாக்கத்தில் வெளிவந்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிவரவிருக்கிறது என்னும் நற்செய்தியை வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
முதல் பதிப்பை வெளியிட்ட மதுரை பாரதி புத்தக நிலையத்தாரே இரண்டாம் பதிப்பையும் வெளியிடவிருக்கிறார்கள்.
அண்மையில் என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயெவ்ஸ்கியின்அசடன்மற்றும்குற்றமும் தண்டனையும்’ ஆகிய இரு மொழியாக்க நூல்களையும் பதிப்பகத்தாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விரைவில் குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு,உடுமலை.காம் முதலிய விற்பனை நிலையங்களின் வழி, ஆன்லைனில் கிடைக்கவும் ஆவன செய்யப்படவிருக்கிறது எனப் பதிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.


நேரில்,அஞ்சலில்;பாரதி புத்தக நிலையம்,மதுரை
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001


 bharathibooks@yahoo.co.in



21.3.12

கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-2

[மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியான
என் மொழியாக்கச் சிறுகதை
[மூலம்;ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-ஆங்கில வழி தமிழாக்கம்
கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்--1 இன் தொடர்ச்சி..].
’’இங்கே என்ன செய்துக்கிட்டிருக்கே செல்லம்...’’என்று கிசுகிசுப்பான குரலில் கேட்ட அவன் மீண்டும் ஒரு முறை தன்னைச் சுற்ற்றித் திருட்டுப் பார்வை பார்த்து விட்டுப் பிறகு அந்தப் பெண்ணின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான்.
‘’நாங்க விளையாடிக்கிட்டிருக்கோம்..’’
‘’ஓ..இவனோடவா...?’’என்றபடிஅந்தச் சிறுவனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான் ஜூலியன் மேஸ்டகோவிச். 

கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1

மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியான
என் மொழியாக்கச் சிறுகதை
[மூலம்;ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-ஆங்கில வழி தமிழாக்கம்]


முன்பொரு நாள் நான் ஒரு திருமணத்தைப் பார்த்தேன்…! இல்லையில்லை..அது வேண்டாம்..முதலில் உங்களுக்கு அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! திருமணம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. எனக்கு அது பிடித்தும் இருந்தது.ஆனாலும் அந்த இன்னொரு விவகாரம்..! அது..இன்னும் கூட நன்றாக இருந்தது.திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிய நினைவு என்னுள் ஏன் எழுந்தது என்பது எனக்கே விளங்கவில்லை.

16.3.12

காவல் கோட்டம்-வலைத்தளம்

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற திரு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல் குறித்த தகவல்களுக்காகவே -விழாக்கள்,நேர்காணல்கள்,விமரிசனங்கள்,பாராட்டுக்கள் என அனைத்தையும் உள்ளடக்குவதாக.ஒரு தனித் தளம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
http://www.kaavalkottam.com 
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவலுக்கு வந்த பாராட்டுக்களும் விமரிசனங்களும் நாவலை விடவும் நீண்டு சென்றுகொண்டே இருப்பதால்..இத்தகைய ஒரு தளம் கட்டாயம் தேவைதான்.
தேவையற்ற காழ்ப்புக்களைத் தவிர்த்தபடி..ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் வகையில் இத் தளம் செயல்பட வேண்டுமென்பதே நடுநிலை இலக்கிய வரலாற்று ஆர்வலர்களின் விழைவாக இருக்க இயலும்.
சாகித்திய அகாதமி பரிசு பரிசு பெற்றபோது..


பி.கு;சு.வெங்கடேசனுக்கு இன்று பிறந்த நாள்.
                                               வாழ்த்துக்கள் வெங்கடேசன்...


15.3.12

அம்பையுடன் ஒரு மாலை-2

’’சந்திக்கும்போது மகிழ்வைத் தருவதாகவும்…பிரியும்போது அதையே எண்ணி அசை போட வைப்பதாகவுமே சில சந்திப்புக்கள் அமைந்து விடுகின்றன.அம்பையுடனான சந்திப்பும் அப்படித்தான் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது...’’
அம்பையுடன் ஒரு மாலை--1..இன் தொடர்ச்சி.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கடலூர் அருகிலிருந்த ஒரு சிற்றூரில் தான் ஆசிரியப்பணி ஆற்றியபோது நிர்வாகத்தின் தவறான போக்குகளோடு சமரசம் செய்து கொள்ள உடன்படாததால் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும்,அவற்றின் விளைவாக அந்தப் பணியிலிருந்து விலகி உயர்கல்வியைத் தொடரத் தான் சென்றதையும் தன் உரையில் தொடர்ந்து விவரித்தார் அம்பை.
அதிகம் எழுதிக் குவித்தாக வேண்டும் என்னும் எண்ணம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்ற அம்பை , அவ்வப்போது ஏற்படும் மன உந்துதல்களே தன் கதைகளுக்குக் காரணமாவதால், சில வேளைகளில் தன் கதைகள் வெளிவருவதில் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் இடைவெளிகள் நேர்ந்து விடுகின்றன என்றார்.

13.3.12

’தில்லிகை’யில் மதுரை

ராம் மோகன் ,                 நான் ,                                                     விஜய்ராஜ்மோகன்
மல்லிகைக்குப் பெயர் பெற்ற மதுரையைக் கருப்பொருளாகக் கொண்டே தில்லியில் தொடங்கிய தில்லிகை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டமும் நிகழ்ந்ததும் அதில் நானும் உரையாற்ற வாய்த்ததும் ஓர் இனிய பொருத்தம்.

8.3.12

’தில்லிகை’இலக்கிய வட்டம்

புதுதில்லியின் இலக்கிய ஆர்வலர்கள் சிலரது சீரிய முயற்சியால்‘தில்லிகை’என்னும் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.திரு மா. அண்ணாதுரை, திரு விஜய் ராஜ்மோகன், திருமதி சாய் அமுதா தேவி,திரு எம்.ஸ்ரீதரன்[சீன இலக்கியத்தின் நேரடித்தமிழ் மொழிபெயர்ப்பாக-’வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’என்னும் தலைப்பில் அண்மையில் கவித்தொகை நூலை வெளியிட்டவர்]ஆகியோர் இதனை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஆர்வத்துடன் முனைந்து செயலாற்றி வருகின்றனர்.


தில்லிகை’யின் முதல் இலக்கியக் கூட்டமும் தொடர்ந்து கலந்துரையாடலும் வரும் சனிக்கிழமை 10/3/12-பிற்பகல் மூன்று மணியளவில் தில்லி தமிழ்ச்சங்க பாரதி அரங்கில் மதுரையை மையப்பொருளாகக் கொண்டு நிகழவிருக்கிறது.நானும் இக்கூட்டத்தில் பங்கேற்றுச்’சிலப்பதிகாரத்தில் மதுரை’என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறேன்.தில்லி வாழ் தமிழ் அன்பர்கள் இதையே அழைப்பாக ஏற்றுக் கூட்டத்தில்கலந்து கொள்ள வேண்டுமென ’தில்லிகை’யின் சார்பாக நானும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் தொடர்புக்கு..


அம்பையுடன் ஒரு மாலை-1

சர்வதேச மகளிர் தினத்தின் நேற்றைய முன் மாலைப் பொழுதில்[7/3/12] நான் மதிக்கும் மிகச் சிறந்த நபர்களில் ஒருவரான எழுத்தாளர் அம்பையோடு- இனிமையான தற்செயலாக  ஒரு சந்திப்பு எனக்கு வாய்த்தது. அவர்களும் அதை அவ்வாறே குறிப்பிட்டதும்,முந்தைய நட்பின் எளிமையோடு என்னை ஆரத் தழுவி அன்பு பாராட்டியதும் என் வாழ்வின் பேறுகளில் ஒன்று. 
2010இல் அம்பை தில்லி வந்தபோது...
’80களிலேயே எனக்கு அறிமுகமாகிப் பின் பழக்கமுமான அம்பை தமிழ்ப் பெண் எழுத்துக்களில் மிகப் புதிதான பரிமாணத்தைத் தன் எழுத்துக்களால் கொணர்ந்தவர்;’80களுக்குப் பின் எழுதப்பட்ட தீவிரமான பெண்ணிய எழுத்துக்கள் பலவும் அம்பையின் தாக்கத்தில் வேர் கொண்டவையே.

5.3.12

தில்லி புத்தகத் திருவிழாவில்..

புது தில்லியின் சர்வதேசப் புத்தகவிழா 25/2இல் தொடங்கிக் கடந்த பத்து நாட்களாகவே நடந்து வந்தபோதும் இறுதி நாளான ஞாயிறன்றுதான் 4/3 -அங்கே செல்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.தில்லி வருகைக்குப் பிறகு,முன்பொரு முறை இவ்வாறான புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தாலும் சாகித்திய அகாதமி,தேசிய புத்தக நிறுவனம் எனப்படும் என் பி டி ஆகிய ஒரு சில அரங்குகளில் மட்டுமே மருந்தைப் போல ஆங்காங்கே சில தமிழ்ப்புத்தகங்கள் கண்ணில் பட்டு வந்ததால் சென்ற சில ஆண்டுகளாக பிரகதி மைதானின் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் ஆர்வம் ஏற்படவில்லை.

3.3.12

கலங்கிய நதி..

நூல் மதிப்புரை-கலங்கியநதி-பி ஏ கிருஷ்ணன்
நன்றி:வடக்கு வாசல்,மார்ச்,2012
தீவிர வாதத்தின் நிழலில்…
நாட்டின் நதி வளம் மற்றும் அதன் புனிதத்தைப் பற்றிய மேன்மைகளை அடுக்கிக் கொண்டே அதைச் சாக்கடைக்கும் கீழாய்க் கலக்கிக் கொண்டிருக்கும் போலித்தனம் நம்முடையது. தப்பித் தவறி அதைச் சுத்தம் செய்ய ஒருவன் வந்து விட்டாலும் அவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று பகடி செய்து ஓரங்கட்டி ஒதுக்குவதிலேயே சுற்றியுள்ள உலகம் குறியாய் இருக்கிறது; காரணம் மிகவும் எளிமையானது. குழம்பிய குட்டையிலேதானே மீன் பிடிக்க முடியும்? இன்றைய அரசியல் அதிகார முதலாளி வர்க்கங்கள் நாள்தோறும் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் அருவருப்பான சுரண்டல், ஊழல் குப்பைகளால் கலங்கிய நதியாகி விட்டிருக்கும் இந்திய சமூகத்துக்கு அதையே குறியீடாக்கியபடி வெளிவந்திருக்கும் பி ஏ கிருஷ்ணனின் புதிய நாவலான ’கலங்கிய நதி’, மேற்குறித்த அமைப்புக்களின் மீதான விமரிசனங்களையே புதிதான புனைவு மொழியில் முன் வைக்க முனைந்திருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....